நாம் வசித்து வரும் புவிக்கோளத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் 8 புவி அமைவு எல்லைகளில் (Earth System boundaries) 7 எல்லைகளை நாம் தாண்டிவிட்டதாக அறிவியாலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையை அடைந்ததற்கு முக்கியக் காரணமே இயற்கை வளங்களை வரைமுறையின்றிச் சுரண்டி, நுகர்ந்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புகள்தான் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Earth Commission என்றழைக்கப்படும் பன்னாட்டு அறிவியல் மதிப்பீடுகளை மேற்கொள்ளும் அமைப்பின் முயற்சியால 40க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் Nature ஆய்விதழில் வெளியான ”Safe and just Earth system boundaries” ஆய்வறிக்கையில் மேற்கூறப்பட்ட அதிர்ச்சியளுக்கும் தகவல் கூறப்பட்டுள்ளது.
புவியின் சீரான நிலைத்தன்மை எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய புவி அமைவு எல்லைகளை(Earth System boundaries) அறிவியலாளர்கள் ஆராய்ந்ததில் மொத்தமுள்ள எட்டில் தற்போது ஏழு எல்லைகளை நாம் ஏற்கெனவே கடந்திருப்ப்பது தெரியவந்துள்ளது. காலநிலை, உயிர்க்கோளத்தின் இயற்கையான சூழல் அமைவுகள் மற்றும் அவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு, மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர், பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் ஊட்டச்சத்துகள், தூசுப்படலம் போன்ற எட்டு புவி அமைவு எல்லைகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
காலநிலையைப் பொருத்தமட்டில் புவியின் சராசரி வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியசுக்கு உயராமல் தடுக்க வேண்டும் என்கிற எல்லையை நாம் இன்னும் தாண்டவில்லை. தற்போது 1.1 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்ததற்கே உலகின் பெரும் மக்கள்தொகை பாதிப்படைந்துள்ளதால் 1.5 டிகிரி செல்சியஸ் என்பதே மிகவும் ஆபத்தான இலக்காகும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புவியின் 50 முதல் 60 விழுக்காடு பரப்பானது இயற்கையான சூழல் அமைவுடன் அமைந்திருப்பதே பாதுகாப்பான எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 40-45 விழுக்காடு புவிப்பரப்பு மட்டுமே இயற்கையான சூழல் அமைவுடன் அமைந்திருப்பதால் இங்கும் பாதுகாப்பான எல்லையை நாம் தாண்டிவிட்டோம் என்கிறது இந்த ஆய்வு.
மேற்பரப்பு நீரைப் பொருத்தவரை 80 விழுக்காடு நீர்நிலைகள் மனித இடையூறுகளால் பாதிப்படைந்திருக்கக் கூடாது என்பதே பாதுகாப்பான எல்லை. ஆனால், இப்போது தற்போது 66 விழுக்காட்டை மட்டுமே எட்டியுள்ளதால் இந்த எல்லையையும் தாண்டிவிட்டோம். நிலத்தடி நீரைப் பொருத்தவரையில் உலகில் 47 விழுக்காடு படுகைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அதற்கான பாதுகாப்பு எல்லையையும் தாண்டிவிட்டதாக ஆய்வறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.
வேளாண்மையில் பயிர்களின் மீது தெளிக்கப்படும் மருந்துகளில் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரசின் அளவு நிலத்தால் உறிஞ்சப்படும் அளவைவிட அதிகமாகியுள்ளதால் இதற்கான பாதுகாப்பானை எல்லையும் மீறப்பட்டுள்ளது.
கவலை அளிக்கக்கூடிய தகவல் என்னவெனில் புவியின் பாதுகாப்பான அமைவு எல்லைகள் அதிகம் மீறியிருக்கும் இடங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது என்பதுதான். காலநிலை மாற்றத்தின் தீவிர பாதிப்புகளை உலகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளும் சந்தித்து வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கை புவி வெப்பமாதலை மட்டுப்படுத்த நாம் வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசியத்தை உணர்த்துகிறது.
– செய்திப் பிரிவு