காலநிலை மாற்றம் என்பது 2070ல், 2100ல் நடைபெறும் என நாம் நினைத்துக்கொண்டிருந்தது போய் காலநிலை மாற்ற பாதிப்புகளை நாம் இப்போதே சந்திக்க தொடங்கிவிட்டோம். அண்மைக் காலமாக உலகெங்கும் அதிகரித்து வரும் அதிதீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகள் நம்மை தீவிரமாகத் தாக்க துவங்கிவிட்டது என்பதையே உணர்த்துகிறது. கடந்த செப்டம்பர் 10ம் தேதி டேனியல் புயலின் காரணமாக பெய்த கன மழையினால் லிபியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டும் 4,352 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 33% பாகிஸ்தானியர்கள் பாதிக்கப்பட்டனர், சுமார் 2.3 லட்ச வீடுகள் சேதமடைந்தது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதத்தில் அமெரிக்காவில் நடந்த 23 தீவிர காலநிலை நிகழ்வுகளினால் 4,79,593 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் விவசாயத்தில் மட்டும் 1,212 கோடி இழப்பு ஏற்படுத்திய பிபர்ஜாய் புயல், 864 கோடி இழப்புகளை ஏற்படுத்திய ஹிமாச்சல் மேகவெடிப்பு உட்பட ஆசிய கண்டத்தில் இந்த 2023ம் ஆண்டின் முதல் எட்டு மாதத்தில் மட்டும் 84 அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.
இந்த சூழலில்தான் காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான COP28 உச்சி மாநாடு வருகின்ற நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. உலக நாட்டு தலைவர்களும் சர்வதேச விஞ்ஞானிகளும் காலநிலை மாற்றத்தை குறித்து தீவிராமாக விவாதித்து வரும் வேளையில், நம் வாழ்வை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த அடிப்படை புரிதலை நாம் ஒவ்வொருவரும் பெறுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் காலநிலை மாற்றம் என்றால் என்ன? காலநிலை மாற்றத்திற்கு பின்னால் உள்ள அறிவயல் என்ன? பசுமை குடில் வாயுக்கள் என்றால் என்ன? அவை எப்படி காலநிலை மாற்றத்திற்கு காரணமாக உள்ளது போன்ற கேள்விகளுக்கு முந்தைய ‘காலநிலை மாற்றம் – அ முதல் ஃ வரை பாகம் – 01’ல் பதில் தெரிந்துக்கொண்டோம். இந்த கட்டுரையில் காலநிலை மாற்றத்திற்கு யார் காரணம்? எந்த துறை அதிக கார்பன் உமிழ்வு செய்கிறது? காலநிலை மாற்றத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள் என்னென்ன என்பது குறித்து பார்போம்.
காலநிலை மாற்றத்திற்கு யார் காரணம்?
காலநிலை மாற்றத்திற்கு மனிதன்தான் காரணமா இல்லை இயற்கையாகவே காலநிலை மாற்றம் நடைபெறுகிறதா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்த கேள்விக்கான பதில் பல ஆண்டுகளாக அறிவிலாளர்களுக்குப் புதிராகவே இருந்தது. இயற்கை நிகழ்வுகளும் மனித செயல்பாடுகளும் சேர்ந்தே காலநிலை மாற்றம் நடைபெறுகிறது என்று சிறிது காலம் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு ஆய்வறிக்கை மிக தெளிவாக தற்போது நடை பெரும் காலநிலை மாற்றத்திற்கு மனிதன்தான் காரணம் என சொன்னது.
இயற்கையாகவே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே ?
இதற்கு முன் இயற்கையாகவே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பூமியில் உள்ள உயிரினங்கள் அழிந்துள்ளதே அதேபோல் இப்போதும் இயற்கையாக இந்த மாற்றம் நடக்கிறது என நாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது என சிலர் கேட்கிறார்கள், அதற்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வரைப்படத்தில் உள்ளது.
தோற்றத்தில் இருந்தே பூமியின் வெப்பநிலை ஏற்ற இறக்கமாகவே இருந்துள்ளது. தற்போது இருப்பதைவிட புவியின் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருந்துள்ளது. அதே நேரத்தில் மைனஸ் டிகிரியில் கடும் குளிரூட்டும் ஐஸ் ஏஜ் காலமும் இருந்துள்ளது. இதன் காரணமாக பூமியில் இருந்த உயிர்கள் ஐந்து முறை முற்றாக அழிந்தும் போயிருக்கின்றன, இதை நாம் முற்றழிப்பு (Mass Extinction) என்கிறோம். ஆனால், பூமி இதற்கு எடுத்துக்கொண்ட கால அவகாசம் 500 மில்லியன் ஆண்டுகள். 500 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியின் வெப்பநிலை சீரற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கடந்த 12,000 ஆண்டுகளாக அது ஒரே சீராக 13.9’C ஆக இருந்துள்ளது. இதை Holocene Optimum என்று அழைக்கிறார்கள்.
இந்த 12,000 ஆண்டுகள்தான் மனித இனத்தின் முக்கியமான ஆண்டுகள். பூமியின் வெப்பநிலை ஒரே சீராக இருந்ததால் இந்த 12,000 ஆண்டுகளில்தான் விவசாயம் தோன்றியது , இந்த காலகட்டத்தில்தான் மனிதன் நாகரிகம் அடைந்து இப்பொது இருக்கும் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.
ஆனால், இந்த 12,000 ஆண்டுகளாக பூமியில் இருந்த சீரான வெப்பநிலையை தான் (13.9°C) தற்போது மனித செயல்பாடுகளால் (புதைபடிம ஆற்றல் பயன்பாட்டினால் வெளியேற்றப்படும் பசுமை குடில் வாயுக்களால்) கடந்த 140 ஆண்டுகளில் 1.2°C உயர்த்தி புவியின் சராசரி வெப்பநிலையை 15.1°C ஆக மாற்றியுள்ளோம். இதைத்தான் மனிதனால் உந்தப்பட்ட காலநிலை மாற்றம் என்று சொல்கிறார்கள்.
எந்த மனிதன் காரணம்?
இந்த சமத்துவம் அற்ற உலகில் எப்படி காலநிலை மாற்றத்தில் மட்டும் சமத்துவம் இருந்துவிட முடியும்? காலநிலை மாற்றத்திற்கு மனிதன்தான் காரணம் என்று பொதுப்படையாக நாம் நகர்ந்துவிட முடியாது , மனிதர்களிலே எந்த மனிதர்கள் காரணம் என்ற கேள்வி நமக்குள் எழ வேண்டும், காலநிலை மாற்றத்திற்கு எந்த மக்கள் காரணம் , Which people என்ற கேள்விக்கு பதில் Rich people, ஆம் பணக்காரர்களும் அவர்களின் நுகர்வு வெறிகொண்ட வாழ்க்கை முறையும்தான் காரணம். உலக மக்களை பொருளாதார அடிப்படையில் நாம் பிரித்துப் பார்த்தோம் என்றால் பொருளாதாரத்தில் மேலடுக்கில் உள்ள 1% பணக்காரர்கள் 50% கார்பன் உமிழ்விற்குக் காரணமாக உள்ளார்கள். பொருளாதரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் 50% மக்கள் வெறும் 10% கார்பன் உமிழ்விற்கு மட்டுமே காரணமாக இருகிறார்கள், ஆனால், காலநிலை மாற்றத்தில் பாதிப்பு என்னமோ இந்த 50% அடித்தட்டு மக்களுக்குதான் அதிகம். இதை சமகாலத்தில் நடக்கும் மிகப் பெரிய சமூக அநீதி என்றுதானே சொல்ல முடியும்.
கார்பன் உமிழ்வில் நாடுகளிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள்?
மனிதர்களிடையே கார்பன் உமிழ்வில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதுபோல நடுகளிடையேவும் ஏற்றதாழ்வுகள் இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாக 1750ல் இருந்து 2021ம் ஆண்டு வரையான காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கார்பன் உமிழ்வு 67% ஆகும். தற்போது 2023ல் இந்த பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா, ஜப்பான் உடன் இந்தியாவும் சேர்ந்து 67% கார்பன் உமிழ்விற்கு காரணமாக உள்ளது. மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வளரும் ஏழை நாடுகள் 33% கார்பன் உமிழ்வுக்கே காரணமாக உள்ளன. ஆனால், பாதிப்பு என்னவோ ஏழை நாடுகளுக்குதான் அதிகம். காலநிலை மாற்ற பாதிப்புகளால் 2050ம் ஆண்டிற்குள் 120 கோடி பேர் காலநிலை அகதிகளாக மாறக்கூடும் என UNHCR ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உணவில்லாமல், இருப்பிடம் பாதித்து, வேலை தேடி ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு அகதிகளாக குடிபெயரப் போகும் அந்த 120 கோடி பேர் யார் என்ற கேள்வி நிச்சியம் நமக்குள் எழ வேண்டும்.
அமெரிக்கா, ஐரோப்பாவைவிட ஆசிய கண்டமும், ஆப்ரிக்க கண்டமும்தான் அதிக பாதிப்பினை சந்திக்கப் போகிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், இலங்கை, பர்மா, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளில் மட்டும் 200 கோடிபேர் தற்போது வாழ்கின்றனர். 2050ல் தெற்காசிய பிராந்தியத்தின் மக்கள் தொகை 300 கோடியைத் தொடலாம். அதிக மக்கள் தொகை கொண்ட, அதிக ஏற்ற தாழ்வுகளுடனும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகம் வசிக்க கூடிய இந்த தெற்காசிய பிராந்தியத்தில் இருந்துதான் மக்கள் அதிகளவில் காலநிலை அகதிகளாக மாறப்போகிறார்கள். காலநிலை மாற்றம் இங்கிருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மேலும் அதிகரிக்கப்போகிறது, வறுமையை மேலும் அதிகரிக்கப்போகிறது, நோய்களை அதிகரிக்கப்போகிறது, நாடுகளின் பொருளாதரத்தை வீழ்ச்சியடையச் செய்யப்போகிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கம் உள்ள , ஏற்றத்தாழ்வு மிக்க நாட்டில் வாழும் நாமும் நம் தலைவர்களும்தான் காலநிலை மாற்றத்தைப் பார்த்து பதற வேண்டும் , ஆனால், எந்த பதட்டமும் இல்லாமல், உற்பத்தி முறையில் எந்த பெரிய மாற்றமும் செய்யப்படாமல், காலநிலை மாற்ற தடுப்பு தகவமைப்பு பணிகள் மந்தமாக நடைபெறுவதை பார்க்கும்போது உண்மையில் வேதனையாகதான் உள்ளது.
தொடரும்…
–பிரபாகரன் வீரஅரசு
குறிப்பு: இக்கட்டுரை 2023 நவம்பர் மாத பூவுலகு இதழில் வெளியானது.