2024 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிலி நாடு வரலாறு காணாத காட்டுத்தீயை எதிர்கொண்டது. சிலியில் தொடர் காட்டுத்தீ ஏற்பட்டதில், வால்பரைசோ, ஓ’ஹிக்கின்ஸ், மௌல், பயோபியோ மற்றும் லாஸ் லாகோஸ் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிப்படைந்தன. இதில் மிகவும் மோசமான பாதிப்பு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று, வால்பரைசோ பிராந்தியத்தில் நிகழ்ந்தது. பிப்ரவரி 5 நிலவரப்படி, 43,000 ஹெக்டர் பரப்பளவு காடுகள் தீக்கிரையாகின. சிலியின் வினாடெல்மார் நகரத்தில் இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவின் 98% பகுதி தீயில் கருகியது. அந்த நகரத்தில் மட்டும் மக்கள் வீடிழந்தனர். காட்டுத் தீயினால் சிலி நாட்டில் ஏற்பட்ட மொத்த பொருளாதார சேதம் 4.39 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகவே வறட்சி நிலவி வந்தாலும் , இந்த ஆண்டு உலகெங்கும் காலநிலை மற்றதினால் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பினாலும், எல்-நினோவின் தாக்கத்தின் காரணமாகவும், இயல்பை விட வெப்பம் 40 டிகிரி செல்சியசைத் தாண்டியிருந்ததே சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீக்குக் காரணம்.
2024 பிப்ரவரி மாதம்தான் இது வரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக வெப்பமான பிப்ரவரி மாதமாகும், அதேபோல் தொடர்ச்சியாக கடந்த ஒன்பது மாதங்களிளும் இது வரை இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கவே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் புது புது உச்சங்களைத் தொடப்போகிறது எனவும், இனி உயரப்போகும் ஒவ்வொரு 0.1’C மாற்றத்திற்கும் பூமியில் ஏற்படப்போகும் காலநிலை மாற்ற பாதிப்புகள் பல மடங்கு இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிகின்றனர். ஆனால், இந்த பாதிப்புகளையெல்லாம் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? என்ற இரண்டாவது மிக முக்கியமான கேள்வி நம் முன் வைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்ற முதல் கேள்விக்கான பதிலை தேடுவதில் வெற்றிபெற முடியாததனால் நாம் இப்போது இரண்டாம் கேள்விக்கான பதிலை வேகமாகத் தேட வேண்டியுள்ளது.
காலநிலை மாற்றத்தின் பாதிப்பில் இருந்து பூமி தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
- Mitigation (மட்டுப்படுத்துதல்)
- Adaptation (தகவமைத்தல்)
காலநிலை மாற்றதை மேலும் அதிகரிக்காமல் மட்டுப்படுத்துதல் Climate Mitigation எனப்படுகிறது. எதிர்வரும் காலநிலை மாற்றதின் பாதிப்பின் தாக்கத்தைக் குறைக்க தகவமைத்துக் கொள்ளுதல் Climate Adaptation எனப்படுகிறது.
காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்த (Climate Mitigation) என்ன செய்ய வேண்டும் ?
3,949 பக்கங்களை கொண்ட IPCC (Inter-governmental Panel on Climate Change) அமைப்பின் ஆறாவது மதிப்பீட்டு ஆய்வறிக்கை இந்த இரண்டு விடயங்களைக் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக முன்வைக்கிறது.
- புதைப்படிம ஆற்றல் பயன்பாட்டினை 2030ம் ஆண்டிற்குள் 50% குறைக்க வேண்டும்.
- நீர் நிலைகள், காடுகள், மலைகள், சதுப்புநிலங்கள், கடல்கள் போன்ற இயற்கை அமைப்புகளை இனியும் அழிக்காமல் அப்படியேப் பாதுகாக்க வேண்டும்.
மாறும் காலநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள (Climate Adaptation) என்ன செய்ய வேண்டும்?
- பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிதல்
- தகவமைப்புக் கொள்கைகள் / நடவடிக்கைகளை வடிவமைத்தல்
- நடைமுறைப்படுத்தல்
ஆகிய மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியது தான் தகவமைத்தல்.
உதாரணத்திற்கு இன்னும் 30 ஆண்டுகளில் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள மீனவ குடியிருப்புகள் கடல்நீர் மட்ட உயர்வால் பாதிக்கப்படப்போகிறது என்றால், எந்த அளவுக்கு கடல் மட்டம் உயரும் எந்த பகுதிகளில் எவ்வளவு பாதிப்புகள் இருக்கும், எந்த மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று முன்கூட்டியே Vulnerability Assessment செய்து கண்டறிவது அவசியம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதுதானே அப்போது பார்த்துகொல்ள்ளலாம் என்றில்லாமல் இபோதே அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வண்ணம் வடிவமைப்பது, கடல் நீர் மட்ட உயர்வினைக் கருத்தில்கொண்டு கொள்கைகளை வடிவமைத்தல் ஆகியவையே தகவமைப்பு நடவடிக்கைகள் ஆகும்.
காலநிலை மாற்றத்தைத் தடுக்க, அதற்குக் காரணமான புதைப்படிம ஆற்றல் பயன்பாட்டில் இருந்து வெளியேறுவது என்பது பெரும்பாலும் வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் கையில்தான் உள்ளது என்றாலும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைக்கும் தகவமைப்பு நடவடிக்கைகளை உள்நாட்டு அரசுகள் திறன்பட முன்னெடுக்க முடியும் என்பதற்கு முன் மாதிரியாக சமீப காலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள முக்கியமான சில காலநிலை மாற்றத் தகவமைப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்த தொடரில் பார்போம்.
தொடரும்..
- பிரபாகரன் வீரஅரசு
குறிப்பு: இக்கட்டுரை 2024 பிப்ரவரி மாத பூவுலகு இதழில் வெளியானது.