மனித இனத்தின் பிழைத்திருத்தலை அச்சுறுத்தும் உலகளாவிய சிக்கலான காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை, ஒவ்வொரு பகுதியில் உள்ள சமூக இயங்கியலோடு புரிந்து கொள்வதே ஒரு மக்கள் நல அரசின் அடிப்படை கடமையாகும். காலநிலை மாற்றம் உலகளாவியது என்றாலும், அதற்கான தீர்வுகள் நாடு, மொழி, இனம், புவியியல் அமைப்பு, பொருளாதார வளர்ச்சி, பண்பாடு போன்றவற்றைப் பொறுத்து வேறுபடும்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் இந்திய சமூகமானது சாதிகளின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி என்பது இங்குள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகங்களின் வளர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டே அளவிடப்பட வேண்டும், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை (GDP) வைத்தல்ல. அவ்வகையில், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, பல்வேறு சாதிய சமூகங்களின் மீதான அதன் பாதிப்புகளை அளவிட வேண்டியது அவசியமாகிறது.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அரசியல், பொருளாதார வலிமையோடு இருக்கின்றன. இது அவர்களுக்கான கல்வி, கௌரவமான சுயதொழில் – வேலைவாய்ப்புகள், சமூக அந்தஸ்துடனான வாழ்வியல் ஆகியவற்றை உறுதிசெய்கிறது. இவ்விரண்டு சமூகப் பிரிவுகளிலும் கல்வி, பொருளாதார அமைப்புகளில் இன்னும் பின்தங்கிய குடும்பங்கள் உள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆகையால், அதி தீவிர காலநிலை நிகழ்வுகள் (Climate shocks) ஏற்படும் போது இச்சமூகங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தாங்கியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. எனினும், அவர்கள் சார்ந்த சாதியை கருத்தில் கொள்ளும்போது அவர்களுக்கென ஒரு அரசியல் வலிமை சமூகம் சார்ந்து (Social Capital) உருவாவது தவிர்க்க இயலாதது. அது அவர்களின் குறைந்தபட்சப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வறுமையின் சுழற்சியில் (Cycle of Poverty) சுழலாமல் பாதுகாக்கிறது.
ஆனால், தொடர்ந்து சாதிய வன்கொடுமைகளாலும், இழிசொற்களாலும், ஆணவப்படுகொலைகளாலும் இன்றும் உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பட்டியலின மக்களுக்கு காலநிலை மாற்றத்தின் தாக்கம், அவர்களை நிரந்தர வறுமையில் தள்ளிவிடும். மீண்டும் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள், அரசு அதிகாரம் ஆகியவை கிடைக்கப்பெறாத சமூகத் தேக்க நிலையை உருவாக்கும். இதனால், இன்னும் முதல் தலைமுறை கல்வியோ, அரசு வேலைவாய்ப்புகளோ கிடைக்காத பட்டியலின மக்கள் அதை நோக்கி நகர்வதில் அதி தீவிர காலநிலை நிகழ்வுகள் முட்டுக்கட்டை போடும். கூடுதலாக சில குடும்பங்களில் உணவு, உறைவிடம் போன்றவையும் கேள்விக்குள்ளாகும்.
தமிழ்நாட்டின் புவியியலுக்குப் பல்வேறு வகையான காலநிலை அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்றாலும், கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இருவகையான அதி தீவிர காலநிலை நிகழ்வுகளை மாநிலம் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது.
வெள்ளமும், வெப்ப அலைகளும் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் பெருமழையால் பெருக்கெடுக்கும் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள்வதற்குள் ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெப்ப அலைகள் சுட்டெரிக்கத் தொடங்கி விடுகிறது. இவ்விரண்டு காலநிலை நிகழ்வுகளையும் நாம் அனைவரும் சமமாகச் சந்தித்தாலும், அதன் பாதிப்புகள் சமமாக இருப்பதில்லை. நாம் வாழும் பகுதி, தனி நபர் வருமானம், பாலினம், கல்வி, உயர்தர சுகாதாரத்திற்கான வாய்ப்புகள், பணி, பணிச்சூழல், காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பாதிக்கும் தன்மை மாறுபடுகிறது.
தமிழ்நாடு ஒரு கடலோர மாநிலம் என்பதாலும், பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதாலும் கடல் சார்ந்த பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்தல், கடல் நீர் (உப்பு) உட்புகுதல், கடல் அரிப்பு, வெப்ப மண்டலப் புயல்கள், அதன் எதிரொலியாக பெருமழை, பெருவெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் பவளத் திட்டுகளின் அழிவு, மீன்வளம் குறைதல் எனக் கடுமையான சவால்களை நேரடியாக நாம் சந்திக்கிறோம்.
38 மாவட்டங்களில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 14 மாவட்டங்கள் கடலோரப் பகுதியாக அமைந்திருக்கிறது (அதாவது மூன்றில் ஒரு பகுதி தமிழ்நாடு). திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், (புதுச்சேரியும் சேர்த்துக் கொள்ளலாம்), கடலூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் இடைநிலை ஆதிக்க சாதியினர் மற்றும் பட்டியலின மக்களிடையே உள்ள சமூக முரணானது இன்றும் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. இது காலநிலை மாற்றத்தின் தாக்கங்களிலும் எதிரொலிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்கள் முதன்மையாகப் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது கிழக்கு மண்டலம் பொதுவாகவே பெரிய பொருளாதார முன்னேற்றங்களை அடைந்திராதப் பகுதியாகும். வெள்ளப் பெருக்கினால் வீடுகளுக்குள் மழை நீர் புகுதல், விவசாயப் பயிர்கள் சேதமடைதல், வாழ்வாதார இழப்பு உள்ளிட்ட சிக்கல்கள் இங்கு பொதுவான பிரச்சனைகளாகத் தோன்றினாலும், நிலமும், அதிகாரமும் இன்னும் கிடைக்கப்பெறாத இப்பகுதியின் பட்டியலின மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் தனது பூமியில் விவசாயம் செய்கிறார் என்றால், மழை வெள்ளத்தால் அவரது பயிர்கள் நாசமடைந்து விளைச்சல் பாதிக்கும்; வருமானம் குறையும். ஆனால், சொந்த பூமி என்பதால் அவரால் அப்பொருளாதார இழப்பிலிருந்து மீண்டு வரும் வாய்ப்புகள் உள்ளன. இதுவே அப்பகுதியில் விவசாயக் கூலிகளாகவும், தினக்கூலிகளாகவும், விளிம்புநிலை வேலைகளைச் செய்து வரும் பட்டியலின மக்களுக்கு வெள்ள பாதிப்பினால் வாழ்வாதாரம் பெருமளவு முடங்கும். மேலும், கோடை காலத்தில் வெப்ப அலைகளின் தாக்கத்தால் வெட்ட வெளியில் உடல் உழைப்பில் ஈடுபடுவோருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு குறைவான நேரம் மட்டுமே வேலை செய்வதால் வருமானமும் மட்டுப்படும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் அவரவர் வாழ்வியலின் தகுதிக்கேற்ப பாதிப்புகளை உண்டாக்குவதை இதிலிருந்து நாம் உணர முடியும்.
கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலின்போது திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருளர் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக செல்லங்குப்பம் கிராமத்தில் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் அதீத பாதிப்புகளை இருளர் இன மக்கள் சந்தித்தனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தால் குறைந்தபட்சம் மொட்டை மாடிக்குச் சென்றுவிடலாம் (வட சென்னையின் நிலைமை வேறு). மழை பெய்வதற்கு முன்பே ரொட்டி பாக்கெட்டுகளையும், மழை நீரை வெளியேற்ற டீசல் மோட்டார்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், கல் வீடு கட்டுவதே கனவாக இருக்கும் குடிசைகளில் வாழும் நிலமற்ற பட்டியலின மக்களும், ஆதிக்க சாதிகளைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களும் என்ன செய்வார்கள்? ஒரு பக்கம் வெள்ள நீர் பட்டியலின மக்களின் குடிசைகளைச் சிதைக்கிறது; மற்றொரு புறம் சாதிய வன்முறைகளின்போது அதே குடிசைகள் சூறையாடப்படுகின்றன. மேலும், ஒன்றிய, மாநில அரசுகள் வெள்ள பாதிப்புகளை கணக்கிட்டு, நிதிப்பங்கீட்டில் சண்டையிட்டு, வெள்ள நிவாரணத் தொகையை பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பிய உடன் அடுத்த வெள்ளம் வந்துவிடுகிறது. இது மக்களை மீளா வறுமையில் தள்ளுகிறது.
காலநிலை மாற்றம் ஒன்றே வட கிழக்கு மாவட்டங்களின் வளர்ச்சியை சிதைத்துவிடும் ஆற்றலைப் பெற்றுள்ள நிலையில், சாதிய முரண்களால் உந்தப்பட்டு குடிசைகளைக் கொளுத்துவது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்கள் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலன்றி வேறில்லை. வட கிழக்கு மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இடை நிலை ஆதிக்க சாதியினருக்கும், பட்டியலின மக்களுக்கும் இடையே சமூக நல்லிணக்கம் உருவாக வேண்டும். வெற்றுப் பெருமைகளும், வன்முறைகளும் இரு தரப்பினரையுமே உண்மையான பிரச்சனையான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இருந்து திசை திருப்பி தனி மனித லாபங்களுக்கும், அரசியல் கட்சிகளின் பிழைப்புவாதத்துக்கும் மட்டுமே உதவுகிறது.
தமிழ்நாடு அரசின் காலநிலை இயக்கத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, தமிழ்நாட்டிலேயே பெரு வெள்ளம், வெப்ப அலைகள், வறட்சி, நிலத்தடி நீர் தட்டுப்பாடு முதலான அதி தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கும் முதன்மை மாவட்டமாக மயிலாடுதுறை விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செம்பனார் கோயில் பகுதி கடல் அரிப்பு, வெப்ப அலைகள், வெள்ளம் என பல்வேறு சவால்களை ஒருங்கே எதிர்நோக்கியுள்ளது. மயிலாடுதுறையிலும் சாதிய முரண்கள் கூர்மையாக இருப்பதை கவனிக்க முடியும். சென்னையை விட அதிக வெள்ள பாதிப்புகளை சந்திக்கும் கடலூர் மாவட்டமும் சாதிய முரண்களுக்கும், வன்முறைகளுக்கும் விதிவிலக்கல்ல. கடலூரில் அருகி வரும் அலையாத்தி காடுகள், பரங்கிப்பேட்டை போன்ற முக்கிய கடற்கரைகளில் ஏற்படும் கடல் அரிப்பு ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறைந்து சாதிய முரண்கள் வலுப்பெறுவது மக்களின் மைய நீரோட்டப் பிரச்சனையை நீர்த்துப் போகச்செய்யும் செயல்பாடுகளாகும்.
நாகப்பட்டினம் தொடங்கி திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை வரையிலான டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திலும், கனிமவளத்திலும் தமிழகத்துக்குப் பெரும் பங்களிப்பை அளிக்கும் பகுதிகளாகும். மேலும், இவை தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி மையங்களாகவும் விளங்குகின்றன. கடல் நீர் மட்ட உயர்வால், நிலத்தடி நீர் உப்பாகும் அபாயம் உள்ளது. இப்பகுதியின் விவசாயிகள் பாசன நீரை விடவும், நிலத்தடி நீரைப் பெருமளவு நம்பியுள்ளனர். தஞ்சை, நாகை பகுதிகளில், 60-களில் உருவான கம்யூனிச இயக்கத்தின் செயல்பாடுகளால் (கீழ்வெண்மணி போராட்டம்) பட்டியலின மக்களுக்கும் நிலங்கள் கிடைக்க வழிவகை செய்தது. எனினும், வேங்கைவயல், வடகாடு கிராமங்களில் சமீபத்தில் ஏற்பட்ட சாதிய வன்முறைகள் பட்டியலின மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. விவசாய உற்பத்தியைப் பெரிதும் சார்ந்துள்ள இப்பகுதிகள் வெள்ளம், வெப்ப அலைகள் உள்ளிட்ட காலநிலை நிகழ்வுகளால் பாதிக்கப்படும் போது விவசாயக் கூலிகளாக இருக்கும் பட்டியலின மக்களின் வாழ்வாதாரம் நொடிந்து போய்விடுகிறது. அதன் தொடர்ச்சியாக, அவர்களின் மீதான சாதிய வன்முறைகள் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
2024-ம் ஆண்டு ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலின் போதும், 2023-ம் ஆண்டு வந்த மிக்ஜாம் புயலின் போதும், வரலாறு காணாத அளவில் தென் தமிழகம் பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உட்கிராமங்களும் நீரில் மூழ்கின. முன்பொரு காலத்தில், வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் வெள்ளம் சென்னை, கடலூர் பகுதிகளை மட்டுமே பாதித்து வந்த நிலையில், தற்போது அதி தீவிர காலநிலை நிகழ்வுகளால் (Extreme weather events) தென் கடலோர மாவட்டங்களும் சேதங்களைச் சந்தித்து வருகின்றன. 1960 முதலே தென் தமிழகம் சாதிய கூருணர் (Caste Sensitive) மிக்க பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள ஆதிக்க சாதியினர் மற்றும் பட்டியலின மக்கள் என இரு பிரிவுகளிலுமே பொருளாதார வலிமையற்ற குடும்பங்கள் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன. மேலும், இப்பகுதியின் வெப்ப அலைகள் தாக்கத்தைப் பொறுத்தவரை ராமநாதபுரம் ஒரு வறண்ட பூமி என்பதால் அங்கு கோடைக் காலங்களில் பனை மரம் ஏறுவோரும், அச்சமூக மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடியில் உப்பளங்களில் வேலை செய்வோருக்கு வெப்ப அலைகள் பணி நேரங்களில் கடும் சிரமங்களைத் தரவல்லது.
இவை அல்லாமல், பொன்னேரி முதல் கன்னியாகுமரி வரை பரவி வாழும் மீனவ சமூகத்தினர் வெவ்வேறு வகைப்பட்ட மதங்களைச் சேர்ந்தவர்களாகவும், மீன் பிடித்தல், கடல் சார்ந்த வேலைகளில் பொருளீட்டுதல் போன்ற பணிகளில் உள்ளனர். வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காயல்பட்டினம், ராமநாதபுரம், கூடங்குளம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர். இதனால் வெப்ப அலைகளாலும், பெரு வெள்ளத்தாலும், கடுமையான காலநிலை பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இது அவர்களின் பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் மோசமான விளைவுகளை உண்டாக்குவதோடு. அதன் தாக்கம் தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வலுப்பெறவும் மறைமுகமாக உதவுகிறது.
தமிழகத்தில் காலநிலை மாற்றம் எத்தனைக்கு எத்தனை பாதிப்புகளை இடைநிலை ஆதிக்க சாதியினருக்கு விளைவித்தாலும், அதைவிட ஒரு மடங்கு கூடுதலான பாதிப்பாவது பட்டியலின சமூத்தினருக்கும், பெண்களுக்கும் ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சாதியக் கூறுகள் இல்லாத பகுதிகளே இல்லை என்ற நிலையில், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைப் பெருமளவு சந்திக்கும் கடலோர மாவட்டங்களின் சமூக-பொருளாதார பகுப்பாய்வே இக்கட்டுரை. எனவே தான், மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களும், மத்திய மாவட்டங்களும், வட மாவட்டங்களும் இதில் விவாதிக்கப்படவில்லை.
- மணிஷங்கர்
