சாவுக்கு அழைத்துச் செல்லும் நாகரிகம் – 2

நாகரிகம்

நீங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கவும் நீச்சலடிக்கவும் கற்றுக்கொள்ளலாம்; ஆனால் ஒருபோதும் ஒரு மீனைப்போல உங்களால் மூச்சுவிட முடியாது. நீங்கள் அசைவம் தவிர்த்து சைவ உணவுக்கு மாறலாம்; ஆனால், ஒருபோதும் ஆடு மாடுகள்போல உங்களால் ஒரு தாவர உண்ணியாக (herbivorous) மாற முடியாது. விசாலமான வீட்டிற்குள் உங்களை முடக்கிக்கொண்டு, நீங்கள் தனியறையில் வாழப்பழகிக்கொள்ளலாம்; ஆனால், உங்களால் ஒருபோதும் தனித்து வாழும் உயிரினமாக (solitary animal) மாறிவிட முடியாது.

மனிதர்கள் சாலையோரங்களிலும் சாக்கடைகளிலும் புழுதியிலும் பிழைத்திருக்கப் பழகிக்கொண்டிருக்கிறார்கள் என்பது, அவர்கள் இத்தகு சூழலுக்குத் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள் என்று அர்த்தமில்லை.

உணவும் தண்ணீரும் போதுமான நிழமும் ஓய்வும் எல்லா வசதிகளும் இருந்தாலும்கூட ஒருபோதும் ஒரு மிருகக்காட்சிச் சாலையை, காட்டு விலங்கு தனக்கான வாழிடமாகக் கருதாது. பரிதாபகரமாக, மனிதர்கள் மிருக்காட்சி சாலைபோன்ற ஒரு கொடூரமான உலகைத் தங்களுக்காக   வடிவமைத்திருக்கிறார்கள்.

உங்கள் உணவுப் பழக்கங்களோ, கலாச்சாரமோ, வேலைகளோ, வாழ்வு முறைகளோ நவீனமாகியிருப்பது உண்மைதான். ஆனால், உங்கள் உடலும், மூளையும் இயல்பூக்கங்களும் இன்னும் ஆதிக் குகை மனிதனுடையவையாக இருக்கின்றன. அவற்றால் ஒருபோதும் உங்கள் நவீன உலகுக்குத் தகவமைந்துகொள்ள முடியாது.

கொழுப்பும் கலோரியும் மிகுந்த உணவைக் காணும்போது இன்னும் நீங்கள் ஒரு குகை மனிதனாகவே வாழ்கிறீர்கள். இதுதான் உங்கள் இறுதி உணவு என்பதுபோல உண்கிறீர்கள். இது உங்கள் உயிருக்கு ஆபத்தானது என்பதை உங்கள் பகுத்தறிவு அறிந்திருந்தாலும், கெடுவாய்ப்பாக உங்கள் இயல்பூக்கங்களை மீறுமளவிற்கு அது பலமிக்கது அல்ல. நீங்கள் சமூக விலங்குகள்; உங்களது உடலும் மனமும் சொகுசான ‘office cabin’களில் பிழைத்திருக்கும்படி பரிணமித்தவை அல்ல; சமூக வலைதளங்கள், உங்களின் ஆதிமனித இயல்பூக்கமான சமூக வாழ்வை ஒருபோதும் பதிலீடு செய்யாது. நீங்கள் மாட மாளிகைகளில் குடிகொண்டிருந்தாலும் உங்களின் இயல்பூக்கம் ஒரு மரத்தினடியில் இளைப்பாறவே ஏங்கிக்கொண்டிருக்கும். உங்கள் கண்கள் ஒரு நீர்ச்சுனையையோ தெள்ளிய நீரோடையையோ காண ஏங்கிக் கொண்டிருக்கும். அதனைச் சாந்தப்படுத்த, வீட்டின் உள் அலங்காரங்களிலும் சுவர்களிலும் பசுமையைக் கொண்டுவர நீங்கள் முயல்கிறீர்கள். அது ஒருபோதும் உங்கள் உள்ளார்ந்த தாகத்தைத் தணித்து உங்களுக்கு நிறைவளிக்காது.

கிறிஸ்டோபர் ரேயனின் இந்த அறைகூவல், உண்மையில் என்னை அதிகம் கலக்கமடையச் செய்துவிட்டது. ‘சிவிலைஸ்ட் டூ டெத்’, எனது நீண்டகால ஐயங்களுக்குப் பதிலளித்திருக்கிறது; எனது யூகங்களை உறுதிப்படுத்தியிருக்கிறது. நான் பொதுவெளியில் சொல்லத் தயங்கிய கருத்துக்களை உரத்துச் சொல்லும் வலுவைத் தந்திருக்கிறது. சில கருத்துக்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டியிருக்கிறது. ‘எதுவரையிலும் நாம் வளர்ந்துகொண்டே இருப்பது?’ என்ற கேள்விக்கு – நான் அனுமானித்தப் பதிலுக்கான நியாயத்தைத் தந்திருக்கிறது.

சுயநலமும் அதிகார வெறியும் மனிதரின் இயல்பாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, சமத்துவமும் கூட்டுறவுமே ஆதிமனிதர்களின் இயல்பு என்றும், சூழ்நிலைகள் மாறும்போது அபாயகரமானதாக மாறும் பாலைவனத்து வெட்டுக்கிளிகள்போல, நாகரிக உலகின் சூழலே அவர்களை மோசமானவர்களாக மாற்றுகிறது என்றும் கிறிஸ்டோபர் சொல்வது ஓரளவிற்கு ஏற்புடையதாக இருக்கிறது. தனிப்பட்ட வகையில் என்னை அதிகம் பாதித்த இப்புத்தகம், மேலும் பலருக்குப் புதிய சிந்தனைகளைத் தூண்டுமென்ற நம்பிக்கையில் இது குறித்த எனது கட்டுரையை, எனது மிக நீண்ட கட்டுரைகளில் ஒன்றாக்கத் துணிந்திருக்கிறேன்.

சமீபத்தில், “இன்னும் சில நாட்களில் நீங்கள் மரணிக்க நேர்ந்தால் உடனடியாக என்ன செய்வீர்கள்?” என்று முகநூலில் நான் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன். அதற்கு வந்த குதர்க்கமான சில பதில்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஒட்டுமொத்த பதில்களும் தம் அன்புக்குரியவர்களின் நலன் குறித்தக் கவலையும், அவர்களுடன் இன்னும் அதிகமாய் நேரம் செலவிட்டிருக்கலாம் என்ற முனைப்பையும் வெளிப்படுத்துபவையாகவுமே இருந்தன. சிலர், ‘எஞ்சிய சில நாட்களையாவது தமது மனதுக்கு விருப்பமானதைச் செய்ய செலவிடுவேன்’ என்றும் குறிப்பிட்டிருந்தனர். “நான் இன்னும் அதிகம் அன்பு செய்திருக்கலாமோ?!” என்ற ஒருவரின் பதில் என்னை அதிகம் துயரத்திற்குள்ளாக்கியது.

எந்த விலங்குக்கும்கூட இப்படி ஒரு துயர் இருக்காது. நம் உள்ளம் ஆழமாய் நம்மிடம் இறைஞ்சுவதற்கும் நமது நடைமுறை வாழ்வுக்கும் ஏன் இத்தனை பாரதூர வேறுபாடுகள்? எது நம்மைத் தடம்புரளச் செய்கிறது? இதற்கான பதிலை ஆழமாக சிந்தித்தால்  கிறிஸ்டோபர் ரேயனின் புத்தகத்தோடு நீங்கள் அதிகம் உடன்பட முடியும்.

சரி புத்தகத்திற்கு வருவோம்!

பிரபல காலணி நிறுவனமான ‘நைக்கி’ எப்படி மனிதக் கால்களின் பரிணாமத்திற்கும் இயல்புக்கும் முற்றிலும் பொருத்தமற்ற ஷூக்களை உற்பத்தி செய்து பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் மூட்டு – தசைப் பிரச்சினைகளுக்குக் காரணமாகி – அதே வேளையில் ஜோராகக் கல்லாக் கட்டியது என்பதை விரிவாக குறிப்பிடுகிறார் கிரிஸ்டோபர். (நம் உடலின் பரிணாமத்திற்குப் பொருத்தமற்ற ஊறு விளைவிக்கக்கூடிய – ஆனால், நமது முக்கிய நுகர்பொருட்களாக இருக்கும் குப்பை உணவுகள் முதல் ஐரோப்பிய பாணியிலான கழிவறைகள் வரையில் இதனோடு பொருத்திப் பார்க்கலாம்.) இதன் வழியாக, நம் உயிரியல் ரீதியான தகவமைதலுக்குப் பொருத்தமானதாக உலகைக் கட்டமைக்க வேண்டுமென்றால் – அதிக நிறைவான வாழவேண்டுமானால் – நாம் ஒரு குகை மனிதனின் வாழ்வும் இயல்பும் எப்படியாக இருந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறார். இந்த அடிப்படையை விவரிக்க குழந்தைப் பிறப்பு முதல் மனித வாழ்வின் பல்வேறு படிநிலைகளை அலசுகிறார்.

எந்த விலங்குக்கும் இல்லாத பிரசவ சிரமங்களும் அடுத்தவர் உதவி பிரசவிக்கத் தேவைப்படுவதும் ஏறக்குறைய மனிதர்களுக்கு மட்டும்தான். மனித உயிரினம் நிமிர்ந்து நடக்கத் தொடங்கியபோது இடுப்பெலும்புகள் நெகிழ்வுத்தன்மை இழந்துபோனது இதற்கு ஒரு காரணம் எனலாம். ஆகவே, இயல்பான பிரசவத்தை ‘சுகப்பிரசவம்’ என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கிறிஸ்டோபரும் இதனை புனிதப்படுத்தவில்லை. ஆனால், அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தாயின் பிறப்புறுப்பு வழியே குழந்தை வெளிவராமல் போவதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியிலும் தாயின் ஹார்மோன் சுரப்புகளிலும் ஏற்படும் பிரச்சினைகளையும் அது குழந்தையின் நலனில் ஏற்படுத்தும் நீண்ட தாக்கத்தையும் பேசுகிறார் அவர்.

மேலும், குழந்தையானது தனது ‘தாயை மட்டுமே அறிந்திருக்கும்’ ஆதிச் சமூகத்தில் குழந்தை வளர்ப்பில் ஒட்டுமொத்த ஆண்களும், ஏன் மொத்த சமூகமுமே ஈடுபடுவதையும், அது குழந்தையின் உடல் மற்றும் மனோரீதியான வளர்ச்சியிலும் முதிர்ச்சியிலும் (தாயின் நலனிலும்கூட) பங்களிப்பதை விரிவாகப் பதிவு செய்கிறார். முரணாக, நவீன தனிக்குடும்பங்களில் பெற்றோர் இருந்தும்கூட அவர்களின் நேரத்திற்காகவும், தொடுதலுக்காயும் ஏங்கும் நம் சமூகத்தை சித்திரப்படுத்துகிறார். இந்த அமெரிக்க மயமாதல் எங்கும் பரவி அதிகரித்து வருவதையும், குழந்தைகளை சுமையாய் உணர்ந்து தவிர்க்க முயலும் சமூகம், வேகமாய் உருவாக்கி வருவதையும் கவனப்படுத்துகிறார். இத்தகைய சமூகத்தில் தப்பிப் பிறந்து வளரும் குழந்தைகள் சமூக விரோதிகளாகவோ அல்லது தற்கொலை எண்ணமும் மனச்சோர்வும் கொண்டவர்களாய் அன்றி வேறு எப்படி வாழக்கூடுமென்ற கேள்வியை எழுப்புகிறார்.

இன்னொரு பக்கம், நவீன சமூகத்தின் அதிக கண்டிப்பு, அதீதப் பாதுகாப்புணர்வு போன்றவற்றின் அபாயங்களையும் அலசுகிறார். வரம்பற்ற விளையாடும் உரிமை பெற்றிருந்த – விளையாட்டின் மூலம் – விளையாட்டாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட குகை மனிதனின் பிள்ளைகளையும், கல்வி என்ற பெயரில் தங்கள் குழந்தைத் தன்மையைப் பறிகொடுத்து, புத்தக மூட்டையுடன் பள்ளிக்கும் வீட்டுக்குமாய் ஊசலாடும் குழந்தைகளையும் ஒப்பிடுகிறார். “குழந்தைகளின் விளையாட்டைக் கட்டுப்படுத்துவது ஒரு பறவையின் பாடலை நிறுத்த முனைவது போன்றது” எனும் அவர், “விளையாட்டும் நகைச்சுவையும் வெறும் குழந்தைகளின் திறனை மேம்படுத்துபவை மட்டுமல்ல; மாறாக, குகை மனிதர்களின் இருத்தலின் அடிநாதமாக (இயல்பூக்கமாக) அவை இருக்கின்றன” என்கிறார்.

“நாம் கற்பனை செய்யும் பயங்கரங்களிலிருந்து தப்புவதற்காக அவற்றைவிட நிஜமான பெரிய பிரச்சினைகளை நம் குழந்தைகளுக்கு உருவாக்கியிருக்கிறோம்” எனும் கிறிஸ்டோபர், உலகின் வெற்றிகரமான உயிரினமாகக் கருதப்படும் உயிரினத்தின் குழந்தை வளர்ப்பு அபத்தங்களைக் கவனப்படுத்துகிறார்.  மனிதர்கள், கூட்டுறவில் குழந்தைகளை வளர்க்கும் (cooperative breeders) இயல்புடையவராய் இருக்க, இன்றைய தனிக்குடும்பங்கள், என் பிள்ளை – என் குடும்பம் – என் பிரச்சினை என்று நிராதரவாய் தனித்து விடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

மனிதர்கள், ‘ஆழமான பாலியல் நாட்டமுடைய விலங்குகள்’ (Homosapiesn is a deeply essentially sexual species) எனும் ஆசிரியர், மாறாம நம் மதங்களும் கலாச்சாரங்களும் உயிரினங்களின் அடிப்படை இயல்பான சுய இன்பத்தைக்கூட கொச்சையாகவும் தவறாகவும் பார்க்கும் போக்கையும் பால்புதுமையினர் உள்ளிட்டோரின் இயல்பான வெளிப்பாடுகளைக்கூட ஒடுக்கும் போக்கையும் சுட்டிக்காட்டி, இவை அவர்களின் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பேசுகிறார். “பாலுணர்வின் சுதந்திரமான வெளிப்பாடு முறியடிக்கப்படும்போது, ​​மனித ஆன்மாவானது கோரமான, ஆத்திரமடைந்த ஒன்றாக வக்கிரமாகத் திரிந்து வளர முனைகிறது” எனும் ஆசிரியர், “இது அவர்களின் மனித மாண்பை சிதைக்கிறது” என்கிறார்.

இந்த இடத்தில், மனிதர்கள் மட்டுமே இனப்பெருக்கத்துக்காக மட்டுமின்றி ‘வேறுபல தேவைகளுக்காகவும்’ பாலுறவில் ஈடுபடுபவர்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட விளைகிறேன். பாலுறவு வெறும் இனப்பெருக்கத்தைத் தாண்டி ஒருவரின் தனிமனித அடையாளம், உடல் – உள நலன், இணையருக்கிடையேயான பிணைப்பு போன்றவற்றோடு தொடர்புடையதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படியிருக்க, நம் கலாச்சார வரையறைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பதின்ம வயதினரின் இயல்புகள் ஒத்திசையாதபோது அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும்  வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும், அது சரிசெய்ய முடியாத பிரச்சினைகளுக்கும் வழிவகுப்பதும் கவனப்படுத்துகிறார் கிறிஸ்டோபர். இதற்கு மாறாக, பழங்குடி சமூகங்கள், பெரும்பாலும் பாலியல் வன்முறைகள் அற்றவையாகவும் (விதிவிலக்குகளை ஆசிரியர் மறுக்கவில்லை) இள வயதினரின் இயல்பான பாலியல் பரிட்சார்த்த செயல்பாடுகளை ‘பெருமளவில்’ அனுமதிப்பவையாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

குழந்தைகள் முதல் பதின்ம வயதினர் வரையில் உள்ளோரின் பிரச்சினைகளை ஆசிரியர் பட்டியலிடும்போது அதை வாசிக்கும் நமக்கு இயல்பாகவே பெரியவர்களின்மீது ஒரு கோபம் எழுகிறது. ஆனால், பெரியவர்களின் இன்னல்களை விவரிக்க அவர் ஒதுக்கியிருக்கும் கணிசமான பக்கங்களைப் புரட்டும்போது நமக்கு வேறொரு உணர்வு ஏற்படுகிறது. கிறிஸ்டோபரின் வார்த்தையிலேயே இதைச்சொல்வதானால், “வெற்றிகரமான இனத்தின், பரிதாபகரமான பிள்ளைகள்; பரிதாபகரமான பெற்றோர்கள் / பெரியவர்கள்”.

கிறிஸ்டோபர், பெரியவர்களின் பிரச்சினையைப் பற்றிப் பேச முதலில் எடுத்துக்கொண்டிருப்பது நவீன சமூகத்தின் மிகமோசமான – பிரிக்க முடியாத அம்சமான ‘வேலைகள்’ என்று சொல்லப்படுபவற்றைக் குறித்துத்தான். ‘எதுவும் செய்யாத விவசாயத்தின்’ (Do nothing farming) தந்தையான, மசனபு புக்காகோ, “மனிதனைப் போல எந்த விலங்கும் உலகில் வேலைகள் செய்வதில்லை; அவை சாப்பிடுகின்றன, ஓய்வெடுக்கின்றன… அவ்வளவே” என்பார்.

“வேலை என்பது நாகரிக உலகின் கண்டுபிடிப்பு” எனும் கிறிஸ்டோபரோ, “வேட்டையாடி உணவு சேகரிக்கும் மக்கள் எவரும் ஒரு நாளைக்கு மூன்று நான்கு மணி நேரத்திற்கு மேல் உழைப்பதில்லை” என்பதோடு, அக்குறைந்தபட்ச உழைப்பும்கூட நம் சமூகத்தின் வேலைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது; அங்கு வேலைக்கும் அதற்கு வெளியேயான வாழ்வுக்கும் இடைவெளிகள் இல்லை என்கிறார்.

வேலைகளுக்கு வெளியே எவரோடு சமூகப் பிணைப்பு கொண்டிருக்கிறார்களோ அவர்களோடே அதே பிணைப்போடே கதைத்துக்கொண்டே பழங்குடிகள் வேலைகளைச் செய்கின்றனர். வேட்டையும் உணவு சேகரிப்பும் உண்மையில் அவர்களுக்கு வேலைகளாக இல்லை. (Treking எனப்படும் ‘கானக உலா’வோ அல்லது மேட்டுக்குடிகளின் வேட்டை சாகசங்களோ இன்றும்கூட வேலைகளாக அன்றி பொழுதுபோக்காகவே கருதப்படுவதை நாம் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.)

சில பழங்குடி சமூகங்களில் ‘வேலை’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லே இல்லை எனும் கிறிஸ்டோபர், அவர்களுடைய அன்றாடச் செயல்கள் அனைத்தும் சடங்குகளோடும், சமூக மையமான செயல்பாடுகளோடும், கலை வெளிப்பாட்டோடும் பிணைக்கப்பட்டவை என்கிறார். பழங்குடி சமூகங்களில் குழந்தைகளின் விளையாட்டுக்கும் பெரியவர்களின் வேலைக்கும் இடைவெளி இல்லை என்றும் அவை விளையாட்டின் தொடர்ச்சியே என்றும் பீட்டர் கிரே எனும் ஆய்வாளரின் மேற்கோளைத் தருகிறார். இதற்கு முரணாக, “ஒரு மனிதனை உடைத்து நொறுக்கி நிர்மூலமாக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அர்த்தமற்ற – பயனற்ற ஒரு வேலையில் அவரை அமர்த்துவதுதான்” என்ற ஒரு மேற்கோளைத் தந்து நவீன உலகின் வேலைகளை ஒப்பிடுகிறார். ATM எந்திரங்களைக் காவல் காப்பவர்கள், பல்லடுக்குக் கட்டிடங்களில் மின்தூக்கிகளை இயக்குபவர்கள், எந்திரப் புன்னகையோடு பணிபுரியும் விற்பனைப் பிரதிநிதிகள், தட்டச்சு செய்பவர்கள், தொழிற்சாலை உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் எனத் தொடங்கி  பெரும்பாலான ‘ஒயிட்காலர்கள்’ வரையில் இத்தகைய சட்டகத்திற்கும் பல்லாயிரம் நவீன வேலைகளைப் பொருத்திவிட முடியும்.  ‘வேலையில் கரையும் வாழ்வு’ குறித்து இன்னும் விரிவாக வாசிக்க பூவுலகு வெளியீடான எனது “எந்திரன்” புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

‘பணத்தின் விலை’ என்ற தலைப்பின்கீழாக கிறிஸ்டோபர், பழங்குடி சமூகங்கள் மிகக்குறைவான பொருட்களையே வைத்திருந்தாலும் கூட அவர்கள் ஏழைகள் அல்ல என்பதோடு, ஏழ்மை என்பது மனிதர்களுக்கு இடையேயான வெறும் ஒப்பீடே என்றும் இது நாகரிக சமூகத்தின் கண்டுபிடிப்பு என்றும் குறிப்பிடுகிறார்.

கோடிக்கணக்கான டாலர்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் பணக்காரர்கள் மேலும் பணத்தைப் பெருக்குவதற்காக கடுமையாக நீண்ட நேரம் உழைப்பதைக் குறிப்பிட்டு, அவர்களை ‘உழைக்கும் வர்க்கக் கோடீஸ்வரர்கள்’ (working-class millionaires) என்று அடையாளப்படுத்துகிறார். ‘Rich Asshole Syndrome’ (இதனை மொழிப்பெயர்ப்பதைத் தவிர்க்கிறேன்) என்ற தினுசான தலைப்பிட்டு பெரும்பணக்காரர்களின் ‘நோய்க்குறி’யை விவரிக்கிறார் கிறிஸ்டோபர். “ஒரு கைக்கடிகாரம் மணி காட்டும்; அதுவே இருபதாயிரம் டாலர்கள் விலைமதிப்புள்ள ரோல்க்ஸ் கடிகாரம் உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்த்தும்” என்று கெத்தான ஆசாமிகளின் முகத்தில் அறைகிறார்.

“வெற்றியாளர்கள் நிறைய பொம்மைகளுடன் மரணிக்கிறார்கள்” என்ற மால்கம் போர்ப்ஸின் அவலமான மேற்கோளைக் காட்டி செல்வக்குவிப்பு ஒருவகையான தனிமனித வீழ்ச்சி என்பதை உணர்த்துகிறார். செல்வம் மனிதர்களைப் பிற மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது எனும் கிறிஸ்டோபர், ஒருவருடைய மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஒரே நம்பகமான அளவுகோல் அவருடைய சமூகப்பிணைப்புதான் என்கிறார். அதே வேளையில், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிக்க அதிகரிக்க செல்வந்தர்கள் ஏழைகளுக்கு உதவி செய்வது குறைகிறது என்று அவர் குறிப்பிடும் ஆய்வுகள், ஏற்றத்தாழ்வுகளற்ற ஆதி சமூகம் எத்தனை ஆழமான சமூகப்பிணைப்போடு இருந்திருக்கும் என்பதை நாம் யூகிக்க உதவுகின்றன. ‘ஒப்புரவாண்மை’ (altruism – தன்னலமற்று பிறர்நலன் பேணுதல்) மனித உயிரினத்தின் ஆழமான இயல்பூக்கம் என்றும், எப்போது மனிதர்கள் சுயநலமிகளாக மாறுகிறார்களோ அப்போதே தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியையும் நிறைவையும் இழக்கிறார்கள் என்கிறார் கிறிஸ்டோபர். “இதயமற்றவர்கள் பணக்காரர்களாக மாறுவதில்லை; மாறாக, பணக்காரர்கள் இதயமற்றவர்களாக மாறுகிறார்கள் எனும் கிறிஸ்டோபர் தனது ஒவ்வொரு கருத்துக்கும் பல்வேறு துறைகளில் செய்யப்பட்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டி வலுசேர்க்கிறார்.

“பல சதாப்தங்களாக ‘பேராசை நல்லது’ என்ற தொடர் பரப்புரையானது, ஆழமான அசமத்துவமிக்க சமூகத்தின் பயனாளியாக ஒருவர் இருப்பதன் அவமான உணர்வை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. என்றாலும்கூட சமத்துவம் நம் இனத்தின் அடிநாதமான மதிப்பீடாக நீடிப்பதால் சமத்துவமின்மை குறித்த அவமானமும் நீடிக்கிறது” என்று நமக்கு சற்று ஆசுவாசமூட்டுகிறார் கிறிஸ்டோபர். மிக விரிவாக, குழந்தைப் பிறப்பு தொடங்கி ஆழமான சமூகப் பிரச்சினைகள் வரையில் ஆதி சமூகத்திற்கும் நாகரிகத்திற்குப் பிந்தைய நம் நவீன சமூகத்திற்குமான வேறுபாடுகளை அலசும் ஆசிரியர், நலமான எதிர்காலத்தை நோக்கி நாம் நகர்வதற்கான ‘தொன்மையான’ வழியை புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில் ஆராய்கிறார். அவ்வழியை அலசும் அடுத்த கட்டுரையோடு இத்தொடர் முற்றுப் பெறும்.

 ஜீயோ டாமின்

 

முதல் பகுதியை வாசிக்க

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments