சூழலியலாளர்களின் குரல் மேடை ஏறும்போதெல்லாம், “நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்லர்…, நாம் குகை வாழ்க்கைக்குத் திரும்புவோம் என்று நாங்கள் சொல்லவில்லை…” என்ற விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இன்று தள்ளப்பட்டிருக்கின்றனர். “நீங்க சொல்றத பாத்தா சிக்கி முக்கிக் கல்ல உரசிட்டு காட்டுலதான் வாழணும்” என்பது தொடங்கி பிறப்புறுப்புகளில் மையம் கொண்டிருக்கும் வெறுப்புப் பேச்சுகள் வரையில் அவர்களின் சமூக வலைதளப் பதிவுகளில் பின்னூட்டங்களாய் கொட்டிக்கிடப்பதைப் பார்க்க முடியும். இதில் கூலிக்கு மாரடிக்கும் அரசியல் பிழைப்புவாதிகளை ஒதுக்கிவிட்டாலும்கூட கணிசமான ‘படித்தவர்கள்’, சூழல்நலனை முன்னிறுத்தும் வாதங்களைப் பிற்போக்கானவையாகவும் வளர்ச்சிக்கு எதிராகவும் பார்ப்பதை அவதானிக்க முடியும்.
அஞ்சத்தக்க வகையில் அத்தனை ஆழமாக ‘எல்லையற்ற வளர்ச்சி குறித்த கதையாடல்’ (Narrative of Perpetual Progress (NPP)) மனித மனங்களை பாழ்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறோம் என்றும் இந்த வளர்ச்சிப்போக்கின் சிறு தவறுகளை, மேலும் அதிக வளர்ச்சியின்மூலமாகச் சரிசெய்துவிட முடியும் என்ற நம்பிக்கையையும் அது சமூகத்திற்குத் தருகிறது. பழங்காலம் பசியாலும், வறுமையாலும், நோய்களாலும், துயரத்தாலும் நிரம்பியது என்றும், அது எப்போது வேண்டுமானாலும் ஒருவர் கொல்லப்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருந்தது என்றும், இரக்கமற்ற அந்த வாழ்வின் கொடுமையிலிருந்து தப்பிக்க மனிதர்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள் என்றும் காலம்காலமாக நமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு மனிதன் விவசாயத்தைக் கண்டறிந்ததாகவும் அக்கண்டுபிடிப்பின் தொடர்ச்சியான விவசாயப் புரட்சியால் நாகரிகங்களும் நவீன தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடைந்ததாகவும் இந்த வளர்ச்சியானது நிரந்தரமாகத் தொடர்ந்துகொண்டே இருக்குமென்றும் இக்கதையாடல் நீள்கிறது. நேற்றைவிட இன்று சிறப்பான நாளாக இருப்பதுபோல, நாளையானது இன்றைவிட சிறப்பாக இருக்குமென்றும் இக்கதை நமக்கு நம்பிக்கையூட்டுகிறது. இத்தொடர் வளர்ச்சியை சந்தேகிப்பதோ கேள்விக்கு உட்படுத்துவதோ காட்டுமிராண்டி வாழ்வுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுமென்று பலரும் பதறுகின்றனர். இரத்தவெறி பிடித்த – குரூரத்தையே இயல்பாகக்கொண்ட – மனிதர்களை மனிதர்கள் கொன்றுண்ணக்கூடிய அப்பழங்குடி வாழ்வுக்குத் திரும்புவதை யாரால்தான் ஏற்க முடியும்?
நாம் பழகிப்போன இக்கதையாடலை மாற்ற முனைகிறது கிறிஸ்டோபர் ரேயனின் Civilized to Death’ (The price to Progress) என்ற புத்தகம். நம்மைப் பயமுறுத்தும் இருட்டடைந்த குகை வாழ்வு, நாம் இன்று வாழும் நவீன ‘சொகுசு’ வாழ்வைவிட அத்தனை மோசமானது அல்ல என்றும், சொல்லப்போனால் இதிலிருந்து பலமடங்கு மேம்பட்டது என்றும் சொல்லும் ஆசிரியர், அதற்கு ஆதாரங்களாக பல்வேறு மரபியல், பரிணாமம், தொல்லியல், உளவியல், மானுடவியல் தரவுகளை நம்முன் வைக்கிறார். சமகாலத்தில் வாழும் நவீன மனிதர்களோடு தொடர்பற்ற பழங்குடிகளையும், பெருமளவில் நம் மரபணுக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கும் நம் ஆதி மூதாதைக் குரங்குகளையும், சார்லஸ் டார்வின் உள்ளிட்டப் பல பெரும் ஆளுமைகளின் கருத்துகளையும் கொண்டு தம் வாதத்திற்கு வலுசேர்க்கிறார். மேலோட்டமாக, இது ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ என்ற வகையறா புத்தகம்போன்று தெரிந்தாலும் சமகால சூழல் நெருக்கடிகளின் பின்னணியில் இதன் ஆழமும் அர்த்தமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
பொதுவாக, பொதுக்கூட்டங்களில் காலநிலை மாற்றம் குறித்துப் பேசும்போது, மனிதனின் அத்தனை நாகரிகங்களையும் தொழில்நுட்பங்களையும் சாத்தியப்படுத்திய – விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட ‘நிலையான காலநிலை’ இன்று உடைந்து நொறுங்கிக்கொண்டிருக்கிறது என்று சூழலியலாளர்கள் சொல்லுவதுண்டு. ஆனால், நாம் விதந்தோதும் விவசாயத்தின் கண்டுபிடிப்பும் அதனைத் தொடர்ந்த நாகரிகமாக்கமும்தான் மனித குலத்தின் சாபக்கேடுகள் என்பதை இப்புத்தகம் அழகாக விவரிக்கிறது.
பழமையை, பிற்போக்கானது என்று நம்மவர்கள் ஏளனம் செய்யும்போதோ அல்லது புனிதப்படுத்திக் கொண்டாடும்போதோ அப்பழமைக்கான காலத்தை சிலநூறு ஆண்டுகள் முதல் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானதாக எடுத்துக் கொள்கின்றனர். உதாரணமாக, “பசுமைப் புரட்சி இல்லையென்றால் பஞ்சத்தால் மக்கள் செத்துப் போயிருப்பார்கள்” என்று சொல்லும்போதோ அல்லது “தடுப்பூசிகள் இல்லையென்றால் கொள்ளை நோயில் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிந்து போயிருக்கும்” என்று சொல்லும்போதோ அல்லது இன்னொருபுறம் ‘தமிழர்களின் நீர் மேலாண்மையும் உணவுப் பழக்கங்களின் சிறப்புகளும்’ சொல்லப்படும்போதோ நமக்குள் இருக்கும் காலக்கோடு சில நூறு ஆண்டுகள் மட்டுமே பின்னோக்கி நகர்கிறது. அதற்கும் முந்தைய வாழ்வு என்பது ஒப்பீட்டுக்கே தகுதியற்ற இருண்ட காலமாகத் தெரிகிறது.
ஆனால், இப்புத்தகம் குறிப்பிடும் ‘வசந்த காலம்’ விவசாயப் புரட்சி தொடங்கிய பதினோராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. விவசாயப் புரட்சிக்குப் பிற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றுக் காலத்தோடு ஒப்பிடும்போது அது ஒட்டுமொத்த மானுட வரலாற்றில் 97 விழுக்காட்டை உள்ளடக்கிய மூன்று இலட்சம் ஆண்டுகளைக் குறிக்கிறது. வரலாற்றாளரான யுவால் நோவா ஹராரி இதுகுறித்துப் பேசும்போது, “விவசாயப் புரட்சி வரலாற்றின் மிகப்பெரிய மோசடி” என்கிறார். “இது கொடுத்த உபரியான உணவானது அனைவருக்கும் தன்னிறைவையும், ஊட்டச்சத்தையும் தருவதற்கு மாறாக மிதமிஞ்சிய மக்கட்தொகை பெருக்கத்திற்கும் ஒரு சில மேட்டுக்குடிகளின் நலனுக்குமே உதவியிருக்கிறது; மேலும், விவசாயிகள் தங்கள் அரை வயிற்று உணவுக்காக நாடோடி வாழ்வு வாழ்ந்த மக்களைவிடவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.” என்கிறார்.
விவசாயப் புரட்சியை விமர்சனத்திற்குள்ளாக்கும் இவ்வாதத்தைக் கேட்பவர்களுக்கு நவீன மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பான பஞ்சம், கொள்ளை நோய்கள் போன்றவற்றால் ஏற்பட்ட பேரழிவு மரணங்கள் உடனடியாக நினைவிற்கு வரலாம். ஆனால், வரலாற்றில் நாம் பார்த்த இப்பேரழிவுத் தடயங்கள் அனைத்தும் விவசாயப் புரட்சிக்குப் பின்பான நாகரிக காலத்தைச் சார்ந்தவை என்பதை நினைவூட்டுகிறது புத்தகம். அதாவது, எப்போது மனிதன் விவசாயத்தைக் கைக்கொண்டு முதன்மை உணவாக தானியங்களுக்கு மாறினானோ அப்போதுதான் பஞ்சங்கள் அவனை உணவாக உட்கொண்டன. ஏதேனும் ஒரு காட்டில் ஒரு அணிலோ, மானோ, சிங்கமோ, பருந்தோ உணவின்றி இறந்துபோவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? பஞ்சங்கள் மட்டுமல்ல ஏழ்மையும் வறுமையும்கூட நாகரிக வாழ்வின் கொடை என்கிறது புத்தகம்.
எப்போது மனிதன் காட்டுவிலங்குகளை பழக்கி தனது ஏவலுக்குப் பயன்படுத்த தொடங்கினானோ அப்போதுதான் விலங்குகளிலிருந்து பரவும் நோய்கள் பெருமளவில் மனித குலத்திற்கு அறிமுகமாகின. எப்போது, மக்கள் நெருக்கமாக நாகரிக நகரங்களில் வாழத் தொடங்கினார்களோ அப்போதுதான் சுகாதாரமின்மையும் தொற்றுநோய்களும் மக்களைக் கொத்துக்கொத்தாய் கொள்ளை கொண்டன. நாமறிந்த எக்காடுகளிலும் மனிதத் தலையீடுகள் இன்றி எவ்விதக் கொள்ளை நோய்களும் ஆயிரக்கணக்கில் விலங்குகளைப் பலிகொண்டு நாம் அறிந்ததில்லை என்பதிலிருந்தே இவை 50 முதல் 150 பேருக்கு மிகாத சிறு குழுக்களாக வாழ்ந்த நாடோடி மனிதர்களுக்கு ஒருபோதும் சவாலாக இருந்திருக்காது என்பதை உணர முடியும். தொற்றுநோய்கள் மட்டுமின்றி இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல் பருமன், புற்றுநோய், தன்னெதிர்ப்பு நோய் (auto immune diseses) போன்றவை நவீன வாழ்வியல் நோய்கள் எதையும் ஆதிப் பழங்குடிகள் அறிந்ததில்லை என்று தொல்லெச்சங்களின் துணைகொண்டு விவரிக்கிறார் ஆசிரியர்.
அடுத்து நமக்கு இயல்பாக எழக்கூடிய கேள்வி தனி மனிதர்களின் நல்வாழ்வு குறிப்பாக அவர்களது குறுகிய ஆயுள் பற்றியதாக இருக்கலாம். அதாவது, மனிதர்களின் ஆயுட்காலம் பெருமளவில் உயர்ந்திருப்பதாகவும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு 40-50 ஆக இருந்தது நவீன மருத்துவத்தின் வருகையால் 60 – 70 ஆக மாறியிருப்பதாகவும் நமக்குச் சொல்லப்படுகிறது. இப்புத்தகத்தை வாசிக்கும் வரையில் நானும் இதையே நம்பினேன். புள்ளியியல் ரீதியில் இது உண்மை என்றாலும் அந்த கணக்கீடுகளில் இருக்கும் போதாமையை வெளிப்படுத்தும் ஆசிரியர் நமக்கு இதுகுறித்து வேறொரு சித்திரத்தைத் தருகிறார்.
முதலாவது, சிசு மரணங்கள் தொல்பழங்காலத்தில் மிக அதிகமாகவே இருந்தது (ஐந்தில் ஒரு மரணம்) என்று ஒப்புக்கொள்ளும் ஆசிரியர், “தமது மகிழ்ச்சியான, நிறைவான நல் வாழ்விற்கு அம்மக்கள் கொடுத்த விலை அது” என்கிறார். இது கேட்க நமக்கு உவப்பாக இல்லை என்றாலும் அவர் அடுத்து கொடுக்கும் விளக்கங்கள் நம் ஆழமான நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துகின்றன. சிசு மரணங்கள் அதிகமாக இருந்ததாலேயே ‘சராசரி ஆயுட்காலம்’ தொல்பழங்காலத்தவருக்கு மிகக்குறைவானதாகத் தெரிவதாகவும், ஆனால், அவர்களில் பலர் நம்மைப்போலவே நீண்டகாலம் வாழ்ந்திருக்கின்றனர் என்கிறார் ஆசிரியர். நாடோடிகளின் உடல் நலமும் ஆரோக்கியமும் இன்றைய நவீன சமூகத்தோடு ஒப்பிடும்போது சிறப்பானதாகவே இருப்பதைத் தான்சானியா பழங்குடிகள் குறித்த ஆய்வுகளைக் கொண்டு நிறுவுகிறார். மேலும், நவீன காலத்தில் சராசரி ஆயுட்காலத்தைக் கணக்கிடும்போது ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் செய்யப்படும் பல்லாயிரம் சிசுக்கொலைகளும் சட்டப்பூர்வமான கருக்கலைப்புகளும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்று இந்த ‘சராசரி ஆயுளின்’ போலித்தனைத்தை வெளிப்படுத்துகிறார்.
நவீன மருத்துவ வசதிகள் வாழ்நாளை அதிகரிக்கிறது எனுமிடத்தில் ‘நீட்டப்பட்ட’ வாழ்நாள் என்னவாக இருக்கிறது என்பதை ஆசிரியர் கேள்வி எழுப்புகிறார். “எப்படி நீங்கள் இறக்க விரும்புகிறீர்கள்?” என்று எவரையாவது நாம் கேட்டால், பெரும்பாலானவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் அரவணைப்பில் வீட்டிலேயே குறிப்பாக அதிக சிரமின்றி தூக்கத்திலேயே மரணிக்க விரும்புவதாகவே சொல்வார்கள். ஆனால், அதற்கு மாறாக, கருணையற்ற வகையில் மரணம் முடிவாகிவிட்ட பின்பும்கூட வதை முகாம்கள் போன்ற மருத்துவமனைகளில் குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு நாட்கணக்கில் அவதியுற்று மனிதர்கள் மரணிக்கின்றனர் எனும் ஆசிரியர் நம்மை மரணம் குறித்து ஆழமாக சிந்திக்கச் செய்கிறார்.
ஒரு மானோ அல்லது வேறு ஏதேனும் ஒரு விலங்கோ இரைக்கொல்லியால் கொல்லப்படும்போது சில நிமிடங்களிலேயே அதன் உயிர் பிரிந்து போகிறது. 20 ஆண்டுகள் வாழ்நாள் கொண்ட ஒரு விலங்கின் வாழ்வில் அக்கொடூரமான கணங்கள் வெறும் சில நிமிடங்களே நீடிக்கின்றன. ஆனால், ஒரு சில நிமிடங்கள் குறித்த சிந்தனை அவ்விலங்கின் மகிழ்ச்சியான – ஒப்பீட்டளவில் மிக நீண்ட வாழ்நாளில் ஆதிக்கம் செலுத்தி அவற்றைத் தொந்தரவு செய்வதில்லை. மாறாக, மனிதர்களின் முழு வாழ்விலும் சாவு குறித்த பயம் ஆக்கிரமித்திருக்கிறது. ஒருபோதும் தாம் அதிலிருந்து தப்ப முடியாது என்று தெரிந்திருந்தும்கூட அதனை ஏற்க அவர்கள் மனம் விரும்புவதில்லை. குறுகியகாலச் சாவின் வலியை நவீன மருத்துவத்தால் நாம் மிக நீண்டதாக மாற்றியிருக்கிறோம். சிறுநீரகம் செயலிழந்த ஒருவர் டயாலிசிஸ் செய்து கொள்வதையோ அல்லது புற்று நோயாளி ஒருவர் வலிமிகுந்த சிகிச்சைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்வதையோ தீவிர மறதியால் ஆட்பட்டுப் படுக்கையில் வீழ்ந்த ஒரு முதியவரோ – அல்லது உயிர்காக்கும் சிகிச்சைகளால் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டவர்களோ படும் வேதனை உண்மையில் இச்சிகிச்சைகளின் அவசியத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதோடு மனித மாண்பையும் சிதைக்கின்றன என்கிறார். தன் எடையையே தாங்க முடியாத அளவிற்கு கால்கள் வளைந்து நிற்கும் ஒரு பிராய்லர் கோழியானது, முற்றொழிந்துபோகும் அபாயத்திலிருக்கும் எண்ணெற்றப் பிற பறவைகளைவிட நீடித்திருக்கும் வலுவினை மனிதத் தலையீடு அதற்குத் தந்திருக்கிறது. பிராய்லர் கோழியின் நிலையிலிருந்து பார்த்தால் இந்நீடித்திருத்தலும் நம் மக்கட்தொகைப் பெருக்கமும் அதிகரித்த வாழ்நாளும் எவ்வகையில் ஆரோக்கியமானது என்று கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர்.
தொல்பழங்கால மக்கள் அவ்வப்போது பசித்திருந்தாலும் அது நீண்டகாலப் பட்டினியாக இல்லை என்று குறிப்பிடும் ஆசிரியர் அவ்வப்போது பசித்திருத்தல் உடலுக்கும் மனதுக்கு ஆரோக்கியமானது என்று நவீன ஆய்வுகளை ஆதாரமாக முன்னிறுத்துகிறார். இங்கே நாம் பெருமளவு சமூகத்திற்கு உணவூட்டியிருப்பதாகச் சொல்லிக்கொண்டாலும்கூட 805 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்தின்றி வாழும் புள்ளி விபரத்தைக் குறிப்பிட்டு வாழ்வில் அளவைவிட தரத்தின் முக்கியத்துவத்தைப் பேசுகிறார்.
இன்று பெண்கள், சிறுவயதிலேயே பூப்படைவதை செழிப்பின் குறியீடாக வளர்ச்சிவாதிகள் சொல்லும் பின்னணியில், அதையே எதிர்மறையாகக் காண்கிறார் ஆசிரியர். தாமதமாக பூப்பெய்தல், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள், நீண்டகாலம் பால் கொடுத்தல் போன்றவை இயல்பிலேயே அக்காலப் பெண்கள் அவர்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் மொத்த மாதவிடாய் சுழற்சியின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருந்ததாகவும் இது புற்றுநோயின் வாய்ப்பை சற்றேரக்குறைய இல்லாமல் செய்ததாகவும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். (இது குறித்த இன்னும் விரிவான விளக்கத்திற்கு இக்கட்டுரையில் இடமில்லை என்பதால் தவிர்க்கிறேன்). நம்மை இன்று தீவிரப் பிரச்சினைக்கு உள்ளாக்கும் பல்லில் ஏற்படும் நோய்களும் தாவர உணவிற்கு மனிதகுலம் மாறியதற்குப் பின்பான பிரச்சினையேயன்றி அது தொல்பழங்காலத்தின் பிரச்சினையாக இல்லை என்கிறார் ஆசிரியர். சமூக விலங்காகிய மனிதன் தன் பிழைத்திருத்தலுக்காக ஈடுபடும் வேலைகள் அவனைப் பிற மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கும் சூழலில் இன்று நாம் சாதாரணமாக எதிர்கொள்ளும் பல்வேறு மனநோய்களும் அன்று இல்லை என்கிறார். ஒட்டுமொத்தத்தில் இவ்வாதங்கள் மகிழ்ச்சியான சமூக வாழ்வு வாழும் – நம் நெருங்கிய உறவினர்களான பொனோபோ குரங்குக் கூட்டத்தை நினைவூட்டுகின்றன.
விவசாயப் புரட்சிக்குப் பின்பே உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படத் தொடங்கியதாகவும், அதுவே (விவசாய) உற்பத்திக்கு நேரடியாக அதிகப் பங்களிக்காத பெண்களை ஆடு மாடுகள் போன்று உடைமைகளாகக் கருதும் பாலிய வேற்றுமைகளை உருவாக்கியதாகவும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். தீவிர சமத்துவம், நன்றியுணர்வு போன்றவற்றை அவர்களின் வெற்றிகரமான பல இலட்சம் ஆண்டுகள் நீடித்திருந்த வாழ்வின் அடிப்படைக் குணங்களாக குறிப்பிடும் ஆசிரியர், அவர்களிடையே தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் வெறும் வழிகாட்டிகளாக மட்டுமே இருந்தார்களேயன்றி ஏதேச்சதிகாரம் செய்பவர்களாக இல்லை என்கிறார். உடைமைகளற்ற தொல்பழங்காலத்தில் இரத்த வெறிபிடித்தப் போர்களும் அவற்றுக்கான தேவைகளும் இல்லை என்கிறார். சமகாலத்தில் வாழும் நவீனத்தின் கறைபடாத பழங்குடியினரை ஒப்பிட்டு அவர்கள் எவரும் தங்கள் வாழ்வை நிறைவற்றதாக உணர்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறார். அவர்களின் ஒரே ஆயுட் காப்பீடு தங்கள் குழுவினரோடான ஆத்மார்த்தமான பிணைப்பு மட்டுமே என்கிறார். “கூடுதலான உணவைச் சேமித்து வைப்பதற்கான மிகச்சிறந்த இடம் என் நண்பனின் வயிறுதான்” என்ற மேற்கோளை இங்கு நினைவு கூர்ந்து அன்பும் பகிர்தலுமிக்க இளகிய மனம் கொண்ட நம் மூதாதையரை நம் கண்முன் நிறுத்துகிறார். நாகரிகமும் அரசுகளின் தோற்றமும்தான் அடுக்கதிகார சமூகத்தையும் கூளைக்கும்பிடு போடும் மனிதர்களையும் உற்பத்தி செய்திருக்கிறது என்றும் ஆதி சமூகத்தில் இத்தகைய எந்த முகமூடிகளும் மனிதர்களுக்குத் தேவைப்படவில்லை என்கிறார் கிறிஸ்டோபர்.
நாகரிகம் என்ற பெயரில் மனித குலமானது ஒரு படுகுழியைத் தோண்டிவிட்டுத் தானே அதில் வீழ்ந்து கிடக்கிறது எனும் ஆசிரியர், உலகில் இதுவரையிலும் நாம் அறிந்த கோலோச்சிய நாகரிகங்கள் எல்லாமே ஒரு கட்டத்தில் பேரழிவைச் சந்தித்திருக்கின்றன என்றும் நம் நவநாகரிக சமூகம் மட்டும் விதிவிலக்காக நீடித்திருக்குமென்று நம்புவதற்கு இங்கு எந்த முகாந்திரமும் இல்லை என்கிறார்.
அப்படியானால் எங்களைக் குகை வாழ்வுக்கு திரும்பச் சொல்கிறீர்களா என்றுதானே நீங்கள் கேட்கிறீர்கள்? இதற்கு கிறிஸ்டோபர் ரேயன் என்ன சொல்கிறார் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
ஜீயோ டாமின்
