பசுமைக் கொள்கை

பூவுலகின் நண்பர்களின் பசுமைக் கொள்கை

இயற்கையின் வரலாற்றின் தொடர்ச்சியே மனித சமூகமும் அதன் நவீன நாகரிக வாழ்வும்.மனித சமூகமானது தேசங்களாக பிரிந்திரிந்தாலும் இயற்கையை நம்பித்தான் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அசைவியக்கம் நடைபெற்றுவருகிறது.

இயற்கையின் இயக்கப்போக்கில் இயல்பாக ஏற்படுகிற மாற்றத்திற்கேற்ப சமநிலையைப் பேணிவந்த இயற்கைச் சூழலில் தேவைக்கான வகையில் மனித சமூகம் உள்ளீடு செய்த வகையில் நாமும் நமது பூவுலகும் நலமாகத்தான் இருந்தோம்.மாறாக இன்றைய 21 ஆம் நூற்றாண்டு எரிமலையின் மீது நின்றுகொண்டிருப்பது போன்ற சூழலில் உள்ளது.

புவிவெப்பமயமாக்கல்,கடல் நீர் மட்ட உயர்வு,நீர் பற்றாக்குறை,பருவம்தப்பி பெய்கிற மழைப் பொழிவு,சூறாவளிப் புயல்கள்,வேதியல்மயப்பட்ட வேளாண்மையால் பாழாகிற விளை நிலம்,நோயுருகிற மக்கள்,ஆலைக் கழிவு மாசுபாடு,காடழிப்பு,மண் வளம்,நீர்வளம் மற்றும் கனிம வள அழிப்பு,காடுயிர்களின் அழிவுகள் என நாம் வாழும் பூமி அதன் வரலாற்றில் இல்லாத வகையில் பேராபத்தை எதிர்கொண்டுள்ளது.மனித சமூகத்தின் உயிர்ப்பிழைப்பையே அச்சுறுத்தும் வகையில் இயற்கைப் பேரிடர்கள் எழுச்சி பெற்று வருகின்றன.இப்பூவுலகையும்,அதை வீடாகக் கொண்டுள்ள உயிரினங்களின் உயிர்ப்பிழைப்பையும் இப்பிரச்சனை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உலகமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையின் கீழ் தீவிரமடைந்துள்ள இவ்வழிப்பு வேலையை தடுத்து நிறுத்தத் தவறினால் அடுத்த அரை நூற்றாண்டு காலமே மனித நாகரிகத்தின் இறுதி யுகமாக அமையக்கூடும்.!

சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு முன் நிபந்தனையான சூழலியல் பாதுகாப்பு குறித்த விவாதம் அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றுவருகிறநிலையில், இயற்கை வள,தேச வள பாதுகாப்பின் அவசியம் மற்றும் அதை மீட்டுருவாக்கம் செய்வதற்கான மாற்று சாத்தியப்பாடுகளை முன்வைப்பது இன்றைய தேவையாக உள்ளது.

சூழலியல் சிக்கல்களும் தமிழகமும்

தமிழகத்தைப் பொறுத்தவரை சுற்றுசூழல் விழிப்புணர்வு என்பது, உலகின் மற்ற பகுதிகளைப் போல கடந்த நூற்றாண்டில் ஆரம்பித்து பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருக்கவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல்பூர்வமான, சுற்றுச்சூழல் அக்கறை நிறைந்த சிந்தனை நம்மிடம் இருந்தது. அதன் வெளிப்பாடுதான் ஐந்திணைக் கோட்பாடு. நவீனஅறிவியல்கூறுகளைக் கொண்ட இது போன்ற கோட்பாடு உலகில் வேறு எந்தப் பண்பாட்டிலும் இல்லை. தமிழகத்தில் காணப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய 4திணைகளுக்கான (சூழல் மண்டலங்களுக்கான – Eco System) வரையறையை தமிழர்கள் தெளிவாக வகுத்து இருந்தனர். இந்த வரையறையை மீறி பிறழ்வு நேர்ந்தால், நிலம் பாலையாகும்என்பதையும் தெரிந்து வைத்திருந்தனர். “குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்கிறது சிலப்பதிகாரம். அந்த பாலை என்பதுபாலைவனம் அல்ல, சுற்றுச்சூழல் சீர்கேடுதான்.

தமிழகத்தின் ஆற்றுமணல் கொள்ளை,தாது மணல் கொள்ளை போன்ற கணிமவளக் கொள்ளையாலும்,மீத்தேன்,அனுவுலைகள,சிறப்புப் பொருளாதார மனடலங்கள் போன்ற பேரழிவுத் திடங்களினாலும் தமிழகத்தின் மொத்த குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் நிலப்பரப்பும் இன்று பாலையாக திரிந்துள்ளது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்

நீர்நிலை பாதுகாப்பில் அக்கறையின்மை

பலநூறு ஆண்டுகளுக்கு மேலாக மழை நீரை சேமித்து வேளாண்மைக்கும் குடிநீருக்கும் நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கும் பயன்பட்ட வந்த ஏரி,குளம் ஊரணி போன்ற நீர்த்தேக்கங்களை முறையாக பராமரித்து,கரைகளை பலப்படுத்துவது போன்ற நீர்நிலை பாதுகாப்புத் திட்டங்களை இரு திராவிடக் கட்சிகளும் முற்றிலுமாக புறக்கணித்ததன.

முறையாக குளங்களைப் பராமரிக்காத காரணத்தால் , தென்மாநிலங்களில் கடந்த 1965-2000 ஆண்டுகளில் மட்டும் 37 விழுக்காடு குளத்து நீர்ப் பாசன நிலங்கள் அழிந்துபோயினஎன்ற புள்ளிவிளக்கமானது அரசு எந்திரத்தின் நீர் மேலாண்மை புறக்கணிப்பை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

கழக ஆட்சியாளர்களும், அவர்களுக்கு தொங்கு சதைகளாகத் திகழ்கிற ஏனைய கார்ப்பரேட் கட்சிகளும் தமிழகத்தின் இத்தகைய இழிநிலைக்கு காரணம் என்பதை நாம் உறுதியாக கூற முடியும். கழிவுநீர் வடிகால்கள்,மழை வெள்ள நீர் வடிகால்கள்,திடக்கழிவு நீர் மேலாண்மை போன்ற அடிப்படை நகர்ப்புற உட்கட்டமைப்பு தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களைக் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதில் கழக ஆட்சியாளர்கள் காட்டுகிற அலட்சியம் மற்றும் நகர்மயமாக்கலின் பேரால் ஒழுங்கற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நகர விரிவாக்கத்த்தினால் பலநூறு மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மழை வெள்ளத்தால் உயிரையும் உடமைகளையும் இழந்துவருகின்றனர்.

மீத்தேன் மற்றும் கெயில் திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் தான் அனுமதியளிக்கப்பட்டது.பின்னர் வந்த அதிமுக அரசு மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிர முனைப்பு செலுத்தியது.

பகுதி-1

வேண்டாம்

அழிவு வளர்ச்சித் திட்டங்கள் வேண்டாம்

கூடன்குளம் மற்றும் கல்பாக்கம் அணுவுலை விரிவாக்கத் திட்டங்கள்:

இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் அணு உலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பினை அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர். புவிக்கோளத்தின் சூழல் அமைவிற்கும் மனித இனத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அணு உலைகள் இருப்பதை கடந்த கால விபத்துகள் போதுமான படிப்பினைகள் வழங்கியும் ஆளும் அரசுகள் அணுவுலை அமைக்கும் முயற்சிகளை கைவிடுவதாக தெரியவில்லை.இச்சூழ்நிலையில் தான் கடந்த 1500 நாட்களுக்கு மேல் தமிழகத்தில், கூடங்குளம் – இடிந்தகரையில் போராடிவரும் மக்களின் உணர்வுகளைத் துச்சமெனத் தூக்கியெறிந்து இந்திய மோடி அரசு அணு உலைப் பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் போடுகிறது.

கூடங்குளம் அனுவுலைக்கு எதிராக போராடிய மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் மீதும் கூடங்குளம் காவல்நிலையத்தில் தேசத்துரோகம் (124-A), அரசுக்கு எதிரான யுத்தம் ( 121 ) உள்ளிட்ட 380 வழக்குகள் சுமார் 1,50,000 மக்கள் மீது தமிழக அரசால் பதியப்பட்டன.இது குறித்து நீதிமன்றதில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பையடுத்து, மே 6, 2013 அன்று அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை 248 வழக்குகளை மட்டுமே தமிழக திரும்பப் பெற்றது. 132 வழக்குகள் தமிழக அரசால் திரும்பப்பெறப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

இவ்வாறு,மிகப்பெரும் மக்கள் திரள் போரட்டத்தை ஒடுக்கியும், மக்கள் நலனைப் புறக்கணித்தும் கூடன்குளத்தில் கட்டப்பட்ட ஒன்று மற்றும் இரண்டாம் அலகு அணுவுலைகள் ஆறு மாத காலத்திற்கு மேலாக உற்பத்தியை தொடர இயலாமல், மூச்சித் திணறி முடங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து கட்டப்பட்ட மூன்று மற்றும் நான்காம் அலகில் எப்போது உற்பத்தி தொடங்கும் என யாருக்கும் தெரியவில்லை.இச்சூழலில் மேலும்,ஐந்தாம் ஆறாம் அலகுகள் என இரு அணுவுலைகள் விரிவாக்கத்திற்கு, ரஷ்யாவுடன் இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இச்சூழலில் முதல் இரண்டு அனுவுலைகளில் இருந்து வந்துள்ள அணுவுலைக் கழிவுகளுக்கு இவ்வரசு என்ன தீர்வு வைத்துள்ளது?இதுவரை கட்டியுள்ள அணுவுலைகளின் உபகரணங்கள் எந்தளவில் பாதுகாப்பானவை?எந்தக் கேள்விகளுக்கும் அரசிடமிருந்து பதில் இல்லை.

செய்யூர் மற்றும் நாகை,தூத்துக்குடி மாவட்ட அனல் மின் நிலையத் திட்டங்கள்:

பழுப்பு நிலக்கரி,அனல் மின் நிலையங்களுக்கு முக்கிய எரிபொருளாக உள்ளது. சுரங்களில் பல நூறு மீட்டர் ஆழத்திற்கு நிலக்கரியை வெட்டி எடுக்கிற பணிகளில் ஈடுபடுகிற தொழிலாளிகள் பல்வேறு தோல் நோய்களாலும் புற்று நோய் பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நிலக்கரிகளை எரிபொருளாக பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிற அனல் மின் நிலையங்கள் கடுமையான சூழல் பாதிப்புகளையும் சுகாதாரக் கேடுகளையும் ஏற்படுத்துகின்றன.அதே நேரத்தில் அனல் மின் நிலைய திட்டப் பணிகளுக்கு மிகப் பெரிய அளவில் நில அபகரிப்பும் நடந்துவருகிறது.

சிறப்பு பொருளாதார மண்டலுக்கு கையகப்படுதுகிற நிலங்களை விட அனல் மின் நிலையங்களுக்கு கையப்படுதுகிற விவசாய நிலம் தான் மிகவும் அதிகமாக உள்ளன.

மின்சாரம் இல்லாமல் இன்றைய நவீன வாழ்க்கை முறை இல்லை.மின்சார உற்பத்தி இல்லாமல் நமக்கு மின்சாரம் கிடைக்கப்போவதுமில்லை.புதைபடிவ எரி பொருளான நிலக்கரியை,அளவுக்கு மீறி மண்ணிலிருந்து வெட்டி(நிலக்கரி சுரங்கம்) எடுப்பதும்,அளவுக்கு மீறி எரித்து காற்றில் உமிழ்வதும்(அனல் மின் நிலையம்)நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு போன்ற சூழல் கேடுகளுக்கும் புவி வெப்பமயமாக்கல் பிரச்சனைக்கும் இவ்வுலகை இட்டுச்செல்கிறது.எனவே சூழலுக்கு கேடுவிளைவிக்காத வகையிலான மாற்று எரிசக்திகளானசூரிய சக்தி மின்சாரம்,காற்றாலை மின்சாரம் போன்ற வளம் குன்றா ஆற்றல்களை மையப்படுத்திய மாற்று திட்டங்களே சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கான சாத்தியப்பாடாக இருக்க முடியும்.

மீத்தேன் திட்டம்:

தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டில்,காவிரி டெல்டா படுகையில் சுமார் 667 சதுர கிமீ பரப்பளவில் உரிமையை கிரேட் ஈஸ்ட்ரன் எனெர்ஜி நிறுவனத்திற்கு வழங்கியது.இத்திட்டத்திற்கு செலாவாகும் அளப்பரிய அளவிலான நீர் மற்றும் மீத்தேன் உறிஞ்சி எடுத்தப்பின் வெளியேற்றப்படும் நச்சுக்கழிவின் பேரபாயங்கள்,நிலத்தடி நீர்மட்ட பாதிப்பு போன்ற காரணிகளை முன்வைத்து மக்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிக்கின்றனர்.மக்கள் போராட்டங்களால் அத்திட்டம் நேரடியாக செயல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.மாறாக இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் மூலமாக இயற்கை எரிவாயு எடுப்புத் திட்டம் என்றும் ஷல் எரிவாயு எடுப்புத் திட்டமென்ற பேரிலும் மறைமுகமாக எரிவாயு எடுப்பு திட்டப் பணிகள் டெல்டா பகுதிகளில் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

கெயில் குழாய்ப் பதிப்புத் திட்டம்

கேரள மாநிலம் கொச்சின் துவங்கி கோழிக்கோடு வழியாக மங்களூருக்கும் தமிழ்நாடு வழியாக பெங்களூருக்கும் நிலத்தின் அடியில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லுகிற திட்டம்தான் கெயில் எண்ணைக் குழாய்ப் பதிப்புத் திட்டம்.இதன் திட்ட மதிப்பு சுமார் ரூ.3000 கோடி ரூபாய் ஆகும்.திட்டத்தின் மொத்த நீளம் சுமார் 884 கி.மீ.இதில் தமிழ்நாட்டின் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை ஊடறுத்து செல்லுகிற குழாயின் நீளம் மட்டும் 310 கி.மீ. இத்திட்டத்தின் பாதுகப்புத்தன்மை மற்றும் குழாய்களின் தரம்,பராமரிப்பு,திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரயோகிக்கிற சட்டம் போன்ற காரணிகளை முன்வைத்து இத்திட்டத்தை ஏழு மாவட்ட விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.இயற்கை எரிவாயுக் குழாய் பதிக்கிற காலம்தொட்டேதொடர்கிற பெரு விபத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்து தீவிர முனைப்பு செலுத்துகிறது.

2008 ஆம் ஆண்டில் ராஜமுந்திரியில் நடந்த விபத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களும் பனை மரங்களும் நாசம் ஆகின.இதற்கிடையில் சிறியதும் பெரியதுமாக பல விபத்துக்கள் ஏற்பட்டாலும் இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டில்,ஆந்திராவின் நகரம் கிராமத்தில் ஏற்பட்ட பெருவெடிப்பானது 15 அப்பாவி உயிர்களை பலி வாங்கியது.

இயற்கை எரிவாயு எடுப்பைத் தொழிலாக நிறுவிய அமெரிக்காவிலும் தொடர்கிற பெரு விபத்துக்களை தவிர்க்க இயலவில்லை.

கெயில் குழாய் பதிப்பின் பொருட்டு,அது விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப் பயன்படுத்துகிற PMP-62(PETROLEUM AND MINERALS PIPELINE ACT) சட்டம் மற்றும் 2008 ஆண்டில் அதில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்கள் பற்றியது.இச்சட்டத்தின் படி,

தங்களின் விவசாய நிலங்களில் ஊடறுத்துச் செல்கிற குழாயில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அந்நிலத்தின் உரிமையாளரே பொறுப்பு எனவும்,அவ்விபத்திற்கு தான் காரணம் அல்ல என அவரே நிரூபிக்கவேண்டும் எனவும் வற்புறுத்துகிறது.நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரித்ததது மட்டும் அல்லாமல் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் விவசாயி தலையில் விழுகிறது.ஒருவேளை தான் குற்றமற்றவர் என நிரூபிக்கத் தவறினால், மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை இச்சட்டத்தின் மூலமாக தண்டனை வழங்க இயலும்.

இந்திய குற்றவியல் சட்டப் படி,குற்றத்தை விசாரித்து நிரூபணம் செய்வது அரசின் பொறுப்பே அன்றி,சம்பந்தப்பட்டவரின் சொந்தப் பொறுப்பாக இல்லை என்பதை கவனத்தில் கொள்கையில் இச்சட்டத்தின் கோர முகம் வெளிப்படுகிறது.

குழாயின் பக்கவாட்டில் சுமார் 30 அடி தூரத்திற்கு ஆழமாக வேர்விடுகிற மரங்களை நட்டு வளர்க கூடாது. தென்னைமரம்,புளியமரம்,மாமரங்களை நட இயலாது.மீறினால் விவசாயி மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தண்டனை வழங்கப்படும்

சிறப்பு பொருளாதார திட்டங்கள்:

சிறிய,நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களின் தொழிற்துறை வளர்ச்சிக்காக 1970 களில் தொழிற்துறை ஊக்குவிப்புக் கழகம் என்ற சிப்காட் வளாகங்கள் உலக வங்கியின் துணையோடு இந்தியாவில் தொடங்கப்பட்டன.எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட நவ தாராளமய பொருளாதார கொள்கைகளால் சிப்காட் வளாகங்கள் தனிக்கவனம் பெறத்தொடங்கின.

அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் ஏற்றுமதி சார்ந்த வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் உள்கட்டமைப்பு அம்சத்தில் மத்திய மாநில அரசுகள் அக்கரை செலுத்தலாகின.இதன் விளைவாக1971ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான நாற்பதாண்டு கால அவகாசத்திற்குள் தமிழகத்தில் கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பத்தொன்பது சிப்காட் வளாகங்கள் அமைக்கப்பட்டன.இதில் நிறுவப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டாயிரத்தைத் தொடுகிறது. உற்பத்தி துறை என்றில்லாமல் கணிப்பொறி தொழில் நுட்பம் சார்ந்த கணிணி சேவைத்துறையும் இக்காலகட்டத்தில் எழுச்சி பெற்றன.பன்னாட்டு பெரு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக நுழைவு வரி உள்ளிட்ட பல வரிகள் தாளர்த்தப்பட்டதன் விளைவாக சிறுசேரி சிப்காட் வளாகமானது ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரும் கணிப்பொறி தொழில்நுட்ப வளாகமாக இருக்கிறது. பெருந்துறை சிப்காட் வளாகம் 2,850 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

கடலூர் சிப்காட்:

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்பூங்க வளாகமானது 1984 –ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.இங்குள்ள தொழிற்சாலைகள் சிகப்பு தரம் (Red category) வாய்ந்தவையாகவும் பெரிய ஆலைகளாகவும் உள்ளன. ரசாயன பொருள் உற்பத்தி, பூச்சிக்கொல்லி மருந்து, பெயின்ட், சாயம், மற்றும் பாலி வினைல் குளோரைடு (PVC) போன்ற நச்சுமிக்க பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

கடலூர் சிப்காட்ட்டில் செயல்படுகிற தொழிற்சாலைகள் அளவுக்கு அதிகமான அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிற காரணத்தால்

முன்பு 30 அடியில் தண்ணீர் கிடைத்த நிலை மாறி தற்போது 800 அடி ஆழத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது.கிடைக்கிற நிலத்தடி நீரும் உப்புத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது.

மற்றொரு பக்கம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாத வகையில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுய்கிற திட மற்றும் திரவக்கழிவுகள் நிலத்தடி நீரை நஞ்சாக்குகிறது.

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்

தமிழகக் கேரளப் பகுதிகளை உள்ளடக்கிய இடுக்கி தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள மலைக்கடியில் அறிவியல் ஆய்வு மையத்தை அமைக்கும்பணி தொடங்க இருக்கிறது. புவியின் ஆழத்தில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகமே உலகின் மிகப்பெரிய பௌதிக ஆய்வக மையமாகும். (கட்டிமுடிக்கப்பட்ட நிலையில்)

புவியின் அடி ஆழத்தில் அமையவுள்ள இவ்வாய்வு மையத்தின் மேல் உத்திரங்கள் மற்றும் சுவர்கள் அனைத்தும் காஸ்மிக் கதிர்களின் ஊடுருவலைத் தடுப்பதற்கு ஏற்பகுறைந்தபட்சம் ஆயிரம் மீட்டர் அகலத்தில் கட்டப்படவிருக்கிறது. 32.5 மீட்டர் உயரத்தில் 3432 சதுர மீட்டர் பரப்பளவில் ஓர் பெரிய ஆய்வக அறையும் ,10 மீட்டர் உயரத்தில் 1600சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று சிறிய ஆய்வக அறைகளும் கட்டப்படவிருக்கிறது.புவியின் ஆழத்தில் அமையவுள்ள இவ்வாய்வகத்தை அடைய 2491 மீட்டர் தொலைவிற்குசுரங்கப்பாதை தோண்டப்படவிருக்கிறது. இச்சுரங்கத்தின் நுழைவு வாயில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அமையப்பெறும். இவ்வாய்வுத்திட்டத்தின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள்என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்பெரும் அறிவியல் ஆய்வுத்திட்டத்தின் மொத்த செலவு 1,300 கோடி ருபாய் ஆகும். இத்திட்டத்திற்கு தனது பதினொன்றாம் ஐந்தாண்டுதிட்டத்தில் இந்திய அரசு அனுமதியளித்தது. சுரங்கபாதைத் தோண்டும் பணி விரைவில் தொடங்குவதகாத் தெரிகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாள் தொட்டே இத்திட்டத்தின் பின்னாலுள்ள அறிவியல் உலகின் ரகசியங்கள்,இயற்கை நிலைமையின் அழிவு, சமூகப் பாதிப்பின் விளைவுகள் போன்றவை தீவிரமாக கேள்விக்குள்ளாக்கப்பட்டன.வழக்கம்போல மத்திய அரசும் அதன் அங்கமான அணுசக்தித் துறை ஆணையம் மற்றும் இந்திய நியூட்ரினோ திட்டத்தின் மேலாளர் போன்ற தொடர்புடைய அரசு இயந்திரமானது,இது குறித்து தொடர்ந்து கள்ள மௌனம் சாதித்து வந்ததது.இந்நிலையில்,அறிவியலாளரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஆலோசகருமான திரு பத்மநாபனின் கட்டுரையை மேற்கோள் காட்டி, கேரள மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரான திரு அச்சுதானாந்தம் அம்மாநில சட்டமன்றத்தில் இத்திட்டத்தின் விளைவுகள் குறித்து கேள்வி எழுப்ப,வேருவழியன்றி குடிமைச்சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தொடர்புடைய அரசு இயந்திரம் தள்ளப்பட்டது.

ஹைட்ரோகார்பன் திட்டம்:

சர்வதேச சந்தையில் தங்கம் வகித்தப் பாத்திரத்தை தற்போது எண்ணெய், எரிவாயுக்கள் வகிக்கிறது.அமெரிக்க நிறுவனங்களின் எண்ணெய் நிறுவனங்களுக்காக வளைகுடா நாடுகளில் போரை நடத்திய அமெரிக்க அரசின் எண்ணெய் வெறி அரசியல் வரலாறு நாமறிந்தவைதான்.

உலகளவில் தானுந்து தொழிற்துறை நிறுவனங்களின் எழுச்சி,வேகமான நகர் மயமாக்கல்,நகரங்களின் குவிக்கப்படும் மக்கள் திரள் போன்ற காரணிகள் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் தேவையை முன்னெப்போதும் இல்லாத வகையில் பல மடங்கு உயர்த்திவிட்டன.

தமிழகத்தில்,எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கிற பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.குறிப்பாக தமிழகதின் கடலோரப் பகுதிகள் மற்றும் காவேரி டெல்ட்டா பகுதிகளில் மட்டும் சுமார் 28 இடங்களில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டு சில இடங்களின் எண்ணெய் எடுக்கிற பணிகளும்( ONGC) நடைபெற்றுவருகிறன.

காரைக்கால் அருகில் நரிமணம் மற்றும் சென்னையில் சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவி உள்ளன.
இவைபோக சில ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் ரூ. 18,000 கோடி செலவில் நாகார்ஜூனா எண்ணெய் நிறுவனமானது பிரம்மாண்ட சுத்திகரிப்பு ஆலையை கடலூரில்நிறுவியுள்ளது.

மேலும் காவிரி படுகைகளில் தொடர்ந்து எண்ணை வளங்களை தேடும்பணி பணிகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.தற்போது சுமார் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் காவேரிப் படுகையில் எண்ணை படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவை போக தமிழகத்திற்கும் அந்தாமனுக்கும் இடைப்பட்ட வங்காள விரிகுடா கடலின் அடியில் எண்ணெய் தேடுகிற பணிகளும் நடைபெற்றுவருகிறது.

இத்தகைய நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியிலும் காரைக்காலிலும் ஹைட்ரோகார்பன் எரிவாயுவை எடுக்கிற பணியை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
நீர்கரிம வாயுக்கள் (Hydrocarbon gases) என்பது பூமியின் அடியில் இருந்து வெளியாகும் இயற்கை எரிவாயுக்களான மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன், கார்பன் டை ஆக்சைடு , ஆக்சிஜன் , நைட்ரஜன் , ஹைட்ரஜன் சல்பைடு அனைத்தும் உள்ளடக்கியுள்ள வாயுக்கலவைக்கான பொதுப் பெயர்.பயன்பாட்டைப் பொறுத்துப் இந்த வாயுக்களை பிரித்துக் கொள்ளலாம்.ஆக,மீத்தேன்,இயற்கை எரிவாயு எடுப்புப் பணிகளின் விரிவாக்கப்பட்ட மறுவருகைதான் இத்திட்டம் என்பது தெளிவு.

வழக்கம்போல இத்திட்டம் தொடர்பான மக்களின் ஐயங்களை விளக்குவதற்கு எந்த அரசும் முன்வரவில்லை.
விவசாயம் பொய்த்து வருகிற நிலையில்,தமிழகத்தில் விவசாயத் தற்கொலைகள் வேகமாக அதிகரித்துவருகிற நிலையில் மீத்தேன்,சேல் தற்போது ஹைட்ரோகார்பன் என பாசனப் பகுதிகளுக்கு நாசம் விளைவிக்கிற தொழில்துறை முதலீடுகளை அரசு முடுக்கிவருகிறது.

தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அக்கரையை போபால் முதல் ஸ்டெர்லைட் வரை வரலாற்றில் கண்டுவருகிறோம்.ஆபத்து காலத்தில் அரசின் பேரிடர் மேலாண்மைக்கு வாளி தொழில்நுட்பத்தை நம்பியுள்ள அரசுப் பொறியமைவை எந்த வகையில் தமிழக மக்கள் நம்ப இயலும்?

பகுதி-2

வேண்டும்

சமூகத்தின் நீடித்த வளர்ச்சி வேண்டும்

சூழல் மையவாத கண்ணோட்டத்திலான தொழிற்துறை கொள்கைகளை வகுத்தல் வேண்டும்
உணவு உற்பத்திக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அவசியமான வேளாண்துறை கொள்கைகளை வகுத்தல் வேண்டும்
வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமூக சூழலியல் பாதுகாப்பை மையமானதாகக் கொண்டு உருவாக்குதல் வேண்டும்
மொத்தத்தில்,கொள்கை அளவிலும் நடைமுறை அளவிலும் சுற்றுச்சூழலுக்கும் அதைச் சார்ந்துள்ள மனித சமூகத்திற்கும் பாதிப்பில்லா வகையில் நீடித்த வகையிலான வளர்ச்சியே வேண்டும்
அ)நிலமும் நீரும் வேண்டும்

நிலமும் நீரும்தான் நமது உயிர்ப்பிழைப்பிற்கு ஆதாரமாக உள்ளது. இவை இரண்டும் ஆரோக்கியமாக இல்லை என்றால், ஒரு சமூகம் உயிர் வாழ முடியாது. எனவே, தமிழகம்முழுவதும் விவசாய நிலங்கள், நீராதாரங்கள் முறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவது அவசியத்தேவையாக உள்ளது.

விவசாயத்திற்கு நிலம் வேண்டும்

மாநிலத்தில் 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. மாநில மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம், அது சார்ந்ததொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பொருளாதாரத்தில் இதன் பங்கு 20 சதவிகிதத்துக்கும் மேல். ஏற்கெனவே, பயிர் விளைச்சலை அதிகரிக்க பசுமைப் புரட்சியை பின்பற்றியதால் வீரியரகங்கள், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் நமது மண் வளமும் விவசாயமும் சீரழிந்துபோய் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இவற்றின்எச்சங்கள் மண் வளத்தையும், தண்ணீரையும் பாதித்து இருக்கின்றன. இன்றைக்கு நீரிழிவு, ரத்தஅழுத்தம், இதயக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு தொற்றாத நோய்களால்மக்கள்தொகையின் பெரும் பகுதி அவதிப்பட்டு வருகிறது. புற்றுநோய் தாக்குதலும் அதிகரித்துள்ளது. இதற்கு பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய உணவு காரணமாக இருக்கும் என்றுகருதப்படுகிறது.எனவே, இதை சீரமைக்கும் வகையில் அரசு வேளாண் துறை சார்பில் இயற்கை விவசாயத் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு, இயற்கையை சிதைக்காத வகையில் விவசாயம்படிப்படியாக மாற்றுவதற்கு முன்வரவேண்டும்.

மண்புழு உரம் உள்ளிட்ட இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.இயற்கை உரங்கள் 10-30 சதவிகித விளைச்சலை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நோய்க்கிருமிகள், தாவர நோய்களையும் இவை மட்டுப்படுத்துகின்றன. இதன் காரணமாக, தற்போது பொருளாதாரத்தில் பெரும் செலவாக இருக்கும் செயற்கை வேதிஉரச்செலவு குறையும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, இயற்கை வேளாண் பயிற்சிக்கு மாநிலம் முழுவதும்பயிற்சி முகாம்கள் ஏற்படுத்த வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி பெரும் அச்சம் நிலவுவதால், அவை நமது பல்லுயிரியத்தை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளதால்,மனித உடல்நலனை கேள்விக்கு உள்ளாக்குவதால் அது சார்ந்த களப் பரிசோதனை, அறிமுகத்துக்கு முற்றிலும் தடை விதிக்கவேண்டும்.

காடு வேண்டும்

எந்த ஒரு நிலப்பகுதியும் வளமாக இருக்க 33 சதவிகிதம் அதாவது மூன்றில் ஒரு பங்கு காடு இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் வெறும் 17.5 சதவிகிதமே (22,845 சதுர கி.மீ.), அதாவதுதேவைப்படுவதில் பாதியளவே காடுகள் உள்ளன. அதுவும் வளமான தொடர்ச்சியான காடுகளாக இல்லை. எனவே, பாதுகாக்கப்பட்ட காடுகளைச் சுற்றி 10.கி.மீ. சுற்றளவுக்கு கனிமம்தோண்டுதல், மரம் வெட்டுதல், இதர வளர்ச்சி நடவடிக்கைகள் தடை செய்யவேண்டும்.

காட்டைப் பாதுகாக்க சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு, பழங்குடிகளின் பங்கேற்புடன் சூழல் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்வகையிலும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும் இந்தத் திட்டங்கள் அமைய வேண்டும்.

மக்கள் ஒத்துழைப்புடன் கூட்டு காடு மேலாண்மை திட்டத்தை உருவாக்கி காடுகளை பாதுகாக்க வேண்டும். ஒருங்கிணைந்த தரிசுநில மேம்பாட்டுத் திட்டம் மூலம் உள்ளூர் மக்கள்பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டு மரம் வளர்க்கவேண்டும். தற்போது தமிழகத்தில் சுமார் 37 லட்சம் ஹெக்டேர் தரிசுநிலம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, தமிழக காட்டுப் பகுதி மிக உயர்ந்த பல்லுயிரியத்தைக் கொண்டுள்ளது. ஆனால், போதிய பாதுகாப்பு, ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், பெருமளவுதாவரங்கள், உயிரினங்கள் அழியும் ஆபத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட பேருயிர்கள் அடங்கிய பல்லுயிர் வளத்தை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள்எடுக்கப்படவேண்டும்.

மரம், உயிரினங்கள் கடத்தலைத் தடுக்க வனத்துறையினருக்கு கூடுதல் ஆயுதம் வழங்கப்படும். சூழல் பாதுகாப்பு சுற்றுலா முறைப்படுத்தப்பட்டு (Eco Tourism) ஊக்கம் அளிக்க வேண்டும்.

மலை, கடற்கரை, அருவி, சரணாலயம், கோவில், மரபுச்சின்னம், கோவில்கள், கலை, பண்பாட்டு மையங்கள் பாதுகாக்கப்பட்டு சூழல் பாதுகாப்பு சுற்றுலாவுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்.வெளிநாடுகளில் இயற்கை வளங்களையும், மரபுச்சின்னங்களையும் பாதுகாத்து அவற்றில் இருந்து கிடைக்கும் பணம், பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும்.

நீர் வேண்டும்

மாநிலத்தில் ஆண்டுக்கு 950 மி.மீ. மழை பெய்கிறது. தமிழகத்தில் 61 நீர்த்தேக்கங்கள், 39,202 சிறிய, பெரிய குளங்கள் உள்ளன. இருந்தும் தற்போதுள்ள கணக்கெடுப்புபடி 60 சதவிகிதநிலத்தடி நீர் ஆதாரம் பயன்படுத்தப்பட்டு விட்டது. எனவே, கிடைக்கும் தண்ணீரை புத்திசாலித்தனமாக பகிர்ந்துகொள்வது அவசியம். மழை நீர் சேகரித்து நிலத்தடி நீரை பாதுகாப்பதுதான்தண்ணீருக்கான அடிப்படை ஆதாரம். எனவே, நீர்நிலை ஆக்கிரமிப்பை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்,ஆற்று மணல் கொள்ளையை தடுத்தல்,மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளின் அரசு ஈடுபடவேண்டும்.

நீர் பற்றாக்குறை, வறட்சி, சுகாதாரப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் இது போன்ற நீர்நிலைகள் மாசுபடுத்தப்பட்டதும், அழிக்கப்பட்டதும்தான். நன்னீர் ஆதாரங்களான ஏரி, குளம்,குட்டை, வாய்க்கால், ஆறு, சதுப்புநிலங்களை மாசுபாட்டில் இருந்து தடுத்து, அவற்றை அழிவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற பெரிய நதிகள் மட்டுமில்லாமல் கூவம், அடையாறு போன்ற ஆறுகளும் தூய்மைப்படுவேண்டும்.பாதாள சாக்கடை திட்டமும், அதிலிருந்துசேகரமாகும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்கோவில், கிராம குளங்கள், தடுப்பணைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆ)கடலும் கடற்கரையும் வேண்டும்

நீண்ட கடற்கரையைப் பெற்ற மாநிலங்களில் ஒன்று தமிழகம். அதாவது 1076 கி.மீ. அது மாசுபடுத்தப்பட்டு, சீரழிக்கப்படுவதில் இருந்து மீட்டு முறையாக நிர்வாகம் செய்ய வேண்டும்.கடற்கரைப் பகுதிகளின் இயற்கை வளத்தை பாதுகாக்க கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும். துறைமுகம் அமைப்பு, கடல்அரிப்பு போன்றவை ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்..

தமிழகத்தில் உள்நாட்டு மீன்பிடித்தல் ஆண்டுக்கு 1 லட்சம் டன்னுக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மீன்பிடித்தல் 3.5 லட்சம் டன். உள்நாட்டு மீன்பிடித்தல் குறைவாகஇருக்கிறது. கழிவுநீர், குப்பை, தொழிற்சாலை கழிவுநீர், பூச்சிக்கொல்லி, வெப்ப நீர், கழிவுகள் போன்ற மாசுபாட்டால் உள்நாட்டு, கடல் மீன்பிடித்தல், குறைந்துள்ளது. கழிவுநீர், குப்பைவெளியேற்றும் நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்

துறைமுகம், அணை, சுற்றுலா, காடழிப்பு, இயற்கை சீற்றம், அதிக மீன்பிடித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். தொழிற்சாலைகள், வணிக நடவடிக்கைகளுக்குகடலோர ஒழுங்காற்றுச் சட்டம் நடைமுறை தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கடற்கரையில் வணிக, பொழுதுபோக்கு வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு சுற்றுலா வசதிகளைஅதிகரிக்க வேண்டும்.

சதுப்பு நில பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும். நதிகள், வெள்ள வடிகால்கள், மழைநீர் ஏரிகள், அலையாத்தி காடுகள், கழிமுகப் பகுதிகள், உப்புவயல்கள் உள்ளிட்ட கடலோர சூழல்மண்டலங்கள் பெரும் இயற்கை உற்பத்தித்திறன் கொண்டவை. இவை வெள்ளக் கட்டுப்பாடு, தண்ணீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு, கடல் நிலைப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்கின்றன.சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களையும் மட்டுப்படுத்துகின்றன. எனவே, இதுபோன்ற நீர்நிலைகள் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

இ)பாதுகாப்பான நகரம் வேண்டும்

தமிழகத்தில் 33 சதவிகிதப் பகுதி நகர்மயமாகியுள்ளது. நாட்டிலேயே இரண்டாவது நகர்மயமான மாநிலம் தமிழகம்தான். இதனால் தொழிற்சாலை எண்ணிக்கை அதிகரிப்பு, மக்கள்நெருக்கம் அதிகரிப்பு, குடிசைப் பகுதிகள் அதிகரிப்பு போன்றவை நிகழ்ந்துள்ளன.

பெருமளவு மக்கள் நகரத்துக்கு இடம்பெயர்வது பல்வேறு சூழல் சிக்கல்களுக்கு வழியமைக்கும். இதன் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கழிவுகள், மருத்துவக் கழிவுகள்,போக்குவரத்து மாசுபாடு, ஆற்றல் தேவை அதிகரிப்பு, காற்று மாசுபாடு போன்றவை அதிகரித்துள்ளன. எனவே, நகரத்தில் அதிக தொழிற்துறை மூலதனங்களை குவிக்காமலும்,துணை நகரங்களை மற்றும் நகரங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளவேண்டும்.

எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்கள், சூழலுக்கு இணக்கமாக உருவாக்கப்படவேண்டும்.நகரங்களில் டவுன் பிளானிங் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.மக்கள் நெருக்கத்தைக் குறைக்க துணை நகரம், புறநகர் பகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். ஏழை மக்கள் வாழ்வதற்கு வசதியாக குறைந்த வாடகையில் குடியிருப்புப் பகுதிகள்ஏற்படுத்தவேண்டும்.

குப்பை, கழிவுநீர் வெளியேற்றுதல், கையாளுதல் முறைப்படுத்தப்படும். திடக் கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு குப்பையை முறையாக பிரிக்கவும், உரமாக்கவும்,மறுசுழற்சி செய்யவும் முக்கியத்துவம் தரப்படவேண்டும். ஆறுகள், நன்னீர் ஆதாரங்களில் கழிவுநீர் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் பற்றி மக்களிடம் கலந்தாலோசனை நடத்தப்பட்டு, துறை சார் நிபுணர்களின் மறுபரிசீலனைக்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஈ) மரபுசாரா மாற்று எரிசக்தி கொள்கை வேண்டும்

தொழில் பெருக்கம், மக்கள்தொகை பெருக்கத்தால் மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் பங்கீட்டில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மரபு சார்ந்த ஆற்றல் உற்பத்திமையங்கள் முறைப்படுத்தப்பட்டு, மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கப்பட வேண்டும். சூரிய மின்சாரம், காற்றாலை, உயிரி எரிசக்தி போன்றவற்றுக்கு மானியம்,ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். சூரிய மின்சக்தி கொள்கையைப் போல, மரபுசாரா மாற்று எரிசக்தி கொள்கை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். மரபுசார்ந்த எரிசக்தி நிலையங்கள்,அணுஉலைகள் படிப்படியாக மூட வேண்டும்.

உ)மாசில்லா போக்குவரத்து சாதனங்கள் வேண்டும்

பொதுப் போக்குவரத்து வசதிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ரயில், பஸ் போன்றவற்றுக்கு மானியமும், கார், டூவீலர் போன்ற தனிநபர் வாகனங்களுக்கு கட்டுப்பாடுவிதிக்கப்பட்டு, கூடுதல் வரியும் விதிக்கப்பட வேண்டும்.

மெட்ரோ ரயில் உள்ளிட்ட புதிய திட்டங்கள் சூழலை சீரழிக்காமல் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு சொகுசு திட்டங்கள், விரைவு சாலைத் திட்டங்கள், மேம்பாலப் பணிகள் போன்றவை முறையான பரிசீலனைக்குப் பிறகே அனுமதிக்கவேண்டும்.

கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை வேண்டும் :

நாட்டிலேயே மூன்றாவது அதிக தொழில்மயமான மாநிலம் தமிழகம். மாசுபாட்டில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஜவுளி, சாயம், வேதிப்பொருள், தோல் பதனிடுதல், பெட்ரோகெமிகல், சிமெண்ட், அனல் மின் நிலையம் போன்ற தொழில்கள் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, தோல் பதனிடுதலில் நாட்டிலுள்ள 2,500 ஆலைகளில்80 சதவிகிதம் தமிழகத்தில் உள்ளன. 600 கோடி டாலர் வருவாயுடன், அந்நியச் செலாவணியில் இது 5வது இடத்தில் இருக்கிறது. அதேநேரம் இவை 240 லட்சம் லிட்டர் கழிவு நீரையும், 40,000 டன் ஆபத்தான திடக் கழிவையும் உற்பத்தி செய்கின்றன.

தொழிற்சாலைகள் பெருக்கத்தில் ஆபத்தான கழிவுநீர் வெளியேற்றம், பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றம், ஒலி மாசு போன்றவை கடுமையாக அதிகரிக்கின்றன. எனவே, சூழலைசீரழிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிக்க வேண்டும். சூழல் பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு மானியம்,ஊக்கத்தொகை வழங்கவேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும். ஒரு நிறுவனம், மறைமுகமாக சூழலை மாசுபாடுத்தியது தெரியவந்தால்,அதற்கான கடுமையான அபராதம் விதிக்கவேண்டும்.

சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படாது. அனுமதிக்கப்பட்ட பின், குறிப்பிட்ட இடைவெளியில் தொழிற்சாலையை பரிசோதனைசெய்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்து அனுமதிக்கப்படவேண்டும்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மக்கள் பிரதிநிதிகள் குழு அமைக்கவேண்டும். புதிய திட்டங்களுக்கும், பழைய திட்டங்களின் புதுப்பித்தலுக்கும் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர்,இந்தக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும்

உடனடியான நடவடிக்கை கோருபவை:

நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,இருக்கிற நீர்நிலைகளை காத்தல் வேண்டும்.

சென்னை நகரத்தில் அடையாறு,கூவம்,நதிக்கரையோரம் வசிக்கிற மக்களுக்கு அரசு விதியின் கீழ் மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்கும் நல்ல உட்கட்டுமான வசதிகளை உடையாக மாற்று வீடுகள் கட்டித்தர வேண்டும்

கிராணைட் ஊழல் குறித்த திரு.சகாயம் அளித்த அறிக்கையை உடனடியாக மக்களுக்கு தெரிவித்து தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சட்டவிரோத மேற்கொள்ளப்பட்ட கிரானைட் கொள்ளையின் காரணமாக தமிழக அரசுக்கு சுமார் ரூ.1.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரு சகாயம் அறிக்கை கூறுகிறது.

தாது மணல் கொள்ளை குறித்த திரு பேடி அறிக்கையை உடனடியாக மக்களுக்கு தெரிவித்து தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குடிநீரை அரசு இலவசமாக வழங்கவேண்டும்,அரசின் புட்டி நீர் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்

ஆற்று மணல் எடுப்பிற்கு தடை விதிக்க வேண்டும்

சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு கட்டுப்பாடுகள் வேண்டும்

தமிழகத்தைப் பொறுத்தவரை அரியலூர்,திண்டுக்கல்,கரூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், ஏறத்தாழ 200 இடங்களில் சுண்ணாம்புக்கல் குவாரிகள் உள்ளன.இதில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் அறுபது குவாரிகள் இயங்குகிறது.

சிமென்ட் தொழிற்சாலை மற்றும் சுண்ணாம்பு சுரங்கங்களால் சுற்றுப்புற பகுதிகளில் வாழ்கிற மக்களுக்கும் சூழல் மண்டலத்திற்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை நாம் நேரடியாக கண்டு வருகிறோம்.அதற்கு நேரடி உதாரணம் அரியலூர் மாவட்டம்.சிமென்ட் தொழிற்சாலை வெளியிடுகிற ஆபத்தான நச்சுக் கழிவுகளான குரோமியம்,நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற கன உலோக கழிவுகள் காற்றில் கலந்து,அப்பகுதி வாழ் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதோடு அப்பகுதியின் சூழல் மண்டலத்திற்கும் பெரும் கேடு நேருகிறது. சுண்ணாம்புக் கல் வெட்டி எடுக்கப்படுவதற்கு விதிமுறைகள் மற்றும் கண்காணிப்புகள் கடுமையாக இல்லாத காரனத்தால் அனுமதிக்கப்பட குத்தகை ஆண்டுகளையும் கடந்து பல பத்தாண்டுகள் குவாரிகள் இயங்கி பல கோடிகளை குவித்துவருகிறது.மேலும் 100ஆண்டுகள் கடந்த பல குவாரிகள் விதிமுறைகளை மீறி 150 அடி ஆழத்திற்கு கீழ் நிலத்தை தோன்றி சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் கடும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 10 பெரிய தனியார் சிமென்ட் ஆலைகள் மூலம், ஆண்டுக்கு சுமார் 4.8 கோடி டன் சிமென்ட் உற்பத்தியாகிறது.அதோடு ஆண்டுதோறும் தங்கள் உற்பத்தி திறனை சிமென்ட் நிறுவனங்கள், 10 சதவீதம் வரை அதிகரித்து வருகின்றன.

சிமெண்டின் சந்தை விலையை இந்நிறுவனங்களே முடிவு தீர்மானிக்கிற வகையில் சக்திமிக்கவையாக திகழ்கிறது.சிமென்ட் நிறுவனங்கள் தங்களுக்கும் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டு இவ்வாறு செயற்கையாக சிமென்ட் விலையை ஏற்றுகின்றன.

நெகிழிப் பயன்பாட்டிற்கு தடை விதித்தல் வேண்டும்

இந்திய அரசின் உத்தரவுப்படி 40 மைக்ரான் அளவுக்கு கீழான நெகிழிப்பை பயன்பாடு மற்றும் கடைகளில் இலவச நெகிழிப்பை வழங்குவதற்கான தடையாணையை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டவேண்டும்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சூழலியல், ஆற்றல், பொருளாதாரம், சமத்துவம் ஆகிய அனைத்தும் துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். வளங்குன்றாத,நிலையான வளர்ச்சிதான், நமக்கும் நமது வருங்கால சந்ததிகளுக்கும் தேவை. இயற்கை வளங்களை பாதுகாத்தல், நிலவளத்தை முறையாக பயன்படுத்துதல், வளங்குன்றாத விவசாயஉற்பத்தி, காடு மீட்பு உள்ளிட்ட பசுமைப்படுத்தும் நடவடிக்கைகள், மனிதர்களுக்கு தரமான வாழ்க்கையை கட்டமைத்துத் தரும். அத்துடன் பல்லுயிரிய பாதுகாப்பு, நீர் சேகரிப்பு, எரிசக்திபயன்பாட்டை குறைத்தல், மாசுபடுத்துதலுக்கு கட்டுப்பாடு போன்றவைதான் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும். மேற்கண்ட பசுமை செயல்பாடுகள் மூலமாகவே மனிதகுலத்தில் சமத்துவத்தையும், நீடித்த சமூக பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும்.

பகுதி-3

கடந்த கால திராவிடக் கட்சிகளின் வாக்குறுதிகளும் நடைமுறையும்

2011 ஆம் ஆண்டில் அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது

விவசாயம் தொடர்பாக:

விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக் கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்

தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும். விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாயபொருட்களின் உற்பத்தியால் 9 சதவீத விவசாய வளர்ச்சியை அடைவோம்.

தற்போதைய 8.6 மில்லியன் டன் அரிசி உற்பத்தியை 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவோம்.

விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

30,000 ஹெக்டேர் நிலப் பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.

விவசாய கருவிகளை அ.தி.மு.க. அரசு இலவசமாக வழங்கும்.

மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு – உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில்பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப் படுத்துவோம்.

விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையைநிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செய்யப்படும்.

கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப் பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப் பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.

“எத்தனால்” எரிபொருள் உற்பத்தியை பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள்நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும்.

நலிந்த கரும்பு ஆலைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்க்கரை மற்றும் எத்தனால் எரிபொருள் தயாரிப்பு விரிவாக்கப்படும்.

ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருக்கப்படும்.

உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் நவீன காலத்திற்கு ஏற்ற வடிவில் புதிய பொலிவுடன் சிறப்பான முறையில் செயல் படுத்தப்படும்.

மின்சாரம் தொடர்பாக:

வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவுகணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.

* 2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மொகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

* 2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 மெகாவாட் சூரிய சக்தி பூங்கா உருவாக்கப்பட்டு 3000 மெகாவாட் மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும்.

* தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

பொது:

மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.

பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறச் சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு, பிளாஸ்டிக் கழிவு இல்லாத கிராமங்கள்,நகரங்கள் உருவாக்கப்படும்.

திருப்பூர் சாயக் கழிவு பிரச்சனையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்தி கரிக்கத் தேவையான தொழில் நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம்உருவாக்கப்படும்.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாவட்டம் தோறும் மண்பாண்ட தொழிற்கூடங்கள் அமைத்துத் தரப்படும்.

2011-16 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் நடந்தது:

ஐந்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2014ல் மட்டும் 895 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டிற்க்கான தேசிய குற்றவியல் ஆய்வு மையம் எடுத்த புள்ளிவிவரப் படி, ஒட்டுமொத்தமாக வேளாண் தொழில் சார்ந்த தற்கொலைகளில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது(மகராஷ்ட்ரம் – 4004,தெலுங்கான-1347,மத்திய பிரதேசம் -1198,தமிழகம் -827) விவசாய இயந்திரங்கள் எதுவும் இலவசமாக வழங்கவில்லை.மாறாக டிராக்டர் உள்ளிட்ட வாகனங் கள் மற்றும் இயந்திரங்கள் வாங்க விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க இயலாமால் ஜப்தி செய்வதும் தொடர்கிறது.உதரணமாக சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி டிராக்டர் கடன் தவணை பாக்கி வைத்தார் என்பதற்காக காவல் துறையினராலும், குண்டர் களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அரியலுர் அருகே அழகர் என்ற விவசாயி கடனைக் கட்ட முடியாத நிலையில் பூச்சி மருந்தை வாங்கிக் குடித்து விட்டு இறந்தார்.

ஆட்சிக்கு வந்ததும் ஒரு டன் கரும்புக்கு ரூ.2100 மட்டுமே கொள்முதல் விலையாக முதலில் அறிவித்தார்

பிறகு,2013 ஆம் ஆண்டில் கரும்புக் கொள்முதலுக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாயிலிருந்து ரூ.550 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 450 ரூபாயாகவும் குறைத்தார்.இதனால் ஒரு டன்கரும்பு விலை ரூ.2650 ஆக அறிவிக்கப்பட்டது.இதன் காரணமாக சுமார் இருநூறு ருபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான மாநில அரசின் கொள்கை 2012 ஆம் ஆண்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது ஆனால் சூரிய ஒளி மின் உற்பத்தி துவங்கப்படவே இல்லை

தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறி விட்டதாக சட்ட சபையில் ஜெயலலிதா அறிவித்தார்.ஆனால் எதார்த்தத்தில்,மின்வெட்டு பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை

சொல்லாமல் செய்தது:

அதுவரை 6000 எண்ணிக்கையாக இருந்த மதுபானக் கடைகள் 12000 கடைகளாக அதிகரிக்கப்பட்டது.மிடாஸ் சாராய ஆலையின் ஆண்டு வருமானத்தை 2000 கோடியாக உயர்ந்தது

http://www.indiaenvironmentportal.org.in/media/iep/infographics/Green%20Agenda%20for%20saffron/index.html

http://www.downtoearth.org.in/news/annual-state-of-india-s-environment-report-2015-46723

http://www.hindustantimes.com/india/13-out-of-world-s-top-20-polluted-cities-in-india-only-three-in-china/story-myTrPZM8DHmQOhxB9cc5hI.html

http://nellaicityaiadmk.blogspot.in/2011/03/2011.html