காலநிலை மாற்றம் – ‘அ முதல் ஃ’ வரை பாகம் – 01

புவி வெப்பமயமாதலின் பாதிப்புகளை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம். மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வீசிய தீவிர வெப்ப அலைகள், ஹவாய், சைபீரியா & கனடா நாடுகளில் ஏற்படுத்திய  காட்டுத்தீ, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, சீனா, இத்தாலி. ஸ்பெயின், ஸ்லோவேனியா, லிபியா போன்ற நாடுகளை புரட்டிப்போட்ட கடும் வெள்ளம், ஆப்பிரிக்காவை வாட்டி வதைக்கும் வறட்சி, ஆர்டிக் பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு உருகும் பனி, இமயமலை பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு அதைத் தொடர்ந்து டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், உத்தர பிரதேசத்தில் 40க்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் பலிகொண்ட வெப்ப அலை, ஆகிய சமீபத்திய நிகழ்வுகள் காலநிலை மாற்ற பாதிப்புகளின் எடுத்துகாட்டாகும். காலநிலை மாற்றம் நம் எதிர்காலத்தின் நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இவையே சான்று.

‘உலகில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிலவும் காலநிலை அமைவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழு (IPCC) கூறுகிறது. மேலும் இந்த அறிக்கை அடுத்த பத்தாண்டுகளில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் தீவிரமடையும் என எச்சரித்துள்ளது. நாம் காலநிலை நரகத்தை நோக்கிய பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறோம் என்று ஐக்கிய நாடுகளில் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளர்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க 2030க்குள் நாம் எடுக்கும் முன்னெடுப்புகள் மிக முக்கியமானது, இது மனித இனத்தின் இருத்தியலுக்கான பிரச்சனை என பன்னாட்டு அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில்தான் காலநிலை மாற்றம் என்றால் என்ன? காலநிலை மாற்றத்தின் அடிப்படை அறிவியல் என்ன? காலநிலை மாற்றத்தின் பின்னால் உள்ள அரசியல் என்ன ? காலநிலை மாற்றத்தைத் தடுக்க நம் அரசுகள் என்ன செய்கின்றன? செய்ய வேண்டியவை என்ன?  என்பது குறித்தெல்லாம் மக்களாகிய நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது, இதுவே ‘காலநிலை மாற்றம் – அ முதல் ஃ வரை’ என்ற தலைப்பில் இத்தொடர் கட்டுரையை எழுதத் தூண்டியது.

இத்தொடர் கட்டுரையின் வாயிலாக காலநிலை மாற்றம் குறித்த அடிப்படை கேள்விகளுக்கும், காலநிலை மாற்றம் குறித்தான வாசகர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்படும்.

  1. காலநிலை மாற்றம் என்றால் என்ன ?

நீண்ட கால அளவில் (long term) புவியின் வெப்பநிலையிலும் காலநிலையிலும் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான குறிப்பிடத்தக்கத் தீவிர மாற்றங்களைக் காலநிலை மாற்றம் என்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் புவியில் நிலவும் சராசரி தட்ப வெப்பநிலையில் ஏற்படும் தொடர் மாற்றங்களாக இவற்றைக் குறிப்பிடலாம். புவி வெப்பமடைவதால் காலநிலை மாற்றம் ஏற்பட்டாலும்,  காலநிலை மாற்றம் என்பது வெறும் வெப்பநிலை உயர்வோடு நின்றுவிடுவதில்லை, எப்படி சீட்டுகட்டினை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒரு சீட்டைச் சரித்தால் அது மொத்த சீட்டுகளையும் தொடர் சங்கிலி விளைவினால் (Domino Effect) சரிக்கின்றதோ அதேபோல காலநிலை மாற்றமானது இங்கிருக்கும் இயற்கை அம்சங்கள் அனைத்தையும் பாதிப்பதாக இருக்கிறது.

உதாரணத்திற்கு, புவி வெப்பமயமாதலால் எங்கோ ஆர்டிக் பகுதியில் பனிக்கட்டி உருகினால் அது இங்கு தமிழ்நாட்டில் கடல் நீர் மட்டத்தினை உயர்த்துகிறது. கடல் நீர் மட்டம் உயர்வதால் கடற்கரைகள் அரிக்கப்படுவதோடு சில கி.மீ. தூரம் வரை கடல் நீர் நிலத்தடி நீரில் கலக்கும் (Sea Water Intrusion) அபாயம் உள்ளது.  1076 கி.மீ. நீளம் கொண்ட தமிழ்நாடு கடற்கரையில் 1மீ கடல் மட்ட உயர்வு ஏற்பட்டால் எவ்வளவு நிலம் நீருக்குள் போகும் என்று யோசித்து பாருங்கள். தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் கடலுக்கு அருகாமையிலே 1-2 கிலோ மீட்டருக்குள் விலைநிலங்கள் வந்துவிடும், அந்த விளைநிலங்களில் எல்லாம் நிலத்தடி நீர் உப்பானால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்,  உணவு பற்றாக்குறை வந்துவிடாதா ? உணவு பொருட்களில் விலைவாசி ஏறி விடாதா?.

ஆம் எங்கோ ஆர்டிக்கில் உருகும் ஐஸ் நம் தட்டிற்கு வரும் சோற்றை தடுக்கப் போகிறது. எங்கோ அமெரிக்காவின் கடல்களில் கடல் வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றமும், காற்றின் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றமும்தான் 2015 சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குக் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா, ஆம் அதுதான் உண்மை , அதுதான் காலநிலை மாற்றம். வெப்பநிலை உயர்வு, வெப்ப அலைகள், வறட்சி, உணவு பற்றாக்குறை, பனி உருகுதல், கடல் மட்ட உயர்வு, அதிதீவிர புயல்கள், கடும் வெள்ளம்,அதனால் ஏற்படும் நோய் தொற்று, உயிர் இழப்புகள், பொருளாதார இழப்புகள், இயற்கை வளம் குறைதல், அதனால் நாடுகளிடையே நடக்கும் சண்டை என பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கியதுதான் காலநிலை மாற்றம்.

  1. காலநிலை ஏன் மாறுகிறது?

  • தற்போது நடந்துவரும் காலநிலை மாற்றத்திற்கு அடிப்படை காரணம் புவி வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் பசுங் குடில் வாயுக்களின் விளைவு (Green House Gas Effect). பசுங் குடில் விளைவு இயல்பாகவே புவியின் மேற்பரப்பில் நிகழக்கூடிய ஒன்றாகும், இயற்கையாக இருக்கக்கூடிய பசுமை இல்ல வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு போர்வை போல் படர்ந்து உள்ளது, இது பூமியில் விழும் சூரிய வெப்பத்தில் குறிப்பிட்ட அளவினை தக்கவைத்துக் கொள்வதின் மூலமாக பூமியை வெப்பமாக வைக்க உதவுகிறது. இந்த இயற்கை பசுங் குடில் வாயுக்கள் மட்டும் இல்லை என்றால் பூமியின் சராசரி வெப்பநிலை -18 டிகிரி ஆக இருந்திருக்கும், பூமியின் பல இடங்களில் உயிரினங்கள் வாழ முடியாத அளவிற்கு குளிர் நிலவி இருக்கும். குளிர் காய்ச்சலின்போது கதகதப்பினைத் தரும் கம்பளிஒ போர்வையைப்போல நமக்கு நன்மை செய்துவந்த பசுங் குடில் வாயுக்களைதான் மனித செயல்பாடுகளின் காரணமாக நமக்கு எதிரியாக மாற்றி இருக்கிறோம். வளிமண்டலத்தில் இயல்பை விட அதிகமாகிய பசுங் குடில் வாயுக்கள் இயல்பைவிட அதிகமான வெப்பத்தை பூமிக்குத் தருகின்றன.
  1. சரி அது என்ன பசுங் குடில் வாயுக்கள்?

கார்பன் டை ஆக்சைடு (Carbon dioxide) (CO2), மீத்தேன் (Methane (CH4), நைட்ரஸ் ஆக்சைடு Nitrous oxide (N2O), ஹைட்ரோ ப்ளுரோ கார்பன்கள் (Hydrofluorocarbons (HFCs), பெர்ப்ளுரோ கார்பன்கள் ( Perfluorocarbons (PFCs), சல்பர் ஹெக்சா ஃப்ளுரைடு (Sulphur hexafluoride (SF6), நைட்ரோஜென் ட்ரை ஃப்ளுரைடு ( Nitrogen trifluoride (NF3) ஆகிய ஏழு பசுங் குடில் வாயுக்கள்தான் புவியின் வெப்பநிலை உயருவதற்கு முக்கியக் காரணமாக உள்ளன. இதில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் இயற்கையாகவே புவியின் மேற்பரப்பில் இருந்தாலும் மனித செயல்பாடுகளினால் இந்த வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் வெகுவாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 1750களில் இருந்ததைவிட தற்போது 50% அதிகரித்துள்ளது. இது கடந்த 20,000 ஆண்டுகளில் இல்லாத அளவிலான உயர்வாகும். ஹைட்ரோ ப்ளுரோ கார்பன்கள் (Hydrofluorocarbons (HFCs), பெர்ப்ளுரோ கார்பன்கள் ( Perfluorocarbons (PFCs), சல்பர் ஹெக்சா ஃப்ளுரைடு (Sulphur hexafluoride (SF6), நைட்ரோஜென் ட்ரை ஃப்ளுரைடு ( Nitrogen trifluoride (NF3) போன்ற வாயுக்கள் முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்டு வளிமண்டலத்தில் தேங்கிக் கிடப்பவை. இவை இயற்கையாக இருக்கும் பசுங் குடில் வாயுக்களைவிட பல ஆயிரம் மடங்கு அதிகம் புவியின் வெப்பத்தினை உயர்த்தக் கூடியவை. உதாரணத்திற்க்கு சல்பர் ஹெக்சா ஃப்ளுரைடு (SF6) வாயு கார்பன் டை ஆக்சைடை விட 23,000 மடங்கு அதிகம் புவி வெப்பமயமாக்கும் சக்தி கொண்டது. நைட்ரஸ் ஆக்சைடு (N2O) 273 மடங்கும், மீத்தேன் 30 மடங்கும் ஆற்றல் கொண்டது.

அதேபோல் ஒவ்வொரு வாயுக்களும் வளிமண்டலத்தில் வெவ்வேறு நீடித்து இருக்கும் கால அவகாசத்தையும் (வாழ்நாள்) கொண்டது. உதாரணத்திற்கு மீத்தேன் 12 ஆண்டுகளும், நைட்ரஸ் ஆக்சைடு 109 ஆண்டுகளும், நைட்ரோஜென் ட்ரை ஃப்ளுரைடு 500 ஆண்டுகளும், சல்பர் ஹெக்சா ஃப்ளுரைடு 3200 வருடங்களும் வலிமைனடலத்தில் அப்படியே இருக்கும்.

இந்த பசுங் குடில் வாயுக்களின் பெருக்கத்திற்கு எந்தெந்த மனித நடவடிக்கைகள் காரணம்? காலநிலை மாற்றத்திற்கு மனிதன் மட்டும்தான் காரணமா? என்பன குறித்து அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடரும்…

பிரபாகரன் வீரஅரசு

குறிப்பு: இக்கட்டுரை 2023 செப்டம்பர் மாத பூவுலகு இதழில் வெளியானது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments