ஆசியாவின் மிகச்செழுமையான மழைக்காடுகளில் ஒன்று அது. எங்கள் அந்தமான் பயணத்தின் ஒரு பகுதியாக அம்மழைக்காட்டை இரண்டாக வெட்டிச் செல்லும் நீண்ட சாலையை நாங்கள் கடக்க வேண்டியிருந்தது. நவீன நாகரிகத் தீண்டுதலால் அதிகம் பாதிக்கப்படாத – உலகின் மிகத்தொன்மையான பழங்குடிகளில் ஒன்றான ஜாரவாக்கள் வசிக்கும் காடு அது. அரசின் ‘நாகரிகமாக்கும்’ முயற்சியால் அவர்களில் சிலர் குறைந்தபட்ச ஆடைகள் போன்றவற்றை அணிந்திருந்தாலும் இன்னும்கூட முழுக்க முழுக்க வில் அம்புகளோடு வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் வாழ்க்கை முறையையும் வாழிடத்தையும் பாதுகாக்கும் பொருட்டு குறிப்பிட்டச் சாலையைக் கடக்க அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஒரு நாளில் இரண்டு முறை மட்டும், முன்அனுமதி பெற்ற வாகனங்களில் முன்னும் பின்னும் காவல் வாகனங்களுக்கிடையே மட்டுமே நாம் பயணிக்க முடியும். இடையே வாகனங்களை நிறுத்துவதோ அல்லது ஜாரவாக்கள் தென்பட்டால் அவர்களோடு தொடர்பு கொள்ள முயற்சிப்பதோ அல்லது குறைந்த பட்சம் அவர்களையோ அல்லது அவர்களின் வாழிடத்தையோ புகைப்படம் எடுப்பதோ கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
நாங்கள் கடக்கவிருக்கும் இடத்தின் முக்கியத்துவமும் தொன்மையும் வரலாறும், என்னவென்றே வகைப்படுத்திட முடியாதபடி என்னைத் தீவிரமானதொரு உணர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. எங்களுக்கு ஓட்டுநராகக் கிடைத்திருந்த அந்தமான் வாழ் தமிழர்“எப்படியும் சாலையோரமாக சில ஜாரவாக்களைப் பார்த்துவிடுவோம்” என்று உற்சாகமாய் பேசிக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆம், இங்கு பயணிக்கும் பெரும்பாலானோர் இச்சாலையைக் கடப்பதே ஜாரவாக்களைப் பார்ப்பதற்காகத்தான். பயணத்தினூடாக, தனது இளமைக்கால கஷ்டங்களையும் தனது சமீபத்தியப் பொருளாதார வளர்ச்சியையும் குறித்தும் பேசிக்கொண்டே இருந்த ஓட்டுநர் திடீரென உணர்ச்சி வசப்பட்டவராய், “என்ன சம்பாதிச்சி என்ன பிரோயோஜனம் சார்? நாய்ப் பொழைப்பு சார் இது! நேரத்துக்குத் தூங்க முடியுறதில்ல, சாப்புட முடியுறதுல்ல. ஒரு நல்ல நாளுக்கு வீட்டுல இருக்க முடியுறதில்ல… என்னைய மட்டும் இந்தக் காட்டுக்குள்ளே இருக்க விட்டு நீ பொழச்சிக்கோடாண்ணு சொல்லிட்டா எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்துடுவேன் சார், மனுசனுக்கு நிம்மதியைத்தவிர வேற என்ன வேணும்? என்றார். எனக்கு இது அதிர்ச்சி தரவில்லை; மாறாக, “இங்கே மட்டும் என்ன வாழுதாம்?” என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே அவர் பேச்சை அங்கீகரிக்கும் விதமாகத் தலையசைத்தேன்.
சில நிமிடங்களில், “அதோ பாருங்க சார்… நிக்குறாங்க!” என்று அவர் உற்சாகம் பொங்கக் கை காட்டிய திசையில் வயதான இரு ஜாரவா பழங்குடி ஆண்கள் சாலையை மறித்தபடி வில் அம்புகளோடு நின்றுகொண்டிருந்தனர். சாலையோரமாக இன்னும் ஒன்றிரெண்டு இளைஞர்களும் வில் அம்புகளோடும் வேட்டையாடப்பட்டு இலையில் பொதியப்பட்ட விலங்கோடும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நம்மளவிற்கு ஆபத்தானவர்கள் இல்லை என்பதால் எங்களுக்குள் பதட்டம் எதுவும் இல்லை. என்றாலும் அவர்களை உரசிவிடாதபடி எங்கள் வண்டி மெதுவாக நகர, சாலையை மறித்து நின்ற பெரியவர் சற்று ஓரமாக நகர்ந்தார். அவரது இரண்டு கரங்களும் யாசகம் பெறுபவரைப்போல எங்களை நோக்கி நீண்டிருந்தன. அங்கு நின்றுகொண்டிருந்த ஒவ்வொருவரின் கண்களும் எங்களைக் கூர்ந்து நோக்கின. அனைத்தும் எதையோ எங்களிடம் இறைஞ்சின. “பின்னாடி வர்ரவங்களிடம் வாங்கிக்கோ” என்பதுபோல எங்கள் ஓட்டுநர் சைகை காட்டிக்கொண்டே மெதுவாக அவர்களைக் கடந்தார். அவர்களின் இறைஞ்சல் குளிர்பானங்கள், சாக்லேட்டுகள், புகையிலை வஸ்துக்கள் என எதற்கானதாகவும் இருக்கலாம் என்றார் ஓட்டுநர். எங்கள் வண்டி அவர்களைக் கடந்தபோது அந்த பெரியவர்களில் ஒருவரின் கையில் ஏற்கனவே ஒரு‘பிரிட்டாணியா பிஸ்கெட்’ பல்லிளித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அந்த முதியவரின் புன்னகை நிரம்பிய மன்றாடும் பார்வை இன்னும் என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அது அவருடைய அம்புகளை விடவும் கூரியதாய் இருந்தது. ஒருவேளை அதனை மொழிப்பெயர்க்க முடிந்திருந்தால்“உன்னைப்போல வாழும் ‘நவீன’ வாழ்க்கையை எங்களுக்கும் கொடு” என்று அது பொருள்படக் கூடும்.
அவர்களைக் காணும் சில நிமிடங்களுக்கு முன்பு எங்கள் ஓட்டுநர் வெளிப்படுத்திய ‘நவீன அவல வாழ்வானது’ அதை வாழ்ந்து பார்க்காத இவர்களுக்கு பெருவாழ்வாகத் தெரிகிறது. பெரும்பாலும் கிராமத்தவர்கள் நகரத்து வாழ்க்கைக்கு ஏங்குவதும் நகரத்தார்கள் கிராமத்து வாழ்வுக்கு ஏங்குவதும், ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்ற பழமொழியையே நினைவுபடுத்துவதாகத் தோன்றுகிறது. என்றாலும், ‘Civilized to Death’ (The price to Progress)” புத்தக ஆசிரியர் கிறிஸ்டோபர், சில உதாரணங்கள் மூலமாக நமது நாகரிக வாழ்வை ஆழமாக அவதானிக்கும் வேட்டைச் சமூகத்தினர் அதனை(குறிப்பாக நமது வேலைகள், அவசரகதியிலான ஓட்டம் போன்றவற்றை) விநோதமானதாகவும் பைத்தியக்காரத்தனமானதாகவும் கருதுவதாகச் சொல்கிறார்.
அதிநவீன வாழ்வு வாழும் மேற்கத்தியர்களும் நமது நகர்ப்புற மேட்டுக்குடிகளும் மேலும் அதிக நவீனமான வாழ்வை அடைவதற்கான ஓட்டப் பந்தையத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தாலும்கூட, தங்களின் அறுந்த வேர்களைக் குறித்தக் கவலையையும் அது உருவாக்கும் தாங்க இயலாத வெறுமையையும் சுமந்தபடியே இருக்கின்றனர். அவர்களின் மானுட இயல்புகளையும் தேவைகளையும் நிறைவு செய்ய முடியாத ஏக்கத்தையும் வெறுமையும் சுமந்துகொண்டே, மேலும் மேலும் அதிகபடியான நவீன நுகர்பொருட்களாலோ போதை வஸ்துக்களாலோ இவ்வெறுமையை இட்டு நிரப்ப முடியுமென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள். இவ்வேட்கையே ஒவ்வொரு மனிதனையும் மேலும் அதிக நவீனத்தை நோக்கி உந்தித் தள்ளும் கூட்டுத் தற்கொலை முடிவாக அமைவதாக நான் பார்க்கிறேன்.
‘Civilized to Death’ புத்தகமானது என்னை தனக்குள் ஈர்த்துக் கொண்டதுமே, எந்த கேள்விகளுமின்றி அதன் கருத்தில் நான் மூழ்கிவிடாதிருக்க அப்புத்தகம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களைத் தேடித்தேடி வாசிக்கத் தொடங்கினேன். அவற்றில், கல்விப்புல ஆய்வு முறைமைகளின் அடிப்படையில் சில விமர்சனங்கள் கவனிக்கத்தக்கவையாக இருந்தாலும் அவை எனது முடிவுகளுக்குப் பொருட்படுத்தத்தக்கதாக இல்லை.
‘Civilized to Death’ காலநிலை மாற்றப் பிரச்சினைக்கோ அல்லது வேறு எந்தச் சூழல் அல்லது சமூகப் பிரச்சினைகளுக்கோ தீர்வு சொல்லும் புத்தகம் அல்ல. தீர்க்கமான அதன் நோக்கம் ‘நாகரிக வளர்ச்சிக்கு நாம் தந்திருக்கும் விலை’யை ஆய்வதாக மட்டுமே இருக்கிறது. பொதுவாகவே ஒரு பிரச்சினையை ஒருவர் பேசும்போது அவரே அதற்குத் தீர்வும் சொல்லிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடையே நிலவுகிறது. இப்புத்தகத்தைப் பொறுத்தவரையில் இது தரும் தீர்வுகள் எனக்கு முக்கியத்துவமானவையாகவோ முழுமையானதாகவோ தெரியவில்லை. ஆனால், தீர்வுகள் குறித்து நாம் சிந்திக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிகள் குறித்த ஆழமான பார்வையை உருவாக்குவதில் இப்புத்தகம் தரும் வெளிச்சம் மிகமுக்கியமானதாக எனக்குத் தெரிகிறது.
ஒருபக்கம் சில தொழில்நுட்ப ஒட்டு வேலைகளால் உலகை மீட்டுவிட முடியுமென்று பிரச்சாரம் நடந்துகொண்டிருக்க இன்னொருபுறமோ அரசியல் புரட்சியின் மூலம் மட்டுமே ஆழமான பிரச்சினைகளை சரிசெய்ய முடியும் என்ற வாதத்தைப் பார்க்கிறோம். நானுமே பிந்தைய நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறேன் என்றாலும் தீவிர அரசியல் – பொருளாதார மாற்றங்கள் மனிதனின் ஆழமான பரிணாமவியல் உயிரியல் தேவைகளைப் பூர்த்தி செய்யாதுபோனால் – அவை மனிதனது சமூக – தனிமனித இயல்புகளுக்குப் பொருந்தாத வறட்டுத் தத்ததுவங்களின்மீது தமது மாற்றங்களை நிறுவ முயன்றால் அவை நீண்டகால அளவில் பலன் தராது; அல்லது, மனிதனைக் குறைந்த பட்சம் நிறைவடையச் செய்யாது என்று நம்புகிறேன்.
தனிப்பட்ட வகையில் மனிதனை வெறும் உற்பத்தி செய்யும் விலங்காக நான் கருதவில்லை; மாறாக, தனது நிறைவாழ்வுக்காக உற்பத்தித்திறனை ஒரு கருவியாக பயன்படுத்துபவனாகவே காண்கிறேன். அதுபோலவே, வளங்களின் பகிர்வு மற்றும் ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதற்கான முயற்சிகளோடே மக்கட்தொகைப் பெருக்கமும் நாம் அதிகம் கவலைப்பட வேண்டியது என்று நான் நம்புகிறேன். அவ்வகையில், இப்புத்தகம் எனது முந்தைய அனுமானங்களுக்கு உரமூட்டியிருக்கிறது.
முதலாளித்துவத்தின் பிரச்சினைகள் குறித்து இப்புத்தகம் எதையும் நேரடியாகச் சொல்லவில்லை எனினும் நாகரிக உலகம் குறித்த புத்தகத்தின் விமர்சனமானது முதலாளித்துவத்தையும் உள்ளடக்கியது ஆகையால் இது பெரிதாய் பொருட்படுத்தத்தக்க குறையாக எனக்குத் தெரியவில்லை. அடுக்கதிகார உற்பத்தி முறைக்கு மாற்றாக ஆசிரியர் முன்வைக்கும் சமத்துவமிக்கக் கூட்டுறவு உற்பத்தி அமைப்புகள், காந்தியப் பொருளாதார உற்பத்தி முறையை நமக்கு நினைவூட்டுகின்றது. காந்தியை நிராகரிப்பதே முற்போக்கு என்று கருதும் நம் தமிழ் சமூகத்திற்கு, கிராமப் பொருளாதாரம், தற்சார்பு போன்றவை சூழலியல் பார்வையில் மட்டுமின்றி மானுடவியல் பார்வையிலும் முக்கியமானவை என்பதை இது உணர்த்துகிறது.
நவீன மாவுச்சத்து மிகுந்த உணவுகளால் சீரழிந்துபோன உடலை சீர்செய்ய, ‘பேலியோ உணவு முறை’ முன்மொழியப்படும்போது அதன் நடைமுறை சிக்கல்கள் மற்றும் கடினத்தன்மையைத் தாண்டியும் கவர்ச்சிகரமானதாக நமக்குத் தெரிகிறது. (குகை மனிதர்களின் உணவு முறையாகச் சொல்லப்படும் பேலியோ உணவுமுறையின் சாதக பாதகங்கள் குறித்த கருத்துக்களை நான் இங்கு தவிர்க்கிறேன்.) ஆனால், நவீன உலகின் தனிமனித உளவியல், சமூக மற்றும் சூழலியல் சிக்கல்களுக்கான விடைகளை நாம் கடந்துவந்த ‘பேலியோ காலகட்டத்தில்’ தேடுவது செரித்துக்கொள்ளவே முடியாத பிற்போக்கானதாகத் தெரிகிறது. குறிப்பாக, இம்மேட்டுக்குடிகளுக்கு அவர்களுடைய நவீன சுகபோகங்களையும் அதிகாரங்களையும் அச்சுறுத்துவதாக இது இருக்கின்றது என்கிறார் கிறிஸ்டோபர். நாம் மீண்டும் சிக்கி முக்கிக் கற்களை உரசவேண்டியதில்லை என்றாலும்கூட தொடுதிரைகளிலிருந்து வெளியேறுவதற்கான அவசரத்தைச் சூழல் உருவாக்கியிருக்கிறது.
பற்றி எரியும் நெருப்பு தூரத்திலிருந்து பார்க்கும்போது அச்சமூட்டுகிறது. அதனை இலாவகமாக நாம் கையாளப் பழகிக்கொள்ளும்போது அது நமக்கு அசாத்திய பெருமிதத்தையும் சாதனை உணர்வையும் தருகிறது. விரல்களால் நெருப்பைத் தீண்டும்போது நாம் உணரும் வலியானது நெருப்பிலிருந்து நாம் எவ்வளவு தொலைவு தள்ளியிருக்க வேண்டுமென்பதை உணர்த்துகிறது. நாம் ஓரடி பின்னால் நகர்கிறோம். ஆம், சில நேரங்களில் முன்னோக்கிப் பாய்வதைவிடவும் பின்னோக்கிப் பதுங்குவது பாதுகாப்பானது. அதுவே பிழைத்துக்கொள்ளும் ஒரே வழியாகக்கூட இருக்கவும்கூடும். வாழ்க்கை எப்போதும் முன்னோக்கிய பாய்ச்சல் அல்ல; பாய்ந்தும் பதுங்கியும், பின்வாங்கியும் அழிந்தும் வாழ்ந்தும் தம் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டே மானுட சமூகம் இத்தனை இலட்சம் ஆண்டுகள் நீடித்திருக்கிறது. இப்போது நாம் சிக்கியிருக்கும் கண்ணி இறுகுவதற்கு முன்பே வெளியேறியாக வேண்டும்.
நீண்ட நெடுங்காலமாக தொல்லியலாளர்களையும் மானுடவியலாளர்களையும் ஒரு கேள்வி துரத்திக்கொண்டிருந்தது. ஒப்பீட்டளவில் நம்மைவிட சற்றுப் பெரிய மூளையையும் நம்முடைய எல்லா உடற்திறன்களையும் பெற்றிருந்தும்கூட, விவசாயப் புரட்சிக்கு முன்பு வரையில் மனித இனத்தில் ஏன் ஏதும் ‘முன்னேற்றம்’ ஏற்படவில்லை என்ற கேள்விதான் அது. இதற்கு, “அவர்கள் எங்கும் எதிலும் சிக்கிக் கிடக்கவில்லை மாறாக, அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.” அதாவது, “They were home.” என்கிறார் கிறிஸ்டோபர். இதனை இன்னும் அழகாய் எப்படித் தமிழ்ப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை.“தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், ‘முன்னேற்றம்’ என்ற பெயரில் எந்த நெருக்கடியும் தேவையும் இல்லாமல், அவர்கள் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வாழ்ந்தார்கள் என்று நாம் ஊகிப்பது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி, “அவர்களுக்கு தங்கள் வழிகளை மாற்றிக்கொள்வதற்கான எந்த நிர்பந்தங்களும் தேவைகளும் இருந்திருக்கவில்லை” என்கிறார் கிறிஸ்டோபர்.
“நமது நவீன சமூகத்தின் பொருளாதார சக்திகள், நாம் நமது நீடித்த நல் வாழ்வை விலையாகக் கொடுத்து, நுகர்வை அதிகரிக்கும்படி நம் சூழலை நுணுக்கமாய் வடிவமைத்திருக்கின்றன. இதன் விளைவாக, மனிதர்கள், பரிணாமரீதியாக நீண்ட வரலாற்றைக் கொண்ட தமது உடலை, அபரிமிதமாக உணவூட்டப்பட்ட – ஆனால், ஊட்டச்சத்துக்களும் உடல் இயக்கமும் குறைந்த, போதுமான சூரிய ஒளி படாத, தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட, போட்டிகள் நிரம்பிய, சமத்துவமற்ற, சமூகமாக தனிமைப்படுத்தப்பட்ட சூழலுக்குள் இழுத்து வந்துள்ளனர்; அதன் விளைவுகள் மிகக் கடுமையானவை.” என்று ‘Journal of affective disorders in 2012’ இன் மேற்கோளைக் குறிப்பிடும் கிறிஸ்டோபர், “இருந்தபோதிலும், நான் மனித இனத்திற்கான நம்பிக்கையை இழக்கவில்லை, இதன் பொருள், எல்லாம் சரியான திசையில் சென்று நல்லபடியாக முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதல்ல. மாறாக, இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பவை எல்லாம் சரியாக இல்லை என்று நான் உணர்ந்தாலும்கூட, இவை குறித்த எனது சிந்தனைகள் (முடிவுகள்) தவறாக இருக்கலாமென்று நினைக்க விரும்புகிறேன். மேலும், சில ரம்மியமான தருணங்களில், கச்சிதமானதொரு கனவு உலகத்தை அடைவதை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோமோ என்று நினைக்கிறேன்.” என்று தனது புத்தகத்தை நிறைவு செய்கிறார்.
கிறிஸ்டோபரிடம் வெளிப்படும் நம்பிக்கையானது நம் உடலுக்குள் ஜில்லென்று ஊடுருவி மகிழ்ச்சியூட்டினாலும்கூட தர்க்கரீதியான மனமோ அதனை நம்ப மறுக்கிறது.
என்றாலும், எனக்குள்ளும் வேறொருவிதமான நம்பிக்கை நிச்சயமாய் இருக்கிறது.
முற்றும்.
ஜீயோ டாமின்
