சுற்றுச்சூழல் விதிகளை மீறிய NLC; CAG அறிக்கை.

NLC

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd) பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டது இந்தியத் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் (CAG) அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

NLC நிறுவனத்தின் 2017 -18 முதல் 2022 -23 ஆண்டுகளுக்கு இடையேயான செயல்பாடுகளை ஆய்வு செய்த CAG பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில் NLC நிறுவனம் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டது,  நிபந்தனைகளுக்குப் புறம்பாக சுரங்கத்திற்காகத் தோண்டப்பட்ட மண்ணை அதிக உயரத்துக்குக் கொட்டி வைத்தது, அனல்மின் நிலையத்தை முறையாகப் பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலியிலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்சிங்கரிலும் இயக்கி வருகிறது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி இந்நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி உற்பத்தித்திறன் 27.10 MTPA மற்றும் மின்சார உற்பத்தித்திறன் 3,640 MW ஆகும். இந்நிலையில் தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ள சுரங்கம் I, சுரங்கம் IA மற்றும் சுரங்கம் சுரங்கம் II ஆகியவற்றின் நிலக்கரி உற்பத்தி மற்றும் அனல்மின் நிலையம் I விரிவாக்கம், அனல்மின் நிலையம் II மற்றும் அனல்மின் நிலையம் II விரிவாக்கம் ஆகிய அலகுகளின் செயல்பாடுகளை CAG ஆய்வுக்குட்படுத்தியள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்ட சுரங்கம் II:

1994ஆம் ஆண்டு வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற அனைத்துத் திட்டங்களுக்கும் 2006 வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்க 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை இனையதளம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

NLCயின் சுரங்கம் II 1994ஆம் ஆண்டு EIAன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்த காரணத்தால் மீண்டும்  விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த காலக்கெடுவுக்குள் அனுமதி கோரி விண்ணப்பிக்கத் தவறியுள்ளது. இதுகுறித்து CAGயிடம் விளக்கமளித்த NLC நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிகளை ஒன்றிய அரசிடமிருந்து பெறும் வேலைகளை NLC நிர்வாகத்தின் குழும சுற்றுச்சூழல் பிரிவு செய்ய வேண்டுமா அல்லது சுரங்கம் IIன் திட்டத்துறை மேற்கொள்ள வேண்டுமா என்பதில் நிலவிய குழப்பத்தால் இரு அமைப்புகளுமே விண்ணப்பிக்கத் தவறியதாக NLC தெரிவித்துள்ளது. இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தீர்க்கப்பட்டு 2023 செப்டம்பர் மாதம் NLCயின் விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உரிய சுற்றுச்சூழல் அனுமதி இல்லையென்றாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றியே சுரங்கம் தோண்டியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என NLC நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அனுமதி இல்லாமல் இயங்கிய காலத்தில் NLC நிறுவனத்தால் சிறு கனிமங்களை விற்க முடியவில்லை என CAG தனது அறிக்கையில் கூறியுள்ளது.

விதிகளுக்குப் புறம்பாஉயரத்தில் மணலைக் குவித்த NLC:

சுரங்கம் Iக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் நிபந்தனைகள்படி சுரங்கம் தோண்டும்போது எடுக்கப்படும் மண், பாறை உள்ளிட்டவற்றை 20மீ உயரத்திற்கு 28 டிகிரி சரிவு இருக்கும்படியாகத்தான் கொட்ட வேண்டும். ஆனால், விதிகளுக்குப் புறம்பாக 50 அடி உயரத்துக்கு மண் கொட்டப்பட்டிருந்தது. அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்படுகையில் அவை சரிந்து விழும் அபாயமிருப்பதாக CAG தெரிவித்துள்ளது.

சுரங்கம் IIக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின்படி கொட்டப்படும் மண் மற்றும் பாறைகளின் உயரம் 65 மீ மற்றும் 28 டிகிரி சரிவு என்கிற அளவைத் தாண்டக்கூடாது. ஆனால், இந்நிபந்தனைக்கு மாறாக 120 மீ உயரத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக மண் சரிந்து அருகிலுள்ள கால்வாய் மற்றும் விவசாய நிலங்களை நிரப்பியுள்ளது. 2012, 2013, 2015 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் NLCஇன் அலட்சியத்தால் இவ்விபத்துகள் தொடர்ந்துள்ளன. விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு ரூ. 2.18 கோடி அளவிலான இழப்பீட்டை NLC நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. மேலும் தங்களது அலட்சியத்தால் சரிந்த மண் குவியலை அள்ளுவதற்கு ரூ. 14.98 கோடி செலவிட்டுள்ளது.

காலாவதியான இயந்திரங்களைப் பயன்படுத்தியதால் ற்பட்ட விபத்துகள்:

சுரங்கங்களில் நிலத்தைத் தோண்டவும், நிலக்கரியை அள்ளவும், கொண்டு செல்லவும் பெரிய அளவிலான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை Specialised Mining Equipment – SME என்றழைக்கப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 1,00,000 முதல் 1,37,500 மணி வேலை நேரங்கள்தான். காலாவதியான இயந்திரங்களைப் புத்துயிராக்கம் செய்து கூடுதலாக 15 ஆண்டுகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என NLC நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் CAG மேற்கொண்ட ஆய்வில் மொத்தமுள்ள 72 SME இயந்திரங்களில் 26 SME இயந்திரங்கள் எவ்வளவு மணிநேரம் பயன்படுத்தப்பட்டது என்கிற கணக்கே பராமரிக்கப்படவில்லை என்கிற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் கணக்குகள் பராமரிக்கப்பட்ட 46 SME இயந்திரங்களில் 15 SME இயந்திரங்கள் காலாவதியான பின்பும் புத்துயிராக்கம் செய்யப்படாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன. 8 SME இயந்திரங்கள் காலாவதியான பின்பு 11 ஆண்டுகள் கழித்தே புத்துயிராக்கம் செய்யப்பட்டுள்ளன, 4 SME இயந்திரங்கள் காலாவதியான பின்னர் புத்துயிராக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் 15 ஆண்டுகள் நிரைவடைந்த பின்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன, 1961 மற்றும் 1966 இடைப்பட்ட காலத்தில் வாங்கப்பட்ட 2 SME இயந்திரங்களுக்குப் பதிலாக மாற்று இயந்திரங்கள் வாங்கப்பட்ட பின்னரும் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

NLC

 

காலாவதியான இயந்திரங்களால் NLC சுரங்கங்களில் பலமுறை விபத்துகள் நடந்தன. இது தொடர்பாக 2009ஆம் ஆண்டே சுரங்கப் பாதுகாப்புத் தலைவர் (Director General of Mine Safety – DGMS) நடத்திய ஆய்வில் முறையாகப் பராமரிக்கப்படாத இயந்திரங்களால்தான் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் உண்டானதாகத் தெரிய வந்ததாக CAG அறிக்கை குறிப்பிடுகிறது. 12 காலாவதியான இயந்திரங்களுக்கு பாதுகாப்பு ஆய்வே நடத்தப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

CAG அறிக்கையின்படி NLC நிறுவனத்தால் சுரங்கம் தோண்டுவதற்காக அடையாலம் காணப்பட்ட 12,835 எக்டரில் 9,180 எக்டர் நிலத்தை மட்டுமே NLC கையகப்படுத்தியுள்ளது (மார்ச் 2023 நிலவரப்படி). இதில் 5,880.34 எக்டர் நிலத்தை NLC தோண்டிவிட்டது. 3,253.47 எக்டர் நிலம் மண் கொட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 46.19 எக்டர் நிலம் மட்டுமே இன்னும் தோண்டப்படாமல் உள்ளது. இந்நிலத்தில் 44.10 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரியைத்தான் அகழ்ந்தெடுக்க முடியும். இதைவைத்து NLC அனல்மின் நிலையங்களுக்குக்கூட பழுப்பு நிலக்கரியை வழங்க முடியாது என CAG தெரிவித்துள்ளது. புதிய நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சி 2014ஆம் ஆண்டிலிருந்து தடைபட்டு வருவதாகவும் இதுதொடர்பான அத்தனை முயற்சிகளையும் NLC நிறுவனம் மேற்கொண்டு வருவதாக CAGயிடம் NLC விளக்கமளித்துள்ளது.

ஏற்கெனவே NLCக்கு நிலம் வழங்க சுற்று வட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் வரும் காலங்களில் NLC நிறுவனம் – விவசாயிகள் இடையேயான முரண் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் என இதன்மூலம் தெரிகிறது.

அனல்மின் நிலைஇயக்கத்தில் NLC அலட்சியம்:

நெய்வேலியில் செயல்படும் மூன்று அனல்மின் நிலையங்களிலும் உள்ள குறைபாடுகளால் அவற்றை முழு உற்பத்தித் திறனுக்கு இயக்க முடியவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக ரூ. 2,353.99 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மூன்று அனல்மின் நிலையங்களிலும் ஏற்பட்ட கோளாறுகளின் காரணமாக மட்டும் 6 ஆண்டுகளில் 742 முறை மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 14,538.66 MU மின்சார உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

NLC அனல்மின் நிலையங்களில் 2001, 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 4 தீ விபத்துகள் நடந்தன. 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரு விபத்துகளில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அதிக வெப்பமான லிக்னைட் தூசுகளை உரிய முறையில் அகற்றாமல் விட்டதுதான் தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாக CAG குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியாகக் லிக்னைட் தூசுகளை அகற்றி வந்திருந்தால் இவ்விபத்துகளைத் தடுத்திருக்கலாம் என CAG குறிப்பிட்டுள்ளதன் மூலம் இது முழுக்க முழுக்க NLC நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே நிகழ்ந்த விபத்துகள் எனப் புலனாகிறது. இது தொடர்பாக CAG யிடம் விளக்கமளித்த ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் இந்தியாவின் நிலக்கரி/பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையங்களில் Boiler Box Type Girderல் நிகழ்ந்த முதல் விபத்து இதுதான் எனத் தெரிவித்துள்ளது.

ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படியெல்லாம் பொறுப்பற்ற முறையில் அலட்சியத்துடம் செயல்படக் கூடதோ அப்படியெல்லாம் செயல்பட்டு வந்துள்ளது NLC நிறுவனம்.  NLCக்கு தங்கள் நிலங்களை வழங்கிய விவசாயிகள் எண்ணற்ற துன்பங்களைச் சந்தித்து நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். விதிமீறல் செயல்பாடுகளால் சுற்றியுள்ள கிராமங்களின் மண்வளத்தையும் நீர்வளத்தையும் கெடுத்து மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் NLC மீது அரசு விரிவான நடவடிக்கை எடுக்குமா?

  • சதீஷ் லெட்சுமணன்
CAG---NLC-India-Limited-2025-English-FINAL-SIGNATORY-10-12-2025-0698c6a3b5d7e42.69686670

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments