தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டில் உயிரிழந்த 101 யானைகளில் 90 யானைகள் இயற்கையான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் 31ம் தேதி தமிழ்நாடு வனத்துறைத் தலைவர் சையத் முசாமில் அப்பாஸ் தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டில் ஏற்பட்ட யானைகள் மரணங்களுக்கான காரணங்கள் குறித்து ஆராய நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டிருந்தார். இக்குழுவை நேரில் கள ஆய்வு செய்து உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசித்து யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களால் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான செயல் திட்டம் ஒன்றைத் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இக்குழுவானது தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு உயிரியலாளர்கள், சூழலியலாளர்கள் மற்றும் வனத்துறை கோட்டங்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்துகளைப் பெற்று வருகிறது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் உட்பட மலைகளை ஒட்டி வாழும் மக்களிடமும் கருத்துகளைப் பெற்று வருகிறது.
இக்குழுவிடம் ஆனைமலை புலிகள் சரணாலயத்தைச் சேர்ந்த பீட்டர் பிரேம் சக்ரவர்த்தி எனும் உயிரியலாளரும், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் எனும் சூழலியலாளரும் இணைந்து 2021ம் ஆண்டில் நிகழ்ந்த யானைகள் உயிரிழப்பு தொடர்பான தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையின்படி 2021ம் ஆண்டில் மட்டும் 101 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 90 யானைகள் இயற்கையான காரணங்களாலும், 5 யானைகள் மின்சாரம் தாக்கியும், 4 யானைகள் ரயில் மோதியும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் மார்ச் 15ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 30 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 28 யானைகளின் மரணமானது இயற்கையான காரணங்களால் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு உயிரிழந்த 101 யானைகளில் 57 யானைகள் நீலகிரி யானைகள் சரணாயத்தில் உயிரிழந்துள்ளன. வனக்கோட்ட அளவில் பார்த்தால் கடந்தாண்டு கோயம்புத்தூர் வனக்கோட்டத்திலும் நடப்பாண்டில் சத்தியமங்கலம் வனக்கோட்டத்திலும் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையுடன் சேர்த்து தமிழ்நாட்டில் யானைகள் வாழிடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், காடுகளை ஒட்டி வாழும் மக்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து கள ஆய்வு மற்றும் நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கைகள் ஆகியவற்றைச் சேர்த்து விரைவில் விரிவான அறிக்கையை வனத்துறையால் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
- சதீஷ் லெட்சுமணன்