CRZ விதிகளைப் பின்பற்றுவதில் அலட்சியம்; குற்றச்சாட்டுகளை அடுக்கிய CAG

CRZ
தமிழ்நாட்டில் கடற்கரையோரம் அமைக்கப்படும் திட்டங்களுக்கு வழங்கப்படும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகளில் பல்வேறு அலட்சியங்கள் இருப்பது இந்தியத் தணிக்கைத் தலைவரின் அறிக்கையின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
மார்ச் 2022 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான பொது மற்றும் வணிகத்திற்கான இணக்கத் தணிக்கை அறிக்கையானது தமிழ் நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் தமிழ் நாட்டில் உள்ள கடல் மற்றும் கடற்கரை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் கடலோர ஒழுங்காற்று மண்டல அனுமதி (Coastal Regulatory Zone Clearance) குறித்தும் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வானது 2015-2016 மற்றும் 2021-2022 இடைப்பட்ட காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்தானது.
கடலோரச் சூழல் சமநிலையை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களான சதுப்பு நிலங்கள், மணல்மேடுகள், முகத்துவாரங்கள், உப்பளங்கள், கடலாமைகளின் உறைவிடங்கள், நண்டுகளின் வாழ்விடங்கள், கடற்புல் பரப்புகள், மீனவர்களின் நிலப் பயன்பாடுகள், குடியிருப்புத் திட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் கடலோர ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2011. இந்த அறிவிக்கையின் அடிப்படையில் கடல் மற்றும் கடலோரங்களில் அமையும் திட்டத்தின் அமைவிடம் மற்றும் வகைகளின் அடிப்படையில் மாநில அளவிலோ ஒன்றிய அளவிலோ CRZ அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் மற்றும் வரைபடம் தயாரிப்பதில் தாமதம்
இந்த ஆய்வில் CRZ அறிவிக்கையின்படி தயாரிக்கப்பட வேண்டிய கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் மற்றும் (Coastal Zone Management Plan – CZMP) உள்ளூர் அளவிலான கடற்கரை மண்டல மேலாண்மை வரைபடங்கள் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அக்டோபர் 2013 க்குள் முடிய வேண்டிய கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டமானது ஐந்து ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 2018 ல் முடிவடைந்துள்ளது. உள்ளாட்சி அளவிலான CZMP வரைபடங்களைத் தயாரிக்க ரூ.2.99 கோடி செலவில் செப்டம்பர் 2017 லேயே ஒப்புக்கொண்டபோதிலும் 30 மாதங்களில் கழித்து மார்ச் 2020 ல் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின்  தொலை உணர்வு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு பிப்ரவரி 2022 வரை அது முடிக்கப்படவில்லையென CAG அறிக்கை கூறுகிறது. உரிய வரைபடம் இல்லாததால் உள்ளாட்சிப் பகுதிகளில் CRZ அறிவிக்கையின்படி கண்காணிப்பு மேற்கொள்ள முடியாமல் அப்பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட CZM குழுக்களில் மீனவ பிரதிநிதிகள் பிரதிநிதித்துவம்
CRZ 2011 அறிவிக்கையின்படி, மாவட்ட அளவிலான கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தில் (District Coastal Zone Management Authority-DCZMA) உள்ளூர் பாரம்பரியக் கடற்கரை சமூகங்களைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த அறிவிக்கை வெளியாகி 11 ஆண்டுகளில் கழித்தும் மொத்தமுள்ள 13 கடலோர மாவட்டங்களில் ஜூன் 2023 வரையில் வெறும் 4 மாவட்ட DCZMA களில் மட்டுமே மீனவ பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முறையற்ற வழியில் CRZ அனுமதி வழங்குதல்
2015-2022 காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு 175 திட்டங்களுக்கு CRZ அனுமதி வழங்கியுள்ளது. இதில் 65 விழுக்காடு திட்டங்கள், அதாவது 114 திட்டங்களை உரிய ஆணையத்திற்குப் பரிந்துரைப்பதற்குப் பதிலாக TNSCZMA அனுமதி வழங்கியுள்ளது. அதாவது தான் பரிந்துரை மட்டுமே வழங்கி ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அல்லது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு (SEIAA) அனுப்ப வேண்டிய திட்டங்களுக்கு TNSCZMA தாமாக, சட்டத்திற்குப் புறம்பாக அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு திட்டம்மீதான பரிசீலனை முழுமையடைவதில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 2022 முதல் அனைத்துத் திட்டங்களும் உரிய அதிகார அமைப்புகளுக்கு அனுப்பப்படுவதாக அரசு இதற்குப் பதிலளித்துள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்பட்ட CRZ அனுமதிகள்
உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே ஒரு திட்டத்திற்கான CRZ அனுமதியை அரசு வழங்க வேண்டும். ஆனால், CAG ஆய்வுக்குட்படுத்திய 30 திட்டங்களில் 7 திட்டங்களில் அறிவிக்கப்பட்ட சூழலியல் உணர்திறன் பகுதிகள் உட்பட CRZ I, II, III, மற்றும் IV பகுதிகளைக் குறிக்கும் வரைபடம் இல்லாமலும், திட்ட அமைவிடத்தைச் சுற்றி 7 கி.மீ. சுற்றளவு கொண்ட CRZ வரைபடம் இல்லாமல் 7 திட்டங்களுக்கும், 1:4000 உருவளவில் உயரலை மற்றும் தாழ்வலைக் கோடுகளைக் குறிக்கும் வரைபடம் இல்லாமல் 2 திட்டங்களுக்கும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு(EIA), ஆபத்து, பேரிடர் மேலாண்மை அறிக்கை இல்லாமல் 5 திட்டங்களுக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் 23 திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TNSZMA கானத் தனி இணையதளம் உருவாக்கப்படாமை, சில திட்டங்களுக்கு CZR 2011 அறிவிக்கைக்குப் புறம்பாக TNSCZMA விண் பரிந்துரையின்றி , உள்ளூர் திட்ட அதிகாரிகளால் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டது, பொதுமக்கள் மற்றும் மீனவ அமைப்புகளிடமிருந்து பெறப்படும் புகார்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்காதது, கடலரிப்பு மதிப்பீடு இல்லாமல் தவறான அனுமதி வழங்கியது, மீளப்பெறப்பட்ட இடத்தில் கட்டுமானத்திற்கான தவறான அங்கீகாரம் வழங்கியது, CRZ ஒழுங்குமுறைகளை அமல்படுத்தாது எனப் பல்வேறு குறைபாடுகளை CAG தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி கிராமத்தில் CRZ பகுதியில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட பாலத்தை இடிக்காதது, செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் தாலுகாவில் கோடன் பே உல்லாச விடுதி விடுதியை அனுமதியின்றி CRZ பகுதியில் கட்டியது தொடர்பான புகாரில் 6 ஆண்டுகள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, கூவம் ஆற்றின் கரையை அங்கீகரிக்கப்படாத வகையில் பொதுப்பணித்துறை உயர்த்தியதில் நடவடிக்கை எடுக்காதது எனப் பல்வேறு குறைபாடுகளை அலட்சியங்களையும் CAG தனது ஆய்வின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு சில பரிந்துரைகளையும் CAG வழங்கியுள்ளது. அவை பின்வருமாறு;-

 

  • CRZ அறிவிப்பின் விதிகளை கண்டிப்பாக பின்பற்றுதலுடன், பிற நிறுவனங்களுக்கு அதிகாரங்களை முறையற்ற முறையில் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • CRZ அறிவிப்பில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளபடி மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் உள்ளூர் சமூகங்களின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
  • CRZ மீறல்கள் அனைத்திற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி DCZMAக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்கவேண்டும் மேலும் அவற்றைக் கண்காணிப்பதற்காக TNSCZMAக்கு அறிவுறுத்த வேண்டும்.

CRZ பகுதியை கண்காணித்து அத்துமீறல்களை கண்டுபிடித்து, தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு நவீன தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இணையப் பயன்பாட்டை உபயோகிக்க வேண்டும். CAG ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தக் குறைபாடுகளையும் தாண்டி மிகவும் திறனற்ற, செயல்படாத ஓர் அமைப்பாகத் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையமும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் மாறியிருப்பதுதான் உண்மை. கடந்த சில ஆண்டுகளாக CAG ஆய்வில் கூறப்பட்டுள்ள குறைபாடுகள் உட்படப் பல பிரச்சினைகளை மீனவ அமைப்புகள் வெளிக்கொணர்ந்து சட்டப்போராட்டத்தையும் களப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மீனவ அமைப்புகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளுமே தமிழ்நாட்டுக் கடற்கரையின் உண்மையான பாதுகாவலர்களாக இருக்கின்றனர். சட்டத்தின் துணைகொண்டு கடலையும் கடற்கரையையும் மீனவர் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகளோ அலட்சியத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.

இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள அலட்சியங்கள் ஏதோ விதிமீறல்கள் மட்டுமில்லை; அவையனைத்தும் கடலோரச் சூழல் அமைவுகளிலும் மீனவர் வாழ்வாதாரத்திலும் சரிசெய்ய முடியாத தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றம் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் வேகமான மாற்றங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வரும் சூழலில் இதனைக் கருத்தில் கொண்டு CRZ விதிகள் பின்பற்றப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
– சதீஷ் லெட்சுமணன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments