நான் சிறுமியாக இருந்தபோது, பள்ளி முடிந்தபின் வீட்டிற்கு வந்ததும் அம்மா என்னிடம் முதலில் சொல்வது — “பள்ளிச் சீருடையை மாற்று; அழுக்காகிவிடும்” என்பதே. முன்பெல்லாம் சீருடை பற்றிய கவலை என்பது சுகாதாரம் மற்றும் ஒழுக்கம் பற்றியதாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று, நான் ஒரு தாயாக இருக்கும் நிலையில், அக்கவலை முற்றிலும் வேறொன்றாக மாறியுள்ளது.
இன்று நான் என் குழந்தையின் பள்ளிச் சீருடையை மாற்றும்போது, அது அழுக்காகி விடுமோ என்ற எண்ணம் இல்லை. மாறாக, அவள் அதிக வெப்பான சூழ்நிலையில் அணிந்திருக்கும் சீருடையை எவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியும் என்பதே என் கவலை. ஏனெனில் அவள் அணியும் பாலியஸ்டர் (Polyester) போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட (Synthetic) துணிவகைகள், உடலில் வியர்வையை அடைத்து வைத்து, தோல் எரிச்சல், வெப்ப அழுத்தம் மற்றும் நீண்ட கால உடல்நலச் சிக்கல்களை உருவாக்குகின்றன. இன்றைய காலக்கட்டத்தில், பள்ளிகள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு, குளிரான நாடுகளில் அணியும் உடைகளைப் போன்ற வெஸ்ட், கோட் போன்ற மேற்கத்திய சீருடைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. எளிதில் சுத்தம் செய்யக்கூடிய மற்றும் எளிதில் பராமரிக்கக்கூடிய காரணத்தால், செயற்கையாக உருவாக்கப்பட்ட துணி வகைகளை நோக்கிய மாற்றமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இவ்வுண்மையை அறிந்திருந்தும், மறுநாளும் அதே சீருடையை அணிய வைத்து, அதே வெப்பமான சூழ்நிலைக்குள் அவளை அனுப்ப வேண்டிய நிலையே என்னைப் போன்ற பல தாய்மார்களுக்கும் வாய்க்கப்பெற்றுள்ளது.
இந்த அனுபவம் எனக்குள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியது: “இதிலுள்ள தவறு என்ன? அதை நாம் எப்படி சரி செய்வது?” இதற்கான பதிலைத் தேடி, நான் பல இடங்களில் உள்ள பள்ளிச் சீருடை நடைமுறைகளைப் ஆராய்ந்தேன். எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், மாணவர்கள் அணியும் சீருடைகளில் காலநிலைக்கு ஏற்ப தேர்வு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆஸ்திரேலியாவின் பல பள்ளிகளில், வெப்பமான காலங்களில் காற்றோட்டமான துணிவகைகள் (Breatheable fabrics) அல்லது பருத்தி போன்ற ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில்கூட, கோடைக்காலச் சீருடை மற்றும் குளிர்காலச் சீருடை என்று காலநிலைக்கேற்ப தனி வடிவமைப்புகள் உள்ளன. அதேபோல், சில ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் பருவகாலத்துக்கு ஏற்ற சீருடைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. மேலுள்ள அனைத்து இடங்களிலும் ஒரு பொதுவான புரிதல் உள்ளது — உடை என்பது தோற்றம் அல்லது ஒழுக்கம் சார்ந்தவை மட்டுமல்ல, அது நமது உடல் நலத்தையும் சார்ந்தது.
பள்ளிச் சீருடையும் நெகிழியும்:
இத்தேடலில் நான் புரிந்துகொண்ட மற்றொரு முக்கியமான ஒன்று பள்ளிச் சீருடைகளில் இருக்கும் நெகிழிப் பயன்பாட்டின் ஆபத்து. நாம் நினைப்பது போல குடுவைகள் (bottles), பைகள் போன்றவற்றில் மட்டும் நெகிழி இல்லை; நாம் அணியும் பாலியஸ்டர் போன்ற செயற்கைத் துணி வகைகளும் அதே நெகிழி வகையைச் சேர்ந்தவையே. இதில் நிறமூட்டும் ரசாயனங்கள் (Dyes), துணி சுருக்கம் வராமல் இருக்க பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), வெள்ளைப்படுத்தும் ரசாயனங்கள், நீர் தடுக்க பூசும் ரசாயனங்கள், அதே நிறத்தைப் நிலைநிறுத்த பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், அதே நெகிழியின் ஆயுளை அதிகரிக்கச் சேர்க்கப்படும் BPA, Phthalates போன்ற வேதிப்பொருட்கள், நாம் பெயரிட்டுச் சொல்ல முடியாத அளவிற்குப் பல்வேறு வேதிப்பொருட்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. ஆம், பாலியஸ்டர் என்பது பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்கை உருவாக்கப்படும் பாலிமர் ஆகும்.
இந்நெகிழி வகைத் துணிகளைக் குழந்தைகள் ஒரு ஆண்டில் சராசரியாக 210-220 நாட்கள் 8 மணி நேரத்துக்கும் மேலாக அணிகின்றார்கள். இது உடலில் வெப்பத்தைத் தக்க வைத்து, வியர்வையை வெளியேற்றாமல் தடுக்கும். அதனால் வெப்ப அழுத்தம், தோல் எரிச்சல் போன்ற உடலியல் சிக்கல்களை அதிகமாக உருவாக்கும். மேலும், இத்துணிகளை மீண்டும் மீண்டும் துவைக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் நுண்ணெகிழித் துகள்கள் நமது நீர்நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் கலந்துச் சுற்றுச்சூழலுக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு முறை துணி துவைக்கும் போதும் பல மில்லியன் நுண் நெகிழிகள் வெளியேறுகின்றன. இந்நுண் நெகிழிகள் நீரில் மட்டுமல்லாமல், உணவு மற்றும் காற்றிலும் கலந்து, முழு சுற்றுச்சூழல் அமைப்பையே பாதிக்கின்றன.
அடுத்ததாக வெப்பநிலை. வெப்பநிலை மட்டுமில்லாமல் “வெப்ப அழுத்தமும்” (Heat Stress) மாணவர்களை வதைக்கிறது. வெப்பநிலை, ஈரப்பதம் (Humidity), காற்றோட்டம், உடை, மாணவர்களின் செயல்பாடுகள் போன்ற பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்து உடலில் வெப்பச் சுமையை அதிகரிக்கின்றன. குறிப்பாக, சுவாசிக்க முடியாத செயற்கைத் துணிவகைகள் வெப்பத்தைத் தக்க வைப்பதால் உடல் வெப்பநிலையை அதிகரிக்கின்றன. இதனால் சோர்வு, தலைவலி, கவனம் குறைதல், எரிச்சல், நீர்ச்சத்துக் குறைவு போன்ற சிக்கல்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுகின்றன. அதிக வெப்ப அழுத்தம் மாணவர்களின் கற்றல் திறன், நினைவாற்றலைக் குறைக்குமென பல ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. மேலும், வெப்பமான சூழலில் மாணவர்களின் உடல் திறன் மற்றும் மன வலிமை குறைந்து, கல்வி மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. எனவே, வெப்பநிலையை மட்டுமே பார்க்காமல், வெப்ப அழுத்தத்தை குறைக்கும் வகையில் சீருடைகள் வடிவமைக்கப்படுவது மிகவும் அவசியமாகிறது.
இதை நான் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் நேரடியாகப் பகிர்ந்த போது, அவர்களின் பதில்கள் மிகவும் சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தன. “இந்த உடை மிகவும் சூடாக இருக்கிறது”, “இது மூச்சு அடைப்பது போல இருக்கிறது”, “இதை அணிந்து விளையாட முடியவில்லை”, “நண்பகல் வேளைகளில் மிகவும் எரிச்சலாக இருக்கிறது” — இவை குழந்தைகள் கூறிய நேரடி அனுபவங்கள். சிலர் “பருத்தி உடை நன்றாக இருக்கும்” என்று மாற்றுத் தீர்வையும் கூறினார்கள். சீருடை என்பது சமத்துவத்தை உருவாக்கும் ஒரு சமூகக் கருவி. அதேபோல, அது உடல்நலத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடாது.

இச்சிக்கல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற பலரும் வெப்ப நிலைக்குப் பொருந்தாத சீருடை வகைகளை அணிந்து வெப்பத்தில் சிரமப்படுகிறார்கள் என்பதும் அவர்களிடம் பேசும்போது தெரிய வந்தது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக நாம் பல பெரிய முயற்சிகளைப் பற்றிப் பேசுகிறோம் — குளிர்சாதன பயன்பாட்டை நீக்குதல், மரம் நடுதல், மின்சார வாகனங்கள் பயன்பாடு, நகர அமைப்பு மாற்றங்கள் போன்றவை. இவை அனைத்தும் முக்கியமானவை. ஆனால், அதேநேரத்தில், நாம் அடிக்கடி கவனிக்காமல் விடுவது — நாம் நாள்தோறும் அணியும் உடைகள். குறிப்பாகப் பள்ளிச் சீருடை போன்றவை, ஒரு ஆண்டில் நூற்றுக்கணக்கான நாட்கள் இவை நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே, அது வெப்பத்திற்கும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
அண்மை காலங்களில் பாலியஸ்டரின் உற்பத்தி மிகவும் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஏறத்தாழ 71–75 மில்லியன் டன் அளவை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்தத் துணிகளின் உற்பத்தியில் ஏறத்தாழ 67% வரை பாலியஸ்டர் ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது.(Materials Market Report, Sep 2024). ஆனால், அது ஏற்படுத்தக்கூடிய உடல் சார்ந்த, சுற்றுச்சூழல் சார்ந்த, நெகிழிப் பயன்பாட்டின் கழிவு சார்ந்த சிக்கல்களோ கவனிக்கப்படாமல், குப்பை மேடுகளிலும் எரிவுலைகளிலும் மறைத்து எரிக்கப்படும். இதன்மூலம் வணிக நிறுவனங்களும் குழந்தைகளின் நலனை எண்ணாமல், தங்களது துணிகளை இலாப வெறியின் காரணமாக பல்வேறு சலுகைளுடன் விற்கின்றனர். அடிப்படைச் சிக்கல்களை தீர்க்காமல் பெருமளவிலான சிக்கல்களை நம்மால் சரிசெய்ய இயலாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புவி வெப்பமாதலின் தாக்கத்தால் இதுவரை வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தென்தீபகற்ப இந்தியப் பகுதிகளும் எதிர்காலத்தில் வெப்ப அலைகளால் பாதிப்படையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுநூல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெப்பம் மற்றும் குளிர் அலைகளை அளவிடுதலுக்கான ஆராய்ச்சி நெறிமுறை, அவற்றின் நீண்ட காலப் போக்கு, இயற்பியல் பொறிமுறைகள், முன்கணிப்பு, தகவமைத்தல், தணிப்பு போன்றவை குறித்த ஒரு ஆய்வுநூலை இந்திய வானிலை ஆய்வு மையம் 25.04.2023 அன்று வெளியிட்டது.
இந்த ஆய்வுநூல் இதுவரை வெப்ப அலைகளின் பாதிப்பு இல்லாத தென் தீபகற்ப இந்தியா என்றழைக்கப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கடலோர கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் எதிர்காலத்தில் வெப்ப அலைகளின் பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கிறது.
கடந்த 50 முதல் 60 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை, அவை நீடிக்கும் கால அளவு, தீவிரத்தன்மை அதிகரித்து வருவதாகவும் இந்தப் போக்கிற்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் புதைபடிம எரிசக்திப் பயன்பாடுமே காரணம் என இந்த ஆய்வுநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சராசரியாக, வெப்ப அலை பாதிப்பு ஏற்படும் பகுதிகள் பருவத்தில் இரண்டு வெப்ப அலைகளைச் சந்திக்கின்றன. ஒரு வெப்ப அலை நிகழ்வானது ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். தற்போது, புவி வெப்பமாதலின் காரணமாக வெப்ப அலைகளின் எண்ணிக்கை, அவற்றின் கால அளவு மற்றும் அவற்றின்அதிகபட்ச கால அளவு அதிகரித்து வருவதாக இந்த ஆய்வுநூல் குறிப்பிடுகிறது.
இந்தியாவின் வெப்ப அலை ஏற்படும் பகுதிகளில், வெப்ப அலைகளின் மொத்த கால அளவு கடந்த 30 ஆண்டுகளில் ஏறத்தாழ 2.5 நாட்கள் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவின் (IPCC) 2060ஆம் ஆண்டில் வெப்ப அலை நிகழ்வுகளின் கால அளவு 12 – 18 நாட்களாக அதிகரிக்கும் எனக் குறிப்பிடுகிறது. இந்த வெப்ப அலைகள் இதுவரை வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தென்னிந்தியாவிலும் பரவக்கூடும் என ஆய்வுநூல் எச்சரிக்கிறது.
இப்படி நமது நிகழ்காலமும் எதிர்காலமும் காலநிலை மாற்றத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் நிலையில் அதன் தாக்கங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வது அவசியமாகும். ஒரு தாயாக, என் குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதே என் முதல் எண்ணம். ஆனால், ஒரு சமூகத்தின் அங்கமாக, நமது குழந்தைகளின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கே உண்டு. சீருடை என்பது ஒரு உடை மட்டுமல்ல — அது ஒரு சமூகத் தீர்மானம். அத்தீர்மானத்தில், வெப்பத்தைப் புரிந்துகொள்வதும், நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதும், குழந்தைகளின் உடல் நலத்தை முன்னிலைப்படுத்துவதும் அவசியமாக இருக்க வேண்டும்.
எனவே, பள்ளிச் சீருடைகள் குறித்த முடிவுகள் இனி வெறும் தோற்றம் அல்லது ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக அல்லாமல், குழந்தைகளின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அமைய வேண்டும். இதற்காக வெப்பத்திற்கேற்ற பொருத்தமான தரநிலைகள் (Thermal Comfort Standards) உருவாக்குதல், பருவகால அடிப்படையிலான சீருடைக் கொள்கை (Season-based Uniform Policy) அறிமுகப்படுத்துதல், வெப்பம் மற்றும் நெகிழி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு (Capacity Building) திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்., மேலும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சார்ந்தவற்றை கல்விக் கொள்கைகளில் ஒருங்கிணைத்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இத்தகைய மாற்றங்கள் குழந்தைகளின் உடல்நலத்தையும், கற்றல் திறனையும், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் உறுதி செய்யும் முக்கியமான முன்னெடுப்பாக இருக்கும்.
கட்டுரையாளர்: ஜென்னி மரியதாஸ் [email protected]
