தமிழ் நாடு நீர்வளத்துறையின் புதிய நீர்த்தேக்கத் திட்டம் களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் மாற்று இடங்கள் குறித்து ஆராயுமாறு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் நாடு நீர்வளத்துறை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்குட்பட்ட விக்கிரமசிங்கபுரத்துக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து வரும் கோரையாற்றின் குறுக்கே 43மீ உயரம் கொண்ட அணையைக் கட்ட திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (Environmental Impact Assesment – EIA) மேற்கொள்வது அவசியமாகும். EIA செய்வதற்கான ஆய்வு எல்லைகளை (Terms of Reference) வழங்குமாறு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் (Expert Appraisal Committee) கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நாடு நீர்வளத்துறை விண்ணப்பித்திருந்தது. இவ்விண்ணப்பத்தைக் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி பரிசீலித்த நிபுணர் குழு அணையைக் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக எல்லைக்கு வெளியே அமைக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறு தெரிவித்துள்ளது.
கோரையாறு அணையின் தேவை:
கோரையாறு அணையை அமைப்பதற்கான பல்வேறு காரணங்களைத் தமிழ் நாடு நீர்வளத்துறை தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தது. கோரையாறு தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளை ஆறாகும். இது விக்ரமசிங்கபுரம் கிராமத்தில் உள்ள 46.22 ஏக்கர் பாசன வசதி கொண்ட சிங்கப்பெருமாள்குளம் என்ற ஒரே ஒரு குளத்திற்கு மட்டுமே நீர்ப்பாசனம் அளித்து, பின்னர் தாமிரபரணி ஆற்றுடன் கலக்கிறது..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டத்தில் தாமிரபரணி படுகைக்கு அருகில் அமைந்துள்ள சில பகுதிகள், போதிய மழையின்மையால் வறட்சிக்கு உள்ளாகும் நிலையில் உள்ளன. எனவே, கோரையாற்றில் ஒரு அணை கட்டுவதன் மூலம், மேல்நிலைக் கால்வாய் (High Level Canal) மற்றும் அதிலிருந்து பிரியும் பல்வேறு கால்வாய்களை அமைப்பதன் மூலம் பாசனப் பரப்பை மேலும் விரிவுபடுத்தலாம் என நீர்வளத்துறை கருதுகிறது.
ஆண்டுதோறும் 1769 மில்லியன் கன அடி (1.44 நிரப்புதல்கள்) நீரைத் தேக்கி வைக்கும் வகையில் அணையைக் கட்டத்திட்டமிடப்பட்டுள்ளது. மானூர், பள்ளமடை உள்ளிட்ட குலங்களுக்கு நீரை எடுத்துச் செல்ல 53.50 கி.மீ. தூரத்துக்கு கல்வாயும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோரையாறு அணை கட்டப்பட்டால் இப்போது பாசன வசதி பெறும் 1225.66 எக்டேராக இருக்கும் வேளாண் பகுதிகள் 9091.50 எக்டேராக உயரும் என நீர்வளத்துறை கணக்கிட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1875 கோடியாகும்.
ppt for koraiyarதிட்ட அமைவிடம்:
கோரையார் அணை மற்றும் கால்வாய்களை அமைக்க மொத்தம் 819.211 எக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதில் 186.735 எக்டேர் காப்புக் காடுகளாகும், மீதமுள்ள நிலங்கள் பட்டா பெறப்பட்டுள்ள ஈர, வறண்ட மற்றும் பயன்படுத்தப்படாத நிலங்களாகும். காப்புக்காடுகளுக்குப் பதிலீடாக அதற்கருகிலேயே உள்ள 375 எக்டேர் பரப்பிலான பயன்படுத்தப்படாத நிலத்தை வனத்துறைக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அணை கட்டப்பட்டால் 278.105 எக்டேர் நிலம் நீருக்குள் மூழ்கிவிடும். இதில் 156.44 எக்டேர் காப்புக்காடுகளாகும். மேலும் 80.195 எக்டேர் அரசு நிலமும் 41.47 எக்டேர் தனியார் நிலமும் நீருக்குள் மூழ்கும்.

EACன் அறிவுறுத்தல்:
இத்திட்ட அமைவிடமானது புலிகள், கருமந்தி மற்றும் பேணிப் பாதுகாக்க வேண்டிய பிற தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு முக்கிய வாழிடமாக விளங்கும், மிக உயர்ந்த சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அமைந்திருப்பது குறித்து EAC கவலை தெரிவித்தது.
நீர்ப்பாசன வசதி தேவைப்படும் ஆயக்கட்டுகளின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை தமிழ் நாடு நீர்வளத்துறை போதுமான அளவு ஆராயவில்லை என EAC தெரிவித்தது. மானூர் மற்றும் பள்ளமடை குளங்களுக்கு சிற்றாற்றிலிருந்து நீரைக் கொண்டு சென்றால் சூழலியல்/சுற்றுச்சூழல் தாக்கங்களைக் குறைக்க முடியும் என EAC அறிவுறுத்தியது.
புலிகள் காப்பகத்தின் எல்லைக்கு வெளியே நீர்த்தேக்கத்தை அமைக்க முடிந்தால் சூழலியல் தாக்கத்தையும் கானுயிர் வாழிடங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலமைவுகள் மீதான தாக்கங்களையும் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் திட்டச்செலவும் குறையும் என EAC தெரிவித்தது.
இதனடிப்படையில் மாற்று இடங்களை ஆய்வு செய்ய வேண்டும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இத்திட்டத்தை அமைக்க வேண்டியதன் காரணங்களை விரிவாகத் தெரிவிக்க வேண்டும் என நீர்வளத்துறைக்கு அறிவுறுத்தி விண்ணப்பத்தின் மீதான முடிவை EAC ஒத்திவைத்தது.
சதீஷ் லெட்சுமணன்
