காணாமல் போகும் வடசென்னையின் கடற்கரை

North Chennai

சென்னையில் சாந்தோமில் இருந்து எண்ணூர் வரை வங்கக்கடலை ஒட்டியே பயணம் செய்தால், இரண்டு விதமான கடற்கரையை குறுகிய இடைவெளியில் காணலாம். நேப்பியர் பாலம் வரை மணற்குவியலாக காணப்படும் உலகின் இரண்டாது நீளமான கடற்கரை மெரினா. அதனையடுத்து காசிமேட்டிலிருந்து வரிசையாக பாறைக் கற்களையிட்டு கடலை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் வடசென்னை கடற்கரை பகுதி. இந்த இரண்டு இடங்களுமே முற்றிலும் வெவ்வேறான தோற்றத்தை கொண்டிருந்தாலும், இவற்றின் தோற்றம் ஒற்றை புள்ளியில் துவங்குகிறது. அது சென்னை துறைமுகம்! 1881ஆம் ஆண்டில் சென்னையில் கூவ ஆற்றின் முகத்துவார பகுதியின் வடக்கில், ஜார்ஜ் டவுன் அருகில் ஆங்கிலேய அரசால் கட்டப்பட்ட சென்னை துறைமுகமே இந்த இரண்டு தனித்துவமான இடங்கள் உருவாகக் காரணம்.

ஒரு துறைமுகத்தினால் ஒரு கடற்கரையின் அமைப்பையே மாற்ற முடியுமா என்று நாம் வியக்கலாம். இதன் பின்னணியை அறிவதற்கு முன்பு, ‘Littoral drift’ என்று கூறப்படும் ஒரு புவியியல் நிகழ்வை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று கடற்கரைகளில் உள்ள மணல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கோ ஒரு நிலப்பகுதியில் பாறையாக இருந்திருக்கும். மழை, வெயில், நீரோட்டம், போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு பாறை சிதைந்து கற்களாக மாறி, அது மேலும் சிதைந்து கூழாங்கல், மணல் என்று பல்வேறு நிலைகளாக நதிகளோடு இணைகின்றன. இவ்வாறாக கடைசியில் அந்த பாறை மிகவும் சிறிய மணல் துகள்களாக மாறி,  நதியின் வழியாக கடலில் கலந்துவிடும், நதியின் கரையிலேயே வண்டலாக குவிந்துவிடும். கடலை சென்று சேரும் மணல், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலைகளால் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

Sea erosion

Source: USGS Landsat 7 (2008 data) & Landsat 8 (2021 data) True color composite Images

வங்கக் கடலில் ஆண்டிற்கு  8-9 மாதங்களுக்கு காற்று தெற்கிலிருந்து வடக்காக வீசும், 3-4 மாதங்கள் குறிப்பாக வடகிழக்கு பருவ மழை காலத்தில் வடக்கிலிருந்து தெற்காக வீசும். இது வங்க கடலில் ஒரு நீரோட்டத்தை தோற்றுவிக்கின்றது. காற்றின் திசையைப் பொருத்தே இந்த நீரோட்டம் மற்றும் அலைகளின் திசையும் பெரும்பாலும் அமைகின்றன. ஆதலால், தமிழக கரையின் ஓரத்தில் வங்க கடலின் நீரோட்டமும் வருடத்தில் 3-4 மாதங்கள் தவிர்த்து மற்ற எல்லா மாதங்களும் தெற்கிலிருந்து வடக்காக செல்கின்றது.

தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, பொருநை, தென்பெண்ணையாறு, பாலாறு போன்ற நதிகள் கொண்டு வந்து சேர்க்கும் மணல் துகள்கள் இந்த நீரோட்டத்தால் வடக்கு நோக்கி (வட-கிழக்கு பருவ காலங்களில் தெற்கு நோக்கி) நகர்கின்றன. இவ்வாறான மணல் துகள்களின் நகர்வை தான் littoral drift என்கிறோம். இந்த நிகழ்வுகள் என்றோ ஒருநாள் கடற்கரை செல்லும் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. ஆனால் கடற்கரையில் வசிக்கும் மீனவர்களைக் கேட்டால் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவில், இந்த நகர்வு நடைபெறுவது புரியும்.

சென்னை துறைமுகம் அமைப்பதற்கு முன்பு, மெரினாவில் கடற்கரையானது சாலைக்கு அருகிலேயே இருந்தது. காசிமேடு-திருவொற்றியூர் பகுதிகள், ஒரு சாதாரண கடற்கரையுடனும் அதை சார்ந்து வாழும் மீனவ கிராமங்களுடனும் இருந்தது. 1881-ஆம் ஆண்டு சென்னை துறைமுகம் சரியான அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படாமல் வங்கக்கடலின் கடலோர நீரோட்டத்தை தடுக்கும் வகையில் கட்டப்பட்டது.

இதன் காரணமாக துறைமுகத்தின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் நீரோட்டத்தின் வேகம் குறைந்து, மணல் துகள்கள் மெரினா கடற்கரையில் சேர தொடங்கின, அன்றிலிருந்து இன்று வரை மெரினா வளர்ந்து வருகிறது, இனியும் வளரும். மற்றொரு பக்கம், அதே துறைமுகத்தின் தாக்கத்தால், நீரோட்டம் திசை திரும்ப, வேகமான வலுவான அலைகள் கரையில் மோத, வட சென்னை கடற்கரை அரிக்கப்பட்டது. மேலும்,அங்கிருந்த மீனவ குடியேற்றங்கள் கடலால் அடித்து செல்லப்பட்டன.

இதைத் தடுக்க கொண்டுவரப்பட்ட நுட்பமே இன்று வரிசையாக கொட்டப்பட்டுள்ள கற்கள். சில இடங்களில் கடலை நோக்கி 300-500 மீட்டருக்கு ஒன்று என்ற வகையில் நீளமாக கடலுக்குள் பாறைக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதை காணலாம். இவை Groynes எனப்படும். இது கரையில் மோதும் வலுவான நீரோட்டத்தை தடுத்து தெற்கில் கரையை வளர்க்கும், நீரோட்ட திசையையும் மாற்றும். இவ்வாறு ஒரு சங்கிலி தொடர்போல வரிசையாக இந்நிகழ்வு தொடர்ந்து, கடல் அரிப்பை தடுக்கும். ஆனால் இது துறைமுகத்தின் தாக்கத்தை முழுவதும் குறைத்துவிடுவதில்லை.

2008இல்  L&T நிறுவனத்தால் காட்டுப்பள்ளி துறைமுகம் கட்டத் தொடங்கியதிலிருந்து, அதற்கு வடக்கே இருக்கும் காளாஞ்சி, கருங்காலி கடற்கரை பகுதிகள் அதிவேகத்தில் அரிப்புக்குள்ளாகின. இதனால் சாட்டாங்குப்பம் எனும் மீனவ கிராமம் மொத்தமாக கடலில் இருந்து வெகு தொலைவில் மறு குடியமர்த்தப்பட்டது. 2008-2021 கால அளவில் இங்கு அதிகபட்சம் 320 மீட்டர் வரை கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இனி கற்களை கொட்டி, தொலைத்த கரையை மீட்டுருவாக்கம் செய்ய 20-30 ஆண்டுகள் எடுக்கலாம். ஆனால் அது முன்பு இருந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிய கரையாக இருக்காது.

பொதுவாக கடல் அரித்தல், வளர்தல் சென்னையில் மட்டும் நிகழ்வதல்ல. இயற்கையாக பாதகம் இல்லாத அளவில் குறிப்பிட்ட காலங்களில், பல இடங்களில் நடைபெறும். எங்கெல்லாம் மனித செயல்பாடுகள் கடலோர நீரோட்டத்தை நிலைகுலைய செய்கின்றதோ அதன் தெற்கு வடக்கு பகுதிகளில் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையம் 2018இல் நடத்திய ஆய்வில் 1990-2016 வரையிலான காலத்தில் தமிழ்நாட்டில் 15.37 சதுர கிலோமீட்டர் அளவில் கடற்கரை வளர்ந்துள்ளது மற்றும் 17.92  சதுர கிலோமீட்டர் அளவில் கடற்கரை அரிப்பிற்குள்ளாகியுள்ளது. ஆக 2.65 சதுர கிலோமீட்டர் அளவு நிலப்பரப்பை மனித செயல்பாட்டால் கடலுக்கு இழந்துள்ளோம். வடசென்னை-மெரினா கடற்கரை இதற்கு ஒரே ஒரு உதாரணமே!

கடற்கரை என்பது ஒரு பொழுது போக்கு அங்கம் மட்டும் அல்ல, அதை தமது வாழ்வாதாரமாக உபயோகிக்கும் மக்களுக்கே அதன் அருமை விளங்கும். கடற்கரையை சார்ந்து ஒரு உயிர் சூழல் அமைந்துள்ளது, அதை சார்ந்து மீனவர்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. இலிபூச்சி, நண்டு, மட்டி, அலையாத்தி காடுகள், பங்குனி ஆமைகள் மற்றும் நாம் இதுவரை கவனித்திராத பல்வேறு உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. கடற்கரைகள் எனும் இடம் படகு நிறுத்தவும், வலை பின்னவும், பிடித்து வந்த மீனை பிரித்து எடுக்கவும், விற்கவும், கருவாடு காயவைக்கவும், சிப்பி எடுத்து அதை பயன்-பொருளாக்கவும், இளைஞர்கள், சிறுவர்கள் விளையாடும் இடமாகவும் கூட பயன்படுகிறது. ஆக, கடற்கரை ஒரு உயிர்-சூழல் (Ecological Space) மற்றும் சமூக வெளி (Social Space) அமைந்திருக்கும் இடம்.

கடற்கரையை துறைமுகம் போன்ற மனித செயல்பாடுகளால் இப்படி உருக்குலைப்பதால் கடற்கரையை நம்பி வாழும் மக்கள் வாழ்விடத்தை இழப்பது போன்ற நேரடி பாதிப்புகள் மட்டுமின்றி, வேறு இடத்திற்கு குடியமர்த்தப்படுதல், படகுகள் அந்நியமான இடங்களில் நிறுத்த வேண்டிய சூழல், கடலை அடைய போக்குவரத்து பிரச்சனை, புயல் காலங்களில் கடல் சீற்றத்தால் எளிதாக பாதிப்படைதல், நிலத்தடி நீர் உப்பாதல்  என்று இன்னும் பல சொல்லப்படாத பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இக்காரணங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே என்பது தவிர்க்கமுடியாத உண்மை.

சாகர்மாலா போன்ற திட்டங்களால் கடற்கரை பகுதிகளில் பல்வேறு துறைமுகங்களும், கட்டிடங்களும் வளர்ச்சி என்ற பெயரில் உருவெடுக்க உள்ளன. நம் கடற்கரைகளையும், எளிய உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்வையும்  பணயம் வைத்து நாம் திட்டமிடும் இந்த வளர்ச்சி யாருக்கானது என்பதே இங்கு கேள்வி.

– மேகா சதீஷ்

 

 

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Praveen
Praveen
2 years ago

include satellite image credits in this article , whether it is taken from ISRO or NASA

Singu
Singu
2 years ago

அருமையான கட்டுரை.