அணுசக்தித் துறையில் நுழைந்த அதானி குழுமம்.

அதானி

இந்தியாவின் தனியார் தொழிற்துறை நிறுவனமான அதானி குழுமம் ‘அதானி அணுசக்தி லிமிடெட்‘ எனும் துணை  நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்தியாவில் அணுமின் சக்தி உற்பத்தி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இத்தனை ஆண்டு காலமாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்தது. இந்நிலையில் அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையிலான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டு சட்டம், 2025 -(SHANTI) எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. சட்டமியற்றப்பட்ட 2 மாதங்களுக்குள் அணுசக்தித் துறையில் நுழைந்துள்ளது அதானி நிறுவனம்.

அதானி

இச்சட்டம் இயற்றியதே அதானி உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களும் வெஸ்டின்ஹவுஸ், அரேவா உள்ளிட்ட வெளி நாட்டு நிறுவனங்களும் விரைவில் இந்தியாவில் அணுமின் உற்பத்தியில் இறங்குவதற்காகத்தான் என எதிர்கட்சிகளும் பல்வேறு குடிமை அமைப்புகளும் குற்றம் சாட்டியிருந்தன. இந்நிலையில் சட்டம் இயற்றப்பட்டு 2 மாதங்களுக்குள் அதானி நிறுவனம் அணுசக்தி உற்பத்தி, விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதானி அணுசக்தி லிமிடெட் எனும் துணை  நிறுவனத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இம்மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அணுவுலை மின்சார உற்பத்திக்குத் தேவையான பொருட்கள், சில குறிப்பிட்ட அணுமின் நிலையங்களை நிறுவுவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கையில் அவற்றுக்கான அடிப்படைச் சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அணுசக்தித் துறையில் ஈடுபடவிருக்கும் தனியார் நிறுவனங்களுக்குச் சட்ட அனுமதியும் வழங்கி வரிச்சலுகைகளையும் அறிவித்துள்ளது ஒன்றிய அரசு.

இந்தியாவில் தற்போது 8,780 மெகாவாட் (8.78 GW) உற்பத்தித்திறன் கொண்ட 24 அணுவுலைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்திய அணுசக்தி இயக்கம் எனும் அரசுக் கொள்கையின்படி 2047ஆம் ஆண்டுக்குள் 100 GW அளவிற்கான் அணுசக்தி உற்பத்திறன் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி உற்பத்தித்திறனை 2031 -32 2032 ஆண்டு ஆண்டுவாக்கில் 22 GW ஆகவும், 2032க்கு பிறகு மேலும் 32 GW சேர்த்து 2047ல் 55 GW ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 46 GW அணுசக்தி உற்பத்தித்திறனை பொதுத்துறை நிறுவனங்கள, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்போடு எட்ட வேண்டுமென ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments