இன்று, பல்லடுக்கு அடுக்ககங்களைக் கட்ட பெருநிறுவனங்கள் பரவலாக மைவான் தொழில்நுட்பம் (mivan technology) எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, கட்டிடங்களின் தூண்கள், கூரைகள் போன்ற காங்கிரீட் சட்டகங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்புதான் சுவர்கள் எழுப்பப்படும். ஆனால் இந்த மைவான் தொழில்நுட்பத்தின்படி வலுவான அலுமினியம் form work-ஐ பயன்படுத்தி சுவர்களும் அவற்றைத் தொடர்ந்து தளங்களும் அடுத்தடுத்துக் கட்டப்படுகின்றன.
இந்த வகை கட்டுமானத்தில் பொதுவாக தூண்களோ உத்திரங்களோ இருப்பதில்லை. காங்கிரீட் சுவர்களே தூண்களுகளாகச் செயல்படுகின்றன. இது கட்டிடவியல் பார்வையில் வலுவானவை என்றாலும் முழுக்க முழுக்க சுவர்களுக்கு காங்கிரீட்டை பயன்படுத்துவதால் ஒப்பீட்டளவில் அதிக பொருட்செலவை ஏற்படுத்தக் கூடியவை. எனினும் மரபான காங்கிரீட் கட்டிடங்களைவிட இவற்றை வேகமாக கட்டிமுடிக்க முடிவதால் கட்டுமான காலம் குறைந்து செலவை மிச்சப்படுத்துகின்றன. எனவே பெரும்பாலான பெருநிறுவனங்கள் ஒரே மாதிரியான உள்ளறைகள் கொண்ட அடுக்ககங்களுக்கு மைவான் தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகின்றன.
0
துரதிர்ஷ்டவசமாக இத்தகைய கட்டிடங்கள் உலகம் வெப்பமயமாதலுக்கு ஏற்ற வடிவமைப்பு இல்லை என்று சொல்கிறது ‘டவுன் டூ எர்த்’தின் “Redesign for Comfort” என்ற காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற கட்டிட வடிவமைப்புகள் பற்றி பேசும் சிறப்பிதழ். பொதுவாகவே காங்கிரீட் தளங்கள் மிக விரைவில் சூடாவதுடன் தம் வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. அதனாலேயே இரவில் தென்றல் வீசினாலும் காங்கிரீட் தளங்கள் அனலாய் கொதிப்பதைப் பார்க்கிறோம்.
மைவான் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் வீடுகளின் சுவர்களும் காங்கிரீட்டால் கட்டப்படுவதால் ஏற்க்குறைய ஒரு வெப்ப உலையைப் போலவே இவை வீட்டை மாற்றிவிடுகின்றன. பொதுவாகவே அடுக்ககங்களின் ஜன்னல் வடிவமைப்புகள் காற்றின் திசைக்கு ஏற்றபடி அமைக்கப்படுவதில்லை. திசைக்கு ஒன்றாக அமைந்திருக்கும் நான்கு வீடுகளில் ஏதேனும் ஒன்றிரெண்டே போதுமான காற்றோட்டம் பெறும். இந்நிலையில் இந்த மைவான் தொழில்நுட்ப வீடுகள் அதிக Mechanical ventilation மற்றும் செயற்கைக் குளிரூட்டலின் தேவைக்கும் உள்ளாகின்றன. இவை மொத்த மின் தேவையை பலமடங்கு அதிகரிக்கக்கூடியவை. காங்கிரீட் பிளாக்குகள் வைத்து சுவர்கள் எழுப்புவதும் இதிலிருந்து பெரிதும் மேம்பட்டதல்ல.
இப்படியிருக்க, வருங்காலத்தில் காலநிலை மாற்ற நெருக்கடிகளால் மின்னுற்பத்திக் கட்டமைப்புகள் சீர்குலையும் நிலை ஏற்பட்டால் இவை மனிதர் வாழத்தகுதியில்லாத எரியுலைகளாக மாறிவிடும். ஒரு கட்டிடத்தின் ஆயுள் சுமார் 50-60 ஆண்டுகள் என்று எடுத்துக்கொண்டால் நாம் காலநிலை நெருக்கடிகளை ஏற்கெனவே எதிர்கொள்ளத் தொடங்கிவிட்ட நிலையில் இதன் சாத்தியங்களை சாதாரணமாகப் புறந்தள்ளிவிட முடியாது. நகரின் பெரும்பாலான கட்டிடங்கள் மின்நுகர்வு அதிகமுள்ளவையாய் வடிவமைக்கப்படுவதை அரசும் அனுமதிப்பது சரியானதாக இருக்காது. சமீபத்திய ஐ.பி.சி.சி. அறிக்கையும் கட்டுமானங்களில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்களை அதிகம் பேசும் நிலையில் இத்தகைய கட்டுமானங்களை ஒழுங்குபடுத்துவது குறித்து அரசும் சிந்திப்பது அவசியம்.
டவுன் டூ எர்த்தின் சிறப்பிதழ் இத்தகைய காங்கிரீட் சுவர்களுக்கு மாற்றாக சூரிய ஒளித்தடுப்புகளால் (sunshade) மறைக்கப்பட்ட ஜன்னல்களுடன்கூடிய AAC பிளாக்ஸை (Autoclaved aerated concrete) பரிந்துரைக்கிறது. இவையும் செலவு பிடிக்கக்கூடியவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் சாதாரண சுட்ட மண் செங்கற்களில் Rat Trap Bond system மூலம் சுவர்களைக் கட்டுவதன்மூலம் விலையுயர்ந்த சிமெண்ட் பயன்பாடும் அதிகமிக்க AAC சுவர்களைத் தவிர்க்க முடிவதோடு செலவையும் மிச்சப்படுத்த முடியும்.
நம் கட்டுமானங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். அவை இயற்கையான சுகாதாரமான காற்றோட்டம், வெப்பநிலை இவற்றைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்படுவதே நம் பிழைத்திருக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும். கட்டிட வடிவமைப்பு, அதன் உறுதித் தன்மை, உள் – வெளி அளவீடுகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதுபோல கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டப்படும் விதம் போன்றவை சூழலுக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்றபடி இருப்பதை உறுதிப்படுத்துவதும் அதற்கேற்ற வழிமுறைகளை உருவாக்குவதும் அரசின் கடமை.
– ஜீயோ டாமின்