உலக வெப்பமயமாதல் (Global warming), பருவநிலை மாற்றம் (Climate change), இயற்கை சீற்றங்கள் (Natural disaster) போன்றவை மேற்கத்திய நாடுகளில் ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்பட்டாலும் இன்னும் நடுத்தர நாடுகள் அதனைப்பற்றிய கவலை கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அமெரிக்காவில் பருவநிலை மாற்றம் குறித்த தனி அரசியலே நடத்திக்கொண்டிருக்கிற இந்த வேளையில் வளர்ந்து வரும் நாடுகள் இன்னமும் தனக்கான முன்னெச்செரிக்கையை கையில் எடுக்காதது பின்னாளில் பல விளைவுகளையே தரும். என்னைப் பொறுத்த வரை பருவநிலை மாற்றம் என்பது ஒரு சாதாரண நிகழ்வாக நினைத்துக் கடந்து செல்வது என்றுமே ஆபத்துதான். 21ம் நூற்றாண்டின் மத்தியில் ஒட்டுமொத்த உலகின் அமைதி (World Peace), வாழ்வியல்(Livelihood) , அரசியல் (Politics), பொருளாதாரம் (Economy), தொழில்நுட்பம் (Technology) என அனைத்திலும் பருவநிலை மாற்றத்தின் விளைவு அதிகமாகவே இருக்கும். இதைக் கருத்தில் வைத்துத்தான் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாவ்க்கிங் தான் கடைசி புத்தகத்தில் பருவநிலை மாற்றம் மனிதக் குலத்துக்கு ஆபத்து என்றார் எனலாம்.
பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் அறிவியல் (Climate Science) ஒரு புறம் இருந்தாலும், ஏன் இதை நம்மால் சரி செய்ய முடியவில்லை என்பதே அனைவரின் கேள்வி. இங்கு அறிவியலை (Science) அறிவியலாக மட்டும் சமூகத்தை (Social science and Humanistic) சமூகமாக மட்டும் பார்க்கிற சிந்தனையே ஒரு முட்டுக்கட்டை எனலாம். பருவநிலை மாற்றம் பிரச்சனை சற்று வித்தியாசமானது இதை அறிவியல் அறிவோடு கலந்த ஒரு சமூக(Sci-Socio) பார்வையும் மிக முக்கியம் . அது அப்படி இல்லாததும் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாததற்கு ஒரு காரணம். உண்மையில் இதைச் சரி செய்வது கடினம்தான் காரணம் இது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரச்சனையோ அல்லது ஒரு மாகாணத்தின் பிரச்சனையோ அல்ல ஒட்டு மொத்த பூமியின் பிரச்சனை (Global issue). இதில் பூமியில் உள்ள ஒட்டுமொத்த நாடுகளும் பங்கெடுக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தின் காரணங்களை கண்டறிந்து, கார்பன் டை ஆக்ஸிட் அளவைக் குறைத்தால் மட்டுமே நம்மால் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகளால் கூறப்பட்டாலும் அதை ஏற்கப் பல நாடுகள் முன் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், எந்த நாடு பொருளாதாரத்தை ஈட்டிக்கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலையோ அல்லது அந்த குறிப்பிட்ட ஒரு வாயு வெளியிடும் நிறுவனத்தை உடனே நிறுத்த முடியும்? அறிவியல்படி அப்படிப்பட்ட தொழிற்சாலைகளை மூடியே ஆக வேண்டும். இது ஒரே மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ சாத்தியமாகும் ஒரு விடயமே இல்லை. அதற்கு மாற்றான நிலையான (Sustainable) சுற்றுச்சூழல் பாதிப்பற்ற (Green) தொழிற்சாலைகளை கட்டமைக்கலாம். அமெரிக்க மக்களில் குறிப்பாக அதிபர் டிரம்ப் அதன் குடியரசு கட்சினரும் இன்று வரை பருவநிலை மாற்றம் குறித்த அறிவியலை இன்னமும் நம்பத் தயாராக இல்லை. ஒரு வேளைப் பருவநிலை மாற்றத்தின் காரணிகளான தொழிற்சாலைகளை மூடுவதில் இவர்களுக்கும் அந்தத் தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டார்களுக்கும் இழப்பு ஏற்படலாம். இதில் பல்வேறு வாழ்வியல் மற்றும் பொருளாதார, அரசியல் சிக்கல் அடங்கியுள்ளது. தென்கொரியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பருவநிலை விஞ்ஞானிகள் மாநாட்டிலும் (Intergovernmental Panel on Climate Change) பல தீர்மானங்களும் கோட்பாடுகளும் எடுத்துரைக்கப்பட்டது. அதில் முக்கியமாக கார்பன் டை ஆக்ஸிட் வெளியிடும் தொழிற்சாலைகளை மூடல், பூமியின் சராசரி வெப்பம் 2 டிக்ரீயை தொடவேகூடாது எனவும் எச்சரித்தனர்.
எதிர்கால கனமழை, வெள்ளம், புயல், வெப்பக்காற்று, கடுங்குளிர், கடல் மட்டம் உயருதல், உணவு தட்டுப்பாடு என இன்னும் எத்தனையோ விளைவுகளைப் பருவநிலை மாற்றத்தால் மக்கள் சந்திப்பார்கள் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கான சாத்திய கூறுகளும் தினம் தினம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சென்னை வெள்ளம், கேரளா வெள்ளம், அமெரிக்க மாகாணங்கள் காட்டுத்தீ, வெள்ளம், கொரியா ஜப்பான் வெப்பக்காற்று, புயல் எனக் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் பல்வேறு பருவநிலை மாற்றத்தின் தாக்கம் நடந்துள்ளது. இதனால் பலர் இறந்துள்ளனர், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மக்கள் வாழ்வியல் சிதைந்துள்ளது, உணவு பற்றாக்குறை, அரசியல் மாற்றம் என பல்வேறு விளைவுகள், மேலும் பலர் தங்கள் வாழ்ந்த பூர்விக இடத்தை விட்டே இடம் பெயர்ந்துள்ளனர். இதில் மிக விரைவில் பாதிக்கப்பட போகிற மற்றும் தற்போழுது பாதிப்புக்கு உள்ளாகிற மக்கள் சிறு சிறு தீவுகளில் வசிப்பவர்கள். தொடர்ந்து கடல் நீர்மட்டம் அதிகரிப்பதாலும், புயல் தாக்கத்தாலும் தீவுகளில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையே என்ன ஆகும் என்று தெரியாத சூழ்நிலை. இப்படி பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வேறு நாடுகளுக்குப் பலநூறு மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர், அவர்களை பொதுவாக பருவநிலை அகதிகள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். ஒருமுறை மாலத்தீவுகள் பிரதிநிதி ஒருவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கடல் நீர்மட்டம் உயரும் பொழுது மக்கள் என்ன செய்யப்போகிறார்கள், அரசு என்ன செய்யப்போகிறது என்றே தெரியவில்லை என்கிறார்.
இந்த பருவநிலை அகதிகள் என்ற கோட்ப்பாட்டிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட சம்மந்தம் இருக்கிறது. இது மற்ற உலக நாட்டை காட்டிலும் ரொம்பவே வித்யாசமாக இருக்கும்…