சமூக உரிமைகளுக்கும் காலநிலை மாற்றத் தீர்வுகளுக்குமான தொடர்புநிலை

கொள்ளிடம் கழிவெளியைச் சார்ந்து வாழும் தலித் மற்றும் இருளர் மக்கள் வாழ்நிலை- சமூக உரிமைகளுக்கும் காலநிலை மாற்றத் தீர்வுகளுக்குமான தொடர்புநிலை

கோடை வெயில் வாட்டியெடுத்தது,  ஜூலை மாதத்தின் உச்சி வெயிலில் பத்மாவின் வீட்டை அடைந்திருந்தேன்.  பசியும், தாகமும் உடலை களைப்படையச் செய்திருந்தது. அவரது வீட்டின் முன்பகுதியில்  உள்ள பனைமரத்து நிழல் திட்டு திட்டாய் பரவி இருந்தது. அந்த நிழலின் ஓர் துளியில் அமர்ந்தேன்.  அங்கேயே உறங்கிவிடலாம் எனத் தோன்றியது. ஆனால், அதையும் தாண்டி பத்மாவின் வீட்டிலிருந்து வந்த கருகிய மணம் என் அடிவயிற்றை சுண்டி இழுக்கத்தொடங்கியது.

இறால் சேகரிக்கும் பத்மா, கையில் மண்கலயம்

பத்மா இருளர் சமூகத்துப் பெண்மணி. அவர் கொள்ளிடம் ஆற்றின் பின்னங்கழி ஆறான குளிர் ஆற்றில் தன் சிறுவயது தொடங்கி தற்போது வரை கைகளால் தடவி இறால் மற்றும் நண்டுகளைப் பிடித்து வருகிறார்.  நான் அவரது வீட்டை அடைந்தபோது அவர் அங்கில்லை. தன் அன்றாடப் பணியான மீன்பிடித்தலை நோக்கியோ அல்லது நூறு நாள் வேலைக்கோ சென்றிருக்கலாம். அப்படி என்றால், அந்த கருகிய  மணம் யார் சமைத்து வருகிறது என்கிற கேள்வி என்னைப்போலவே உங்களுக்குள்ளும் எழுந்திருக்குமல்லவா!.

 

அப்போதுதான் என் வரவை அறிந்து அங்கு வந்த பத்மாவின் பேரனைப் பார்த்தேன். கையில் ஒர் தட்டு அதன் மீது ஆரஞ்சு நிறத்தில் சுடப்பட்ட பெரும் கழி நண்டு. அதன் மணம்தான் என்னை சுண்டி இழுத்தது. பத்மாவின் பேரக்குழந்தைகள் போன்று இப்பகுதி குழந்தைகளின் அன்றாட நொறுக்குத் தீனி நெருப்பில் சுடப்படும் கழி நண்டு. இது நொறுக்குத்தீனி மட்டுமல்ல, இது இப்பகுதி மக்களின் உணவு உரிமையின் அங்கம். ஆனால், அதிகரித்து வரும் காலநிலை மாற்றப்பாதிப்புகள் கழி நண்டுகள் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும், பண்பாட்டு வாழ்வையும் கேள்விக்குறியாக்கி வருகிறது.

என்னுடைய இந்த கள ஆய்வு கட்டுரையானது மக்களின் வாழ்நிலையை ஆவணப்படுத்துவதன் வழியே காலநிலை மாற்றப் பாதிப்புகளை பதிவு செய்யும் ஒரு முயற்சியே. வெறுமனே அறிவியல் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான குரல் எழுப்புவதென்பதை மேட்டிமைத்தனத்தின் போக்கு என்றேக் கருதுகிறேன். அதிலிருந்து வேறுபட்டு, அறிவியல் தரவுகள் மற்றும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை (Real- time) பதிவு செய்வது இந்த  மேட்டிமைத்தனத்தை மட்டுப்படுத்த உதவுவதோடு, கொள்கை வகுப்பாளர்கள் களநிலவரத்தை உணர உதவும். மேலும், காலநிலை மாற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும், மக்களின் சமூக உரிமைகளையும் பறிக்கும் செயல்பாடுகளையும் முழுதுமாக பதிவு செய்துள்ளேன்.

1076 கி.மீ நீளமுள்ள தமிழ் நாட்டின் கடற்கரை, சோழ மண்டலக் கடற்கரை, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா, அரபிக்கடல் ஆகியக் கடற்பரப்பில் அமைந்துள்ளது. இந்தக் கடற்பரப்பில்  மொத்தமாக 17 ஆற்றுப்படுகைகள் வழியே பாயும் ஆறுகள் கடலுடன் சேரும் இடங்களில் ஓட்டுமொத்தமாக 56000 h.a அளவிலான கழிமுகப் பரப்பை உண்டாக்குகின்றன.

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பைல் கழிமுகப் பரப்பின் பங்கு 3.88% ஆகும். இதேபோன்று, தமிழ் நாட்டின் மொத்தப்பரப்பில் 12.35% பகுதி கடலோரச் சதுப்பு நிலமாகவும் உள்ளது. இந்த பரந்துபட்ட  கடலோரப்பகுதி அலையாத்தி எனப்படும் கண்டல் காடுகள் வளர உகந்த இடமாகவும், கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யவும், மாசுகளை வடிகட்டும் வடிகட்டியாகவும், கடலோர மக்களின் வாழ்வதாரமாகவும் விளங்குகிறது.

இவ்வாறான, கழிவெளிகளில் ஒன்றான  கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் பகுதியிலிருந்து தென்பகுதியில் பாயும் உவர்த்தன்மைமிக்க பின்னங்கழி ஆறான குளிர் ஆற்றை நம்பி வாழும் 200க்கும் மேற்பட்ட பெண்களில் ஒருவர்தான் பத்மா.  பத்மாவும் அவரைப்போன்று இந்த ஆற்றை நம்பி வாழும் பெண்களும் பல தலைமுறைகளாக இந்த ஆற்றைச் சார்ந்து வாழும் சூழியல் சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். 

கழிவெளி மீனவர்கள்(Brackishwater Fishers) யார்?

கழிமுக வெளிகளை நம்பி தமிழ் நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக தலித் மற்றும் இருளர் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கைகளால் தடவி இறால், மட்டி  மற்றும் நண்டுகளைப் பிடித்தும் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி  மீன்பிடித்தலிலும் ஈடுபடுகின்றனர். இவர்கள் பாரம்பரிய அறிவினைப் பயன்படுத்தி வளங்குன்றா வகையில் மீன் பிடியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு நிலவின் போக்கு மற்றும் உயரலைகளின் தாக்கம் குறித்த தெளிவான அறிவு உண்டு. மார்கழி மற்றும் தை மாதங்களில் அதிகளவில் இறால் கிடைக்கிறது. இவர்களின் வாழ்வாதார நலன் மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான எவ்வித சட்டங்களோ அல்லது திட்டங்களோ இல்லை. கொள்கை அளவிலும் இவர்கள் குறித்த கவனம் கிட்டப்படவில்லை.

இவர்கள் பெரும்பாலும் மீனவச் சமூகம் அல்லாத பிறகடலோர  சமூகத்தினர்கள். இவர்களே, கழிவெளி மீனவர்கள்(Brackishwaterfishers).

பத்மா தன் சிறுவயது முதலே இறால் பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். உவர்நீர் ஆறுகளில் இடுப்பளவு ஆழமுடைய பகுதிகளிலும், சில சமயம் ஆழம் அதிகமுள்ள பகுதிகளில் மூழ்கியும் இறாலைச் சேகரிக்கின்றார். ஆற்றின் தரைப்பரப்பில் கைகளால் தடவியபடி, மண்டியிட்டு தவழ்ந்தபடி இறால்களைப் பிடித்து ‘பறி’களிலும் சேமித்து வைக்கின்றார்.  பறி பனை ஓலைகளால் முடையப்படும் பை. இது இறால்களைச் சுமக்க எளிதாகவும்,எவ்வளவு நேரமானாலும் உயிர்ப்போடு வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இவ்வாறு பத்மா சேகரிக்கும் மீன்களும், இறால்களும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்லாது, வாழ்வுக்கும் ஆதாரமாக விளங்குகிறது என்பதை அவரின் பேச்சுகள் எனக்கு உணர்த்தியது. முதன்முறையாக அவரைச் சந்தித்தபோது இறால் பிடித்துவிட்டு, அந்த இறாலை அக்கம்பக்கம் பகுதிகளில் விற்றுவிட்டு வந்த களைப்போடு பேசத்தொடங்கிய அவர், “,“எங்க அம்மா அண்ட வெட்டுவாங்க. ஏர் ஓட்டுவாங்க.  நெல்லு விரைப்பாங்க.  எங்க அம்மா பின்னால போய்தான் ஆத்துக்கு போக நாங்க கத்துகிட்டோம். எப்படி பிடிக்கிறாங்க. எப்படி செய்றாங்கனு பார்க்கப்போவோம். அவங்க எப்படி பிடிக்கிறாங்கனு தெரிஞ்சிக்கிட்டு அவங்களோட நாங்களும் தடவுவோம் சின்னப்பிள்ளைல.” என தன் தாய் அம்மணி குறித்து நினைவுகூர்ந்தார்.

பத்மாவின் தாய் அம்மணி

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை குளிர் ஆற்றில் இறால் பிடிப்பில் ஈடுபட்டு வந்த அம்மணி தற்போது வயது மூப்பின் காரணமாக அப்பணியில் இருந்து விலகியுள்ளார். ஆனால், தன் மகன் வீட்டு தாழ்வாரத்தில் அமர்ந்தபடி குளிர் ஆற்றின் சிதைவு குறித்து கூறிய அவர், ““பூத்து கிடக்கும் அப்ப. செத்த நாழில ஒரு பான தடவுவோம். இப்ப கூட போவுதுவோ. ஆனால், ஆத்துல ஒண்ணுமில்ல அதுனால போவமாட்டுதுவோ. எல்லா ஊட்டுல இருக்குதுவோ”  என்கிறார். தற்போது, பல இருளர் பெண்கள் நிலையான வருவாய் தேடி வேறு அமைப்புசாரா வேலைகளைத் தேடி நகர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக பொருளாதார நிலை

இருளர் மக்கள் மணற்பாங்கான இடங்களில், பனை மரம் சூழ அமைந்துள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். சுனாமியின்போது அரசு சாரா நிறுவனங்களால் கட்டித்தரப்பட்ட ஒட்டு வீடுகளிலேயே பெரும்பாலும் வசித்துவருகின்றனர். இந்நிலங்கள் பண்ணை நிலங்கள் என்று கூறப்படுகிறது. சிலருக்கு மட்டுமே பட்டா உள்ளது. இதுவும் அண்மை காலத்தில் பணம் கொடுத்து பட்டா பெறப்பட்டவை.  பலருக்கு வசிக்குமிடமே சொந்தமாக இல்லை.

பொதுக்கட்டமைப்புகள் அனைத்தும் இவர்கள் குடியிருப்பில் இருந்து குறைந்தபட்சம் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சில முதன்மை சாலைகள் இருப்பினும், குடியிருப்புகள் சுற்றி முறையான வழித்தடங்கள் இல்லை.  பெண்கள் நூறுநாள் வேலை, கட்டிட வேலைகளில் சிற்றாளாகவும் ஈடுபடுகின்றனர். ஆண்கள் சுருக்குமடி தொழில் இருந்தவரை மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மீன்பிடித் தொழிலாளர்,  மீன்பிடிச் சார்ந்த பிற வேலைகள் மற்றும் பிற வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். சுனாமிக்கு முன்னர் வரை, அந்தமானில் கடற்பகுதியில் மணல் அள்ளும் பணியில் இப்பகுதி ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். இது பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு உதவியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  சமீப காலம்வரை குழந்தைத் திருமணம் நடத்த முயன்று அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இப்பகுதியில் குழந்தைகள் உரிமை தொடர்பாக பணியாற்றுபவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், இப்பகுதி மக்கள் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினராகக் குறிப்பிடுகின்றனர். எனினும், இவர்கள் இருளர் மக்கள்(யானதிகளாகவும் இருக்கலாம்)  என ஊரில் உள்ள பிற சமூகத்தினர்கள் குறிப்பிடுகின்றனர். சாதி ஒடுக்குதலின் அழுத்தமே இதற்குக் காரணம்.

சூழல் சமூகப் பொதுவெளிகள் மீதான விளிம்பு நிலை சமூகங்களின் உரிமைகள்

இவ்வாறான, சமூக-பொருளாதார சூழலில் உழலும் இப்பகுதி பழங்குடி மக்களுக்கு குளிர் ஆறு போன்ற சூழல் பொதுவெளிகள் (Coastal Commons)அவர்களின் பொருளாதார ரீதியாகப் பலப்படவும், ஆரோக்கியமான உணவுக்கும் ஆதாரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சதுப்புநிலம் போன்ற கார்பன் தொட்டிலாக விளங்கும் இயற்கை அமைப்பை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், குளிர் ஆறுகள் போன்ற இயற்கை அமைவுகள் மீதான பழங்குடி மக்களின் உரிமைகள் நசுக்கசுப்பட்டு வருகிறது.

““எங்க அம்மா உள்ள காலத்துல இருந்து ஆத்துக்குதான் போவன். அதுலா தான் எங்களுக்கு பிழைப்பே. வத்தமாக இருந்தால் காலையில் ஆறு மணிக்கே போய்டுவோம். தண்ணி ஏறது பாத்தோம்னா 10 மணி வாக்கில் போயிட்டு ஐந்து மணிக்கு திரும்புவோம். அப்ப இறால் கனமா கெடச்சிச்சு இப்ப அவளோது கெடைக்கல” என பத்மாவுடன் இறால் சேகரிக்கும் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற வெள்ளையம்மா கூறுவதன் பின்னணியில் சூழியல் சிதைவுக்கான காரணிகளே தெரிந்தன.

கொள்ளிடம் ஆற்றின் பின்னங்கழி ஆறினை ஒட்டி அவிசெனியா மரீனா எனப்படும் கண்ணா காடுகள் வகை செழித்துக் காணப்படுகிறது. இயற்கையாக காணப்படும் அலையாத்திக் காடுகளோடு, செயற்கையாக காடு வளர்ப்புப் பணியும் நடைபெற்று வருகிறது. அத்தகைய அளவுக்கு சூழியல் மிக்க பகுதியாக உள்ள இப்பகுதி, இறால் பண்ணைகளால் மிகப்பெரும் அளவுக்கு சூழியல் சிதைவுக்கு உள்ளாகி வருகிறது.

குளிர் ஆற்றில் காணப்படும் அலையாத்திக்காடுகள் 

இறால் பண்ணைகளின் தாக்கமும், சிதையும் மக்கள் உரிமைகளும்

இறால் பண்ணைகள் அலையாத்திக் காடுகளை ஒட்டி செயல்படுகிறது. அதற்கான நன்னீர் இந்த ஆறுகளிலிருந்தே எடுக்கப்படுகிறது. அதே போல், இறால் பண்ணைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் முழுமையும் அலையாத்திக் காடுகளுக்குள்ளேயே வெளியேற்றப்படுகிறது. மேலும், நன்னீர் தேவைகளுக்காக அலையாத்தி காடுகளும் சிதைக்கப்படுகிறது. அலையாத்திக் காடுகளின் நிலையைப் பார்க்க நேர்ந்தபோது, நேரடியாக நன்னீர் தேவைக்களுக்காக  அலையாத்திக் காடுகளுக்குள்  சேற்றுக்குன்றுகளை(mudflats) சிதைத்து கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தது.

மேலும், இறால் குட்டைக்குத் தண்ணீர் எடுக்கும்போது இறால் குட்டைகளின் அருகில் உள்ள ஆற்றுப்பகுதிகளில்  பெண்களை இறால் எடுக்க அனுமதிப்பது இல்லையென்றும், மீறி இறால் எடுத்தால் தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் இப்பகுதியைச் சார்ந்த பாரம்பரிய இறால் பிடியாளர்கள் கூறுகின்றனர்.

இறால் பண்ணைகளின் கழிவு நீரால் பாதிக்கப்படும் அலையாத்திகள்

இறால் பண்ணை உரிமையாளர்களின் அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதாரப் பின்புலத்தின் காரணமாக இறால் பண்ணையின் ஓரங்களில் மக்கள் நெருங்காத வண்ணம் கருவேல முட்களைக் வெட்டியும் போட்டுள்ளனர். இதன் காரணமாக இறால் பெருமளவில் கிடைத்தாலும் கூட இப்பகுதி பெண்கள் இறால் பண்ணை ஓரங்களில் இறால் தடவுவதைத் தவிர்க்கின்றனர். இந்நிலையில், இறால் பண்ணைகளின் ஆதிக்கம் சதுப்புநிலங்களின் சூழியல் அமைவை சிதைப்பதோடு, மக்களின் சமூக உரிமைக்கும் சூழியல் பாதுகாப்புகான சங்கிலியை அறுத்துவருகிறது. இந்த அறுபடல் காலநிலை மாற்றத்தீர்வுகள் எனும் பிணைப்பிலும் விரிசலை உண்டாக்கிவருகிறது.

கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள பழையார் மீன்பிடித்துறைமுகம் தொடங்கி  சின்னக்கொட்டாய்மேடு கிராமம் வரை குளிர் ஆற்றின் இருமருங்கிலும் இறால் பண்ணைகள் கண்டல் காடுகளை ஒட்டியே அமைந்துள்ளது. கடல்நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் தகவலின் படி, தாண்டவன்குளம் மற்றும் மடவாமேடு பகுதியில் முறையே  45.86 ha மற்றும் 9.18 ha பரப்பளவில்(water spread area) மொத்தமாக 33 இறால் பண்ணைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த இறால் பண்ணைகளால் குளிர் ஆறும் அதனையொட்டிய கடலோர சதுப்புநிலமும் கடுமையான விளைவுகளைச் சந்தித்து வருகிறது.

S.no NameoftheRevenue Village W.S.A (ha) Total Farms
1. Thandavankulam 45.86 25
2. Madavamedu 9.18 8
3. Pudupattinam 9.82 4
4. Puliyanthurai 19.77 8
5. Pazahaiyapalayam 23.83 18

கொள்ளிடம் ஆற்றின் கழிமுகப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படும் இறால் பண்ணைகளின் விபரம்,  Source: Registered under Coastal Aquaculture authority : W.S.A- Water Spread Area

அலையாத்திக் காடுகளுக்கு அருகில் செயல்படும் இறால் பண்ணைகள். வரைபடம்: சிவரஞ்சன். பெ

 

இறால் பொரிப்பகங்களுக்காக காணாமல் போகும் பூரான்பூச்சிகள்!

இதேவேளையில், இறால் பொரிப்பகங்களுக்காக polychaetes எனப்படும் பூரான் புழுக்கள் களவாடப்பட்டு வருகிறது. இவை அன்னலிடா எனப்படும் வளைதசைப்புழுக்கள் தொகுதியைச் சார்ந்தது.  இது இறால் முட்டையிலிருந்து nauplius நிலையை விரைந்து அடைய உதவுகிறது. கடலோரப்பகுதியில் காணப்படும் இப்புழுக்களை இறால் பண்ணைகளுக்காக ஆறுகளின் கரைகளையும், சேறு திட்டுகளையும், கழிவெளிகளையும் சிதைத்து எடுக்கப்படுகிறது. இதற்காக வெட்டப்படும் குழிகளால் இப்பகுதியின் சூழல் பாதிக்கப்படுவதோடு, இறால் தடவச்செல்லும் பெண்கள் இக்குழிகளில் விழுந்து நடக்கவியலாத சம்பவங்களும் நடந்தேறியுள்ளதாக இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.  மேலும், இதன் காரணமாக கழிநண்டுகள் மற்றும் பிற நண்டு வகைகளின் வளைகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. இது உணவுச்சங்கிலியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் முதலாளிகளும், அரசியல் பின்புலம்கொண்ட சிலரால் இந்த  polycheates எனப்படும் பூரான் புழுக்கள் எடுக்கப்படுவதால் இதனைத் தட்டிக்கேட்க இயலாமல், தாங்கள் பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த சூழல் பொதுவெளியின் சிதைவையும், பாரம்பரிய உரிமைகள் முற்றிலுமாக கேள்விக்குள்ளாகும் நிலையில் மிகப்பெரும் ஒடுக்குதலைச் சந்தித்து வருகின்றனர்.

இத்தகைய சூழல் பத்மா போன்ற பாரம்பரியமாக இறால் பிடிக்கும் பெண்களின் உழைப்பு நேரத்தை அதிகப்படுத்தியோடு, வருமானத்தையும் குறைத்துள்ளது.

“அப்போ கழுவந்த் தெரியாத நாள். கழுவந்த் தெரிய நாள்னா ஒரு பை, ஒரு பனை பிடிப்போம். இறால் குட்டையில் வளர்க்கும் இறாலைவிட பெரியதாக இருக்கும். என் வயசுக்கு என் உள்ளங்கை அளவைவிட மிகபெரிதாக  இறால் பிடித்திருக்கிறோம்.  இப்போ மிகச் சிறிதாகவே கிடக்கிறது. அப்போது பாதியை மக்களிடம் 100- 50 கொட்டி கொடுத்து விட்டு வருவோம். ஆனால், இப்பொது குழம்புக்காக நாங்கள் எடுத்து வரும் இறாலையும் வயிற்றுபிழைப்புக்காக 100-50 க்கோ விற்றுவிற்று வருகிறோம்.  அப்போது விற்றதுபோக பெரிய பெரிய இறாலையும் நண்டையும் ஆக்கி  சாப்பிடுவோம். ஆனால், இப்போ அப்படி கிடையாது, எல்லாவற்றையும் விற்று விட்டு எஞ்சியதை குழம்புக்கு வைத்துக்கொள்கிறோம்” என்கிறார் பத்மா. 

இறால் பொரிப்பகங்களுக்காக சேகரிக்கப்படும் வளைதசைப் புழுக்கள் source: EPW

உயிர்ப்பன்மையச் சிதைவு

வெள்ளை இறால், கல்லூண்டி இறால், வருச இறால் அல்லது சேத்து இறால் போன்ற இறால் வகைகளை இப்பகுதி மக்கள் பிடித்து வருகின்றனர். இதேபோல, மடவாக்கெண்டை, பாலக்கெண்டை, கிழிசை, செத்தைப் போன்ற மீன்களைப் பிடித்து வருகின்றனர். ஆனால், சமீபமாக ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட மீன்வகையான சிலேப்பி மீன்களே தற்போது அதிகமாகக் கிடைக்கிறது. இதேபோன்று, இறால் பண்ணைகளின் தாக்கத்தால் இறால் முட்டைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. முன்னர் கிடைத்த பெரிய அளவிலான இறால்களின் அளவுக்கு தற்போது இறால்களே கிடைப்பதில்லை எனவும் பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.

இறால் பண்ணைகளால் வெளியேற்றப்படும் சுத்திகரிப்படாத கழிவு நீர் மற்றும் சேறு திட்டுகளைச் சிதைத்து உருவாக்கப்பட்ட கால்வாய்களும் அலையாத்திக்காடுகளின் வளர்ச்சியை பாதித்து வருகிறது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தால் உவர்நீரின் தாக்கம் அதிகரிப்பதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

சூழியல் பாதுகாப்புக்கு எதிர் திசையில் செயல்படும் வனத்துறை

இந்நிலையில், வனத்துறையின் போக்குகள் பழங்குடி மக்களை அப்புறப்படுத்தும் வகையில் உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சூழியல் சிதைவுக்கு காரணமானவைகளின் மீது கண்டும் காணாத போக்கையே கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

“FOREST காரங்களே பணத்தை வாங்கிகிட்டு வெட்ட விடுறாங்க.  மம்பட்டிய புடிங்கி கிட்டு ஒரு ஆளுக்கு ஆயிர ரூபா குடுனு கேட்பாங்க. பூச்சி வாங்க வருகிற  வியாபாரிகள்தான் அந்த பணத்தைக் கொடுக்கிறாங்க. அதை நீங்க எடுத்துட்டு போய் காசு பாத்துட்டு போயிட்ரிங்க. அப்பறம் எங்களுக்கு விளைவு” என்கிறார் பல ஆண்டுகளாக இறால் தடவும் பழங்குடி பெண்மணி.

மேலும், இறால் பண்ணைகள் சட்டவிரோதமாக நிகழ்த்தும் அத்துமீறல்கள் குறித்து கண்டுகொள்ளாத வனத்துறை, சமீபகாலமாக  பழங்குடி மக்கள் இறால் பிடிப்பதன்மீது கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

“இறால் தடவுனா கலயத்துக்கு இவ்வளோ கணக்கா குத்தகை குடுக்கணும். இப்ப நா போவல. ஆடி மாசம் அப்போ வந்து மறச்சி கலயத்துக்கு இவளதுனு குடுத்தா ஆத்துல இறங்குங்க. இல்லனா ஆத்துல்ல இறங்கப்படாதுனு சொல்லிட்டு மறச்சிட்டங்க. பெர்மிட் போட்டுட்டு தடவுங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா, வருஷம்  முச்சிடும் புள்ளன்னு பிறந்தப்ப இருந்து பிளைச்சிருக்கோம். நீங்க அப்பைலிருந்து control போடாம இப்ப எப்படி control போடுறீங்க”என வனத்துறையின் கட்டுப்பாடுகள் சூழியலைப் பாதுகாக்கும் மக்களின் உரிமைகளை எவ்வாறு துண்டாடுகிறது எனக்கூறுகிறார் இப்பகுதி சார்ந்த பெண்மணி ஒருவர்.

இந்நிலையில், சூழியல் சிதைவும் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகள் மீதான ஒடுக்குதலும் ஒன்றிணைந்து காலநிலை மாற்ற இடர்களைத் துரிதப்படுத்திவருகிறது. ஒருபுறம் நாட்டின் வனப்பரப்பை 30% அதிகப்படுத்துவது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தீர்வாகக் கூறப்படும் வேளையில், அச்சூழியல் அமைவை சிதைக்கும் காரணிகளையும், அதன் மீது உரிமை கொண்டுள்ள மக்களின் சமூக உரிமைகளையும் பாரம்பரிய அறிவையும் புறந்தள்ளுவதும் , இந்த ஒட்டுமொத்த பணியையும் எதிர்திசையில் நகர்த்தி வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டியுள்ளது.  அதிலும், குறிப்பாக கடலோரங்களில் வாழும் மீனவர் மற்றும் மீனவர் அல்லாத பிற கடலோரம் சார் சமூகத்தின் உரிமைகள் மீதான கவனக்குவிப்பு என்பது கார்பன் தொட்டிலாகவும், பூமியின் சிறுநீரகமாவும் விளங்கும் கடலோரங்களின் சூழியல் பாதுகாப்பை உறுதி செய்ய  மிகுந்த பயனளிக்கும். அதைவிடுத்து, 2030 க்குள் நாட்டின் 30% பகுதியை பாதுகாக்கப்பட்டதாக அறிவிப்பது மட்டுமே தீர்வாகாது.

-பிரதீப் இளங்கோவன்

குறிப்பு: இக்கட்டுரை 2023 அக்டோபர் மாத பூவுலகு இதழில் வெளயானது.

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments