அணுமின் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் நீட்டிப்பு.

Amirtharaj-Stephen-
Fishermen proceeding towards the Koodankulam Nuclear Power Plant to lay a siege on World Fishermen Day, 2011.

சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பை முற்றிலுமாக மறந்துவிட்டு வணிக நோக்கில் தொழில்களையும் தொழிற்சாலைகளையும் விரைவாக அமைத்துக்கொள்ள ஏதுவாக ஏற்கனவே இருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் பல்வேறு மாற்றங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் உச்சமாகத்தான் 2020ம் ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை பொதுமக்கள் கருத்துக் கேட்பிற்காக ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது.  இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த வரைவு அறிவிக்கை  அமலுக்கு வராமல் இருக்கிறது. ஆனால், பல்வேறு அலுவல் உத்தரவுகள் மற்றும் திருத்தங்கள் மூலம் தொடர்ச்சியாக இவ்விதிகளை நீர்த்துப் போகச்செய்யும் வேலைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் கடந்த 12.04.2022 அன்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ல் புதிய திருத்தமொன்றை மேற்கொண்டு ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இத்திருத்தத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  இத்திருத்தம் குறித்த ஆவணத்தில் “ அணுமின் மற்றும் நீர்மின் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தும்போது ஏற்படும் புவியியல் அமைப்பு மாற்றங்கள், உள்ளூர் சிக்கல்கள், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டமிடல், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வனத்துறை அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதம், போன்றவற்றால் சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசத்திற்குள் திட்டத்தை முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் திட்டங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசத்தை நீட்டிக்கும் அவசியம் உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

EIA amendment 2022

புதிய திருத்தத்தின்படி, ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 10லிருந்து 13 ஆண்டுகளாகவும், அணுமின் திட்டங்களுக்கு 10லிருந்து 15 ஆண்டுகளாகவும், சுரங்கம், அணுமின் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் அல்லாத பிற திட்டங்கள் மற்றும் நகர் வளர்ச்சித் திட்டங்களுக்கு 7லிருந்து 10 ஆண்டுகளாகவும்  சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கால நீட்டிப்பு இத்திட்டங்கள் மீதான கண்காணிப்பை வலுவிழக்கச் செய்யும். மேலும் இத்திட்டங்களால் பாதிக்கப்படப்போகும் மக்கள் தங்கள் கருத்துகளை சொல்வதற்கு வழியில்லாமல் போகும். எடுத்துக்காட்டாக ஒரு திட்டத்தின் கால அவகாசம் 10 ஆண்டுகள் எனில் அந்த 10 ஆண்டுகள் கழித்து அத்திட்டத்திற்காக கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும்போது புதிதாக சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை மேற்கொள்ளப்படும். அதன் மூலம் திட்ட அமைவிடத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனத்தில் கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் திட்டத்தை செயல்படுத்த முடியும். மேலும் சுற்றுச்சூழல் அனுமதி நீட்டிக்கப்பட்டால் அந்த உத்தரவில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதை எதிர்த்து பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனால், தற்போது அத்திட்டத்தின் அனுமதிக்கான கால அவகாசம் 15 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் 15 ஆண்டுகள் கழித்து மட்டுமே நீதிமன்றத்தை பொதுமக்கள் நாட முடியும்.

இந்தியாவைப் பொருத்த வரை ஒரு திட்டத்திற்காக நடத்தப்பட வேண்டிய பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வாக மட்டுமே நடக்கிறது. இந்த நிலையில் ஒரு திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக நம்பியிருப்பது நீதிமன்றங்களை மட்டுமே. மாசு கட்டுப்பாடு வாரியங்கள் போன்ற கண்காணிப்பு அமைப்புகளால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வடசென்னை அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் கழிவு பிரச்சனையை எடுத்துக்கொள்ளலாம். எத்தனையோ உத்தரவுகள், தீர்ப்புகளுக்குப் பின்னரும் அங்கு விதிமீறல்கள் தொடந்து கொண்டேதான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசத்தை நீட்டிப்பது பல நேரங்களில் மக்களுக்கு எதிரானதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

மேலும் சில திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 25 மெகாவாட் அளவிற்கு உயிர்ம எரிபொருள் அல்லது ஆபத்தற்ற நகராட்சி திடக்கழிவுகள் மற்றும் நிலக்கரி அல்லது பழுப்பு நிலக்கரி அல்லது பெட்ரோலிய பொருட்களை 15% வரை எரிபொருளாகக் கொண்டு செயல்படும் மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை நாடுகளின் எல்லைக்கு அருகே 100கிமீ வரை போடப்படும் சாலைகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது.

EIA AMendment EC exemption

வனத்துறை அனுமதி தேவைப்படும் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியின் காலமானது  அத்திட்டத்திற்கு இரண்டாம் கட்ட வனத்துறை அனுமதி (Stage-II) கிடைத்த நாளிலிருந்தே கணக்கிடப்படும் எனவும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கூறிய திருத்தங்களும் விலக்கங்களும் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் முழுமையாகவோ பகுதியாகவோ கொண்டு வரப்பட்டவைதான். அதை செயல்படுத்த முடியாத காரணத்தில் அத்திருத்தங்கள் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள் கலந்தாலோசனையின்றி ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments