கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமுமே பாதிப்படைந்துள்ளது என மாவட்ட தாது அறக்கட்டளை அறிவித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களைவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சுரங்கங்கள், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி இப்பதிலை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்ரும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுவதால் ஏற்பட்ட மோசமான தாக்கத்தை கருத்தில் கொள்ளும்போது ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக மாவட்ட தாது அறக்கட்டளையால் கண்டறியப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பாதிப்படைந்த பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் தேவைகள் என்ன என்பதை உள்ளாட்சி அமைப்புகளிடம் கலந்தாலோசித்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
neyveli30.06.2022 வரையில் ரூ.292.15 கோடி செலவில் 170 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ரூ.190.91 கோடி மதிப்பிலான 122 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.101.25 கோடி ரூபாய் மதிப்பிலான 48 திட்டங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் நாடு அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளைக்கு ரூ.427.81 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் மொத்தமாக பெறப்பட்ட ரூ.447.84 கோடி ரூபாயில் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.292.15 கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ரூ.278.16 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3 சுரங்கங்களை என்.எல்.சி. நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நான்காவது சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான பணிகளையும் என்.எல்.சி. மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
– செய்திப் பிரிவு