அழிவின் விளிம்பில் AMOC

உலகம் முழுவதும் தட்பவெப்ப நிலை ஓரளவிற்கு நிலையாக இருப்பதற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்கும் மிகவும் அத்தியாவசியமானதும், முக்கியமானதும் அமோக் என்று அழைக்கப்படும் “அட்லாண்டிக் மெரிடியோனால் ஓவெர்ட்டர்னிங் சர்குலசேன்(Atlantic meridional overturning circulation (AMOC)”, இது பெருங்கடல்கலில் நிலவும் ஒரு நீரோட்டம் தொடர்பானதாகும்.

அமோக் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஒரு கன்வேயர் பெல்ட் போன்றது அமோக், அதாவது, AMOC தென்துருவம் மற்றும் வெப்பமண்டலத்திலிருந்து சூடான மேற்பரப்பு நீரை இழுத்து, குளிர்ந்த வடக்கு அட்லாண்டிக் பகுதிக்கு விநியோகிக்கிறது. குளிர்ந்த, மற்றும் உப்பு நீர் பின்னர் மூழ்கி தெற்கே பாய்கிறது. இந்த நிகழ்வு, தென்துருவத்தின் சில பகுதிகளை அதிகமாக வெப்பமடைவதிலிருந்தும், வடதுருவத்தின் சில பகுதிகளைத் தாங்கமுடியாத குளிரிலிருந்தும் பாதுகாக்கிறது, அதே நேரத்தில் கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் விநியோகிக்கிறது.

இப்போது இந்த AMOCன் வேகம் குறைந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கிரீன்லாந்தில் உள்ள பனி உருகிவருவதால் தண்ணீரின் தன்மை மாறுவதாகவும் அதனால் தென்துருவத்திலிருந்து போகும் பெருங்கடலின் நீரோட்டம் திரும்பிவருவதற்கு காலம்தாழ்த்துவதால், AMOCன் வேகம் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துவந்தன.

சில வாரங்களுக்கு முன்னர் வெளிவந்துள்ள இன்னொரு முக்கியமான ஆய்வறிக்கை, இன்னும் 40-50 ஆண்டுகளில், அட்லாண்டிக் பெருங்கடலின் நீரோட்டங்கள், AMOCன் வேகம் குறைந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது. AMOC தகர்ந்துபோவது 2037 ஆம் ஆண்டு துவங்கும் எனவும் இது 2057 ஆண்டு வாக்கில் முழுவதுமாக தகர்ந்து போய் இருக்கும் என்று இன்னமும் “சக-மதிப்பாய்வு” (Peer – review) செய்யப்படாத ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலின் நீரோட்டங்கள் (அமோக்) முழுவதும் தகர்ந்துபோனால் இந்த உலகம் அடையாளம் காணமுடியாத வகையில் மாறிவிடும்.
அமோக் தகர்ந்துபோன பத்தாண்டுகளில், ஆர்க்டிக்கில் உள்ள பனி அப்படியே படர்ந்து தெற்கு நோக்கிவரும், 100 ஆண்டுகளில் அது அப்படியே தெற்கு இங்கிலாந்து கடற்கரையை அடையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் சராசரி வெப்பநிலை கடுமையாகக் குறையும், அதுவும் அமெரிக்காவின் பலபகுதிகள் இதில் சிக்கும். அமேசான் காடுகளின் தட்பவெப்ப நிலைகளில் முழுவதுமாக மாறுபாடு ஏற்படும், இப்போது உள்ள கோடைகாலம் மழைக்காலமாகவும, மழைக்காலம் கோடை காலமாகவும் மாறிவிடும்.

“AMOC வலுவிழந்து தகர்ந்துபோவது இன்று நம்முன்னால் உள்ள மிகப்பெரிய பேரிடர் , அதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவேண்டும்” என்கிறார் போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் ஸ்டீபன் ரஹ்மஸ்டோர்ப். தங்களுடைய ஆய்வுகளை உறுதிப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் அதிநவீன மாதிரிகளை வைத்து ஆய்வு செய்துள்ளனர், முதல்முறையாக தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் ஒரு சரியான இடத்தைத் தேர்வு செய்து, அங்கே ஏற்படும் மாற்றங்களை வைத்து AMOCன் நிலையை தெரிந்துகொள்ள பலவேறு ஆய்வு சாதனைகளை நிறுவி வருகின்றனர். இந்த இடத்தில் இருந்து கிடைக்கும் தரவுகளை வைத்து அமோக் அதனின் உச்சப்புள்ளியை தொடுகிறதா அல்லது எந்த நிலையில் உள்ளது என்பதனை தெரிந்துகொள்ளலாம்.

இதில் வேதனையான விஷயம் என்னவெனில், இப்போது நடைபெறும் ஆய்வுகள் அமோக் எப்போது முழுவதுமாக தகர்ந்துபோகும் என்பதைப் பற்றி, ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறுமா என்பது குறித்துதான் ஆய்வுகள் நடைபெற்று, இந்த நூற்றாண்டுக்குள் அது நடக்காது என்றுதான் சொல்லப்பட்டு வந்தது.

இந்த ஆய்வுகள் இப்போது உறுதிப்படுத்துவது இந்த நூற்றாண்டுக்குள் அமோக் சிதைந்துவிடும் அதுவும் இந்த நூற்றாண்டின் மத்தியில் அது நடைபெறும் என்று ஆய்வுகள் முடிவிற்கு வரஆரம்பித்துவிட்டன, அதாவது நடைபெறாது என்று சொல்லிவந்த காலம் பொய், இப்போது நூற்றாண்டின் மத்தியிலா அல்லது பிறகா என்கிற நிலைக்கு வந்துள்ளோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இது சாத்தியமே இல்லை என்று விஞ்ஞானிகள் உறுதியாக சொல்லிவந்தனர். இப்போது ஐந்து ஆய்வுகள் வெளிவந்துவிட்டன, இந்த நூற்றாண்டிற்குள் அமோக் முழுவதுமாக சிதைந்துவிடும் என்றும் அதுவும் 2050 வாக்கில் இது நிகழ்வதற்கு 50%க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர்.

அமோக் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள தேவையான மாதிரிகள் உருவாக்கத்தில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தின் விளைவே இத்தகைய ஆய்வுகள் வருகின்றன. இப்போதும்கூட இந்த மாதிரிகளில் சிக்கல் உள்ளது, கிரீன்லாந்தின் பனிஉருகுவதை பெரிய அளவில் இந்த மாதிரிகள் கணக்கில் கொள்ளவில்லை, அது ஒரு சிறிய அளவில் காரணியாக இருந்தாலும் இப்போதுள்ள மாதிரிகள் கிரீன்லாந்தின் பனி உடைந்து நொறுங்கி வருவதை கணக்கில் கொள்ளவில்லை. பனி வேகமாக உருகி வருவதால் பெருமளவிலான நன்னீர் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் சேர்ந்துவருகிறது, நீரோட்டங்கள் வடக்கே சென்று திரும்பிவருவதற்கு ஒரு முக்கியமான விஷயம் உப்புநீர், ஆனால், நன்னீர் அதிகரிப்பதால் AMOCன் நகர்வுகளில் கடுமையான மாற்றம் ஏற்படும் என்று விஞ்ஞானிகளில் ஒரு சாரார் தெரிவித்து வருகிறார்கள்.

இதன் தாக்கமும் அதிகரித்தால் அமோக் நொறுங்கிப்போவது இன்னும் விரைவாகும்.
உலகத்தின் காலநிலையை நிலையாக வைத்திருப்பதில் பல்வேறு கட்டமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன, அவற்றில் முக்கியமானது அட்லாண்டிக் பெருங்கடலின் நீரோட்டங்கள், அது அதன் உச்சப் புள்ளியை நெருங்குவது கவலை அளிக்கும் அம்சம் ஆகும். உலகம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் மானுடத்தின் கவலை. மத்திய ஆசிய பகுதியில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காலநிலை மாற்றம் தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பாதிப்பது மட்டுமில்லாமல், போர் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அதிகரிக்கவே செய்யும்.

கோ.சுந்தர்ராஜன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments