சூழலியல் நிபுணர்கள், பறவையியலாளர்கள், கடல்சார் சமூக அறிவியலாளர்கள் மற்றும் தேசிய, உலகளாவிய காலநிலை ஆய்வுகளில் பங்களித்தவர்கள் உள்ளிட்ட 22 முன்னணி ஆளூமைகள் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கைவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளனர்.
கோவளம்–நெம்மேலி உவர் சதுப்புநிலத்தின் மீது குடிநீர் சேமிப்புக்கானக் கட்டமைப்பை அமைப்பது “மாநிலத்தின் மிக முக்கியமான கடலோர சூழலமைவுகளில் ஒன்றை மாற்ற முடியாத வகையில் சேதப்படுத்தும்” என்று அவர்கள் மாண்புமிகு முதல்வருக்கும் சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களில், இயற்கையாக அமைந்துள்ள கழுவேலி, உப்பங்கழி நீர்நிலையில், புதிய குடிநீர் நீர்த்தேக்கம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சுற்று வட்டாரா கிராம மக்களின் கடும் எதிர்ப்பிற்கிடையே கடந்த ஜனவரி 19ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் நெம்மேலி, கிருஷ்ணகாரனை, தண்டலம், பட்டிபுலம், திருப்போரூர், மாமல்லபுரம், சலுவான்குப்பம், பையனூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 5161 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த்துறை, நீர்வளத்துறைக்குச் சொந்தமான இடங்களில் 342 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 1.655TMC கொள்ளளவு கொண்ட இந்நீர்த்தேக்கம் மேற்கூறிய கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் எனவும் அருகாமை கிராமங்களின் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் எனவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள உவர் சதுப்புநிலங்கள் முதுகெலும்பில்லா (benthic invertebrates) உயிரினங்களின் வாழிடங்களாக உள்ளன; மீன் மற்றும் இறால்களின் இனப்பெருக்கப் பகுதிகளாகவும் உள்ளன; இங்கு அதிகளவில் வலசைப் பறவைகளை வருகின்றன; மேலும் கடலோரங்களை கடலரிப்பு மற்றும் புயல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. “இந்த சூழலிழைவுப் பகுதியை (ecotone) குடிநீர்த் தேக்கமாக மாற்றுவது, இவ்வனைத்துச் செயல்பாடுகளையும் ஒரே பருவத்திலேயே அழித்துவிடும்” என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதற்கு பதிலாக, முதல்வர் இந்த உப்பு சதுப்புநிலத்தை ‘மாமல்லன் லகூன்’ எனும் பாதுகாக்கப்பட்ட கடலோர ஈரநிலமாக அறிவித்து, சிறந்த அறிவியல் ஆய்வுகளும் உள்ளூர் சமூகங்களின் ஆழமான அறிவையும் அடிப்படையாகக் கொண்ட மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது தமிழ்நாட்டின் “சூழலியல் பாரம்பரியத்தையும் அதன் செழுமையான நீர்வள மேலாண்மை வரலாற்றையும்” கௌரவிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் முன்னாள் இயக்குநர் அசாத் ரஹ்மானி; மேம்பாட்டு ஆய்வு மையத்தின் முன்னாள் பேராசிரியர் ஜான் குரியன், ரொமுலஸ் விட்டேக்கர், மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் டி. நரசிம்மன, வனவிலங்கு உயிரியலாளர் ரவி செல்லம், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆஷிஷ் கோத்தாரி; டாடா சமூக அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த லலிதா காமத், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மேத்யூ கேண்டி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நிகில் ஆனந்த், பூவுலகின் நண்பர்களின் கோ. சுந்தர்ராஜன்; நித்யானந்த் ஜெயராமன் மற்றும் பலர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்..
Scientists Petition_Mamallan reservoir