‘Flow’ திரைப்பட விமர்சனம்

மனிதர்களுடன் மிக நெருக்கமாக வாழும் இரு விலங்குகள் நாய்களும் பூனைகளும். இரண்டுமே அன்றாட வாழ்க்கையில் மனிதர்களுடன் அணுக்கமான சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாய்கள் ஒரு எட்டு கூடுதலாக வந்து மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமாக தொடர்புபட்டிருக்கின்றன.

அதேநேரம் பூனைகள் என்னதான் நமக்கு அருகில் இருந்தாலும் தங்களுக்குள் ஒரு விலகலைக் கடைபிடித்தே வருகின்றன. தனிமையை விரும்புவது, சுய பராமரிப்பு , வேட்டையாடுதல்  என அவைகளுக்குச் சில அன்றாட கடமைகள் இருக்கின்றன.

எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் அவற்றால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியும். நாய்களை காட்டிலும் பூனைகளின் இயல்பே அவற்றை இன்னும் வசீகரமாகக் காட்டுகின்றன.  பூனைகளைத் திமிர் பிடித்த விலங்கு என்றும் சொல்வதுண்டு. உயிர் பிழைக்கத் தன்னை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய எந்த ஒரு உயிரினத்திற்கும் மனிதன் உட்பட வரக்கூடிய திமிர்தான் அது.

உலகின் தலைசிறந்த கலைஞர்கள் பூனைகளைத் தங்கள் செல்லப் பிராணிகளாக கொண்டுள்ளார்கள். அவற்றைத் தங்கள் கதைகளில் உலாவ விட்டிருக்கிறார்கள். ஓவியங்களில் ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறார்கள். கவிதை எழுதியிருக்கிறார்கள். வைக்கம் முகம்மது பஷீரின் நாவல் ஒன்றில் ஹிட்லர் என்கிற பூனை இடம்பெறுகிறது. ஜப்பானிய எழுத்தாளர் முராகாமியில் பல கலதைகளில் பூனைகள் பூடகமான கதைசொல்லிகளாக வந்து போகின்றன. அவ்வகையில் அண்மையில் ஆஸ்கர் விருது வென்று உலகளவில் பேசப்பட்ட The Flow திரைப்படமும் ஒரு கரு நிறப் பூனையை மையப்படுத்திய கதைதான்.

நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்று The Flow . அமெரிக்க ஸ்டுடியோக்களின் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான படங்களுடன் போட்டியிட்டு  சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்று வரலாறு படைத்தது இப்படம். பிளெண்டர் என்கிற இலவச அனிமேஷன் சாஃப்ட்வேரில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் லாட்விய இயக்குநர் ஜின்ட்ஸ் கில்பலோடிஸ். முழுக்க முழுக்க மிருகங்களை மையமாக வைத்து ஒவ்வொரு மிருகங்களின் நிஜ,  ஒலிகளைப் பயன்படுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.

சிறிய பட்ஜெட் , தொழில்நுட்பத் தேர்ச்சி ஆகியவற்றுக்காகப் படம் பாராட்டப்பட்டாலும் இப்படத்தின் கதை ஒரு இயற்கைப் பேரிடரை மையமாகக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதில் காலநிலை மாற்றம் , சுற்றுசூழல் கருத்துக்கள் வெளிப்படையாகப் பேசப்படாவிட்டாலும் விலங்குகளின் வழியாகச் சொல்லப்படும் இக்கதை தான் பிறர் என்கிற மனிதர்களுக்கு இருக்கும் அடிப்படை வேறுபாடுகளின் மீது ஒரு உரையாடலை நிகழ்த்துகிறது.

சிறிய குட்டையில் தேங்கியுள்ள  நீரில் தனது பிம்பத்தைப் பார்த்து நிற்கிறது ஒரு பூனை. படத்தில் மனிதர்கள் யாரும் காட்டப்படவில்லை என்றாலும் மனிதர்கள் இருந்ததற்கான சான்றுகள் காட்டப்படுகின்றன. வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. வீட்டைச் சுற்றி நாலா பக்கமும் பூனைகளின் சிலைகள் இருக்கின்றன. இந்த சிலைகள் என்பது திரையில் நாம் பார்க்கும் பூனைக்கு தன்னைப் பற்றிய ஈகோவை பிரதிபலிப்பதாக இருக்கின்றன.

கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை நீர் சூழ்ந்து மூழ்கடிக்கிறது. தனிமை விரும்பியான  நம் பூனை ஒரு  இயற்கைப் பேரிடரால் தனது இருப்பிடத்தை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சுற்றி நாலாபக்கமும் நீர் சூழ ஒரு படகில் சில நாய்கள் , கேபிபரா , லெமூர் , ஒரு ராட்சசப் பறவை ஆகியோருடன் சேர்ந்து பாதுகாப்பான ஒரு இடத்திற்கு பயணிப்பதே படத்தின் கதை. அவ்வப்போது வந்து செல்லும் திமிங்கலம் இறுதிகாட்சியில் ஒரு கண்திறப்பாக அமைகிறது.

இப்படத்தை இயக்கியதற்கு இயக்குநர் சொல்லும் ஒரு காரணத்தைக் குறிப்பிடுவது அவசியம். “பூனைகளைப் போல எல்லாருக்கும் ஒரு கம்ஃபர்ட் சோன் இருக்கிறது.  சில சூழல்கள் மட்டுமே இந்த கம்ஃபர்ட் சோனை விட்டு நம்மை  வெளியே வரவைக்கும்.” ஒரு பூனைக்குத் தனது கம்ஃபர்ட் சோனை விட்டு வெளியே வருவதற்கான சூழல்தான் இயற்கைப் பேரிடர். தண்ணீரே பிடிக்காத ஒரு பூனை அதே தண்ணீரில் நீந்தி தனக்கான உணவை வேட்டையாடப் பழகுகிறது. பூனை தவிர்த்து ஒரு உற்சாகமான நாய் , எது நடந்தாலும் தூங்கும் ஜென் நிலையில் இருக்கும் ஒரு கேப்பிபரா , மின்னும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கமுடைய லெமூர் , ஒரு மர்மமான பறவை இடம்பெறுகின்றன.

இவ்விலங்குகளுக்கு இடையில் நடக்கும் நிகழ்வுகள் அவற்றின் பார்வையிலே சொல்லப்பட்டது தான் படத்தின் தனித்துவம். பார்வையாளர்களுக்கு எவ்வித உணர்ச்சியும் வலுக்கட்டாயமாகப் புகட்டப்படுவதில்லை. விலங்குகள் அவற்றின் இயல்பிலேயே விடப்பட்டிருக்கின்றன. இயல்பாகப் பிற உயிரினங்களைக் கவனித்து அவர்களுடன் உரையாடும் ஒரு நிலைக்கு பார்வையாளர்களாகிய நாம் தகவமைத்துக் கொள்கிறோம். இதில் அச்சம் , வியப்பு , நகைச்சுவை என பல உணர்வுகளை பிரித்து நம்மை திரையில் கண்டடைய முடிகிறது.

ஒரு இயற்கை பேரிடர் வழியாக  இப்புவியின் மீது நமக்கிருக்கும் பார்வை, சக உயிரினங்களுடனான நம் உறவு , அதே நேரம் நம்மைப் பற்றிய நமது பிம்பத்தையும் மறுவிசாரணை செய்கிறது The Flow. அதை தனித்து வாழ்தல் என்கிற  நவீன வாழ்க்கை கருத்தாக்கத்தை ஒரு பூனையின் வழியாக முன்வைக்கிறது. முதல் காட்சியில் நீரில் தனது பிம்பத்தைப் பார்த்த அப்பூனை இறுதிக் காட்சியிலும் தனது பிம்பத்தை நீரில் பார்க்கிறது. இரு பிம்பங்களும் ஒன்றுதான் ஆனால், பார்க்கும் கண்கள் மட்டும் வெவ்வேறானவை.

– ராகேஷ் தாரா

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments