நெகிழி மாசில்லா ஜூலை: ஒரு மாதச் சவாலில் தொடங்கி உலக இயக்கமாக மாறிய பயணம்.

ஜூலை

நெகிழி மாசில்லா ஜூலை

நமது மனித சமூகம் தொடர்ந்து கற்றுக்கொண்டு மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், சில நேரங்களில் முன்னேற்றம் என்பது புதியவற்றைக் கற்றுக்கொள்வதில் மட்டும் இல்லை; காலத்திற்குப் பொருந்தாத பழக்கவழக்கங்களை விடுத்து, மறந்துபோன நல்ல பழக்கவழக்கங்களை மீண்டும் கற்றுக்கொள்வதிலும் இருக்கிறது. “21ஆம் நூற்றாண்டின் கல்வியறிவற்றவர்கள் என்பவர்கள், படிக்கவோ எழுதவோ தெரியாதவர்கள் அல்ல. மாறாக, புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், காலத்திற்குப் பொருந்தாதவற்றை மறக்கவும், தேவையானவற்றை மீண்டும் கற்றுக்கொள்ளவும் முடியாதவர்களே ஆவர்” என்கிறது ஒரு புகழ்மிக்க மேற்கோள். இக்கருத்து, நாம் நெகிழி பயன்பாட்டைப் பற்றி சிந்திக்கும்போது மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

நாம் வசதி, வேகம் மற்றும் மலிவான விலை ஆகியவற்றை முன்னிறுத்தி, ஒற்றைப்பயன்பாட்டு நெகிழிப் பொருட்களை இயல்பான வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டோம். ஒரு காலத்தில் மனித வாழ்க்கையை எளிதாக்கிய இந்தக் கண்டுபிடிப்பு, இன்று உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரச் சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது. உலக வரைபடத்தில் மனிதர்கள் காலடித் தடம் பதிக்காத இடங்கள் இருக்கலாம். ஆனால், இன்று மனிதர்களின் காலடித் தடம் பதியாத இடங்களிலும் நெகிழியின் தடயங்கள் காணப்படுகின்றன. இதன் தாக்கம் சுற்றுச்சூழலோடு நின்றுவிடவில்லை. இந்த“நெகிழி நாகரிகத்தின்” தாக்கம் மனித உடலுக்குள்ளும் நுண் மற்றும் நானோஅளவிலான நெகிழித் துகள்களாக ஊடுருவத் தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திட்டத்தின் (UNEP) தரவுகளின்படி, உலகளவில் ஆண்டுதோறும் 400 மில்லியன் டன்களுக்கும் அதிகமான நெகிழி உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் பெரும்பாலானவை ஒருமுறை அல்லது குறுகிய காலப் பயன்பாட்டிற்குப் பிறகு கழிவாக மாறுகின்றன.

இப்பின்னணியில்தான் “நெகிழி மாசில்லா ஜூலை” என்ற உலகளாவிய மக்கள் இயக்கத்தின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இது வெறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்த பிரச்சாரம் மட்டுமல்ல. இது மக்களின் வாழ்க்கை முறையை மறுஆய்வு செய்ய வைக்கும் ஒரு சமூகக் கற்றல் இயக்கமாக வளர்ந்துள்ளது. இந்த இயக்கம், நாம் எதை வாங்குகிறோம், எதைப் பயன்படுத்துகிறோம், எதைத் தூக்கி எறிகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க தூண்டுவதன் மூலம், ஒரு தூய்மையான மற்றும் நலமான எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

உலகளாவிய நெகிழி மாசுபாட்டின் பரவலான தன்மையே, ஒரு புதிய அணுகுமுறையின் தேவையை உருவாக்கியது. இத்தகைய சூழலில், நெகிழி இல்லா உலகத்தை எளிதில் கற்பனை செய்ய முடியாத நவீன வாழ்க்கை முறைக்கு மத்தியில், ‘முயன்று பார்ப்போம், நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையை விதைத்தது ஒரு மக்கள் இயக்கம். இது உலகின் பல கோடி மக்களை ஒன்றிணைத்துள்ளது. அதுவே, “நெகிழி மாசில்லா ஜூலை”ஆகும். இந்த இயக்கம் தனிநபர்களிடத்தில் குற்ற உணர்வை உருவாக்காமல், யாரையும் குற்றம் சாட்டாமல், அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய உள்ளாட்சி அமைப்பில் சுற்றுச்சூழல் அதிகாரியாகப் பணியாற்றிவந்த ரெபெக்கா பிரின்ஸ் ரூயிஸ் என்பவரின் மனதில் தோன்றிய ஓர் எளிய கேள்வியே”நெகிழி மாசில்லா ஜூலை” என்ற உலகளாவிய இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ஒரு முறை ரெபெக்கா தனது பகுதியில் உள்ள உள்ளூர் கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு களஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நாள்தோறும் மலைபோல் வந்து குவியும் நெகிழி கழிவுகளையும், குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களின் அளவையும் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.

இம்மாபெரும் சுற்றுச்சூழல் சார்ந்த சிக்கலுக்கு, மறுசுழற்சி என்பது ஒரு தற்காலிகத் தீர்வே தவிர, அதுவே ஒருபோதும் முழுமையான தீர்வாகாது என்பதை ஆழமாக உணர்ந்தார். நாம் ஏன் கழிவுகள் உருவாகுவதை அதன் தொடக்கப் புள்ளியிலேயே நிறுத்தக் கூடாது என்ற சிந்தனை அவரிடம் தீவிரமாக எழுந்தது. ’கழிவுகள் உருவான பிறகு அவற்றை எவ்வாறு கையாள்வது?’ என்பதற்குப் பதிலாக, ‘கழிவுகள் உருவாகாமல் எவ்வாறு தடுப்பது?’ என்ற கேள்வியே அவரது சிந்தனையின் மையப்புள்ளியாக மாறியது. அந்தக் கேள்விக்கான பதிலைத் தனது வாழ்க்கையிலேயே தேடிப் பார்க்க முடிவு செய்தார். அதன் முதல் படியாக, ஒரு மாத காலத்திற்கு தேவையற்ற ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களைத் தவிர்த்து வாழும் சவாலை ஏற்றுக்கொண்டார்.

அந்த எண்ணம் விரைவில் அவரது சக ஊழியர்களிடையிலும் பரவியது. இம்முயற்சி 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெறும் நாற்பது நபர்களுடன் தொடங்கியது. இது தொடக்கத்தில் அலுவலகச் சவாலாக மட்டுமே தோன்றியது. ஆனால், அச்சவாலில் பங்கேற்றவர்கள் எதிர்பாராத ஓர் அனுபவத்தைப் பெற்றனர். கடைக்குச் செல்லும்போது, உணவு வாங்கும்போது, அலுவலகத்தில் தேநீர் அருந்தும்போது, வீட்டிற்கான பொருட்களை வாங்கும்போதுஎன்று அவர்கள் தவிர்க்க முயன்ற ஒவ்வொரு நெகிழிப் பொருளும், அது எவ்வளவு ஆழமாக வாழ்க்கையில் கலந்துவிட்டது என்பதை வெளிப்படுத்தியது. இதனால் நெகிழி மாசுபாடு என்பது எங்கோ தொலைவில் நடைபெறும் சுற்றுச்சூழல் சார்ந்த சிக்கல் மட்டும் அல்ல. நமது அன்றாடத் தேர்வுகளோடு நேரடியாக இணைந்திருக்கும் ஒரு வாழ்க்கை முறைச் சிக்கல் என்பதும் தெளிவானது.

இந்த இயக்கத்தின் தனிச்சிறப்பு என்பது நெகிழி மாசுபாட்டைப் பற்றி வெறுமனே பேசுவதற்குப் பதிலாக, அதை நடைமுறை அன்றாட வாழ்க்கையில் அனுபவித்து உணரச் செய்ததே ஆகும். அதனால்தான் ஒரு சிறிய அலுவலகத்தில் தொடங்கிய முயற்சி, பின்னர் உலகம் முழுவதும் மக்களை இணைக்கும் மக்கள் இயக்கமாக வளர்ந்தது. இன்று, இந்த இயக்கம் உலகின் ஏறத்தாழ 190 நாடுகளில் விரிந்துள்ளது. இது சிறிய பழக்க மாற்றங்களும் பெரிய சமூக மாற்றங்களுக்கு வழிவகுக்க முடியும் என்பதை உலகிற்கு நிருபித்துள்ளது. இம்முயற்சியில் இயக்கத்தின் மதிப்பீட்டின்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 17 கோடி மக்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இது பங்கேற்பாளர்களின் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆண்டுதோறும் பெருமளவிலான கழிவுகளையும் மில்லியன் கணக்கான ஒற்றைப்பயன்பாட்டு நெகிழிப் பொருட்களையும் தவிர்க்க உதவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்த இயக்கத்தின் தாக்கம் ஒருமாத கால சவாலுடன் நின்றுவிடவில்லை. அது மக்களின் வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்ய வைக்கும் ஒரு சமூகக் கற்றல் இயக்கமாக வளர்ந்துள்ளது. இதில் பங்கேற்பவர்களிடம் நெகிழியை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முன்வைக்கப்படவில்லை. மாறாக, தங்களால் முடிந்த இடங்களில் தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டது. இந்த இயக்கத்தின் மையக் கருத்தாக கடைக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்வது, வீட்டிலிருந்து தண்ணீர் குடுவையை எடுத்துச் செல்வது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய கோப்பைகள் மற்றும் உணவுப் பெட்டிகளைப் பயன்படுத்துவது, தேவையற்ற பொதியிடலைக் கொண்ட பொருட்களைத் தவிர்ப்பது போன்ற சிறிய செயல்களே அமைந்தன. இந்த இயக்கம் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டதால், அந்த மாதமே பின்னர் உலகளாவிய பிரச்சார மாதமாக நிலைபெற்றது.

PFJ-Poster-Challenge

இம்மக்கள் இயக்கம் தனிநபர்களின் பழக்கவழக்கங்களை மட்டுமல்ல, சந்தை மற்றும் பெரு நிறுவனங்களின் செயல்பாடுகளையும் படிப்படியாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

உலகின் பல பகுதிகளில் நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்களின் பொதியிடும்முறை (Packaging) குறித்து அதிக கவனம் செலுத்துகின்றனர். நிலைத்தன்மை குறித்த ஆலோசனை நிறுவனமான ஆரா (Aura, a sustainability consulting firm) மேற்கொண்ட ஆய்வின்படி, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல நுகர்வோர், நிலைத்தன்மையற்ற அல்லது தேவையற்ற பொதியிடபட்ட (Packaging) பொருட்களை வாங்காமல் தவிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரு பொருளின் தரம் மட்டுமன்றி, அது எவ்வாறு பொதியிடப்பட்டுள்ளது என்பதும் இன்று நுகர்வோரின் முடிவுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக பல நிறுவனங்கள் நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் நிலைத்த மாற்றுப் பொருட்களைத் தேடுவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அனைவராலும் நெகிழியை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால், தேவையற்ற நெகிழியைத் தவிர்ப்பது பெரும்பாலானோராலும் சாத்தியமான ஒன்று. நமக்கு “நெகிழி மாசில்லா ஜூலை” ஏதோ ஒரு புதிய ஒன்றை கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக, தேவையற்ற நெகிழி பயன்பாட்டை மறக்கவும், ஒரு காலத்தில் இயல்பாக இருந்த நிலைத்த வாழ்க்கை முறைகளை மீண்டும் கற்றுக்கொள்ளவும் அழைக்கிறது. அதுவே இந்த இயக்கத்தின் உண்மையான வலிமை. உலகை மாற்றும் பெரிய தீர்வுகள் எப்போதும் மாநாட்டு அரங்குகளிலோ, ஆய்வகங்களிலோ பிறப்பதில்லை. அவை சில நேரங்களில் ஒரு துணிப்பையை எடுத்துச்செல்லும் தீர்மானத்திலிருந்தோ, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு தண்ணீர் குடுவையிலிருந்தோ அல்லது அன்றாடப் பொருட்களை நீடித்த பாத்திரங்களில் மறுமுறை நிரப்பி வாங்கும் எளிய முடிவிலிருந்தோ தொடங்குகின்றன.

ஒருவகையில் பார்த்தால், இந்த இயக்கம் மறந்துபோன நல்ல பழக்கங்களை மீண்டும் கற்றுக்கொள்ளும் ஒரு சமூகப் பயணமாகும். உலகளாவிய நெகிழி மாசுபாடு போன்ற பெரும் சவால்களை எதிர்கொள்வதில், நாம் அன்றாடம் மேற்கொள்ளும் சிறிய தேர்வுகளே நாளைய பெரிய மாற்றத்திற்கான விதைகளாக அமைகின்றன.

குறிப்பு: பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது “நெகிழி மாசில்லா ஜூலை மாதத்தை” முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. அவற்றில் இணைய எங்களது சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

நாமும் பூவுலகின் நண்பர்கள் அமைப்போடு சேர்ந்து “நெகிழி மாசில்லா ஜூலை மாத” சவாலை முன்னெடுப்போம். சிறிய பங்கெடுப்பு பெரிய சுற்றுச்சூழல் பங்களிப்புக்கு வழிவகுக்கும்.

ஆனந்தி ஆரூரன்
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted