பன்னாட்டு நிறுவனங்களுக்காகப் பாரம்பரிய விவசாயத்தைப் பலியிட வேண்டாம்! – எச்சரிக்கும் அறிவியலாளர்கள்!

புது தில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் (NASC) மரபணு திருத்தப்பட்ட டி.ஆர்.ஆர். கமலா 100 மற்றும் பூசா டி.எஸ்.டி. 1 என்ற இரண்டு புதிய அரிசி வகைகளை கடந்த மே மாதம், ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அறிமுகப்படுத்தினார். பசுங்குடில் வாயு  வெளியேற்றத்தைக் குறைப்பது, குறைந்த நிலத்தில் அதிக மகசூல் போன்ற பல்வேறு புரட்சிகர மாற்றங்களை இப்புதிய அரிசி வகைகள் இந்திய வேளாண் துறையில் ஏற்படுத்தும் என அந்நிகழ்வில் அவர் தெரிவித்திருந்த நிலையில், இப்புதிய அரிசி வகைகளால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று பல்வேறு வேளாண் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சரியாகச் சோதனை செய்யப்படாத இவ்விரண்டு அரிசி வகைகளையும் திரும்பப் பெறுவதுடன், மரபணு திருத்தம் தொடர்பான செயல்பாடுகளைக் கடுமையான ஒழுங்குமுறை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென ‘மரபணு மாற்றமல்லாத இந்தியாவிற்கான கூட்டணி’(Coalition for a GM-Free India) என்ற அறிவியலாளர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அரசாங்கம் இத்தகையச் சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்துள்ளது. மரபணு திருத்தத்தில் உள்ள குறைபாடுகளைக் சுட்டிக்காட்டி ஏராளமான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அதிக விளைச்சல் மற்றும் வறட்சியில் இருந்து பாதுகாப்பு என்ற பெயரில் அறிவியலுக்குப் புறம்பான பல போலியான காரணங்களைச் சொல்லி SDN-1 மற்றும் SDN-2 என்ற இரண்டு செயல்பாடுகளில் மரபணு திருத்தம் தொடர்பான ஒழுங்கு முறைகளைத் தளர்த்தியதுடன், போதுமான பாதுகாப்புப் பரிசோதனைகள் செய்யப்படாமல் தற்போது  இவ்வரிசி வகைகள் வெளியிடப்பட்டிருப்பதால் அரசாங்கத்தின் பொறுப்பற்ற இச்செயலைத் தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மரபணு திருத்தத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து வெளியான பல்வேறு ஆய்வு முடிகளுக்கு புறம்பாக, சுயநலமிக்க தனியார் நிறுவனங்கள் இந்த முறையை பாதுகாப்பானதாக சித்தரிக்கின்றனர். சுற்றுச்சூழல், இயற்கை மற்றும் பொதுநலனிற்கும், மரபணு தொழில்நுட்பத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் அமைந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் – 1986 ஆனது, பயிரின் மரபணு மாற்றம், குளோனிங், அந்நிய மரபணு சேர்த்தல், கலப்பினமாக்கல் போன்றவற்றை தொழில்நுட்ப ரீதியாக கையாளுவது தொடர்பான பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகும். இந்நிலையில் 2022ம் ஆண்டு ஒன்றிய அரசு இச்சட்டம் தொடர்பான ஒழுங்குமுறைகளை தளர்த்தியது சட்டத்திற்குப் புறம்பானது.

மேலும், மரபணு திருத்தம் தொடர்பான தொழில்நுட்பங்களை காப்புரிமை விதிகளின் கீழ் கொண்டுவருவது, விதைகளின் மீதான இந்திய விவசாயிகளின் உரிமையையும், பொது மக்களின் உணவு உரிமையையும் பறிக்கும் செயலாகும். எனவே இத்தகைய காப்புரிமைகள் குறித்த செயல்பாடுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்தியாவில் ஏற்கனவே தேவைக்கு அதிகமான அரிசி உற்பத்தியாகும் நிலையில் பரிசோதனை செய்யப்படாத புதிய வகைகளை வெளியிட்டு ஒற்றைப் பயிரைப் பரவலாக்கச் செய்வது கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இத்தகைய ஆபத்தான பயிர் வகைகளை அறிமுகப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மரபணு திருத்தம் தொடர்பான தொழில்நுட்பங்கள் துல்லியமானதாகவும், கட்டுபடுத்தக்கூடியளவிலான, எதிர்பார்க்கும் விளைவுகளை கொடுக்கும் என கூறப்பட்டாலும். இத்தகைய தொழில்நுட்பங்கள் போதுமான அளவு துல்லியமாக இல்லை என்பதனை விளக்கியும், இவை கட்டுபடுத்த முடியாத மரபணு மாற்றத்தையும், பிறழ்வுகளையும் ஏற்படுத்தவல்லவை என்பதனை விளக்கி பல்வேறு அறிவியல் ஆய்வு முடிகள் வெளிவந்துள்ளன. கடந்த மே மாதம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு அரிசி வகைகளும் சரியாகத் திட்டமிடப்படாத SDN-1 தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் அவை பயிர்களின் கட்டமைப்பில் ஆபத்தான மாற்றங்களை உருவாக்கி சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் நலனில் எதிர்பாராத தொடர்விளைவுகளை ஏற்படுத்தவல்லவை எனவும் எச்சரித்துள்ளனர்.

SDN – 1 மற்றும் SDN – 2  போன்ற மரபணு திருத்தம் தொடர்பான தொழில்நுட்பங்களில், மூல மரபணுவில், அந்நிய மரபணு பொருட்களை சேர்பபது பற்றிய வரம்புகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது. இது போன்ற முக்கியமான வரம்புகளை தளர்த்தியது இந்தியாவில் தற்போது உயிரியல் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு சோதனையும் கட்டாயமாக்கப்படாமல் இருக்க வழி செய்துள்ளது.

இயற்கையாக நிகழும் மரபணு மாற்றத்திற்கும், இது போன்ற செயற்கை மரபணு திருத்தத்திற்கும் பெரும் வித்தியாசம் உள்ள நிலையில் இதன் தொடர்விளைவுகள் குறித்து மிகக் குறைவாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது .நீண்டகால சோதனைகளுக்குப் பிறகே டி.என்.ஏ.வில் – ஏற்படும் பாதிப்புகளை அறிய வாய்ப்புள்ள நிலையில், இத்தகைய நீண்ட கால சோதனைகள் மேற்கொள்ளப்படாமல் தவிர்க்கப்படுகின்றன. இத்தகைய செயல்களால் டி.என்.ஏவில் ஏற்படும் எதிர்பாராத விளைவுகள் மிக குறைந்த அளவிலேயே மதிப்பிடப்பட்டுள்ளதாக 2022ம் ஆண்டு வெளியான சூ பி(Chu P et al) குழுவினரின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2020ம் ஆண்டு வெளியான சுகுமார் பிஸ்வாஸ் குழுவினரின் மற்றொரு ஆய்வறிக்கையின் முடிவு, CRISPR/Cas9 அமைப்பை பயன்படுத்தும் SDN – 1  தொழில்நுட்பமானது துல்லியமற்ற முடிவுகளைத் தருகிறது. இத்தகைய அமைப்புகளை ஆய்வகத்தில் இருந்து பொதுவெளியில் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முன், பல தலைமுறைகளாக நீண்ட கால அளவில் மூலக்கூறுகளைக் கட்டமைத்தல், கண்காணித்தல் போன்ற செயல்பாடுகளைத் துல்லியமாகச் செய்ய வேண்டும். ஆனால், பல சமயங்களில் அதிகளவிலான மரபணு சேர்த்தல், நீக்குதல், மாற்றுகட்டமைப்பு செய்தல் போன்ற செயல்களே செய்யப்படுவதால் மரபணுவில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கிறது.

இதுபோன்ற வலுவான ஆதாரங்களுக்கு எதிராகவே மேற்கூறிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துல்லியமற்ற இத்தகைய முழுமையடையாத கமலா மற்றும் பூசா டி.எஸ்.டி. 1 அரிசி வகைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு மரபணு திருத்த தொழில்நுட்பங்கள் தொடர்பான விதிகளைத் தளர்த்தியதன் ஆபத்துகளையும், இதனால் ஏற்படக்கூடிய மீள இயலாத விளைவுகள் குறித்தும் இக்கூட்டமைப்பு கடந்த காலங்களில் பல கோரிக்கைகளை விடுத்துள்ளது.

இந்தியா பல்வேறு மாறுபட்ட மரபணுக்களை உள்ளடக்கிய அரிசி குழுமங்களை கொண்ட நாடாக இருக்கிறது. காலநிலையில் ஏற்பட்டு வரும் அதீத மாற்றங்களால், இத்தகைய பன்னோக்குத் தன்மை கொண்ட அரிசி குழுமங்களை பாதுகாப்பது மிக முக்கியமான தேவையாக உள்ளது.

இந்நிலையில் இத்தகைய புதிய மரபணு திருத்த அரிசி வகைகளை வெளியிடுவது பாரம்பரிய அரிசி வகைகளின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவதுடன் மரபணு மற்றப்படாத அரிசி வகைகள் குறித்த வர்த்தகத்தையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் இவ்விரண்டு மரபணு திருத்தப்பட்ட அரிசி வகைகளில் மேற்கொண்ட பாதுகாப்பு பரிசோதனைகள் குறித்த விவரங்களை உடனடியாக வெளியிடுவதுடன், இதுகுறித்த பொதுமக்களின் கருத்தையும், இவை எந்த வகையிலும் மூலப் பயிரின் தரத்தை பாதிக்காது என்பதையும் நிரூபிக்க வேண்டும். போதுமான அளவில் சோதனை செய்யப்படாமல் இவ்வரிசி வகைகள்  வெளியிடப்பட்டிருப்பது, 2024ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை அவமதிப்பது போன்றதாகும். எனவே, அரசாங்கம் இத்தகைய வெளியீடுகளை நிறுத்துவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரங்கள், நுகர்வோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலன் ஆகியவற்றில் சமரசம் செய்து கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வேளான் அறிவியலாளர்கள் கூட்டமைப்பு என்ற மற்றொரு அமைப்பானது இத்தகைய புதிய அரிசி வகைகளில் அந்நிய மூலப்பொருட்கள் கலந்திருப்பதால், வருங்காலத்தில் இந்திய நாடானது விதை தொடர்பான மரபுரிமைகளுக்கு பன்னாட்டு பெரு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

இது குறித்து பிரதமருக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இத்தகைய மரபணு திருத்தப்பட்ட அரிசி வகைகள் தொடர்ச்சியான ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவும், மரபணு மாசுபாட்டை உருவாக்கவும், செய்வதோடு மட்டுமல்லாது  இந்தியாவின் பரந்துபட்ட பாரம்பரிய அரிசி பன்மையத்தை பாதிப்பதோடு சுமார் நூற்று இருபது கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய இயற்கை அரிசி ஏற்றுமதியின் நம்பகத்தன்மையையும் பாதிப்புகுள்ளாக்கச் செய்யும்.

இத்தொழில்நுட்பம் பாரம்பரிய முறைகளில் இருந்து மாறுபட்டிருப்பதாலும், பன்னாட்டு பெரு நிறுவனங்களின் அறிவுசார் சொத்துடமையாக இருப்பதாலும், இத்தகைய அரிசி வகைகளை பயிரிடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து உரிமம் பெற வேண்டிய நிலை இந்தியாவிற்கு ஏற்படும். இது 2002ம் ஆண்டு வெளியான பிடி பருத்தி ஏற்படுத்திய விளைவை போல் நம் விவசாயிகளை பயிர் உற்பத்திக்காகப் பன்னாட்டு நிறுவனங்களின் கருணையை எதிர்நோக்கும் நிலைமைக்குத் தள்ளவிடும்.

பிடி பருத்தி எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்திக்காக, பன்னாட்டு நிறுவனங்களும், விதை வணிகர்களும் செய்த செயல்கள் ஏறக்குறைய பாரம்பரிய பருத்தி வகைகளை அழிவு நிலைக்கு கொண்டு சென்றதோடு சூழலியல் சமனின்மை, விவாயிகளின் மன அழுத்தம் போன்றவற்றிற்கு காரணமாக அமைந்து, பருத்தி உற்பத்தியாளர்களின் தற்கொலை விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு இட்டுச் சென்றது.

மே மாதம் வெளியிடப்பட்ட அரிசி வகைகள் எந்தவொரு விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க இந்திய அரசாங்கம் உடனடியாக இந்நிகழ்வில் தலையிட வேண்டுமென அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

  • விக்னேஷ் குமார் கோ

 

Sources:

  1. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126856

 

  1. http://indiagminfo.org/coalition-for-a-gm-free-india-demands-that-govt-of-india-immediately-withdraw-the-two-released-and-untested-gene-edited-rice-varieties-kamala-and-pusa-dst-rice-1-and-bring-gene-editing-under-the-pur/

 

  1. https://www.downtoearth.org.in/agriculture/agri-scientists-warn-against-premature-release-of-gene-edited-rice
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments