தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் தொடர்பான குறித்த அறிவிப்புகள்

TN BUDGET

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை சட்டப் பேரவையில் முன் வைத்தார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் சுற்றுச்சூழல், வனம் , காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை பின்வருமாறு:-

 • நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாப்பதற்கும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அரசு நிலங்களைப்பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய்ஒதுக்கீடு.
 • சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு,தக்க பரிந்துரைகளை வழங்க உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள  முதற்கட்டமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் (super computers)உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும்  பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • மொத்தமாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7,474.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • இலண்டன் க்யூபூங்கா (Kew Gardens) அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.
 • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும். இந்நிதியத்தின் மூலம், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்கள் உள்ளிட்ட
  பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டப்படும்.
 • தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் “வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை”
  அரசு செயல்படுத்தும்.  இத்திட்டத்திற்கு,முதற்கட்டமாக
  10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கானவிரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.
 • வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல்,
  வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும்.
 •  அணிநிழல் காடுகளும், எழில்மிகு சூழல் சுற்றுலா தலங்களும் நிறைந்தது தமிழ்நாடு. வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை (Eco-Tourism) ஊக்குவிப்பது
  அரசின் கொள்கையாகும். இதன் அடிப்படையில், சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.  தங்கும் இடங்கள், வனங்களைப் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாய் அப்பகுதியின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படும்.
 • மொத்தமாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார்
  அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு,
  ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப்பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில்தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக
  20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments