கெயில்

“LAND OF DISPUTES” – கெயில் வாயுக்குழாய் குறித்த ஆவணப்படம்

 

அரசியல், பொருளாதாரம், சூழலியல் இவை மூன்றுக்குமான உறவானது, சிக்கலான வழிகளில் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட் டுள்ளன. கடந்த கால் நூற்றாண்டில் பொருளாதாரத்தில் அரசுகளின் ஆளுமை சுருக்கப்பட்டதால், சமூகப் பாதுகாப்பும் சூழல் பாதுகாப்பும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. கொஞ்சம் நஞ்சம் மீதமிருக்கிற அரசின் ஆளுமையோ தன் பங்கிற்கு சமூக, சூழல் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துகிறது. அவ்வகையில் கூடங்குளம் அணு உலைத்திட்டம், நியூட்ரினோ திட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் ஏழு மாவட்ட விவசாயிகளை அழிக்கத் துடிக்கிற இந்திய வல்லாதிக்க அரசின் மற்றுமொரு திட்டம்தான் கெயில் எரிவாயுக்குழாய் பதிப்புத் திட்டம்.

பொதுவாக அரசு சார்பான அறிஞர் பெருமக்கள், ஊடகங்கள் அரசின் நேரடித் திட்டத்திலுள்ள ஆபத்தை மறைத்தும் திரித்தும் கருத்து நிலை ஆதிக்கத்தை மக்களிடம் திணித்துவரும் இன்றைய சூழலில், உண்மை நிலையை மக்களிடம் எடுத்துச்செல்வதில் சமூக கரிசனம் மிக்க படைப்பாளிகளே முக்கிய பங்களிப்புச் செய்கின்றனர்.அவ்வகையில் கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டத்தால் தமிழகம் எதிர்கொள்கிற ஆபத்து களை ஆதாரங்களுடன் மக்களிடம் முன்வைக்கிற ஆவணப் பதிவு தான் “LAND OF DISPUTES” என்ற இந்த ஆவணப்படம். கெயில் என்ற பொதுத்துறை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிற இத்திட்டத்தின் மொத்த செலவு, தமிழகம், கர்நாடகம், கேரளா மாநிலங்களில் ஊடறுத்துப் பதிக்கப்பட இருக்கிற குழாய்களின் நீளம் குறித்த புள்ளிவிவரங்களை

முன்வைத்துத் துவங்குகிற இப்படம், எரிவாயுக்குழாய் பதிப்புத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களிடம் மேற்கொள்கிற உரையாடல்களின்வழி, வெள்ளந்தி மனிதர்களின் ஆசுவாசத்தைப் படம் பிடித்துக்­காட்டுகிறது. உதாரணமாக, தங்கள் வயலில் ஊடறுத்து செல்லும் இக்குழாய்களால் வெள்ளாமை பாதிக்கப்பட்டதை விளக்கும் பெண்ணொருவர், இதற்கு அரசு எங்களுக்கு மருந்து கொடுத்துச் சாகடித்திருக்கலாம் என்று வெடிக்கிற சொற்கள், எளிய மக்களின் உணர்வு களுக்கும் அரசு இயந்திரத்திற்குமான முரணின் கூர்மையை நமக்கு விளங்க வைக்கிறது. உலகளவில் எரிவாயுக் குழாய் வெடித்த விபத்துக்களால் ஏற்பட்ட உயிர்ப்பலிகள் மற்றும் இந்திய அளவில் (கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த எரிவாயுக்குழாய் விபத்து எண்ணிக்கை 10,119. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 391) நடந்த எரிவாயுக்குழாய் விபத்துகள் மற்றும் அவ் விபத்தில் மாண்டவர்கள் குறித்து ஆவணப்படம் நமக் களிக்கிற புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

குறிப்பாக ஆந்திரத்தில் 2008 மற்றும் 2010இல் நடந்த பெருவிபத்துகளை விளக்கும்போதே சமீபத்தில் ஆந்திர மாநிலம் நகரத்தில் நடந்த கெயில் குழாய் பெரு வெடிப்பால் பலியான பதினான்கு மக்களின் துயரம் நெஞ்சில் குத்தி நிற்கிறது. இத்திட்டத்தின் அபாயங்களை எளிமையாகத் திரட்டிக் கொடுத்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மாணவர் பிரதீபன் பாராட்டுக்குரியவர். மாணவர்களே தமிழகத்தைக் காக்க முடியும்.

இயக்குநர்: பிரதீபன், 9500345596

மாணவர், தொடர்பியல் துறை

பாண்டிச்சேரிபல்கலைக்கழகம், புதுவை

 

  • லெனின்

பூவுலகு மே 2014 இதழில் வெளியான கட்டுரை