தமிழ்நாட்டுக்கான காலநிலை கரிமவாயு நீக்க வழிமுறைகள் மற்றும் காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு இணையதளத் தொடக்க விழா 31.10.2025 அன்று சென்னையில் உள்ள ஐ.டி.சி. நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழான பசுமை காலநிலை நிறுவனம், காலநிலை மாற்ற இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து வசுதா பவுண்டேசன் எனும் தனியார் அமைப்பு கோயம்புத்தூர். நீலகிரி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கான கரிமவாயு நீக்க வழிமுறைகள்குறித்த திட்ட அறிக்கையைத் தயாரித்திருந்தது. மேலும் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவும் ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு” காலநிலை மாற்றம் என்பது, சுற்றுச்சூழலுக்கு சவாலானது மட்டுமல்ல, பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்டது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதனால்தான் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் துவங்கப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக, காலநிலை கரிமவாயு நீக்க வழிமுறைகள்குறித்த செயல்திட்டம் முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.” எனப் பேசினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் போக்குவரத்து, மின்சார பயன்பாடு, வேளாண்மை, தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து வெளியேறும் கரிம வாயுக்களின் அளவைக் கண்டறிந்து அவற்றைக் குறைக்கும் நோக்கத்துடன் கரிமவாயு நீக்க வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கரிமவாயுக்களை ஒவ்வொரு துறையிலும் கட்டுப்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்கள், அதற்கான நிதிகளைப் பெறுவது, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கால அளவு ஆகியன குறித்து இந்த ஆவணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுகு வரும் பட்சத்தில் 2050ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டுதோறும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2087 ktCO2e, நீலகிரி மாவட்டத்தில் 276 ktCO2e, இராமநாதபுரம் மாவட்டத்தில் 1064 ktCO2e, விருதுநகர் மாவட்டத்தில் 1614 ktCO2e அளவிற்கான கரிமவாயு உமிழ்வை மட்டுப்படுத்த முடியும் என வசுதா பவுண்டேஷன் வெளியிட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்தால் நீலகிரி மாவட்டம் 2030ஆம் ஆண்டுக்கு முன்பாகவும் இராமநாதபுரம் 2047ஆம் ஆண்டிலும் கார்பன் சமநிலையை எட்டுவதற்கான திறன் படைத்தவையென இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு RCP 8.5 என்கிற அதிகமான அளவிலிருந்தால் 2090ஆம் ஆண்டு வாக்கில் அம்மாவட்டத்தின் சராசரி வெப்பநிலையானது 3.5 டிகிரி செல்சியஸ் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி கோயம்புத்தூரின் கார்பன் உமிழ்வானது ஆண்டுக்கு 4202 ktCO2e ஆகும். இதில் போக்குவரத்து 36%, வீட்டு மின்சார உபயோகம் 12%, தொழிற்துறை மின்சார உபயோகம் 10%, சிமெண்ட் உற்பத்தி 10% ஆகும். நகரங்களுக்குள்ளேயான பேருந்துப் போக்குவரத்தில் 2030ஆம் ஆண்டு வாக்கில் 500 மின்பேருந்துகளைச் சேர்த்தால் ஆண்டுக்கு 38 ktCO2e அளவுக்கான உமிழ்வைத் தடுக்க முடியும். இதற்கு 900 கோடி செலவாகும் நிலையில் PM E-Drive திட்டத்தில் ரூ.140 கோடி, தமிழ்நாடு மின் வாகனக் கொள்கைமூலம் ரூ. 50 கோடி, மாநில மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூ. 70 கோடி நிதியை இதற்காகப் பயன்படுத்தலாம் என்கிறது இவ்வறிக்கை.

நீலகிரி மாவட்டம் புவி வெப்பமயமாதலின் தாக்கத்துடன் சேர்ந்து கட்டற்ற சுற்றுலா, நிலப்பயன்பாடு மாற்றம் மற்றும் நைட்ரஜன் உரப் பயன்பாடு ஆகியவற்றினாலும் பாதிப்படைந்து வருகிறது. 2022 நிலவரப்படி மாவட்டத்தின் மொத்த உமிழ்வான 334 ktCO2e சாலைப் போக்குவரத்து 43% வீட்டு மின்சாரப் பயன்பாடு 20% ஆகும். 2050ஆம் ஆண்டு வாக்கில் 100% இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களையும், 70% நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 50% பேருந்துகளையும் மின்சார வாகனங்களாக மாற்றுவதன் மூலம் நீலகிரியின் மொத்த உமிழ்வில் 19% அதாவது 86 ktCO2e உமிழ்வைக் குறைக்க முடியும் என்கிறது நீலகிரிக்கான கரிமவாயு நீக்க வழிகள்குறித்த ஆவணம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 87 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட மின்னுற்பத்தி நிலையங்களை 156 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய, காற்றாலை மற்றும் பசுமை ஹைட்ரஜன் மின்னுற்பத்தியைக் கொண்டு மாற்றினால் ஆண்டுக்கு 209 ktCO2e உமிழ்வை மட்டுப்படுத்தலாம். 304 எக்டேர் அளவில் அலையாத்திக்காடுகளை மறுசீரமைத்தால் ஆண்டுக்கு 28 ktCO2e கரிமவாயுவைப் பிடித்து வைக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக 4 மாவட்டங்களிலும் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களை அரசு வெளியிட்ட ஆவணங்கள் எடுத்துரைக்கின்றன. இதுகுறித்துப் பேசிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு “4 மாவட்டங்கள் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்கு மாவட்ட ஆட்சியர் முதல் அரசின் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த ஆவணம் ஒரு முக்கியமான வழிகாட்டுதலாக இருக்கும். மாவட்டத்தில் என்ன மாற்றம் நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதற்கான தளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் ஒவ்வொரு துறையிலும் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைப் பொதுமக்களும் அறிந்துகொள்ள முடியும்” எனக் கூறினார்.
-சதீஷ் லெட்சுமணன்
