அண்மையில் உலகின் முன்னணி மருத்துவ இதழான லான்செட்டில் Global burden of diseases எனும் ஆய்வு மையம் வெளியிட்ட கட்டுரையில் இந்தியாவைப் பற்றிய ஒரு திடுக்கிடும் தகவல் இடம்பெற்றுள்ளது. அதாவது 2023ல் இந்தியாவில் சுமார் 13.8 கோடி பேர் Chronic kidney disease எனப்படும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள சீனாவில் 15.2 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோயின் பொருள் என்னவென்றால் ஒருவரது சிறுநீரகம் சரி செய்ய முடியாத அளவிற்குப் பழுதாகிவிட்டது என்பதே. இந்நோயால் படிப்படியாகச் சிறுநீரகம் செயலிழுந்து போகும். 2023ல் இந்தியாவில் இந்நோயால் சுமார் 125,000 பேர் இறந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் உலகளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது. 1990இல் 38 கோடியாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 79 கோடியை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெப்பநிலை உயர்வு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள்தான் என்று இவ்வாய்வு குறிப்பிடுகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு (IPCC) 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆறாம் அறிக்கையில் (AR6) மனித செயல்பாடுகளால்தான் உலகம் சூடாகிறது என்று உறுதிபடுத்தியது. மேலும், அனைத்து உலக நாடுகளும் 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் படி புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதைக் கட்டுப்படுத்தாவிட்டால் காலநிலை மாற்றம் கட்டற்ற அளவிற்கு அதிகரிக்கும் என்று IPCC கூறியிருந்தது. மேற்கத்திய தொழில்புரட்சி காலத்தில் இருந்த சராசரி வெப்பநிலையை விட 1.5 டிகிரி அதிகரிக்காமல் கட்டுப்படுத்த முயலவேண்டும் என்றும் வரையறுத்திருந்தது.
2100ஆம் ஆண்டு வரை மனிதகுலம் பின்பற்றக்கூடிய ஐந்து சமூகப் பொருளாதார பாதைகளை (Socioeconomic pathways) இவ்வறிக்கையில் IPCC வரையறுத்தது. தட்பவெப்பநிலை மீது இவற்றின் தாக்கத்தை இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம்.

இவ்வுலகில் வெளியேற்றப்படும் கார்பன் உமிழ்வுகளை வருங்காலத்தில் எந்த அளவிற்கு குறைக்கிறோமோ அந்த அளவிற்கு சராசரி தட்பவெப்பநிலையும் குறையும். பாரிஸ் ஒப்பந்ததின் படி நடந்தால் 2100 ஆம் ஆண்டின்போது புவி வெப்பமயமாதலை 2 டிகிரி அளவிற்குள்ளாகவே கட்டுப்படுத்த முடியும். இப்படிப்பட்ட பாதுகாப்பான எதிர்காலத்திற்கான இரண்டு சூழ்நிலைகள்தான் SSP 1-1.9 மற்றும் SSP 1-2.6 ஆகியவை.
அதேபோல, உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளில் ஒரு அளவிற்கு கரியமில வாயுக்களை கட்டுப்படுத்தினால் SSP 4.5 என்கிற பொருளாதாரப் பாதையில் உலகம் செல்லும். இதில் 2.5 டிகிரி அளவிற்கு உலகின் சராசரி தட்ப வெப்பநிலை உயரும். இதனால் மனிதர்கள் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளில் எம்மாற்றமும் கொண்டு வராமல் இருந்தால் SSP 7.0 மற்றும் SSP 8.5 எனப்படும் அதி வெப்பமான சூழலுக்கு உலகம் தள்ளப்படும். மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடங்களாக உலகின் பெரும்பாலான இடங்கள் மாறிவிடும். உலகம் முழுவதும் அதிகளவில் இயற்கைப்பேரிடர்கள் உண்டாகும். அவற்றின் வீரியமும் அதிகரிக்கும். இவற்றால் கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக மாற்றப்படுவர் என்று அறிக்கை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், Global Risk of Deadly Heat என்ற தலைப்பில் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரையில் காலநிலை மாற்றத்தால் எந்த அளவிற்கு உயிரைப்பறிக்கக்கூடிய வெப்பம் (Lethal Heat ) ஏற்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது . இதில் தமிழ் நாடு போன்று பூமத்தியரேகையின் அருகில் இருக்கும் நிலப்பகுதிகளில் வெப்பமும் ஈரப்பதமும் அதிகரிக்கும் என்றும், அதனால் கொடும் வெப்பத்தன்மையும் (Extreme Heat Stress ) அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது .
2015 இன் போது சுமார் 20 நாட்களுக்கு தமிழ்நாட்டில் உயிரைப்பறிக்கக்கூடிய கொடும் வெப்பத்தன்மை (Lethal Heat ) நிலவியது . 2100ஆம் ஆண்டு வரை SSP8.5 பாதையில் உலகம் பயணித்தால் இத்தகய வெப்பம் ஆண்டிற்கு 365 நாட்களிலும் உண்டாகலாம் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் ஆய்வு தளம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 1.5 டிகிரி வெப்பநிலை உயர்வு வரம்பை நாம் தாண்டிவிட்டோம் என்று அறிவித்தது . IPCCயின் AR6 ஆய்வுக்கட்டுரையில் பணியாற்றிய பல அறிவியலாளர்கள் புவி வெப்பமயமாதல் இந்நூற்றாண்டின் முடிவில் எத்தனை டிகிரியை எட்டும் என்று 2024ஆம் ஆண்டின் இறுதியில் கருத்து தெரிவித்திருந்தனர் (படத்தைக் காணவும் ) . அவற்றில் பெரும்பாலானோர் 2.5 டிகிரி அளவை விட அதிகமாக உலகம் வெப்பமடையும் என்று கூறியிருந்தனர்.

2025இன் தொடக்கத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சீக் ஔச்ஃபாதர் (Dr. Zeke Hausfather) என்ற காலநிலை ஆய்வாளர் மற்றுமொரு திடுக்கிடும் ஆய்வை வெளியிட்டார். இன்றைய தினத்தில் புவி SSP 3.0-7.0ஐ நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது என்று கண்டறிந்துள்ளார். இப்போதைய நிலை இன்னும் மோசமானால் SSP 8.5 அளவைத் தொட வாய்ப்பிருப்பதாகவும் கூறிவுள்ளார். இப்பாதையில்தான் நாம் இன்று பயணித்து வருகிறோம். இப்படி அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக சிறுநீரகத்தின் செயல்திறன் பெருமளவில் குறைந்து வருகிறது. மேலும் சிறுநீரக நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சமீப காலங்களில் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வெயிலில் வேலை செய்யும் விவசாயத்தொழிலாளர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் அதிகப்படியாக வருவது கண்டறியப்பட்டது. மேலும் Indian CKD registry நடத்திய ஆய்வில் தமிழ்நாடு போன்ற வெயில் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்நோய் அதிக அளவில் உண்டாவது கண்டறியப்பட்டது. ஆனால், எந்த காரணங்களினால் இந்நோய் உண்டாகிறது என்பதை சரியாகக் கண்டறியமுடியவில்லை.
பெரும்பாலாக நாள்பட்ட சிறுநீரக நோயானது சர்க்கரை நோயின் காரணமாக (24%) உண்டாகும். அதற்கு அடுத்தபடியாக 19% அளவிற்கு தெரியாத காரணங்களால் உண்டாகிறது. ‘காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய்’ (CKDu / CKD of unknown aetiology ) என்பர் . இந்நோய் வருவதற்கு பூச்சிக்கொல்லி மருந்து, வெப்பத்தன்மை போன்றவை காரணமாக இருக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் யூகித்துள்ளனர்.
இந்நிலையில்தான் சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று சிறுநீரக நோய்களை கண்டறிவதற்காக தமிழ்நாட்டின் விவசாயத்தொழிலாளர்களை ஆய்விற்குட்படுத்தியது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) உள்ளது என்றும், எந்த காரங்களால் அது உண்டாகின்றது என்பதையும் கண்டறிவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள ஏழு வேளாண் மண்டலங்களிலிருந்து 3300 நபர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தென் மண்டலத்திலும், நீலகிரிமலை மாவட்டம் மேற்கு மண்டலத்திலும் சேர்த்து ஆராயப்பட்டது. பங்கேற்றவர்களுடைய சிறுநீரகங்களின் நிலையை அறிவதற்காக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன . சிறுநீரக பாதிப்பை கண்டறிவதற்காக சிறுநீர்க்குழல் வடிகட்டல் வீதக்கணக்கீடு (eGFR ) எனும் பதத்தைக்கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கணக்கீடைக்கொண்டு நோயின் பாதிப்பை ஐந்து கட்டங்களாக பிரிக்கலாம். eGFR 90ஐ விட குறைந்துவிட்டால் முதல் கட்டத்திற்கு வந்தடைத்துவிட்டது என்று பொருள். அதுவே 15 ஐ விட குறைந்தால் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன என்று பொருள். இக்கட்டத்தில் டயாலிசிஸ் செய்தோ, அல்லது சிறுநீரக அறுவைமாற்று சிகிச்சை செய்த பின்னே உயிரோடு இருக்கும் நிலை ஆகிவிடும். மேலும், இந்நோய் மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்திருக்க வேண்டும்.
இதனால்தான் முதல் கட்டமாக 2023ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும், இரண்டாம் கட்டமாக 2023ஆம் ஆண்டு டிசம்பரிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இம்மூன்று மாத இடைவெளி எதற்காகவென்றால் அந்நபரின் சிறுநீரக பாதிப்பு நாள்பட்ட சிறுநீரக நோயினால் ஏற்பட்டதா இல்லை வேறு சிறுநீரக பாதிப்புகளால் ஏற்பட்டதா என்று பகுத்தறிவதற்காகத்தான் .
பல வேளைகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சிறுநீரக நோய் அதுவாக சரியாகிவிடும் . ஆனால் நாள்பட்ட சிறுநீரக நோய் ஒரு முறை வந்துவிட்டால் அதன் பின்னர் சரியாகாது. மூன்றாவது மாதத்தின் பிறகும் சிறுநீரக பாதிப்பு இருந்தால் அது நாள்பட்ட சிறுநீரக நோய் என்று உறுதியாக கூறமுடியும்.
உதாரணத்திற்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ஒருவருக்கு ஏதோ ஒரு காரணத்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது என்று வைத்துக்கொள்வவோம். முதல்கட்ட ஆய்வின்போது அவருக்கு eGFR அளவு 60 ஆக இருக்கிறது. எனவே மூன்றாம் கட்ட நாள்பட்ட சிறுநீரக நோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், உறுதிபடுத்த முடியாது. அதே நபருக்கு டிசம்பர் மாதத்தில் மறுபடியும் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது eGFR அளவு 60ஆக இருந்தால் அது மூன்றாம் கட்ட நாள்பட்ட சிறுநீரக நோய் தான் என்று உறுதிப்படுத்த முடியும். அப்படி இல்லாமல் eGFR அளவு 60இல் இருந்து 90 வரை இருந்தால் முதல் அல்லது இரண்டாம் கட்ட நாள்பட்ட சிறுநீரக நோய் என்று உறுதியாகும். 90ஐ விட அதிகமாக இருந்தால் அவருக்கு தற்காலிக சிறுநீரக பாதிப்புதான் ஏற்பட்டது என்று தெரியவரும்.
இவ்வாறாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தமிழ் நாட்டின் ஏழு வேளாண் மண்டலங்களில் அதிகப்படியாக வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் அதிகப்படியான சிறுநீரக நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காவேரி வேளாண் படுகையிலும், வடகிழக்கு மண்டலத்திலும் இந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், பிற மண்டலங்களின் அளவிற்கு இல்லை.
ஆய்வு முடிவுகளைப் பின் வரும் படத்தில் காணலாம்.

மொத்தம் 17.3% விவசாயத் தொழிலாளர்களுக்கு சிறுநீரக பாதிப்புகள் இருப்பதை இம்மருத்துவக்குழு கண்டறிந்தது .இதில் 12% பாதிப்படைந்தவர்களுக்கு Acute Kidney Injury (AKI) எனப்படும் தற்காலிக சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இத்தகைய பாதிப்பு நீர் அருந்தாமல் இருப்பது, அதிக நேரம் வேலை செய்வது போன்ற காரணங்களால் உண்டாகும் . நாள்பட்ட சிறுநீரக நோயை போல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும்.
மீதம் இருந்த 5.31% விவசாயத் தொழிலார்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவற்றுள் பாதி நபர்களுக்கு காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு மூன்று மாதங்களிற்கு பிறகும் சிறுநீரக நோய் நீடித்தது.
அதிக வயது, ஆண்பால், சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகக்கல், இரத்த சோகை, புகையிலை மெல்லுவது, அதிக நேர வேலை போன்ற காரணிகளால் அதிகளவிற்கு காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் உண்டாவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக ஒரு வாரத்தில் 25 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்த நபர்களுக்கு அதிகளவில் நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்தது தெரியவந்தது. இதற்கானக் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக உலகளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளிலிருந்து மேற்கோள்கள் தேடி எடுக்கப்பட்டன. தாய்வான், மத்திய அமெரிக்கா போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இது போன்ற ஆய்வுகளில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு முக்கியமான காரணமாக வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஒரு வாரத்தில் 36 மணி நேரத்தைவிட அதிகமாக வெயிலில் வேலை நடைபெற்றதாகக் கூறினார்களோ, அங்குப் பெருமளவில் நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதை உறுதி செய்வதற்காக நேரடியாகச் சென்று அங்கு நிலவிய வெப்பநிலையை அளவிட முடியவில்லை.
அதற்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியம் நடத்திவரும் கோப்பர்நிகஸ் தரவுத்தளத்திலிருந்து செயற்கைக்கோள் மூலமாகக் கணக்கிடப்பட்ட தமிழ்நாட்டில் நிலவிய கொடும் வெப்பத்தன்மையின் அளவீடு பதிவிறக்கம் செய்யப்பட்டது. ஐந்து வேளாண் மண்டலங்களில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிலவிய சராசரி உலகளாவிய வெப்பநிலை குறியீடு (Universal thermal climate index) அளவானது ஒவ்வொரு 27 கிலோ மீட்டர் சதுர பரப்பளவிற்கு வரைபடமாக்கப்பட்டது.

மேலும், எத்தனை நாட்களில் உலகளாவிய வெப்பநிலை குறியீடு அபாயகரமான 38 டிகிரி செல்சியஸ் அளவை நான்கு மணி நேரத்திற்கு மேலாகத் தாண்டியது என்றும் python நிரல் மூலமாக வரைபடமாக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தொழிலாளி ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் இத்தகைய கொடும் வெப்பத்தன்மையில் வேலை செய்தால் உடல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற புரிதலுடன் இவ்வரைபடம் உருவாக்கப்பட்டது. இதன் பிறகு நாள்பட்ட சிறுநீரக நோய் அதிகளவில் ஏற்பட்ட மண்டலங்களில் எந்த அளவிற்கான கொடும் வெப்பத்தன்மை நிலவியது என்று ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

எங்கெல்லாம் கொடும் வெப்பத்தன்மை அதிகமாக இருந்ததோ, அங்கெல்லாம் அதிக அளவில் நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. காவேரி மண்டலத்தில் கொடும் வெப்பத்தன்மை அதிகமாக இருந்தாலும் பிற மண்டலங்களைக் காட்டிலும் இந்நோய் அப்பகுதியில் குறைந்து காணப்பட்டது. இதற்கான காரணத்தை அறிய மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் அதிக நேரம் வெயிலில் வேலை செய்வதுதான் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஒரு முக்கியமான காரணம் என்பது மேற்கண்ட படங்களின் உதவியுடன் உறுதி செய்யப்பட்டது.
காலநிலை மாற்றம் எனும் பேரழிவு தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் உடல்நலத்தை இவ்வாறு சீர்குலைப்பதை நாம் ஒரு அபாயச் சங்காக எடுத்துக்கொள்ள வேண்டும் . தமிழக சுகாதாரத்துறை இவ்வாய்வை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆண்டிற்கு ஒரு முறையாவது விவசாயத்தொழிலாளர்களின் சிறுநீரக பாதிப்பை ஆய்விற்குட்படுத்த வேண்டும்.
ஒன்றிய அரசால் கொடும் வெப்பத்தன்மை ஒரு தேசிய பேரிடராகக் அறிவிக்கப்படவேண்டும். விவசாயத்தொழிலாளர்கள் மட்டுமின்றி வெளிப்புறச் சூழலில் வேலை செய்யும் அனைத்து மக்களுக்கும் கொடும் வெப்பத்தன்மையின் தாக்கம்பற்றிய தெளிவை உண்டாக்க வேண்டும்.
இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள 13.8 கோடி மக்களுள் பெரும்பாலானோர் முதலில் இருந்து மூன்றாம் கட்ட பாதிப்பில் இருப்பார்கள். நோய் இருப்பதை கண்டறிந்துவிட்டால் அதன் பின்னர் சிகிச்சை செய்து நோயைக் கட்டுபடுத்த முடியும். அதற்குத் தேவையான ஆய்வுகளையும் மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
பின்வரும் காலங்களில் உலக வெப்பநிலை உயர்வு நாம் வாழும் புறச்சூழலை மேலும் கொடியதாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான அவசர நிலை நடவடிக்கைகளை ஒரு சமூகமாக நாம் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
தமிழ்நாட்டின் வரலாற்றில் உலகின் முன்னணி மருத்துவ இதழான லான்செட்டில் முதன்முறையாக வெளியான ஒரு தமிழ் ஆய்வுக்குழுவின் கட்டுரை இதுதான்.
1823இல் ஆரம்பிக்கப்பட்ட லான்செட் ஆய்விதழில் 1835இல் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மருத்துவக்கல்லூரி ஆய்வாளர்கள் 2025இல் தான் முதன்முறையாக ஒரு ஆய்வை வெளிக்கொண்டுவந்துள்ளனர் என்பது சிறப்பு வாய்ந்ததாகும். சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சக்தி அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்ட ஆய்வில் பங்களிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பூவுலகின் நண்பர்களின் சார்பாக விவசாய மற்றும் தொழிலாளர் பெருமக்களின் நலனுக்காக ஒரு ஆய்வை மேற்கொண்டது எனக்கு மிகுந்த நிறைவை அளித்தது.
– நிகழ்
Heat MMC
