2021ல் புதிய உச்சத்தைத் தொட்ட கடல் நீர்மட்ட உயர்வு

WMO

 

வளிமண்டலத்தில் அதிகரித்திருக்கும் பசுமை இல்ல வாயுக்களின் செறிவும் அதனுடன் தொடர்புடைய வெப்பத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான உலகத்தை திக்கு தெரியாத பிரதேசத்திற்குள் தள்ளியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) தெரிவித்துள்ளது.

உலக வானிலை அமைப்பு அக்டோபர் 31ஆம் தேதி ஜெனிவாவில் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நிலவிய வானிலையின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டின் வானிலை குறித்த ஆய்வறிக்கையை State of Global Climate Report 2021 எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகள், உலக நாடுகளின் வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பல்வேறு அறிவியலாளர்களின் உள்ளீடுகளை ஒருங்கிணைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆய்வறிக்கையின்படி கடந்த 7 ஆண்டுகள்தான் இப்பூமியின் வரலாற்றில் மிக வெப்பமான ஏழாண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கடல் வெப்பமாதல் மற்றும் அமிலமாதலால் 2013ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை கடல் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 

பசுமை இல்ல வாயுக்கள்

2020ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்களின் செறிவு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 413.2ppm, மீத்தேனின் அளவு 1889ppb, நைட்ரஸ் ஆக்சைடின் அளவு 333.2ppb இருந்துள்ளது. இவை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தை(1750) விட முறையே 149%, 262% மற்றும் 123% அதிகமாகும். இந்த உயர்வானது 2021ஆம் ஆண்டிலும் தொடர்ந்துள்ளது.

வெப்பநிலை

2021ஆம் ஆண்டில்(ஜனவரி-செப்டம்பர்) புவியின் சராசரி வெப்பநிலையானது 1850-1900 காலத்தில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட 1.09° செல்சியஸ் அதிகம். உலக வானிலை அமைப்புத் தரவுகளின்படி 2021ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆறாவது அல்லது ஏழாவது ஆண்டாகும்.

Annual Mean temperature

கடல்

கடலின் 2000மீ மேல்பகுதி ஆழமானது 2019ஆம் ஆண்டிலிருந்து உயர்ந்துகொண்டே வந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகின் பெரும்பாலான கடற்பகுதிகள் இந்த ஆண்டில் ஓரேயொரு முறையாவது கடல் வெப்ப அலையை சந்தித்துள்ளன.

கடல் நீர்மட்ட உயர்வு

சராசரி கடல் நீர்மட்ட உயர்வானது 1993-2002 இடைப்பட்ட காலத்தில் ஆண்டிற்கு 2.1mm மற்றும் 2013-2021 இடைப்பட்ட காலத்தில் ஆண்டிற்கு 4.4mm அளவிற்கும் உயர்ந்துள்ளது. பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால்தான் கடல் நீர்மட்ட உயர்வும் அதிகரித்துள்ளது.

sea level

பனிப்பாறைகள்

வட அமெரிக்க பனிப்பாறைகள் கடந்த இருபதாண்டுகளில் வேகமாக உருகத் தொடங்கியுள்ளன. 2000-2004 இடைப்பட்ட காலத்தில் உருகியதைவிட இரண்டு மடங்கு அதிகமான பனிப்பாறைகள் 2015-2019 இடைப்பட்ட காலத்தில் உருகியுள்ளன. க்ரீன்லாந்தின் மிக உயரமான இடத்தில் முதல் முறையாக மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன் அங்கு மழை பெய்ததே இல்லை.

தீவிர வானிலை நிகழ்வுகள்

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கு வட அமெரிக்காவின் பகுதிகளில் தீவிரமான வெப்ப அலைகள் வீசியதால் பலர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டன் நகரத்தின் வெப்பநிலை ஜூன் 29ஆம் தேதி 49.6° செல்சியசாக பதிவாகியதில் அந்த நகரமே பற்றி எரிந்தது. ஜூலை 9ஆன் தேதி கலிபோர்னியாவில் வெப்பநிலை 54.4° செல்சியசாக பதிவாகியது. காட்டுத்தீயால் 3,90,000 ஹெக்டேர் பரப்பளவு எரிந்து நாசமானது. இது கலிபோர்னியாவின் வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீ நிகழ்வாகும்.

மழைப்பொழிவு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜூலை மாதம் தீவிரமான மழைப்பொழிவு ஏற்பட்டது. செங்க்சோ நகரில் ஒரு மணி நேரத்தில் 201.9mm, 6 மணி நேரத்தில் 382mm மற்றும் மொத்தமாக 720mm மழை பெய்தது. இது அந்த நகரின் ஓராண்டு சராசரி மழை அளவைவிட அதிகம்.  மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 302 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனி, பெல்ஜியத்திலுல் வரலாறு காணாத அளவில் மழை பெய்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தெற்கு பிரேசில், பராகுவே, உருகுவே, வடக்கு அர்ஜெண்டினா பகுதிகளில் சராசரியை விட குறைவான மழைப்பொழிவே இருந்ததால் வறட்சி நிலவியது.

precipitation

முழு அறிக்கைக்கு: https://public.wmo.int/en/media/press-release/state-of-climate-2021-extreme-events-and-major-impacts

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments