FIFA உலகக் கோப்பை என்றால் வழக்கமாக நினைவுக்கு வருவது திறமை, வேகம், ரசிகர்களின் உற்சாகம், நாடுகளின் பெருமை. ஆனால் 2026 உலகக் கோப்பையில் எதிரணி அன்றி இன்னொரு எதிரியும் மைதானத்தில் இறங்கியுள்ளது. கொடும் வெப்பம்தான் அது. காலநிலை மாற்றத்தால் அதிகரித்துள்ள வெப்ப அலைகள், உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவையே பாதுகாப்பு, உடல்நலம், நியாமான வழிமுறைகளில் போட்டியை நடத்துவது ஆகிய கோணங்களில் சிந்திக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.
Down To Earth வெளியிட்ட ஒரு கட்டுரையில், வட அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளில் உருவான கடுமையான “heat dome” காரணமாக பல உலகக் கோப்பை மைதானங்கள் ஆபத்தான வெப்பநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Climate Central ஆய்வின்படி, இவ்வெப்ப அலை, காலநிலை மாற்றத்தால் குறைந்தது ஐந்து மடங்கு அதிகம் நிகழக்கூடியதாக மாறியுள்ளது. ஹூஸ்டன், டல்லாஸ், மியாமி, பிலடெல்பியா போன்ற நகரங்களில் வீரர்கள் மட்டுமல்லாமல், ரசிகர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், மைதான ஊழியர்கள் ஆகியோரும் வெப்ப அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.
இது வெறும் “வெப்பமான நாள்” என்ற அளவில் பார்க்கக்கூடிய விஷயம் அல்ல. வெப்பநிலை, ஈரப்பதம், காற்றோட்டம், நேரடி சூரிய வெப்பம் ஆகியவற்றைச் சேர்த்து மதிப்பிடும் Wet Bulb Globe Temperature அடிப்படையில் பார்க்கும்போது தீவிரமான பிரச்னையாக உள்ளது., இது உடல் தன்னை குளிர்விக்க முடியுமா என்பதை காட்டும் முக்கியமான அளவுகோல். FIFPRO வழிகாட்டுதலின்படி WBGT 26°C-ஐ கடந்தால் குளிர்வித்துக் கொள்வதற்கான இடைவேளைகள் தேவை. 28°C-ஐ கடந்தால் போட்டியை தள்ளிப் போடுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். பல போட்டிகள் இதற்கு அருகில் அல்லது அதற்கு மேல் உள்ள சூழலில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக World Weather Attribution ஆய்வு எச்சரிக்கிறது.
Climate Central வெளியிட்ட மற்றொரு பகுப்பாய்வு, 2026 உலகக் கோப்பை நடைபெறும் 16 மைதானங்களில் 14 மைதானங்கள், முந்தைய வட அமெரிக்க உலகக் கோப்பை காலத்தை விட இப்போது அதிக கடும் வெப்ப நாட்களை சந்திக்கின்றன எனக் கூறுகிறது. மேலும், 1970 முதல் 2025 வரை ஏற்பட்ட ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட கடும் வெப்ப நாட்களில் சராசரியாக 49% மனிதனால் உண்டான காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது எனக் குறிப்பிடுகிறது. மியாமி, மெக்சிகோ, ஹூஸ்டன் போன்ற இடங்களில் இதன் தாக்கம் அதிகம் எனவும் ஆய்வு காட்டுகிறது.
இவ்வெப்பம் நேரடியாக வீரர்களின் உடல்நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வீரர்கள் ஓடும் தூரம், வேகம் குறையலாம், முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படலாம், தசை இழுப்பு, நீரிழப்பு, மயக்கம், வெப்ப வாதம் போன்ற அபாயங்கள் அதிகரிக்கலாம். ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, பிலடெல்பியாவில் நடைபெற்ற பராகுவே – பிரான்ஸ் போட்டியானது FIFPRO பரிந்துரைக்கும் பாதுகாப்பு வரம்பை மீறிய சூழலில் இருந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகளில் heat index 105 முதல் 115°F வரை செல்லலாம் என்றும் அமெரிக்க வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
FIFA இதைச் சமாளிக்க அனைத்து போட்டிகளிலும் ஒவ்வொரு பாதியிலும் மூன்று நிமிடம் நீர் அருந்துவதற்கான இடைவேளை அறிவித்துள்ளது. 22வது நிமிடத்தின் அருகில் விளையாட்டு நிறுத்தப்பட்டு வீரர்கள் தண்ணீர் குடித்து உடலை சீராக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இந்நடைமுறை எல்லா போட்டிகளுக்கும், வெப்பநிலை எப்படியிருந்தாலும், சமநிலை ஏற்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்படும் என்று FIFA கூறியுள்ளது.
ஆனால், கேள்வி இதுதான். தண்ணீர் இடைவேளைகள் மட்டும் போதுமா? ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டபடி, 2026 உலகக் கோப்பையின் சுமார் கால்பங்கு போட்டிகள் FIFPRO பாதுகாப்பு வரம்பை மீறும் சூழலில் நடைபெற்று வருகின்றன. சில நிபுணர்கள் தண்ணீர் இடைவேளை மட்டும் போதாது. போட்டிகளின் நேர மாற்றம், கூரை மற்றும் குளிரூட்டும் வசதி, ரசிகர்களுக்கான நிழல் பகுதிகள், அவசர மருத்துவ வசதி, வெப்ப அடிப்படையிலான போட்டி தள்ளிவைப்பு விதிகள் ஆகியவை அவசியம் என அறிவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
2026 FIFA உலகக் கோப்பை, கால்பந்து உலகிற்கு ஒரு முக்கியமான பாடமாக மாறுகிறது. காலநிலை மாற்றம் இனி விவசாயம், நீர், கடல் மட்டம் உள்ளிட்டவை சார்ந்த பிரச்னை மட்டும் அல்ல. அது விளையாட்டின் நேரம், இடம், விதி, வீரர்களின் பாதுகாப்பு, ரசிகர்களின் அனுபவம் என அனைத்தையும் மாற்றத் தொடங்கியுள்ளது. முன்பு “யார் வெல்வார்கள்?” என்பதே உலகக் கோப்பையின் பெரிய கேள்வி. இன்று அதற்கு முன் இன்னொரு கேள்வி எழுகிறது. “இக்கொடிய வெப்பத்தில் பாதுகாப்பாக விளையாட முடியுமா?”
FIFA 2026 சொல்லும் உண்மை தெளிவானது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், உலகின் அழகான விளையாட்டும் வெப்பத்துடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
செய்திப் பிரிவு
