வளர்ச்சிவாதம் இனி செல்லாது!

கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள்  கடலினுள் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்திய ஆளும் வர்க்கம், நடுத்தர வர்க்கம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கேட்ட ஒரே ஒரு கேள்வி “அப்போது வளர்ச்சி வேண்டாமா?” என்பதே. இந்தக் கேள்வி இன்றும் கேட்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. “சூழலுக்குத் தீங்கு என்று அனைத்தையும் எதிர்த்தால் வளர வேண்டாமா? வளர்ச்சி வேண்டாமா? அனைவரும் கற்காலத்துக்குப் போய்விட வேண்டுமா?” என்பது ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதோ ஒரு மூலையில் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உண்மையாகவே வளர்ச்சியை மக்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? இந்த வளர்ச்சியின் அடிப்படை தான் என்ன? இதனைப் புரிந்து கொள்ளுதல் அவசியம் ஆகிறது.

வளர்ச்சியும் வளர்ச்சிவாதமும்:

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்பு ஐரோப்பியக் காலனியாதிக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாடாக விடுதலை பெறத் துவங்கியது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை உலகப் பொருளாதார வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தைத் துவங்கியிருந்தது. நெடுங்காலமாக, ஏன் நூற்றண்டுகளாக பொருளாதார மந்தநிலையிலும் தேக்கத்திலும் இருந்த இக்காலனி நாடுகள், அரசியல் விடுதலைக்குப் பின் புதிய உத்வேகத்தோடு சமூக-பொருளாதார வளர்ச்சியை எதிர்நோக்கித் திட்டங்கள் வகுக்க துவங்கின. இந்நாடுகளுக்கு வளர்ச்சிக்கானத் தேவை இருந்தது என்பது எவ்விதத்திலும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த வளர்ச்சியின் தேவையை முதலாளித்துவமும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளும் உட்கிரகித்துக்கொண்டன என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது. இது முதலாளித்துவ வளர்ச்சியை உலகளாவிய வளர்ச்சியின் மாதிரியாகக் கட்டமைத்தன.

1949ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஹென்றி ட்ருமன் (Henry Truman), புதிதாக விடுதலை அடைந்த நாடுகளை ‘வளர்ச்சியடையாத’ அல்லது ‘வளர்ச்சி குன்றிய நாடுகள்’ (Underdeveloped) என்று அறிவிக்கிறார். அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவும் என்றும் கூறுகிறார். இதன் பின்பு தான் ‘வளர்ச்சி’ என்ற பதம் உலக அளவில் பரவலாகப் பேசப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (International Monetary Fund) போன்ற உலக அமைப்புகள் ‘வளர்ச்சிக்கான’ அடிப்படைகளை ஆராயவும், அதன் செயல்திட்டங்களை வகுக்கவும் துவங்குகின்றன. இந்த வளர்ச்சியின் செயல்திட்டங்கள் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம், கட்டுப்பாடற்ற உற்பத்தி மற்றும் முதலாளித்துவம் என்னும் மேற்கத்திய/ஐரோப்பிய மாதிரியை முன்வைத்தன.

இங்கு தான் வளர்ச்சிக்கான தேவையும் செயல்திட்டங்களும், முதலாளித்துவத்தை உலகில் தக்கவைப்பதற்கான தத்துவார்த்த அடிப்படையாய் மாறிப் போயின. முதலாளித்துவத்தினை எதிர் கேள்வி கேட்காமலும் மாற்று இல்லாத ஒரு சமூகப் பொருளாதார உற்பத்தி முறையாகவும் மாற்றுவதற்கான அடிப்படை அங்கீகாரத்தை இந்த ‘வளர்ச்சி தத்துவம்’ அளித்தது. வளர்ச்சிவாதம் (Developmentalism) பிறந்தது!

அதன் உருவாக்கத்தின் நோக்கமே, முதலாளித்துவத்தில் மட்டும் தான் வளர்ச்சி சாத்தியம் என்பதை நம்ப வைத்து; மாற்று இல்லாத பொருளாதார அமைப்பாக முதலாளித்துவத்தை நிறுவுவது தான். அதனை வளர்ச்சிவாதம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகவும் செய்துவந்தது. ‘The Development Dictionary’ என்ற புத்தகத்தின் முன்னுரையில் அதன் ஆசிரியர் உல்ப்காங் சாக்ஸ் (Wolfgang Sachs) இவ்வாறு எழுதுகிறார்.

“உலகப்போர்களுக்குப் பிந்தைய உலகில், மூன்றாம் உலக நாடுகளுக்கான கலங்கரை விளக்கமாக ‘வளர்ச்சிவாதம்’ இருந்தது. மக்களாட்சியோ சர்வாதிகாரமோ, எதுவாக இருப்பினும் இந்நாடுகளுக்கு முக்கிய குறிக்கோளாக வளர்ச்சியே கூறப்பட்டது. அத்தனை தியாகங்களும் அந்த குறிக்கோளை அடையவே செய்யப்பட்டது. நான்கு தசாப்பதங்களுக்குப் பிறகும், முன்பிருந்த அதே தூரத்திலேயே இருக்கும் வளர்ச்சி என்னும் அந்தக் குறிக்கோளை மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளும், மக்களும் பார்த்த வண்ணம் உள்ளனர். அந்த கலங்கரை விளக்கம் ஒரு பேரிருளில் மறைந்து கொண்டிருக்கிறது.”

இருபதாம் நூற்றாண்டின் மதம்:

இதில் இந்த வளர்ச்சிக்காகத் தியாகம் செய்ய ‘வைக்கப்பட்ட’ மக்கள் அனைத்து நாடுகளிலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட/படுகிற மக்களாகவே இருக்கின்றனர். இந்தியா உலக அளவில் பெரும் இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதி நாடாக மாறுவதற்கான விலையைத் தண்டகாரண்யம் முதலான மத்திய இந்தியக் காடுகளில் வசித்த பழங்குடி மக்கள் தந்தனர். இந்த வளர்ச்சிக்காக அவர்கள் பன்னெடுங்காலமாக வசித்த அவர்களது நிலங்கள் பிடுங்கப்பட்டு, அவர்களின் காடுகளில் இருந்து துரத்தப்பட்டனர். இந்த வன்முறையை எல்லாம் இந்தியாவின் வளர்ச்சிக்கான ‘தியாகம்’ என்ற பெயரில் அவர்களின் மீது நிகழ்த்தியது இந்திய அரசு.

உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகச் சர்தார் சரோவர் அணையைக் கட்டி, உலக அளவில் இந்திய வளர்ச்சியின் முத்திரையைப் பதிக்க, அதன் உயரும் நீர்மட்டத்தில் மூழ்கிக் கிடக்கும் பழங்குடிகளின் நிலமும், குடிசைகளும் தியாகம் செய்யப்பட்டன. இந்தியா மின்சாரம் பெறக் கூடங்குளம் அணுவுலையின் அருகாமை கிராம மக்கள் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்ய மாட்டார்களா என்று கேட்கப்பட்டது. சென்னையின் வளர்ச்சிக்கு எண்ணூரும், மணலியும் தியாகம் செய்யப்பட்டது. இன்று சிங்காரச் சென்னைக்கு ஆர்.ஏ.புரத்தில் வசித்த ஒடுக்கப்பட்ட மக்களைத் தியாகம் செய்யக் கோருகிறது அரசு. இந்தத் தியாகத்தை ஏன் அடையாறும், மைலாப்பூரும் செய்வதில்லை என்று யாரும் கேட்பதில்லை. இது போன்ற அனைத்து வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் ‘வளர்ச்சி’ என்ற பதத்தால் அங்கீகாரம் பெற்றுவிடுகின்றன. இதன் அடிப்படையில் பார்த்தால், ‘வளர்ச்சிவாதம்’ தான் இருபது மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் ‘மதம்’ என்றே கூறலாம். (PUT IT IN BOX)

நிலவுடைமை சமூகத்தில் அரசு, அதன் பொருளாதாரக் கொள்கைகள், அதன் அடக்குமுறைகள், ஏற்றத்தாழ்வுகள் என அனைத்தும் கடவுளின் பெயரால் அங்கீகாரம் பெற்றது. மதமே சமூகத்தின் மையமாக இருந்ததற்கும், சர்வ பலம் பொருந்திய அமைப்புகளாக இருந்ததற்கும் இதுவே முக்கிய காரணம். இன்றைய காலத்தில் இந்த மதத்தின் இடத்தை ‘வளர்ச்சிவாதம்’ பிடித்திருக்கிறது. இதன் மூலம் வளர்ச்சித் திட்டம் என்று கூறிவிட்டால் எவரும் கேள்வி கேட்க முடியாத ஒரு புனிதத் தன்மை வளர்ச்சிவாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தத்துவார்த்த அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவமும், அதனைத் தொடர்ந்து நவ-தாராளவாதமும் (Neoliberalism) கேள்வி கேட்க முடியாத புனிதமான இடத்தில் அமர்ந்துள்ளன.

வளர்ச்சிவாதத்தின் தத்துவார்த்த எதிர்ப்பு:

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பினை எதிர்த்து உருவான ‘சோசியலிச’ நாடுகளால் கூட இந்த வளர்ச்சிவாதத்தில் இருந்து தப்ப முடியவில்லை. சோசியலிச உற்பத்தி முறையைக் கையில் எடுத்துக்கொண்ட போதிலும், வளர்ச்சிவாதம் பேசின நாடுகளாகவே சோசியலிச நாடுகள் இருந்தன. அதன் அரசின் அடிப்படை அங்கீகாரத்தை முதலாளித்துவ நாடுகளோடு வளர்ச்சியில் போட்டி போட்டுப் பெற முயன்றதாகவே சோசியலிச நாடுகளின் வரலாறு இருந்தது. முதலாளித்துவத்தை வீழ்த்த அதன் தத்துவார்த்த அடித்தளமான ‘வளர்ச்சிவாதத்தை எதிர்க்காதது ‘சோசியலிச வீழ்ச்சியின்’ முக்கியக் காரணி என்கிறார் பேராசிரியர் அரிப் டிர்லிக் (Arif Dirlik).

வளர்ச்சிவாதம் என்னும் இந்த தத்துவார்த்த அடித்தளத்தை ஓரளவேணும் எதிர்த்தது மாவோவின் சீனா தான். சந்தைக்கு நன்மை பயக்கும் வண்ணம் உற்பத்தியையும் அதன் பலன்களையும் குறிப்பிட்டப் பெருநகரங்களில் குவித்து அதனால் உருவாகும் உபரியை (Surplus) லாபமாக முதலாளித்துவ வர்க்கத்திற்குக் கொட்டாமல், சிறு நகரங்களை நாடு முழுவதும் உருவாக்கி அதில் உற்பத்தியையும் அதன் தொழில்நுட்பங்களையும் சமத்துவமான முறையில் பகிர்ந்தளித்து அதனைச் சூழ்ந்த கிராமங்களுக்கும் அதன் பலன்கள் சென்று சேரும் வண்ணம் நாட்டின் உற்பத்தி வரைபடத்தையே மாற்ற முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார் மாவோ! இதனை மாற்று வளர்ச்சிக் (Alternative development) கோட்பாட்டின் மைல்கல் என்கிறார், சமூகவியல் ஆய்வாளர் ரஜினி கோத்தாரி. இது போன்ற வளர்ச்சி மாதிரியை ‘Reorganization of Space and Reworking the production systems and its technologies’ என்ற தன்மையதாக வரையறுக்கிறார். ஆனால் இது 70களுக்குப் பிறகான சீனாவில் மாறியது. உலக வளர்ச்சிப் போட்டியில் சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டு, வளர்ச்சிவாதம் பேசிக்கொண்டு சீனாவும் ஓடத் துவங்கியது.

பிற நாடுகளில் வளர்ச்சிவாதமும் அதனால் அங்கீகாரம் பெற்ற முதலாளித்துவமும் நவதாராளவாதமும் கோலோச்சின. இன்று தான் இந்த ‘வளர்ச்சிவாதத்தை’ எதிர்த்து கேள்விகள் வருகின்றன. கேட்பவர்கள் எளிய மக்களாக இருக்கின்றனர். அந்தக் கேள்விகளின் அடிப்படை ‘நீதி’க்கான குரலாக இருக்கிறது. அதன் காரணம் என்னவென்றால், எத்தனை தத்துவார்த்த மேல்பூச்சுப் போட்டு மறைத்தாலும் முதலாளித்துவத்தால் சமத்துவமான, நீதியை நிலைநாட்டிய ஒரு சமூகத்தை அமைக்க முடிவதில்லை.

கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியதைப் போல ஆளும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் அரசும் கேட்ட கேள்விகளுக்குப் போராடும் மக்களிடம் இருந்து வந்த பதில் “வளர்ச்சி என்ற சொல் அத்தனை அநீதியையும் சமன் செய்யாது. எங்களுக்குப் பயன்களைத் தராமல், ஆபத்தை மட்டும் தரும் வளர்ச்சி எங்களுக்குத் தேவை இல்லை” என்பதே. இப்படித்தான் ‘வளர்ச்சிவாதம்’ என்ற தத்துவார்த்த அடிப்படையை ‘நீதி’ (Justice) என்னும் தத்துவம் எதிர்த்து நிற்கிறது. (PUT IN  BOX) இந்த நீதி ஒரு நாட்டின் மக்களுக்கு இடையில் என்பதோடு நில்லாமல், நாடுகளுக்கு இடையிலான நீதியாக, தலைமுறை கடந்த நீதியாக (Intergenerational justice) வளர்ந்துள்ளது. முதலாளித்துவ வளர்ச்சிவாதத்தை ‘நீதி அடிப்படையிலான வளர்ச்சிக் கோட்பாடு’ முன்னின்று எதிர்க்கிறது.

நீதியின் அடிப்படையிலான வளர்ச்சி:

மனிதச் சமூகம் சமூக, பொருளாதார, அரசியல் உறவுகளால் உருவாக்கப்பட்டது. இந்த உறவுகள் பொதுவாக சமத்துவம் அற்றதாகவே இருக்கின்றன. இதனால் சமூகத்திலும் சமத்துவமின்மை நிலவுகிறது. இந்த சமூக, பொருளாதார, அரசியல் அதிகார உறவுகளைச் சமத்துவமாக்குவதே ‘நீதி’ என்ற கோட்பாட்டின் அடிப்படை. இதன் முக்கியக் கூறாக ‘விநியோகத்துவ நீதி’ (Distributive justice) இருக்கின்றது. அது சமூகத்தின் நன்மை, தீமை, பலன், விலை, பாதிப்பு என அனைத்தும் அந்தச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டு கொடுப்பது. இந்தக் கூறு தான் வளர்ச்சியை அனைவருக்குமான வளர்ச்சியாக, நீதியின் அடிப்படையிலான வளர்ச்சியாக மாற்றுகிறது.

வளர்ச்சித் திட்டங்களால் விளையும் நன்மைகளையும், பலன்களையும், அதன் விலைகளையும், பாதிப்புகளையும் சமமாக அனைவருக்கும் விநியோகிக்கும் தன்மையுடையதாக அத்திட்டங்கள் இருக்க வேண்டும். இதனையே ‘நீதியின் அடிப்படையிலான வளர்ச்சி’ (Justice Approach in Development)  என்கிறோம். இதுவே சமூக நீதியின் அடிப்படையாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் மூலம் சமமான வாய்ப்புகளை உருவாக்குவது சமூக நீதியின் ஒரு சிறிய பகுதிதானே அன்றி, அது முழுமையான சமூக நீதி அல்ல. சமத்துவம் அற்ற சமூக உறவுகளை சமத்துவமாக மாற்றுவதே சமூக நீதியின் முழுமையான சாதனை. அதனை நிறைவேற்றும் வண்ணம் வளர்ச்சித் தத்துவம் மாற்றியமைக்கப் பட வேண்டும்.

இந்த கோட்பாடு இன்று ஒரு நாட்டினுள் இருக்கும் மனிதர்களுக்கு இடையிலான சமூக உறவுகள் மட்டும் இன்றி, உலகளவில் நாடுகளுக்கு இடையிலான உறவுகளிலும் பேசப் படுகிறது. மூன்றாம் உலக நாடுகள் வளர்ச்சி குன்றிய நாடுகள் எனவும், அதன் வளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் உதவும் எனவும் அறிவித்த பின்பு அனைத்து நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களிலும் மேற்கத்திய நாடுகளின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்தது. முரணான பல வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் விடுதலைக்குப் பின்னும் பொருளாதார அளவில் அவற்றை தமது காலனிகளாகவே வைத்துக்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கத்திய நாடுகள் எடுத்தன. இவற்றில் சில எடுத்துக்காட்டுகளை ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ புத்தகத்தில் படிக்கலாம். அதனையும் ‘வளர்ச்சிவாதம்’ கொண்டு நியாயப் படுத்தின.

நீதி அடிப்படையிலான வளர்ச்சிக் கோட்பாடு இதனையும் எதிர்த்தது. நாடுகளுக்கு இடையிலான சமத்துவத்தை அது கோரியது. இதன் தாக்கத்தால் ஐக்கிய நாடுகளின் சபையால் ‘Right to Development’ பிரகடனம் 1986ஆம் ஆண்டு கையெழுத்தானது. இது வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்கும் அனைத்து நாடுகளுக்கும் சமமானதாக நிகழ வேண்டுமென்பதை நிறுவுகிறது. இது சட்டபூர்வமாகப் பிணைக்கப்பட (Legally binding) எதிர்ப்பு தெரிவித்த ஒரே நாடாக அமெரிக்கா இருந்தது. முதலாளித்துவத்திற்கும் வளர்ச்சிவாதத்திற்கும் இது எத்தகைய சவாலாக இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

சமூக நீதியும் வேண்டும்! சூழல் நீதியும் வேண்டும்!

இந்த நீதிக் கோட்பாடு தற்போது ‘தலைமுறைகளைக் கடந்த’ நீதியாக உருவெடுக்கின்றது. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான சமத்துவமற்ற உறவுகளை மறுசீரமைக்கக் கோருகிறது. இயற்கையின் வளங்களை நாளைய தலைமுறையின் நிலையை எண்ணிப்பாராது சுரண்டி எடுத்து வளரும் வளர்ச்சிப் போக்கை ‘நீதி அடிப்படையிலான வளர்ச்சிக்கோட்பாடு’ அநீதி என்கிறது. இந்த நீதி அடிப்படையிலான வளர்ச்சி இன்றைய உலகின் பொருளாதார மாதிரிகளாக விளங்கும் ‘நவதாராளவாதம்’ மற்றும் ‘உலகமயத்தில்’ சாத்தியமில்லை என்பதைப் பல்வேறு தரவுகள் மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்கின்றன.

இந்த நவதாராளவாத, இந்திய-தமிழ் தேசிய முரணில் சிக்கிச் சுழன்று கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்க மீண்டும் இங்கு ‘வளர்ச்சிவாதம்’ பேசப்படுகிறது. நமது முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை வைத்து மிக நேர்த்தியாக ‘வல்லரசு இந்தியா 2020’  என்று இந்திய ஆளும் வர்க்கமும், 2014 தேர்தலுக்குப் பாரதீய ஜனதா கட்சியால் ‘குஜராத் மாடல்’ என்றும்  பேசிய அனைத்தும் சமத்துவமற்ற, நீதியற்ற, முதலாளித்துவ வளர்ச்சிவாதம் மட்டுமே! இன்று ‘சிங்காரச் சென்னை 2.0’ என்ற தமிழக அரசின் திட்டம், நீதியின் கோட்பாடை உள்ளடக்காவிடில் அதுவும் வளர்ச்சிவாதமாக மட்டுமே இருக்கும். 

சமூக நலத்திட்டங்கள் மூலம் மட்டுமே சமூகத்தை முன்னேற்றி விட நினைக்கும் ‘Dravidian Model’, சமூக உறவுகள் தாண்டிப் பொருளாதார உறவுகள், சூழல் உறவுகளின் நீதியையும், தலைமுறை கடந்த நீதியையும் உள்ளடக்கியதாக மாறாவிட்டால் விரைவில் காலாவதியாகும். வளர்ச்சிக்கான இலக்கணங்கள் மாறிவிட்டன. வளர்ச்சிக்கான தேவையை, அதன் தன்மையை, அதன் பலன் மற்றும் பாதிப்பு விநியோகத்தை மக்களே முடிவு செய்யும் காலம் இது. இதனைப் புரிந்து கொண்ட அரசுகளே இங்கு நிலைக்க முடியும்!

“சூழலுக்கு தீங்கு என்று அனைத்தையும் எதிர்த்தால் வளர வேண்டாமா? வளர்ச்சி வேண்டாமா?” என்றால் அதற்கு பதில் “அனைத்து தரப்பு மக்களையும், சூழலையும், நாளைய தலைமுறையையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டத்தைக் கொண்டு வாருங்கள். சேர்ந்து வளருவோம்!” என்பதே.

-த. ஹரி பாரதி,

ஆய்வு மாணவர்,

ஐதராபாத் பல்கலைக்கழகம்.

 

குறிப்புகள்:

 

Coburn, A. & Gormally, S. 2017. Social Justice and Equality. Counterpoints, 483: 51-76.

Dirlik, A. 2014. Developmentalism: A Critique. Interventions: International Journal of Postcolonial Studies. 16 (1): 30 – 48.

Sach, W. (ed.) 1997. The Development Dictionary. Hyderabad: Orient Longman. 1-2.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments