உலகில் கிட்டத்தட்ட 99% மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர். இது ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடி. 2021-ஆம் ஆண்டில் மட்டும், காற்று மாசுபாட்டினால் 81 லட்சம் இறப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், வீட்டிற்குள்ளும் வெளியிலும் உள்ள காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளனர். காற்று மாசுபாடு எனும் அவசரமான பொது சுகாதார அச்சுறுத்தல், உலகளாவிய சமூகத்தை ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியது.
2019, நவம்பர் 26 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுச் சபையின் இரண்டாவது குழு, செப்டம்பர் 7ஆம் நாளை “தூய காற்றுக்கான நீல வானங்கள் பன்னாட்டு நாள் “ என அறிவித்து ஒரு தீர்மானத்தை (A/RES/74/212) ஏற்றுக்கொண்டது. இத்தீர்மானம், அனைத்து மட்டங்களிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது. அத்துடன், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்நாள் செப்டம்பர் 2020-ல் அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நாளின் நோக்கம் மற்றும் பரிணாமம்:
இந்நாளின் முக்கிய நோக்கம், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதாகும். இது தனிப்பட்ட, தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஒத்துழைப்புக்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய நடவடிக்கை மற்றும் முதலீட்டிற்கு வழிகாட்டும் வகையில், இந்நாள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை ஏற்றுக்கொள்கிறது:
| 2020 | அனைவருக்கும் தூய காற்று |
| 2021 | ஆரோக்கியமான காற்று, ஆரோக்கியமான கிரகம் |
| 2022 | நாம் பகிரும் காற்று |
| 2023 | தூய காற்றுக்காக ஒன்றிணைவோம் |
| 2024 | தூய காற்றில் முதலீடு செய்வோம் |
| 2025 | காற்றுக்கான ஓட்டம். ஒவ்வொரு சுவாசமும் முக்கியம் |
உலகளாவிய மற்றும் தேசிய முயற்சிகள்:
தூய காற்றுக்கான நீல வானங்கள் பன்னாட்டு நாள், உயர் மட்டக் கொள்கை விவாதங்களில் இருந்து அடிப்படை மட்டப் பிரச்சாரங்கள் வரை உலகம் முழுவதும் நடவடிக்கைகளைத் தூண்டுகிறது. உலகளவில், அறிவியல் தரவுகளைப் பகிர்தல், கொள்கைகளை வெளியிடுதல், மரக்கன்றுகள் நடுதல் திட்டங்கள் எனப் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்த உலகளாவிய இயக்கத்திற்கு இணையாக, இந்தியாவும் செப்டம்பர் 7-ஐ ஸ்வச் வாயு திவாஸ் (Swachh Vayu Divas) என்று கொண்டாடுகிறது. இந்தியாவின் ஸ்வச் வாயு திவாஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய தூய காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் காற்றுத் தரத்தை மேம்படுத்துவதற்கான நகரங்களின் முயற்சிகளின் அடிப்படையில், ஸ்வச் வாயு சர்வேக்ஷன் விருதுகளை (Swachh Vayu Survekshan Awards) ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இவ்வாய்வு, நகரங்களின் மக்கள் தொகை அளவின்படி வகைப்படுத்துகிறது, மேலும் தூய்மையான காற்று செயல் திட்டத்தின் (clean air action plan) செயல்படுத்தல், மாசுபாடு கண்காணிப்பு, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் புதுமையான தீர்வுகள் போன்ற அளவுருக்களின் அடிப்படையில் அவற்றை மதிப்பிடுகிறது. 2024-ல், ஸ்வச் வாயு சர்வேக்ஷன் விருதுகள், மூன்று மக்கள் தொகைப் பிரிவுகளின் கீழ் தேசிய தூய காற்றுத் திட்டத்தின் கீழ் சிறந்த செயல்திறன் கொண்ட நகரங்களை அங்கீகரித்தன.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், சூரத், ஜபல்பூர் மற்றும் ஆக்ரா ஆகியவை முன்னிலை வகித்தன. நடுத்தர அளவிலான நகரங்களுக்கு (3-10 லட்சம்), ஃபிரோசாபாத், அமராவதி மற்றும் ஜான்சி ஆகியவை முதலிடங்களைப் பிடித்தன. அதே சமயம், சிறிய நகரப் பிரிவில் (3 லட்சத்திற்கும் குறைவானது), ரேபரேலி, நல்கொண்டா மற்றும் நாலாகர் ஆகியவை கௌரவிக்கப்பட்டன. நடப்பாண்டுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தூய வானங்களுக்கான இப்பன்னாட்டு நாளில், காற்று மாசுபாடு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரும் எழுப்புவோம். மேலும், மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பலதுறை சார்ந்தவையாகவும், நீண்ட கால கவனம் கொண்டவையாகவும், பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது கவனம் செலுத்துபவையாகவும் இருக்க வேண்டும்.
முனைவர். அபிநயா சேகர்
தூய காற்றுக்கான நீல வானங்கள் பன்னாட்டு தினத்தைப் பற்றி மேலும் அறிய, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்: https://www.cleanairblueskies.org/
கட்டுரையாளர் ஒரு காற்றுத் தர விஞ்ஞானியாக பயிற்சி பெற்றவர், மற்றும் இங்கே வெளிப்படுத்தப்படும் அனைத்து கருத்துகளும் அவரது தனிப்பட்டவை; அவை அவர் பணியாற்றும் நிறுவனத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.
