காலநிலை மாற்றமா? பருவநிலை மாற்றமா? – விளக்கம்

istockphoto-182183614-612x612
Polar bear on a wide surface of ice in the russian arctic close to Franz Josef Land.The light a

சமீபகாலமாக உலகம் முழுவதும் புவி வெப்பம், அதீத மழை, அதீத வெப்பம் என பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இம்மாற்றங்களைக் குறித்து உலக நாடுகளும் அறிவியலாளர்களும் விவாதித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆய்வுகள் லட்சக்கணக்கான அறிவியலாளர்களின் பங்களிப்புகளோடு நடத்தப்பட்டு மொத்த உலகமும் இந்த மாற்றங்களை ஒற்றை வார்த்தைக்குள் அடக்கியிருக்கிறது. Climate Change! ஆனால் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு மட்டும் வேறொரு முக்கியமான பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

Climate Change என்கிற வார்த்தைகளின் சரியான மொழியாக்கம் என்னவென்பதே அந்த அதிமுக்கியமான பிரச்சினை! தமிழ்நாடு மட்டும் ‘பருவநிலை மாற்றம்’ என்றும் ‘காலநிலை மாற்றம்’ என்றும் ஒரே விஷயத்தை இரண்டு விஷயங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே ‘காலநிலை மாற்றம்’ என்கிற வார்த்தையை ஏற்றுக் கொண்டு விட்டது. தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகளும் காலநிலை மாற்றச் சிக்கலை ஏற்றிருக்கின்றன. காலநிலை மாற்றம் முக்கியமான பிரச்சினை என திமுக, விசிக போன்ற கட்சிகள் குறிப்பிடுகின்றன. கம்யூனிஸ்டுகளும் காலநிலை மாற்றத்தை வர்க்கப் பிரச்சினையின் இறுதிவிளைவு என்கின்றனர். எனினும் இந்தப் ‘பருவநிலை’ மற்றும் ‘காலநிலை’ சண்டை மட்டும் ஓயவில்லை.

பருவநிலை என்பது என்ன?

பருவங்கள் நாம் எதையெல்லாம் சொல்வோம் என யோசித்துப் பாருங்கள். முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இலையுதிர்காலம், கார்காலம், கோடைக்காலம், குளிர்காலம் எனச் சொல்வோம். விவசாயத்தில் கூட குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி என வருடத்தைப் பருவங்களாக பிரித்து சாகுபடி செய்யும் வழக்கம் உண்டு. மனித வாழ்க்கையையே கூட குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என பருவங்களாகப் பிரிக்கும் பழக்கமும் இருக்கிறது.

‘பருவம்’ என்கிற சொல் தமிழில் வழங்கப்படும் அர்த்தங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவு. ஒரு குறிப்பிட்ட காலத்தை பல்வேறு கால அளவுகளாகப் பிரித்து ஒவ்வொரு கால அளவையும் ‘பருவம்’ எனக் குறிப்பிடும் விஷயமே அது. ஆண்டு என்கிற காலத்தை, வானிலை மாறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு பருவங்கள் எனப் பிரிக்கிறோம். வேளாண்மையில் மழை மற்றும் வெப்பத்தைக் கணக்கிட்டு விதைப்புக் காலத்தை பருவங்களாகப் பிரிக்கிறோம். மனித வாழ்க்கை என்ற ஒரு குறிப்பிட்ட சராசரி காலத்தையும் வயதை அடிப்படையாகக் கொண்டு பருவங்களாகப் பிரிக்கிறோம். எனவே ‘பருவம்’ என்பதை ஒரு குறிப்பிட்ட கால வரையறையின் சிறு காலப்பிரிவு எனக் கொள்ளலாம்.

இன்னொரு முக்கியமான சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.  ‘பருவம்’ என்கிற சிறு பிரிவால், அது குறிப்பிடும் கால வரையறையை மாற்ற முடியாது. உதாரணமாக, ஒரு வருடம் என்கிற காலப்பிரிவை கோடைகாலம் அல்லது சம்பா பருவம் மாற்றக் கூடிய வல்லமையைப் பெற்றிருப்பதில்லை. ஒரு மனித வாழ்க்கையை மாற்ற அல்லது தீர்மானிக்கும் வல்லமையை இளமை, முதுமை, குழந்தைப் பருவங்கள் கொண்டிருப்பதில்லை. மாறாக (ஆண்டு, மனித வாழ்வு போன்ற) பெருங்காலப்பிரிவே பருவங்களில் மாற்றங்கள் கொண்டு வரும் வல்லமை படைத்தவை. உதாரணமாக மனித வாழ்வு குழந்தை பருவத்திலேயே இறப்பைச் சந்தித்து விட்டால், இளமைப்பருவமோ முதுமைப் பருவமோ நேர முடியாது. ஓராண்டின் கோடை காலம் வழக்கமானதை விட நீடித்துவிட்டால், குளிர்காலமே மழைக்காலமோ நிச்சயமாக பாதிப்புக்கு உள்ளாகும்.

‘பருவம்’ என்பது அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்தை தனக்கு புரியும் வகையிலும் வசதிபட்ட வகையிலும் வழங்கிக் கொள்ள மனிதன் உருவாக்கிய வார்த்தை மட்டும்தான். இயற்கைக்கும் அந்த வார்த்தைக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் ‘காலம்’ என்கிற வார்த்தைக்கும் இயற்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது. இயற்கைதான் காலத்தைத் தீர்மானிக்கிறது. மனித வாழ்க்கைக்கான காலமாக இருந்தாலும் சரி, குறுவைப் பயிருக்கான காலமாக இருந்தாலும் சரி, மழை பெய்யும் காலமாக இருந்தாலும் சரி, இயற்கையுடன் நேரடியாக காலம் பின்னப்பட்டிருக்கிறது.

எனவே ‘பருவம்’ என்பது ‘காலம்’ ஹெட்மாஸ்டராக இருக்கும் பள்ளிக் கூடத்தின் மாணவன் மட்டுமே! பள்ளிக்கூட விதிகளை ஹெட் மாஸ்டர்தான் வரையறுப்பார். மாணவன் அல்ல!தமிழ் வார்த்தைகளை விட்டுவிடுவோம். ஆங்கிலத்தில் Climate Change-ஐ ஏன் Seasonal Change என அறிவியலாளர்கள் சொல்வதில்லை? Season என்றால் பருவகாலம் என அர்த்தம். Seasonal Change என சொன்னால் ‘அவ்வப்போது நேரும் மாற்றம்’ என்றும் அர்த்தப்படுத்த முடியும். அதாவது நிலையான மாற்றம் அல்ல என்கிற அர்த்தத்தைத் தரவல்லது. மேலும் கோடை, மழை, குளிர் ஆகிய season-கள், காலமாற்றத்தால் நேராமல் தன்னிச்சையாக நேர்வதாக நினைத்தால் அறிவியலில் நாம் பூஜ்யமாக இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

இன்னொரு தரப்பு இருக்கிறது. ‘வழக்கமாக முன்பனிக்காலமாக இருந்தது, இப்போது ஒன்றிரண்டு மாதங்கள் நீண்டிருக்கிறது’, ‘மழை பெய்ய வேண்டிய மாதங்கள் வழக்கத்தை விட ஒன்றிரண்டு மாதங்கள் முன்னதாக வந்து விடுகின்றன’, ‘வெயில் ஒன்றிரண்டு மாதங்கள் அதிகமாக இருக்கிறது’ என சொல்லி ‘மொத்தத்தில் அதே மழை, அதே வெயில், குளிர்தான். மாதங்கள் மட்டுமே முன்னும் பின்னும் போயிருக்கிறது’ என சுருக்கும் தரப்பு அது.

இங்குள்ளப் பிரச்சினையே என்னவெனில், ‘அதே மழை, அதே வெயில், அதே குளிர்’ இல்லவே இல்லை என்பதுதான். புவியின் வெப்பம் அதிகரித்து விட்டது என்பதற்கான சான்றுகள் உலகளவில் எக்கச்சக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும், ஏன், ஒவ்வொரு பத்து வருடமும் இருந்த வெப்பத்தைக் காட்டிலும் கடந்த சில வருடங்களில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதையும் காட்டும் ஆய்வுகள் ஏராளம் இருக்கின்றன. இந்த மொத்த மாற்றத்துக்கும் காரணமாக அடிப்படை மாற்றம் ஒன்று இருக்கிறது.

காலநிலை மாற்றம்!

மனித வாழ்க்கை, வேளாண்மை மட்டுமின்றி பருவங்கள், வாழ்க்கைச்சூழல் என இப்பூவுலகில் வாழும் உயிர்களுக்கும் அடிப்படையாக இருக்கும் காலநிலை மாறியிருக்கிறது.

காலநிலை மாற்றம் என்பது சிறு காலப் பிரிவில் நேரும் மாற்றம் அல்ல; பெரிய அளவில் பல காலமாக உருவாகி நிலைத்துப் பெருகவிருக்கும் மாற்றம்!இம்மாற்றத்துக்குக் காரணம் பணக்கார மனிதர்களும் அரசுகளும் உருவாக்கிய உற்பத்தி முறையே! காலநிலை மாற்றத்துக்கு எந்தவிதத்திலும் காரணமாக இருக்காத ஏழைகளே அதிக பாதிப்புகளை அடையவிருக்கின்றனர். காலநிலை மாற்றத்தைப் பருவநிலை மாற்றமாக முன்வைப்பது அதன் அர்த்தத்தை மட்டுமல்ல, அரசியலையும் தீர்வையுமே கூட நீர்த்துப் போக வைக்கும்.

மொழிப்புலமைக்கான போட்டியில் அரசியலை புதைப்பதற்குப் பெயர் அறிவு அல்ல, கயமை!

  • ராஜசங்கீதன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments