வெகுதொலைவில்கூட மானுட எதிர்காலம் குறித்த நம்பிக்கைதரும் எதனையும் என்னால் பார்க்க முடியவில்லை. தனிமனிதர்களாகவும் சமூகமாகவும் அரசியல்ரீதியாகவும் காலநிலைப் பேரழிவை எதிர்கொள்ள முடியாமல் நாம் தோல்வியடைந்து வருகிறோம் என்ற எண்ணமே என்னிடம் மேலோங்கி இருக்கிறது. எதார்த்த்ததில் ஒரு விழுக்காடுகூட உலகின் எந்த மூலையிலும் ஒட்டுமொத்த உமிழ்வு குறையாத நிலையில் இங்கு பெரும்பாலானோரால் விதந்தோதப்படும் சிறுசிறு நல்ல முயற்சிகள்கூட போலி நம்பிக்கையை விதைக்கும் எதிர்மறை செயல்பாடுகளாகவே எனக்குத் தெரிகின்றன.
ஏதோ என்னால் முடிந்தை நான் செய்கிறேன் என்ற அளவில் எனக்குள் முன்பு இருந்த மனநிறைவும் எனக்கு இப்போது இல்லை. காலநிலை மாற்றத்துக்கு எதிரான எனது அதிகபட்ச முயற்சிகள்கூட, தேவையான அழுத்தத்தை உருவாக்க எள்ளளவும் பொருட்படுத்தத்தக்கவையாக இல்லாத நிலையில், ‘Comfort zone’ எனப்படும் சொகுசு அறைக்குள் மாட்டிக்கிடக்கிறேனோ என்ற எண்ணமே எனக்குள் மேலோங்கியிருக்கிறது.
ஒருபுறம் என்னைப்போலவோ அல்லது என்னைவிட மோசமாகவோ அவநம்பிக்கை கொண்டோரையும் இன்னொருபுறம் என்னைவிடக் கூடுதலாக அபாயங்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் படித்தும்கூட அதீத நம்பிக்கையுடன் செயலாற்றும் நண்பர்களையும் நான் அன்றாடம் சந்திக்கிறேன். ஒருவேளை இந்த உலகத்தை நான்தான் எதிர்மறையாகப் பார்க்கிறேனா அல்லது அதீத நம்பிக்கைகொண்டோர் எதார்த்த்தை சரியாகக் கண்டுகொள்ளவில்லையா என்ற கேள்வி எனக்குள் விடையின்றித் தொக்கி நிற்கிறது.
தனிமனிதர்களாகவும், சமூகமாகவும் அரசு இயந்திரமாகவும் இங்கு ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன என்பதை நாம் நன்கு அறிவோம். சரியான இலக்குகள் என்ன என்பதும் அவற்றை அடைவதற்கான அரசியல் – தொழில்நுட்ப பொருளாதார நடவடிக்கைகள் என்ன என்பதும் நமக்குத் தெரியும். இந்த நடவடிக்கைகள் மிகத்தீவிரமான தலைகீழ் மாற்றங்களை உள்ளடக்கியவை என்பதும் உலகளாவிய அளவில் எல்லா தேசங்களாலும் முன்னெடுக்கப்பட வேண்டியவை என்பதும் அதேநேரத்தில் அந்த நடவடிக்கைகள் உலக அரசியலைத் தம் கைப்பிடியில் வைத்திருக்கும் பெருநிறுவங்கள் மற்றும் வல்லாதிக்க நாடுகளின் நலன்களுக்கு முரணானவை என்பதும் வெளிப்படையானது.
வழக்கமான யுக்திகளை பயன்படுத்தி ஜனநாயக அமைப்பிற்கும் இத்தகையத் தீவிர மாற்றங்களை உருவாக்குவது நெடுங்காலம் பிடிக்கக்கூடியது என்பதோடு நிச்சயமாய் 50% உமிழ்வைக் குறைப்பதற்கான காலக்கெடுவாகிய 2030 க்குள் சாதிக்கக் கூடியதல்ல. இன்னொருபுறம் தீவிரமான உடனடி மாற்றங்களை உருவாக்குபவையாகக் கருதப்படும் வன்முறையை உள்ளடக்கிய ஆயுதப் புரட்சிகள் காலநிலைப் பிறழ்வைக் காட்டிலும் பெரிய பேரழிவுகளையே உருவாக்க்கூடுமென்று எனக்குத் தோன்றுகிறது.
இந்தப் பின்னணியில் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சனநாயகரீதியாக நடைபெறும் மாற்றங்களைத் துரிதப்படுத்துவது ஒன்றுதான். இதனை சாதிக்கப் பெருந்திரளான மக்கள் ஓரணியில் திரளவேண்டியது அல்லது திரட்டப்பட வேண்டியது அவசியம். இந்த அணிதிரட்டலுக்குப் பெரும் சவால்களாக நான் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகக் கருதுகிறேன்.
சவால் 1: காலநிலை மாற்ற நெருக்கடிக்குக் காரணமான ஒழிக்கப்பட வேண்டிய எதிரியை அடையாளம் காண்பதிலும், காட்டுவதிலும் நிலவும் போதாமை.
கொரோனா நச்சுயிரிக்கு எந்த சேதாரமும் நிகழாமல் பார்த்துக்கொண்டே அதனோடு கூட்டணி வைத்துக்கொண்டு நம்மால் கோவிட் பெருந்தொற்றை ஒழிக்க முடியுமா? இது எப்படி சாத்தியமற்றதோ அதுபோலவே பெருநிறுவனங்களைப் பங்குதாரர்களாக வைத்துக்கொண்டே காலநிலை மாற்றத்தை வெற்றிகொள்வதும் சாத்தியமற்றது.
ஒருபுறம் பல தீவிர செயல்பாட்டாளர்களும் ஆட்சியாளர்களும் உண்மையான எதிரியான பொருளாதார அமைப்பை அடையாளம் காணாது இருக்கிறார்கள். இன்னொருபுறமோ அதனை அடையாளம் கண்டவர்களும் வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதற்கு நியாயமான காரணங்களும் இருக்கவே செய்கின்றன. முதலாளித்துவத்தோடு மல்லுகட்டும் அமைப்புகள் அதன் பிரச்சார எந்திரங்களான ஊடகங்களிலிருந்து மறைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, பொருளாதாரீதியாக சூறையாடப்பட்டு, அரசு எந்திரத்திலிருந்தும் பொது சமூகத்திலிருந்தும் ஒதுக்கப்படும் சாத்தியம் அதிகமிருக்கிறது. உலக அரங்கில் COP மாநாடுகளிலேயே பெருநிறுவங்கள் முக்கியப் பங்கேற்பாளர்களாக பவனிவரும் நிலையில் தேசிய மற்றும் மாநில அளவிலான முன்னெடுப்புகளில் இவர்களை விலக்கிவிடுவது எளிதானதல்ல. என்றாலும் திருடர்களோடு சேர்ந்து அமர்ந்து நாம் திருட்டை ஒழிப்பதுபற்றி இனியும் பேசிக்கொண்டிருக்க முடியாது. காலநிலை மாற்றக் குற்றவாளிகளான பெருநிறுவனங்களையும் நமது காலாவதியான பொருளாதார வளர்ச்சி சித்தாந்தங்களையும் கூண்டில் நிறுத்தியாக வேண்டும். பூனைக்கு மணிகட்டியாக வேண்டும்; பூனை அதை ஒருபோதும் தனக்குத்தானே செய்யப்போவதில்லை. இங்கு முதன்மையான பிரச்சினை நாம் பூனைக்கு மணிகட்டத் தயாராக இருக்கிறோமா என்பதே!
இதை அரசியல் – சமூக – சூழல் செயல்பாட்டாளர்களைத்தவிர எவரும் செய்யத் துணியமாட்டார்கள் என்று நான் கருதுகிறேன். ஆனால், இது எவ்விதமான பின்விளைவுகளை அவர்களுக்கு ஏற்படுத்துமென்பதை உணரும்போது இந்த சவால் நாம் கடந்துவிடக்கூடியதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
சவால் 2: அரசுகளும் பெருநிறுவனங்களும் உருவாக்கும் போலி வாக்குறுதிகள் போலி நம்பிக்கைகள், போலித் தீர்வுகள், பாசாங்கான பயனற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை எதிர்கொள்ளுதல்
ஒரு காலத்தில் பொங்கி வழியும் பொருளாதார வளர்ச்சி (Tickling down economy) சித்தாந்தம் எப்படி இந்த உலகத்தைச் சூறையாடியதோ அதுபோலவே வளங்குன்றா வளர்ச்சியென்ற சித்தாந்தம் நம் எஞ்சிய வாழ்வை அழிக்கும் வலுப்பெற்றதாக மாறவிருக்கிறது என்று நான் கருதுகிறேன். சூழல்நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கழிவில்லா உற்பத்தி, சுழற்சிப் பொருளாதாரம் போன்ற இலாபநோக்கிலான பொருளாதார உற்பத்திக்கு எதிரான அம்சங்களாக நாம் கருதுபவற்றை உண்டு செரித்து தனதாக்கிக்கொண்டு போலியான தீர்வுகளைப் பெருநிறுவங்கள் முன்வைத்து வருகின்றன. இவற்றின் பாசாங்கான நடவடிக்கைகள் மிக்கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு மிகச்சிறந்த நிபுணர்களால் திட்டமிடப்படுவதாலும் அவற்றின் பிரச்சார வலிமையாலும் மக்களிடையே எளிதில் பெருவாரியான வரவேற்பைப் பெறுகின்றன. உதாரணமாக, ஹைட்ரஜன் ஆற்றல், குப்பையிலிருந்து மின்சாரம், கார்பன் சந்தை, கரி உறிஞ்சு நிலையங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பலநேரங்களில் தீவிர சூழல் செயல்பாட்டாளர்கள்கூட இத்தகைய போலித்தீர்வுகளை நம்பி அவற்றுக்குப் பலியாகியிருப்பதை நான் பார்க்கிறேன். வரம்புக்குள்ளான வளங்களைக்கொண்ட புவியில் கட்டற்றப் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் எந்த தொழில்நுட்ப சித்து வேலைகளும் ஏன் வளங்குன்றா வளர்ச்சி என்று சொல்லப்படும் முழக்கமும்கட பசுமையானதாக இருக்க முடியாது.
இந்தப் பின்னணியில் இந்தப் பொருளாதார அமைப்பு முன்வைக்கும் தீர்வுகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதும் அவற்றை அம்பலப்படுத்துவதும் பெரியதொரு சவாலாக எனக்குத் தோன்றுகிறது. இந்த போலியான பாசாங்கான நடவடிக்கைகள் வெகுமக்களிடையே எல்லாம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதுபோன போலியானதொரு நம்பிக்கையை உருவாக்குமாதலால் அவை சரியான நடவடிக்கைகளைத் தடம்புரளச் செய்துவிடுமென்ற அளவில் இவற்றைக் கடுமையாக எதிர்க்க வேண்டியதும் அம்பலப்படுத்த வேண்டியதும் முன்னணி கலகக்கார்களான சூழலியலாளர்களின் தலையாய கடமையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவாலுமாக இருக்கிறது.
சவால் 3: கலாச்சாரீதியாகச் சிதைவுற்ற – அந்நியமான – கேளிக்கைகளிலும் வாழ்வின் அன்றாட துயரங்களிலும் சிக்குண்டு கிடக்கும் மனிதர்களை உள்ளிளுத்தல்
நாம் உணர்ந்திருப்பதைவிட மிக ஆழமாக, கலாச்சாரீதியாக நாம் நுகரும் அடிமைகளாக மாறியிருக்கிறோம். தனிப்பட்ட விதத்தில் நானுமே இதில் என்னை விதிவிலக்கானவனாய் உணரவில்லை. புவியால் எல்லா மனிதர்களுக்கும் அதிகபட்சம் கொடுக்க்கூடியதைக் காட்டிலும் மிக அதிகமான பொருட்களை நான் நுகர்ந்துகொண்டிருக்கிறேன். புவியின் மீள்புதுப்பிக்கத்தக்க வரம்பிற்கும் அதிகமாய் நாம் ஒவ்வொருவரும் நுகர்கிறோம். மிகத்தீவிரமாக சூழலியல் பேசும் நண்பர்களேகூட பொருட்களின் நுகர்வு விஷயத்தில் பொறுப்பின்றியும் மிகவும் அலட்சியமாகவும் நடந்துகொள்வதாக நான் உணர்கிறேன். இது சூழல் தாக்கத்தின் அடிப்படையில் மட்டுமின்றி தார்மீக அடிப்படையிலும் நம்மை வலுவற்றவர்களாய் மாற்றுகிறது.
நாம் சரியான தீர்வாக நம்பும் பொருளாதார உற்பத்தி முறையில் மாற்றம் என்பது நேரடியாகத் தனிநபர் நுகர்வைப் பாதிக்கக்கூடியதே. நாம் நுகர்வுப் போதையிலும் அதுதரும் சுகத்திலும் லயித்துக்கொண்டே அமைப்பில் மாற்றங்களைச் செய்ய முடியாது. விதவிதமான வெறும் நாவின் சுவைக்கான உணவுகள், பகட்டான ஆடை அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள், திரைப்படங்கள் – வெப்சீரிஸ்கள் எனத் தொடரும் பெருநுகர்வு ஒரு உலகளாவியக் கலாச்சாரமாக மாறியிருக்கும் நிலையில் இதற்கு எதிரான ஒரு கலாச்சாரத்தைக் கட்டமைப்பது அத்தியாவசியாமனதாகவும் அதேநேரத்தில் மிகுந்த சவாலானதாகவும் எனக்குத் தோன்றுகிறது.
குறிப்பாக அதிக உழைப்பைக் கோரக்கூடிய காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாடுகளில் தங்களது நேர மற்றும் பொருளாதாரப் பங்களிப்பைச் செய்யவல்ல நடுத்தர, மேட்டுக்குடிகள் இவ்வகையான அந்நியமான வாழ்வில் தங்களை மாய்த்துக்கொண்டிருப்பது நம் நடவடிக்கைகளை சவாலானதாக்குகிறது. ஒருபுறம் வாழ்க்கை தரும் அன்றாட நெருக்கடிகளிலும் சவால்களிலும் சிக்கித்தவிக்கும் மனிதர்களையும் – இன்னொருபுறம் வெறுமனே கேளிக்கைகளில் மூழ்கிக்கிடக்கும் – இவ்வுலகின் நிஜமான பிரச்சினைகளிலிருந்து அந்நியமான மனிதர்களையும் எப்படி நம் இருத்தல் குறித்த பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்ற நாம் ஒன்றுதிரட்டப்போகிறோம் என்ற கேள்வியும் சவாலான ஒன்றாக நான் பார்க்கிறேன்.
சவால் 4: பொருளாதார நோக்கிலான தனிமனித வளர்ச்சி சித்தாந்தத்திலிருந்து மனிதர்களை விடுவிக்கும் சாத்தியப்பாடு.
பொருளாதார வளர்ச்சி என்பது உலகளாவிய தேசங்களின் – பெருநிறுவங்களின் வளர்ச்சி சித்தாந்தமாக மட்டுமின்றி தனிநபர்களின் ஒரே தவிர்க்க முடியாத குறிக்கோளாகவும்கூட இன்று மாறியிருக்கிறது. நம் கல்வி முறையும், விழுமியங்களும், அன்றாட சொல்லாடல்களும் இந்தத் தனிநபர் நலன் சார்ந்தப் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தியே இருக்கின்றன. அதிகப் பொருளாதார நலன்களைக் கொடுக்கும் கல்வியைப் பயில்வதோ, வேலையைப் பெறுவதோ, தொழிலைத் தொடங்குவதோதான் வெற்றியாக இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இலாபங்களுக்காக மானுட விழுமியங்களை சமரசம் செய்வது தவிர்க்க முடியாது என்று நமக்குத் தொடர்ந்து சொல்லித் தரப்படுகிறது. சூழல் மீது அதீத அக்கறை காட்டுபவர்கூட தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக்கொண்டே இதனை சாதிக்க முடியுமென்று நம்புகிறார் அல்லது அத்தகைய நெருக்கடியில் இருக்கிறார். இதனைக் கேள்விக்கு உட்படுத்துவது மிகுந்த சங்கடம் தருவதாகவும் சவாலானதாகவும் இருக்கிறது.
சவால் 5: மனிதர்களின் உள்ளார்ந்த பண்புகளுக்கும் இயல்பூக்கங்களுக்கும் இருக்கும் தீமை விளைவிக்கும் தன்மை.
மனிதர்கள் பிறக்கும்போது வெள்ளைக் காகிதமாகப் பிறப்பதாகவும் சமூகம்தான் அந்தக் காகிதங்களில் எதையெதையோ எழுதி தன் வழியில் இழுத்துச் செல்கிறது என்றும் இங்கு ஒருசாராரால் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இதில் பெருமளவு உண்மைகள் இருந்தாலும் முழுமையான உண்மை அல்ல. உதாரணமாக, இனக்கவர்ச்சி, உணவின்மீதான வேட்கை, ஓய்வின் மீதான வேட்கை, ஆன்மீக நாட்டம் போன்றவை மரபணுக்களாலும் வேறுபல சிக்கலான கூறுகளாலும் வழிநடத்தப்படுபவை.
தன் தோகையை விரித்து நடனமாடி இணையைக் கவர்வது ஒரு மயிலுக்கு எப்படி இயல்பானதோ அதுபோலவே தன்னைத் தனது மாட்சிமைமிக்க நுகர்பொருட்களோடு அடையாளப்படுத்தித் தனித்து வெளிப்படுத்துவதும் அதன் மூலம் இணையையும் சக மனிதர்களையும் கவர்வது ஒரு மனிதனுக்கு இயல்பானது. இந்த இயல்பூக்கத்தை நாம் எப்படிக் கிள்ளி எறிந்துவிட முடியும்? மிக அதிக கொலஸ்டிரால் அளவைக் கொண்டிருந்தபோதும்கூட நெய்வழியும் சுவைமிக்க ஒரு பதார்த்த்தைத் தவிர்ப்பது எனக்குத் தனிப்பட்ட வித்தில் சவலாகவே இருக்கிறது. இந்த இயல்பூக்க உந்துதலுக்கு முன்பு தர்க்கரீதியான பகுத்தறிவு எல்லாம் தவிடுபொடியாகிவிடுகிறதே?
அதீத நுகர்வு, அதிகாரம் மற்றும் தனிநபர் வெற்றிமீதான வேட்கை, பகட்டான வாழ்வு, சோம்பல், மந்தைத்தனம், தலைமை வழிபாடு, மனிதர்களுக்கு இடையேயான ‘நாம் – அவர்கள்’ என்ற பகை முரண், கவர்ச்சியூட்டும் கருத்தாக்கங்களுக்கும் அடையாளங்களுக்கும் அடிபணிதல் – அடிமையாதல், புதியன படைக்கும் படைப்பாற்றலும் வேட்கையும் போன்றவை ஓரளவிற்கு மனிதர்களின் இயல்பாக அதாவது இயல்பூக்கமாக இருப்பதாக நான் நம்புகிறேன். பெரும்பாலான இந்த இயல்புகள் சூழல் சிக்கல்களிலிருந்து நம்மை மீட்கும் தீர்வுகளை நோக்கி நகர்வதிலிருந்து நம்மைத் தடம்புரளச் செய்பவையாக இருக்கின்றன.
என்னளவில் இதனை ஒரு கடுமையான சவாலாகவே கருதுகிறேன். ஆனால், ‘சுயநல மரபணுக்கள்’ எனும் நூலை எழுதி புகழ்பெற்ற ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்கள் நாம் இந்தக் குறைபாட்டை நமக்கே உரித்தான கலாச்சாரம் எனும் ஆயுதம் மூலமாக வெல்ல முடியும் என்கிறார். (சற்று நம்பிக்கைதரும் இந்த கருத்து குறித்து விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.)
சவால் 6: காலநிலை மாற்றப் பிரச்சினையோடு நாம் சேர்த்துப் போராட வேண்டிய மற்ற அரசியல் சமூகப் பிரச்சினைகளும் சூழல் பிரச்சினைகளும்.
இந்தப் பொருளாதார அமைப்பை மாற்றியமைப்பது வறுமை, வேலையின்மை, வளங்களுக்கான போர்கள், சூழல் மாசுபாடுகள், உடல் மற்றும் மனநோய்கள் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை சரிசெய்துவிடும் என்றாலும்கூட இவற்றைத் தாண்டியும் சிக்கலான – நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றன. இன்று பாலியல் வன்முறையாலோ மதவாதத்தாலோ சாதிய வன்முறையாலோ, இனவெறியாலோ எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படும் அபாயத்திலிருக்கும் ஒருவருக்கு காலநிலை மாற்றம் இரண்டாம்பட்சமானதுதான். சூழல் பிரச்சினைகளிலேயேகூட சமீப நாட்களில் காலநிலை மாற்றமல்லாத மற்ற பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை. இந்த சவாலை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதும் முக்கியமான ஒரு பிரச்சினையாக நான் கருதுகிறேன்.
சவால் 7: செயல்பாட்டாளர்கள் மற்றும் குழுக்களுக்கிடையேயான அதீதத் தூய்மைவாதமும், சமரசங்கள் குறித்த அச்சமும்
பலநூறு பிரிவினைவாதக் குழுக்கள் நாட்டைத் துண்டாட ஒற்றுமையாக இணைந்து ஓரணியில் நிற்கின்றனர். ஆனால், ஒரே இலட்சியத்தைக் கொண்ட இரண்டு குழுக்கள் ஒரு பொது செயல்திட்டத்தோடு ஒன்றிணையத் தயங்குகின்றனர். தாம் பின்னுக்குத் தள்ளப்படுவோமோ என்ற அச்சமும், தன்னை முன்னிலைப்படுத்தும் சுயநலனும், சிறுசிறு புறக்கணிக்கத்தக்க கருத்து முரண்பாடுகளும் – அதீத தூய்மைவாதமும் இந்த ஒருங்கிணைப்பின்மைக்குக் காரணாமக இருக்கக்கூடும்.
பள்ளிக் கல்லூரிகள் முதல் சிறுசிறு ஊர்களிலும் நகரங்களிலும் ஏராளமான சூழல் அமைப்புகள், தன்னார்வலர் குழுக்களும், NGO க்களும், குறிப்பிட்டத் திட்டங்களுக்கான எதிர்ப்புக் குழுக்களும், சூழல் ஆய்வாளர்களும் – ஆர்வலர்களும் – அறிவியலாளர்களும் தமிழ்நாட்டில் இருந்தாலும்கூட இவர்கள் அனைவரையும் ஒரு குடையின்கீழாக ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பு அல்லது தளம் இதுவரை ஏன் உருவாகவில்லை என்ற கேள்வி இதன் தேவையையும் சாத்தியத்தையும் ஒரு சவாலாக்குகிறது.
இறுதியாக…
இந்த அனைத்து சவால்களையும் ஒருவேளை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு கடந்து வரும்போது – இந்த அணிதிரட்டலுக்கு, செய்யப்படும் பிரச்சாரங்கள் வழியே பெரும்பாலான மனிதர்கள் தம்மை எதிர்கொண்டிருக்கும் ஆபத்தை அறியவரும் நிலையில் – அவர்கள் மனச்சோர்வடைந்து மேலும் அதிகமாகக் கேளிக்கைகளில் தங்களைப் புதைத்துக்கொள்வார்களா அல்லது தீவிர நடவடிக்கைகளில் இறங்குவார்களா என்பது பற்றியும் நாம் ஆராய வேண்டியிருக்கிறது. அதாவது நமது பிரச்சாரங்கள் சரியான நடவடிக்கை எடுக்க ஒருவரைத் தூண்டுமளவுக்கு வலிமையானதாகவும் அதேநேரத்தில் அவர்களைச் சோர்வடையச் செய்துவிடாதபடி மென்மையானதாகவும் இருக்க வேண்டியதும் அவசியம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது…வடசென்னையானது தீவிர சூழல் நெருக்கடிக்குள் சிக்கியபோது எண்ணூரின் பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் தன்னெழுச்சியாய் ஒன்றுகூடி போராட்டக்குழுவைக் கட்டியெழுப்பி சாலையில் அமர்ந்தபோது எனக்குள் அந்த நம்பிக்கை பிறந்தது. பொருளாதாரங்களும் அரசாட்சியும் செல்லுபடியாக மக்கட்திரளின் ஒத்துழைப்பு அவசியம் ஆயிற்றே? மக்களின் அழுத்தங்களுக்கு அதிகாரங்கள் அடிபணியாமலா போய்விடும்?
நசுக்கப்படும் மக்கள் மேலும் மேலும் அழுத்தப்படும்போது ஒருகட்டத்தில் வெடித்துத் தீப்பொறியாய் சிதறுவார்கள். கூடங்குளத்திலும் எண்ணூரிலும் மேல்மாவிலும் சிப்காட்களிலும், பரந்தூரிலும் இப்படி உலகின் ஒவ்வொரு மூலையிலும் கனன்று கொண்டிருக்கும் அணையா விளக்குகள் பெரும் நெருப்பாய் பற்றி எரியும்போது இங்கு பட்டியலிட்ட சவால்கள் அத்தனையும் பொருளற்றுப் போகக்கூடும்! எதிர்வரும் பேரிடரில் ஏதோவொன்று இந்த நெருப்புப் பொறிகளைத் தூண்டிவிட்டிடாதா என்ன?
அவநம்பிக்கைகளின் பேரிருளில் இதுவொன்றே எனக்கு நம்பிக்கை வெளிச்சமாய் தெரிகிறது.
- ம.ஜீயோ டாமின்