அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள், ஆற்றில் வெளியிடப்படும் சூடான நீர், எண்ணெய் நிறுவனங்களின் கழிவுகள் ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ள எண்ணூர் முதல் பழவேற்காடு வரையிலான மீனவ மக்களின் வாழ்வாதரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது ஒரு புதிய பிரச்சனை.
செய்தி சேகரிப்பதற்காக 7 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கொசஸ்தலை ஆறு, முகத்துவாரம், பக்கிங்காம் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளேன். அங்குள்ள மீனவர்களுக்கு முக்கியமான பிரச்சனையே அனல்மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுதான். ஆனால், இந்த முறை முற்றிலும் வேறுபட்ட ஒரு பிரச்சனைக்காக அங்கு சென்றிருந்தேன்.
நாங்கள் படகில் சென்று கொண்டிருக்கையில் கொசஸ்தலை ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் கட்டிடக் கழிவுகளை கொட்டி வைத்ததுபோல மேடு மேடாகத் தெரிந்தது என்னை ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கியது. அப்போது என் படகிலிருந்த மீனவர் ஒருவர் அந்த மேட்டில் இறங்கினார். இறங்கியவுடன் அவரது கால்கள் இரண்டடி ஆழத்திற்கு சடாரென உள்ளிறங்கியது. கைகளால் அக்குவியல்களை அள்ளிக் காட்டினார். கருநிறத்தில் நெருக்கமாக கழிவும் சிப்பிகளுகுமாகக் காணப்பட்டது.
“முன்னாடி மீன்பிடிக்கப் போனால் 2000 – 3000 வரை கிடைச்சது. இந்த காக்கா ஆழி வந்த அப்புறம் ஒரு பொறப்பும் இல்லாம போய்டுச்சு. ஆறு முழுக்க போர்வைபோல படிஞ்சிருக்கு. எங்களால ஆத்துல வலையே கட்ட முடில. ஆத்துல இறம்க்கினா இந்த சிப்பிங்க காலைக் கிழிச்சிடுது” என்கிறார் மீனவர் சசிகுமார்.
காக்கா ஆழி – Mytella strigata
இது ஒரு வகையான தென் அமெரிக்க சிப்பியினம். எண்ணூர் பகுதிக்கு இது அயல்வகை உயிரினமாகும். கடந்த 3 ஆண்டுகளாக எண்ணூர் முதல் பழவேற்காடு வரையிலான கொசஸ்தலை ஆறு, முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் நீருக்கடியில் போர்வைபோல படர்ந்து காணப்படுகிறது இந்த காக்கா ஆழி. ஆற்றின் மணலிலும் சேற்றிலும் மேல்பகுதியில் காணப்படுவதுபோலத் தெரிந்தாலும் ஆற்றில் இறங்கினால் 2 முதல் 3 அடி ஆழம் வரை இந்தச் சிப்பிகள் காணப்படுகின்றன.
இந்த காக்கா ஆழிகள் எண்ணூர் முதல் பழவேற்காடு வரையில் ஆறு, முகத்துவாரம் பகுதிகளில் மீன்பிடித் தொழில் நடத்தும் மீனவர்களின் வாழ்வாதரத்தையே அழித்துள்ளது. இந்த காக்கா ஆழிகளின் பரவலால் ஆற்றில் இறால், நத்தை மற்றும் நாட்டினங்களான மஞ்ச மட்டி, பச்சை ஆழி உள்ளிட்ட சிப்பியினங்கள் அழிந்து வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த 60 வயது மீனவர் ராமன் கூறுகையில் “50 வருசமா இந்த ஆற்றை நம்பித் தொழில் செய்கிறேன். இவ்ளோ வருசமா அனல்மின் நிலையங்கள் சுடுதண்ணி விட்டதாலும், பக்கிங்காம் கால்வாயில் கழிவுகள் வருவதாலும் ஆறு பாதிப்படைந்தது. ஆனால், இப்போ இந்த காக்கா ஆழி வந்த பிறகு தொழிலே செய்ய முடியல. கொஞ்சங்கூட மீன் கிடைக்கல. எங்க படகைக் கூட கொண்டு செல்ல முடியாத அளவுக்கு ஆறு மேடாகிப் போனது. நாங்களே ஊருக்கு 2 லட்சம் என 4 லட்சம் போட்டு மண்வெட்டி வைத்து காக்கா ஆழியை வெட்டி அகற்றி படகு செல்வதற்கு வழி ஏற்படுத்தினோம்.
காக்கா ஆழியின் பரவலால் எண்ணூர் முதல் பழவேற்காடு வரையில், 60 இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தற்போது 10 இடங்களில் மட்டுமே மீன்பிடித்து வருகின்றனர். மேலும் 600 ரூபாய் செலவழித்து மீன்பிடிக்க வந்தால் ஒரு நாளில் 500 ரூபாய்க்கு மட்டுமே மீன் கிடைப்பதாகக் கூறுகிறார் மீனவர் குணசேகரன். “முன்னாடிலாம் படகை எடுத்துட்டு ஆத்துல வரும்போதே ரெண்டு கரையிலும் பல பெண்கள் கைகளால் தடவியே நண்டு, இறால் பிடிப்பதைப் பார்க்க முடியும். அதைப் பார்க்கவே திருவிழா போல இருக்கும். ஆனால், இப்போ ஆற்றில் மீன்பிடிக்க பெண்கள் வருவதே இல்லை. கைகளால் தடவிப் பிடிக்க இப்போ காக்கா ஆழிதான் இருக்கு” என்றார் குணசேகரன்.
இந்த காக்கா ஆழிகள் துறைமுகங்க:ள் வழியாக எண்ணூர் பகுதியில் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் சர்க்கு கப்பல்கள் கப்பலை நிலைப்படுத்துவதற்காக கப்பலுக்குள் இருக்கும் தொட்டிக்குள் நீர் நிரப்பி வரும். சரக்குகளை இறக்கும் துறைமுகத்தின் இறங்குதளத்தைப் பொறுத்து அந்த நீர் வெளியேற்றப்படும். இம்முறைய Ballasting என்றழைப்பர். அப்படி காமராஜர் அல்லது காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வந்த கப்பல்களின் வழியாக இந்த காக்கா ஆழிகள் பரவியிருக்கக்கூடும் எனவும் கூறுகிறார்கள்.
மீனவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையானது, தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் மீன்வளப்பொறியியல் துறையை இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளக் கோரியது. அதனடிப்படையில் இவ்விரு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த நிபுணர்களும் காக்கா ஆழி பாதிப்படைந்த பகுதிகளில் 2023 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். எண்ணூர் கழிமுகத்தில் எட்டு இடங்களில் காக்கா ஆழிகளைச் சோதனைக்காக சேகரித்தனர்.
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த காக்கா ஆழிகள் எண்ணூர் கழிமுகத்தைத் தீவிரமாக 7 கிலோமீட்டருக்கும் மேலாக ஆக்கிரமித்துள்ளதாகவும் 25cm2 பரப்பில் 180 முதல் 250 காக்கா ஆழிகள் காணப்படுவதாகவும் இறால் உற்பத்திக்கு அவசியமான மிதவைவாழிகளை இந்த காக்கா ஆழிகள் அழித்துள்ளன எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் தூர்வாருவதன் மூலமாக அல்லது மீனவர்களைக் கொண்டு இந்த ஆழிகளைச் சேகரித்து மீன்களுக்கு உணவாகவும் அல்லது மீன் உரம் தயாரிப்பதன் மூலமாகவும் இவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இவ்வறிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாடு மீன்கள் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் 17.03.2023ல் மீன்வளத்துறை ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் இடைக்கால தீர்வாக காக்கா ஆழிகளைத் தூர்வாரி அகற்ற வேண்டும், காக்கா ஆழிகளை மீன்களுக்கு உணவாக வழங்குவதற்கான வியாபார வழிகளை ஆராய வேண்டும், ஆழிகளின் சிப்பிகளைச் சுண்ணாம்பு தயாரிக்கும் ஆலைகளுக்கு வழங்குவது குறித்தும் ஆராயலாம் எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக எண்ணூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் சூலுரான் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் பதிலளித்த நீர்வளத்துறையானது கொசஸ்தலை ஆற்றில் 700மீ பரவியுள்ள காக்கா ஆழிகளைத் தூர்வாரி அகற்ற ரூ. 8.5 கோடி செலவாகும் எனவும் இதற்கான முன்மொழிவை 12.05.2023 அன்று தமிழ்நாடு ஈரநில ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தது. அதன் பின்னர் 23.07.2024 அன்று நீர்வள ஆணையம் சமர்ப்பித்த மற்றொரு பதில் மனுவில் காமராஜர் துறைமுகத்திற்கு வரும் பன்னாட்டு கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் Ballast Water வழியாகத்தான் இந்த காக்கா ஆழிகள் பரவியிருக்கக்கூடும் எனத் தெரிவித்தது. காமராஜர் துறைமுக நிர்வாகத்தின் தோல்வியே காக்கா ஆழிகளின் பரவலுக்குக் காரணம் எனக்கூறிய நீர்வளத்துறை கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் பரவியிருக்கக்கூடிய காக்கா ஆழிகளை அகற்றத் தேவைப்படும் ரூ. 160 கோடி நிதிக்கு காமராஜர் துறைமுகம் தன் பங்களிப்பை அளிக்க வேண்டும் எனவும் கூறியது.
இந்த நிலையில் இவ்வழக்கின் மீதான விசாரணை 08.08.2024 அன்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் காக்கா ஆழிகளின் பரவலுக்கு காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகிய மூன்று துறைகளும் காரணமாக இருக்கக்கூடும் என்பதால் அவரகளையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதனைக் கேட்ட தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசு காக்கா ஆழிகளை அகற்றாமல் இருப்பது தொடர்பாக தமது அதிருப்தியை பதிவு செய்தது. இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர், நீர்வளத்துறை, மீனவர் நலத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைமுக நிர்வாகங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி இப்பிரச்னை குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
– சதீஷ் லெட்சுமணன்