கல்லாடி நிலச்சரிவு; நிகழக் காத்திருந்த பேரிடர்.

கேரளாவின் வயநாடு மாவட்டம், மேப்பாடிக்கு அருகிலுள்ள கல்லாடியில் ஜூலை 7, 2026 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு, நிபுணர்களின் கருத்துப்படி, நிகழக் காத்திருந்த ஒரு பேரிடராகவே இருந்தது.

மூவரின் உயிரைப் பறித்த (ஜூலை 9ஆம் தேதி நிலவரப்படி 7 பேர் உயிழந்துள்ளனர்)  இப்பேரிடர் நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஐந்து பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு தேசிய மேம்பட்ட ஆய்வுகள் (National Institute of Advanced Studies) நிறுவனத்தின் இணைப் பேராசிரியரான புவி அறிவியலாளர் சி பி ராஜேந்திரன், இத்தகைய பலவீனமான நிலப்பரப்புக்குத் தேவையான விரிவான புவியியல் மற்றும் நீரியல் ஆய்வுகள் இல்லாமலேயே இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறினார். கடும் மழைக் காலங்களில் சுரங்கப்பாதை வெட்டும் பணி மலைச்சரிவுகளின் அழுத்தத்தை மாற்றி, விரிசல்களை உருவாக்கி, சரிவுகளைக் தூண்டக்கூடும் என அவர் குறிப்பிட்டார். மாறிவரும் மழைப்பொழிவு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்கட்டமைப்பிற்கு மிகக் கடுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கோருவதாக அவர் தெரிவித்தார்.

வயநாட்டில் உள்ள ஹியூம் சூழலியல் மற்றும் கானுயிர் உயிரியல் மையத்தின் (Hume Centre for Ecology and Wildlife Biology) இயக்குநர் சி கே விஷ்ணுதாஸ், கல்லாடி பேரிடரை, இயற்கையாகவே பலவீனமான ஒரு மலையின் மீது திணிக்கப்பட்ட ஒரு பொறியியல் தோல்வி என குறிப்பிட்டார். அகழ்வு, மலைச்சரிவை வெட்டுதல் மற்றும் செயற்கை உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் நிலப்பரப்பு ஏற்கெனவே கணிசமாக மாற்றப்பட்டிருந்ததால், ஒரு நாளில் சுமார் 200 மி.மீ மழைப்பொழிவே சரிவை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

இதைவிட முக்கியமானது, கணிசமான மழைப் பற்றாக்குறையைப் பதிவு செய்திருந்த ஒரு பருவமழைக் காலத்தில் இந்நிகழ்வு நடந்தது என்ற அவரது அவதானிப்பே. ஒரு சிதைக்கப்பட்ட ஒரு மலைச்சரிவை, கடுமையான மழையின் ஒரே ஒரு தருணம் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இது காட்டியது.

சேற்று மதில்

ஜூலை 7 காலையில், கேரளாவின் அணக்கம்போயில்-கல்லாடி-மேப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டத்தின் (நாட்டிலேயே இது போன்ற திட்டங்களில் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது) வெளியேறும் வாயிலை ஒட்டியிருந்த சரிவில் இருந்து ஆயிரக்கணக்கான டன் சேறு, பாறை மற்றும் கட்டுமான குப்பைகள் இடிந்து விழுவதற்கு முன், கல்லாடியில் பேரிரைச்சல் கேட்டது.

வினாடிகளுக்குள், நகரும் மண்ணுக்கு அடியில் வாகனங்கள் மறைந்துவிட்டன. ஒரு பாலம் புதைந்தது, தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். திகிலடைந்த உள்ளூர்வாசிகள் உயிரைக் காக்க ஓடும் நிலையில், மீட்புக் குழுக்கள் நேரத்திற்கு எதிராக விரைந்தனர்.

298 உயிர்களைப் பறித்த 2024 ஆம் ஆண்டு முண்டக்கை-சூரல்மலை பேரழிவு நடந்த இடத்திலிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில்தான் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. இப்பேரிடரை நேரில் கண்ட கல்லாடி வாழ் மக்கள் அது எவ்வளவு விரைவாக நிகழ்ந்தது என்பதை நம்மிடம் தெரிவித்தார்கள்.. சுரங்கப்பாதை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகத் தொழிலாளியான அரிஃப், ஒரு பெரும் இரைச்சலைக் கேட்டதைத் தொடர்ந்து, மண்ணின் பெரும் திரள் நகரத் தொடங்கியதைப் பார்த்ததாக நினைவுகூர்ந்தார். சில நொடிகளுக்குள், தண்ணீர், சேறு மற்றும் பாறைகள் சாலையை மூழ்கடித்தன. மீனாட்சி பாலம் கிட்டத்தட்ட புதைந்துவிட்டது. அவரும் அவரது சகாக்களும், சேற்றுக் குவியல் உணவகத்தின் ஓரத்தை நெருங்கியபோது ஓடியே தப்பினர்.

ஜூலை 7ஆம் தேதி பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள், கொள்கை வகுப்பாளர்களோ, ஆலோசகர்களோ, ஒப்பந்ததாரர்களோ அல்ல. மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்டில் இருந்து வேலை தேடி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து வந்த தொழிலாளர்கள். காயமடைந்த மற்றவர்கள், மலைப் பேரிடரால் மீண்டும் ஒருமுறை துண்டிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் குடியிருப்பாளர்கள். மேப்பாடி-சூரல்மலை சாலை துண்டிக்கப்பட்டது, மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் சிரமப்பட்டன, மேலும் பல குடும்பங்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டன.

அரசாங்கத்தின் கருத்து:

கல்லாடியைச் சுற்றி வசிக்கும் மக்கள், சுரங்க வாயில் பகுதிக்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான தோண்டப்பட்ட மண் குவியல்கள் குறித்து மீண்டும் மீண்டும் கவலை தெரிவித்திருந்தனர். உள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தென்மேற்குப் பருவமழை வருவதற்கு முன்னர் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியதுடன், தடுப்புச் சுவர் அமைப்புகளையும் கோரினர். ஜூலை 7 அண்று பெய்த மழைப்பொழிவு அந்தப் பரந்த மண் குவியலை பள்ளத்தாக்கிற்குள் நகர்த்தியபோது, மக்களின் அச்சங்கள் நிதர்சனமாகின.

மாவட்ட அதிகாரிகளும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், பருவமழைக்கு முன்னர் பெரும் அளவில் குவிக்கப்பட்டிருந்த தோண்டப்பட்ட மண்ணை அகற்றுமாறு ஒப்பந்ததாரருக்கு மீண்டும் மீண்டும் உத்தரவிட்டதாக முதலமைச்சர் வி டி சதீசனும், வேளாண்மை அமைச்சர் டி சித்திக்கும் தெரிவித்தனர். அந்த உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். தோண்டப்பட்ட மண்ணை அறிவியல்பூர்வமற்ற முறையில் கொட்டியதன் விளைவே இந்தச் சம்பவம் என்று அரசாங்கம் தெரிவித்தது..

இது உண்மை என்றால், சுரங்கப் பணியிட மேலாண்மையில்  நடந்த கடுமையான தவறுகளை அது வெளிப்படுத்துகிறது. ஆனாலும் அது ஒரு பெரிய நிறுவனரீதியான பலவீனத்தையும் அம்பலப்படுத்துகிறது.

இத்துயரம் ஏற்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பே மண் குவியல்கள் ஆபத்தானவை என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் ஏற்கெனவே அடையாளம் கண்டிருந்தால், ஆபத்துகள் நீக்கப்படும் வரை கட்டுமானப் பணிகள் ஏன் நிறுத்தப்படவில்லை? கட்டாய பாதுகாப்பு உத்தரவுகள் ஏன் அமல்படுத்தப்படவில்லை? ஒழுங்குமுறைக் கண்காணிப்பு மண் குவியல் அகற்றப்படுவதை உறுதிசெய்வதற்குப் பதிலாக எச்சரிக்கைகள் வழங்குவதோடு ஏன் நின்றுவிட்டது?

கேரளாவில் அதிகம்  நிலச்சரிவுக்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் ஒன்றின் வழியாக, மிக உயர்ந்த தரத்திலான புவியியல் ஆய்வு, காலநிலை-ஆபத்து மதிப்பீடு மற்றும் சுயாதீன அறிவியல் ஆய்வு இல்லாமல் இந்த அளவிலான ஒரு திட்டம் ஏன் அனுமதிக்கப்பட்டது என்ற பெரிய கேள்வி இன்னும் பதிலின்றியே உள்ளது.

சர்ச்சைக்குரிய முயற்சி:

2018ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ ஒவ்வோர் ஆண்டும் தீவிர வானிலை நிகழ்வுகளைச் சந்தித்து வரும் கேரளாவிற்கு, அணக்கம்போயில்-கல்லாடி-மேப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டம் ஒருபோதும் ஒரு சாதாரண உள்கட்டமைப்புத் திட்டமாக இருந்ததில்லை.

ரூ. 2,134 கோடி மதிப்பிலான இரட்டை வழி சுரங்கப்பாதை, மிகவும் பாதிக்கப்படக்கூடிய வெள்ளரிமலை மலைத்தொடர்கள் வழியாக எட்டு கிலோமீட்டருக்கும் மேலாக நீண்டு, கோழிக்கோட்டையும் மைசூரு-பெங்களூருவையும் வயநாடு வழியாக இணைக்கும் ஆபத்தான தமராசேரி சாலைக்கு கேரளாவின் மாற்றுத் தீர்வாக முன்வைக்கப்பட்டது.

கல்லாடி
Map of the Construction of Twin Tunnel (2+2 lane) with Four Lane Approaches (from existing roads) for providing direct connectivity between Aanakampoyil­ Kalladi-Meppadi in Kozhikode and Wayanad Districts of Kerala

 

தொடர்ச்சியான அரசாங்கங்கள் இதை கோழிக்கோடு-வயநாடு இடையேயான ஒரு ‘உயிர்நாடி’ என்று வர்ணித்தன, இது பயண நேரத்தைக் குறைத்து, தளவாடங்களை மேம்படுத்தி, சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் என்று கூறப்பட்டது.

ஆனால் இத்திட்டம் முன்மொழியப்பட்ட நாள் முதலே, புவியியலாளர்கள், சூழலியலாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள், இப்பாதையானது உறுதித்தன்மை இல்லாத மலைப்பகுதி வழியே திட்டமிடப்படுவதை எச்சரித்தனர்.

தீபகற்ப இந்தியாவின் மிகப் பழமையான மலை அமைப்புகளில் வெள்ளரிமலை-செம்பரா-ஆரணமலை நிலப்பரப்பும் ஒன்று என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மில்லியன் கணக்கான ஆண்டுகால தேய்மானம், பாறை நிறையின் பெரும் பகுதிகளை கடுமையாக விரிசல் கொண்ட, ஆழமாக தேய்மானமடைந்த சரிவுகளாக மாற்றியுள்ளது, இவை பெருமழை காலத்தில் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகின்றன.

காலநிலை மாற்றம் இந்த அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது. மழை இப்போது குறைவான நேரத்தில் மிக அதிக தீவிரத்துடன் பெய்கிறது, பல தசாப்தங்களாக நிலையாக இருந்திருக்கக்கூடிய சரிவுகளை திடீரென இடிந்துவிழச் செய்யும் அளவிற்கு பெய்கிறது மழை.

இதே மலை அமைப்பு, தன் பலவீனத்தை கேரளாவிற்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டியுள்ளது. 2018 முதல், சுரங்கப்பாதை சுற்றியுள்ள இடங்களில் அபாயகரமான நிலச்சரிவுகள் அச்சுறுத்தும் எண்ணிக்கையில் தாக்கியுள்ளன: 2019இல் புத்துமலை மற்றும் கவளப்பாற, 2020இல் பெட்டிமுடி, 2024இல் சூரல்மலை மற்றும் முண்டக்கை — இதில் இந்தியாவின் மிகக் கொடிய நிலச்சரிவுகளில் ஒன்று நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்தது.

மேற்கூறிய ஒவ்வொரு நிகழ்வும், இம்மலைகள் காலநிலை-உந்துதலால் ஏற்படும் உறுதித்தன்மையின் புதிய காலகட்டத்தில் நுழைந்திருப்பதற்கான அறிவியல் சான்றை வலுப்படுத்தின. இது குறித்து கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரத்தில்தான் கட்டுமானத் திட்டங்கள் வேகமெடுத்துள்ளன.

காலநிலை மாற்றத்தின் பங்கு:

கடந்த தசாப்தத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள், கேரளா குறைவான மழை நாட்களைப் பதிவு செய்து வருவதோடு, அதிகரித்துவரும் தீவிர நீரிடிகளையும் சந்தித்து வருவதைக் கூறுகின்றன. நிலையான பருவமழைப் பொழிவுகளுக்குப் பதிலாக குறுகிய கால, அதிதீவிர பெருமழை பதிவாகி வருகின்றன. இந்த பெருமழை நிகழ்வுகள், மலைச் சரிவுகளை வேகமாக ஈரப்படுத்தி, துளையிடை நீர் அழுத்தத்தை அதிகரித்து சரிவுகளைத் தூண்டுகின்றன.

CUSAT-இல் உள்ள மேம்பட்ட வளிமண்டல ரேடார் ஆய்வு மையத்தின் அறிவியலாளரான அஜில் கொட்டாயில், கேரளாவில் சமீபத்திய தீவிர மழைப்பொழிவு  நிகழ்வுகள், கெல்வின் அலைகள், ரோஸ்பி அலைகள் மற்றும் கலப்பு ரோஸ்பி-ஈர்ப்பு அலைகள் போன்ற பரந்தளவிலான வளிமண்டல அமைப்புகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த குழப்பங்கள், அரபிக் கடல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேல் குறுகிய காலத்தில் மழைப்பொழிவின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் கொடிய கேரள வெள்ளங்களை ரோஸ்பி அலை செயல்பாட்டுடன் ஆய்வுகள் தொடர்புபடுத்தியுள்ளன, அதே சமயம் 2024ஆம் ஆண்டு வயநாடு நிலச்சரிவுகள் கடுமையான கெல்வின் அலை நிலைமைகளுடன் ஒத்துப்போனதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய கண்டுபிடிப்புகள் ஒரு அசௌகரியமான உண்மையை மேலும் வலுப்படுத்துகின்றன: வரலாற்று அடிப்படையிலான மழைப்பொழிவு அளவுகளை வைத்து மலைப்பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளைத் திட்டமிடுவது பேரிடர்கள் நேர்வதிலிருந்து நம்மைக் காப்பாற்றாது. 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு என்ன கூறுகிறது?

இந்தியாவின் சுற்றுச்சூழல் முடிவெடுக்கும் செயல்முறையிலும் உள்ள ஆழமான பலவீனங்களை இச்சுரங்கப்பாதைத் திட்டம் அம்பலப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதிகள் பெரும்பாலும் காடுகள், கானுயிர்கள் மற்றும் மாசுபாட்டைக் கணிசமான விவரத்துடன் மதிப்பிடுகின்றன, ஆனால் நீண்டகால புவியியல் பரிணாமம், நிலத்தடி நீர் இயக்கவியல் மற்றும் காலநிலை-உந்துதல், மலைச்சரிவுகளின் உறுதியின்மை உள்ளிட்டவற்றுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த கவனம் மட்டுமே செலுத்துகின்றன.

வழக்கமான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIAs), வேகமாக மாறிவரும் மழைப்பொழிவு முறைகளின் கீழ் பழமையான மலை அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மதிப்பிடுவதற்கு போதுமான அளவு தயார் நிலையில் இல்லை. வயநாடு போன்ற நிலப்பரப்புகளில் இந்த இடைவெளி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது, அங்கு பேரிடர்கள் இனி அரிதான, விதிவிலக்கான நிகழ்வுகள் அல்ல, மாறாக மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுகளாகவே உள்ளன.

இத்திட்டம், ஒரு பெரிய அளவிலான புவியியல் நிலைமையை மாற்றும் திட்டமாகக் கருதப்படுவதற்குப் பதிலாக, சாதாரண ஒரு சாலை கட்டுமான பணியாகவே நடத்தப்பட்டதாக சுற்றுச்சூழலாளர்கள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். ஒப்பீட்டளவில் நிலையான நிலப்பரப்பில் அமைந்த நெடுஞ்சாலைகளைப் போலல்லாமல், மலைச் சுரங்கப்பாதைகள் பாறை நிறையை பாதித்து, நிலத்தடி நீர் பாதைகளைத் தடைசெய்து, சரிவு வடிவவியலை மாற்றி, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த வடிகால் முறைகளை மாற்றியமைக்கின்றன.

இந்த ஒட்டுமொத்த புவியியல் ஆபத்துகளை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு  போதுமான அளவு ஆராயவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இத்திட்டத்தைத் தீவிரமாக எதிர்த்து வரும் கேரளாவின் முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவரான ஶ்ரீதர் ராதாகிருஷ்ணன், இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார். வெடிப்பு பணிகள் சேதப்படுத்தும் அதிர்வுகளை உருவாக்காது என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட, அனுமதியுடன் இணைக்கப்பட்ட நிபந்தனைகள், மலைப் பொறியியலின் யதார்த்தங்களை விட நடைமுறைக்கு ஒவ்வாத அனுமானங்களையே பிரதிபலித்ததாக அவர் கருதுகிறார். கல்லாடி பேரிடருக்குப் பிறகு, சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெறவும், முழுத் திட்டத்தையும் ஒரு சுயாதீன அறிவியல் குழு மறுபரிசீலனை செய்யவும் வேண்டும் என்று அவர் கோருகிறார்.

இந்தியாவின் மலைப் பகுதிகள் முழுவதும், புவியியல் ஆய்வுகள், ஒரு சுரங்கப்பாதையைக் கட்ட முடியுமா என்பதை ஒரு சூழலியல் கண்ணோட்டத்திலிருந்து மதிப்பிடாமல், பொறியியல் கண்ணோட்டத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

அவை அடிப்படையில் வேறுபட்ட கேள்விகள். முதலாவது தொழில்நுட்ப சாத்தியக்கூறை தேடுகிறது. இரண்டாவது நீண்டகால நிலைத்தன்மையை மதிப்பிடுகிறது. காலநிலை மாற்றத்தால் பலவீனமடைந்து வரும் மலை நிலப்பரப்புகளில், இந்த வேறுபாடே உறுதித்தன்மைக்கும் பேரழிவுக்கும் இடையிலான வித்தியாசமாக மாறக்கூடும்.

வயநாடு சுரங்கப்பாதைக்கு எதிரான சட்டரீதியான வழக்கு, இதே கவலைகளை துல்லியமாக பிரதிபலித்தது. இந்தத் திட்டம் ஏற்கெனவே மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகளை சந்தித்து வரும் ஒரு சூழலியல் ரீதியாக பலவீனமான பகுதியின் வழியாக செல்கிறது என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர். எனினும், 2026 ஏப்ரலில், உச்ச நீதிமன்றம் இத்திட்டத்தை நிறுத்த மறுத்தது, இது குறிப்பிடத்தக்க பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனத் தெரிவித்தது.

சட்டரீதியாக, இத்திட்டம் பிழைத்தது. அறிவியல்பூர்வமாக, விவாதம் ஒருபோதும் முடிவடையவில்லை. ஜூலை 7ஆம் தேதி பேரிடர், அந்த விவாதத்தை மீண்டும் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது.

கே. ஏ. ஷாஜி.

நன்றி: Down To Earth

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted