மரபணுமாற்றப்பட்ட நெல் – அரசியலும் அறிவியலும்

மரபணுமாற்றப்பட்ட  இரண்டு நெல் ரகங்கள் விரைவில் சந்தைக்கு வர இருப்பதாக கடந்த மே மாதம், 2025 ஒன்றிய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்திருந்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் உருவாக்கியுள்ள இந்நெல் ரகங்களுக்கு கமலா, பூசா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நெல் ரகங்கள், காலநிலை மாற்றப் பாதிப்புகளைத் தாக்குப்பிடித்து வளரும் எனவும், 20 முதல் 30 % வரை விளைச்சல் அதிகம் கொடுமக்கும் எனவும், நீர்த் தேவையைக் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நெல் ரகங்கள் மரபணு மாற்றுப் பொறியியல் (Genetic Engineering) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதல்ல, மரபணு திருத்தம்(Gene edited) செய்யப்பட்டது என்னும் வாதம் இத்தொழில்நுட்பத்தை ஆதரிப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது. மேலும், பா.ஜ.க அரசும் மரபணு திருத்தம் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விதைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு மரபணுமாற்றுப் பொறியியலை முறைப்படுத்தும் சட்ட அமைப்பின் அனுமதியில் இருந்து விதிவிலக்கு அளித்துள்ளது. இந்நிலையில்தான் மரபணுமாற்றப்பட்ட/திருத்தம் நெல்லுக்கு பின் உள்ள அரசியலையும் அறிவியலையும் விவாதிக்க வேண்டியுள்ளது.

உலகமயமாக்கலும் மரபணுமாற்றப்பட்ட உயிரினங்களும்

         உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் துவங்கிய பின்புதான் இந்தியாவில் மரபணுமாற்றப்பட்ட விதைகளும் அறிமுகமாகின. உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகள்படி 2001ம் ஆண்டு இந்தியத் தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் உழவர்கள் உரிமைகள் சட்டத்தை (Protection for Plant Varieties and Farmers Rights Act) இயற்றியது. இச்சட்டப்படி தாவரங்கள், மரங்களுக்கு காப்புரிமை வழங்கும் முறை அறிமுகமாகியது.

மேலும், உலக வர்த்தகக் கழகத்தின் வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைக்கான ஒப்பந்தின் மூலம் மரபணுமாற்றப்பட்ட உயிரினங்களுக்குக் காப்புரிமை வழங்க இந்தியா தள்ளப்பட்டது. குறிப்பாக இந்த ஒப்பந்தின் 27.3.பி – வது சரத்து நுண்ணுயிர்கள், உயிரி சாராத முறை (Non-biological process), நுண்ணுயிரி முறை (Micro-biological process) ஆகியவற்றுக்குக் காப்புரிமை வழங்க வலியுறுத்துகிறது. இதற்கேற்ப இந்தியா தனது காப்புரிமைச் சட்டத்தை மாற்றி அமைத்தது. இதனடிப்படையில் 2002ம் ஆண்டு இந்திய காப்புரிமை சட்டப் பிரிவு 3.(j) மாற்றி அமைக்கப்பட்டு மரபணுமாற்றப்பட்ட விதைகள், தாவரங்கள், விலங்குகளுக்குக் காப்புரிமை வழங்கும் விதிகள் அறிமுகமாகின. விதைகளுக்குக் காப்புரிமை வழங்குவதன் மூலம் பெரு நிறுவனங்கள் விதைகள் மீது ஏகபோக உரிமை பெறுகின்றன. விதை மீதான ஏகபோக உரிமை என்பது விதை உற்பத்தி, மறுஉற்பத்தி, விற்பனை, சந்தை விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கியது. சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் காப்புரிமை பெறுவதன் மூலம் சமூகச் சொத்தாக இருக்கும் விதைகளைத் தனிச் சொத்தாக நிறுவனங்கள் உரிமை கொள்ள முடியும். இந்தியாவில் முதல்முறையாக அனுமதிக்கப்பட்ட மரபணுமாற்றப்பட்ட விதையான பி.டி.பருத்திற்கு 2002ம் ஆண்டு காப்புரிமை வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டு வரை 809 வகையான மரபணுமாற்றப்பட்ட பி.டி.பருத்தி வகைகளுக்கு இந்தியா காப்புரிமை வழங்கியுள்ளது. இன்று இந்தியாவில் விளையும் பருத்தியில் 90 % மரபணுமாற்றப்பட்ட பருத்தியே (navdanyainternational.org/the-seed-war). உள்நாட்டுப் பருத்தி விதைகள் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன.

 

மரபணுமாற்று தொழில்நுட்ப சட்டங்கள்  

         சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1989ம் ஆண்டு அபாயகரமான நுண்ணுயிர்கள் மற்றும் மரபணுமாற்றப்பட உயிரினங்கள் உற்பத்தி, பயன்பாடு, இறக்குமதி, ஏற்றுமதி, சேமிப்பு சட்டவிதிகள் இயற்றப்பட்டது (Rules for the Manufacture, Use, Import, Export and Storage of Hazardous Micro Organisms, Genetically Organisms or Cells). இச்சட்ட விதிகளின்படி மரபணுமாற்றப்பட்ட விதைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களாக இருந்தாலும் பலவேறு வித ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மரபணுமாற்றுப் பொறியியல் மதிப்பீட்டு ஆணையத்தின் (Genetic Engineering Appraisal Committee) அனுமதியோடுதான் சந்தைக்கு வரமுடியும். மேலும், மரபணுமாற்றப்பட்ட உணவுப் பொருட்கள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டத்தின் (Food Safety and Standard Act) கீழும் அனுமதி பெற வேண்டும். இப்படியான சட்டங்கள் இருந்த போதிலும், மரபணுமாற்றுத் தொழில்நுட்பங்களை முறைப்படுத்த போதிய சட்டங்கள் இல்லை என உணர்ந்த உச்ச நீதிமன்றம் மரபணுமாற்றப்பட்ட தாவரங்கள் தொடர்பான ஆய்வுகள், பயிரிடுதல், வணிகம், வியபாரம் போன்றவற்றை முறைப்படுத்த தேசிய கொள்கை வகுக்க வேண்டும் என ஜூலை, 2024-ல் உத்தரவிட்டது. ஒன்றிய அரசு தற்போது வரை இக்கொள்கையை உருவாக்கவில்லை.

மரபணுமாற்றப்பட்ட / திருத்தப்பட்ட நெல்

மரபணுக்கள்தான் உயிரினங்களின் அடிப்படைக் காரணம். உயரினங்களின் தன்மை, குணம், செயல்பாடுகள என அனைத்தையும் தீர்மானிப்பது மரபணுக்களே. 1980களில் மரபணுக்களை மாற்றியமைத்து புதிய வகை உயிரினங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் உருவானது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் வணிகத்திற்கு ஏற்ற வகையில் பயிர் வகைகள் உருவாக்கப்பட்டன. இதற்கான காப்புரிமையும் அப்போது வழங்கப்பட்டது.

2010ம் ஆண்டு கணினியில் உருவாக்கப்பட்ட மரபணு பட்டியலைப் பயன்படுத்தி சுயமாக இனப்பெருக்கம் செய்யத்தக்க ‘உயிருள்ள செயற்கை செல்களை’ (Self-Replicating Synthetic Bacterial Cell) அமெரிக்க ஆய்வு நிறுவனம் உருவாக்கியது. உயிரியல் தொழில்நுட்பத்தில் இப் ‘புரட்சியை’ தொடர்ந்து 2020ம் ஆண்டு கீரிஸ்பர் (CRISPR – Clustered Regularly Interspaced Short Palindromic Repeats) தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றது.   மரபணுக் கத்தரிக்கோல் எனப்படும் அறியப்படும் க்ரிஸ்பர் தொழில்நுட்பம் மூலம் மரபணுக்களை வெட்டவும், இணைக்கவும் முடியும். இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல் மரபணுக்களை வேண்டிய நிலையில் வெட்டவும், இணைக்கவும் முடியும். மரபணுமாற்றுப் பொறியியல் போல பல்வேறு  உயிரினங்களின் மரபணுக்களை ஒன்றிணைக்கும் முறை க்ரிஸ்பர் தொழில்நுட்பத்தில் செயல்படுத்தபடுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், மரபணுக்களை வெட்ட அல்லது இணைக்க கேஸ் 9 (Cas 9) என்னும் பாக்டீரியாவின் மரபணு க்ரிஸ்பர் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.

க்ரிஸ்பர் தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கமலா, பூசா ஆகிய நெல் ரகங்களை உருவாக்கியுள்ளது. கீரிஸ்பர் தொழில்நுட்பம் மூலம் மரபணுத் தொகுப்பில் துல்லியமாகவும், கட்டுப்படுத்தப்பட்ட வகையிலும், எதிர்நோக்கும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஏப்ரல் 2022ம் ஆண்டு க்ரிஸ்பர் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்படும் விதைகளுக்கு மரபணுமாற்றுப் பொறியியல் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி தேவை இல்லை என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் 2022ம் ஆண்டு இத்தகைய தொழில்நுட்பங்களை முறைப்படுத்த மரபணு திருத்தப்பட்ட தாவரங்கள் பாதுகாப்பு மதிப்பீடு விதிகளை (Guidelines for Safety Assessment of Genome Edited Plants) அறிவித்தது.

மரபணுத் திருத்த தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மரபணு மாற்றங்கள் இயற்கையில் தானாக ஏற்படும் சடுதி மாற்றங்களைப் (Mutation) போன்றதே என்று கூறப்படுகின்றது. ஆனால், இவை வேறுப்பட்டவை. இயற்கை நிகழும் மாற்றங்களை போன்றே இவை நிகழும் என்பதற்கு எவ்வித ஆய்வுகளும் இல்லை. மேலும் மரபணு திருத்த தொழில்நுட்பம் எதிர்பாராத பலவிதமான பாதிப்புகளை உண்டாக்க கூடும். இதனை “pleiotropic effects” என்று வரையறை செய்கின்றனர்.

உண்மையில் மரபணு திருத்தத் தொழில்நுட்பம் என்பது மரபணுமாற்ற பொறியியல் போன்றதே. மரபணுமாற்ற பொறியியல் மூலம் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் உருவாகக்கூடுமோ, அதே அளவிலான பாதிப்புகள் இந்த தொழில்நுட்பம் மூலமும் உருவாக கூடும். ஆனால், மரபணுமாற்றப்பட்ட விதைகள் மீது செய்யப்பட வேண்டிய பல ஆய்வுகள் மரபணு திருத்த விதைகளுக்குத் தேவையில்லை என கூறுகிறது மோடி அரசு. மரபணுமாற்றப்பட்ட உணவுகள் பலவித பாதிப்புகள் உண்டாக்கக் கூடும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் மரபணுமாற்றப்பட்ட உணவு அனுமதிக்கப்படாமல் உள்ளது. உச்ச நீதிமன்றமும் மரபணுமாற்றப்பட்ட பொருட்களுக்குச் சட்டக்கொள்கைகளை உருவாக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்தான் மரபணுமாற்றப்பட்ட நெல்லை மரபணு திருத்த நெல் என்னும் பெயரில் சந்தைக்கு அனுமதிக்க மோடி அரசு முயல்கிறது. இப்படி இந்த நெல் அனுமதிக்கப்பட்டால், சந்தைக்கு வரும் முதல் மரபணுமாற்றப்பட்ட உணவாக இது இருக்கும்.

கடந்த காலங்களில் மரபணுமாற்றப்பட்ட விதைகளைச் சந்தைக்குக் கொண்டு வர நிறுவனங்களே முயன்றன. ஆனால், தற்போது மோடி அரசு நேரிடையாக மரபணுமாற்ற விதைகளைச் சந்தைக்குக் கொண்டு வர முயல்கிறது. இதற்காகச் சட்டங்களை மாற்றுகிறது. தொழில்நுட்பம் மூலம் பொதுச் சொத்தாக உள்ள விதைகளைத் தனியார் சொத்தாக மாற்ற முயல்கிறது. முக்கியமாக உணவு இறையாண்மையை கேள்விக்குள்ளாகிறது.

மரபணுமாற்றப்பட்ட விதைகள் மட்டுமே சந்தையில் இடம்பெறும் நிலையில் உணவு உற்பத்தி என்பது நிறுவனங்களைச் சார்ந்தே இருக்கும் நிலை உருவாகும். இத்தகைய நிலையை உருவாக்கவே மோடி அரசு முயல்கிறது.

மு.வெற்றிச்செல்வன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments