இந்திய அரசாங்கம், புதிய நிலநடுக்க அபாய வரைபடம் மற்றும் தொடர்புடைய கட்டிட விதிமுறைகளை வெளியிட்ட வெறும் நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே திரும்பப் பெற்றுள்ளது — இது புவியலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 3 அன்று மேற்கொள்ளப்பட்ட இம்முடிவை சில கட்டுமான நிறுவனத்தாரும் பொறியாளர்களும் வரவேற்றுள்ளார்கள். புவியியலாளர்கள், இந்நடவடிக்கை பேரிடர் எதிர்ப்பாற்றலை — குறிப்பாக, இந்தியாவின் நிலநடுக்கம் அதிகமாக நிகழும் இமயமலைப் பகுதியில் — பலவீனப்படுத்திவிடும் என்று அஞ்சுகின்றனர்.
பூமியின் இயங்கியலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம்மாற்றங்களினால் சில நேரங்களில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற பெரும் பேரிடர்கள் நிகழும். பூமி தோன்றிய 450 கோடி ஆண்டுகளில் இப்பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு தற்போதைய காலம்வரை நீடித்து வருகின்றன. இப்பேரிடர்களில் நிலநடுக்கங்களின் தாக்கம் அதிகம். உலகின் அனைத்து இடங்களிலும் நிலநடுக்க பாதிப்புகள் இல்லையென்ற போதிலும் உலகளவில் மூன்றில் ஒருவர் நிலநடுக்க பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார்.
உலகம் முழுவதும் அதிகமான மற்றும் பலம் வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதிகளாகப் பசுபிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதி (Pacific Ring of Fire), இமயமலைப் பகுதி, மத்திய கிழக்கு பகுதி, வட அமெரிக்காவின் சான் அண்ட்ரியாஸ் பிளவுப் பகுதி (San Andreas Fault) உள்ளன. பூமியின் கண்டத் தட்டுக்கள் (tectonic Plates) ஒன்றோடு ஒன்று மோதும்போது ஏற்படும் விசையின் காரணமாக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கண்டத்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதக்கூடிய பகுதிகளில் அல்லது சேரக்கூடிய பகுதிகளில் பெரும்பாலான பலம் வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. மேற்குறிப்பிட்ட பகுதிகள் எல்லாம் கண்டத்தட்டுகள் மோதக்கூடிய பகுதிகளில் அமைந்திருக்கிறன்றன.
இந்திய கண்டத்தட்டு 4 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் யுரேசிய (Eurasia) கண்டத்தின் மீது மோதியதின் விளைவாக இமயமலை தோன்றியது. இந்திய கண்டத்தட்டு இன்றளவும் வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவால்தான் இமயமலைப் பகுதி முழுக்க நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படுகின்றன. இமயமலைப் பகுதி மட்டுமல்லாமல் அதன் அருகாமைப் பகுதிகள், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் நிலநடுக்கங்களின் தாக்கம் குறிப்பிட்ட அளவிலிருந்து வருகிறது.

இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு, அதன் தாக்கம் மற்றும் புவி அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தர நிர்ணயம் 1983ஆம் ஆண்டு இந்திய நிலப்பரப்பை நான்கு மண்டலமாக (மண்டலம் -II, III, IV, V) பிரித்தது. இப்பிரிவில் மண்டலம் V-இல் மிகத் தீவிரமான நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளும், மண்டலம் IV-இல் தீவிரமான நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளும், மண்டலம் III மற்றும் மண்டலம் II-இல் மிதமான மற்றும் குறைவான நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளும் அடங்கும். ஏற்ழத்தாழ 59% இந்திய நிலப்பரப்பு நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளாக உள்ளது. இமயமலைப் பகுதிகள், வடகிழக்கு பகுதிகள் மற்றும் குஜராத்தின் கட்ச் பகுதிகளில் தீவிர மற்றும் பலம் வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளாக இருப்பதால் இவை மண்டலம் -V வரையறுக்கப்படுள்ளன. மிகப் பலம் வாய்ந்த நிலநடுக்கம் 11% நிலப்பகுதியிலும், 18% பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுக்கூடிய மண்டலம் -IVலும், மற்றும் 30% நிலப்பகுதிகள் மிதமான குறைவான நிலநடுக்கம் ஏற்படக்கூடிய மண்டலம் III & II -லும் இருக்கின்றன.
இந்நிலையில் 2001இல் குஜராத்தின் புஜ் மற்றும் 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்குப் பின்னர் மண்டல வரையறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு 2025 அக்டோபர் மாதத்தில், திருத்தம் செய்யப்பட்டது. இத்திருத்தம் மேற்கொள்ளக் காரணம், 1983இல் கொண்டுவரப்பட்ட நில அதிர்வு வரையறையில் போதுமான தரவுகள் இன்றியும், நவீன கருவிகள் இன்றியும், அப்பகுதியின் புவி அமைப்பைக் கணக்கில் கொள்ளாமலும் அப்போதைய நவீன கருவிகளின் வசதிகளின்றி வரையறுக்கப்பட்டதுதான். தற்போதைய சூழலில் நிலநடுக்கங்கள் இவ்வரையறையைக் காட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நகரமயமாதல், சுற்றுலாத் தலங்கள் அதிகரிப்பு, மக்கள்தொகைப் பெருக்கம் போன்ற காரணிகளால் ரிக்டர் அளவில் குறைவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் அதன் தாக்கம் என்பது மிக அதிகமானதாக இருக்கின்றன.
1983ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நில அதிர்வு மண்டல வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பது சூழலியல் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 2025-ம் ஆண்டு இந்திய தர நிர்ணயம் (BIS) 1983ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட வரையறையில் மறுஆய்வு செய்து திருத்தம் மேற்கொண்டு வந்தது. இத்திருத்தத்தில் புதிய (மண்டலம் -VI) வரையறையைச் சேர்த்துள்ளது. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் பகுதிகள் மண்டலம் VI-ல் வரும். 1983ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நில அதிர்வு வரையறை பெரிதும் ‘நிலநடுக்கங்களின்போது கட்டிடங்கள் வீழ்ந்தாலும் உயிர்களைக் காப்பாற்றுவதை முதன்மையாகக் கொண்டது’, 2025ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் ‘கட்டிடங்கள் நிலநடுக்கத்தின்போது வீழாத அளவிற்கு’ இருப்பதை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட விதிகள் ஆகும். இதில் மண்ணின் தன்மை, ஒரு பகுதியின் புவியியல் அமைப்பு, கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் தாக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு திருத்தம் செய்யப்பட்டது. மேலும் முந்தைய வரையறையில் ஒட்டுமொத்த மாநிலமும் ஒரு மண்டலத்தில் அடங்கும். ஆனால், தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ள வரையறையில் குறிப்பிட்ட பகுதிகளாக ஆய்வு மேற்கொண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் சாத்தியக்கூறு அடிப்படையிலான நிலநடுக்க அபாய மதிப்பீடு முறை (PSHA (Probabilistic Seismic Hazard Assessment)) பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இதுவரை நிலையான மண்டல முறை (fixed zonation) முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இம்முறையை உலகத் தரத்திற்கு மாற்ற BIS மேற்கொண்ட திருத்தம்தான் 2025ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. தற்போது ஒன்றிய அரசு, 2025 அக்டோபர் மாதத்தில் கொண்டு வந்த திருத்தத்தைத் திரும்பப்பெற்றுள்ளது. புதிய முறையைப் பொறியாளர்கள்/ அறிவியலாளர்கள் ஆதரித்தும் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்த்தும் இருந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட மண்டலம் VIஇல் அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதியாகவே இருந்தாலும், திருத்தம் செய்யப்பட்ட முறையை நடைமுறைப்படுத்தினால் அப்பகுதிகளில் கட்டுமான செலவுகள் அதிகரிக்கும், உட்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்படையும், பொருளாதார சுமை அதிகரிக்கும் என்பதற்காகவ இத்திருத்தப்பட்ட முறையைத் திட்ட வகுப்பாளர்கள் எதிர்க்கின்றனர். குறிப்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை, மெட்ரோ இரயில் நிறுவனங்கள் மற்றும் பிற கட்டுமான நிறுவனங்களின் எதிர்ப்பின் காரணமாக ஒன்றிய அரசு கடந்த மார்ச் 3, 2026 அன்று அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டு பழைய நிலநடுக்க மண்டல வகைப்பாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தியது.
அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகள் என்று உலகத்தர மதிப்பீடுகளின் மூலம் திருத்தம் செய்யப்பட்ட வகைப்பாட்டை பணத்திற்காகவும், சில நிறுவனங்களின் இலாபத்திற்காகவும் பொது மக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ஒன்றிய அரசு மாற்றியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம், வரைமுறையின்றி எழுப்பப்படும் கட்டிடங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசு விதிமுறைகளைத் தளர்த்துவது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அறிவியலாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து அரசு இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- லோகேஷ் பார்த்திபன்
