தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களின் பல இடங்களில் 11.03.2025 அன்று கனமழை பதிவாகியது. இம்மழை கடந்த சில நாட்களாக நிலவிய தீவிரமான வெப்பத்தைத் தணித்துள்ளது .
மார்ச் 6ஆம் தேதி சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 36.4 டிகிரி வெப்பம் பதிவாகியது. இது அந்த நாளுக்கான இயல்பான வெப்ப நிலையைவிட விட 3.6 °C கூடுதலாகும். அதே நாளில் மீனம்பாக்கத்தில், 37.7 °C வெப்பம் பதிவானது, இது இயல்பைவிட 4.3 °C அதிகமாகும். 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் வெப்பமான மார்ச் 6 ம் தேதி இதுதான் என்கிறது சென்னையில் ஒரு மழைக்காலம் என்கிற தனியார் வானிலை ஆய்வு பக்கத்தின் X தள பதிவு. மேலும் மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் 39.2 °C வெப்பம் பதிவானது, இது இயல்பை விட 3°C அதிகமாகும். இத்தரவுகளின்படி நடப்பாண்டு பதிவானதில் மார்ச் 6ஆம் தேதியே மிகவும் வெப்பமான நாளாகும்.
கடந்த 125 ஆண்டுகளில் நடப்பாண்டின் பிப்ரவரி மாதம்தான் அதிக வெப்பமானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் இயல்பைவிட வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. 2025 பிப்ரவரி மாதத்தில் சராசரியாக 22.04 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட 1.34 டிகிரி செல்சியஸ் அதிகம் என்கிறது வானிலை ஆய்வு மையம்.
உலகளவில் இந்த 2025 ஆம் ஆண்டும், இதுவரை பதிவானதில் மிகவும் வெப்பமான ஆண்டாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும் இல்லையெனில் கண்டிப்பாக முதல் மூன்று இடங்களுக்குள் வரும் என்றும் உலக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாமல், கர்நாடகா, தெலுங்கானா போன்ற தென்னிந்திய மாநிலங்களும் கடும் வெப்ப அலைத்தாக்கத்தை இந்த மார்ச் மாதம் சந்தித்து வருகின்றன.
அதிகரிக்கும் பெருநகர வெப்பத் தீவு விளைவுகள் (Urban heat islands) ஒரு பெரும் சவாலாக மாறிவருகின்றன. இந்திய வானிலை அமைப்பும், இன்னும் பிற ஆய்வு நிறுவனங்களும் “வெப்ப அலை” என்று ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலையை நிர்ணயிப்பதில் உள்ள போதாமைகளைக் களையவேண்டும்.
நம்முடைய “முன்கூட்டியே கணித்து அறிவிக்கும் கட்டமைப்புகளை” (early warning systems) மேலும் வலுவாக்கி, குறுகிய வெளியில் இடம்சார்ந்த (mesoscale) கணிப்புகளையும் பெறுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
– செய்திப் பிரிவு