“புவியின் சராசரி ஆண்டு வெப்பநிலை 1.5 °C அளவுக்கு மேல் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு ஆண்டில் உயர 80% வாய்ப்புள்ளது. ” என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கான புவியின் சராசரி மேற்பரப்பு ஆண்டு வெப்பநிலையை தொழிற்புரட்சிக் காலமான 1850 – 1900 இடைப்பட்ட காலத்தில் நிலவிய சராசரி ஆண்டு வெப்பநிலையவிட 1.5 °C உயர விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை நாம் மேலும் வேகப்படுத்த வேண்டியதன் அவசரத்தை இந்த அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.
உலக வானிலை அமைப்பின் சார்பில் இங்கிலாந்தின் வானிலை நிறுவனமான UK Met Office தயாரித்துள்ள Global Annual to Decadal Update (2024 – 2028) இந்த அறிக்கை 05.06.2024 அன்று வெளியானது. இந்த அறிக்கை 15 நாடுகளின் வானிலை அமைப்புகளின் தரவுகள் மற்றும் உலக வானிலை அமைப்பின் 190 உறுப்பினர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி 2028ஆம் ஆண்டுக்குள் ஏதேனும் ஒரு ஆண்டு புவி வரலாற்றில் பதிவானதிலேயே மிகவும் வெப்பம் நிலவிய ஆண்டாக அமைய 87% வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டுதான் இதுவரை பதிவானதில் அதிக வெப்ப நிலவிய ஆண்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 முதல் 2028 வரையிலான மொத்த காலமும் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 °Cக்கு மேல் உயர்ந்து நிலவ 47% வாய்ப்புள்ளதாகவும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. குறைந்த காலத்திற்கு சராசரி வெப்பநிலை 1.5 °C அளவுக்கு உயர்வதை நிரந்தரமாக புவியின் வெப்பநிலை 1.5 °C அளவுக்கு உயர்ந்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றாலும் இந்த எச்சரிக்கையை உலக நாடுகள் தீவிரமாக எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
நியூ யார்க்கின் அமெரிக்க இயற்கை வரலாற்றுக்கான அருங்காட்சியகத்தில் காலநிலை மாற்றம் குறித்து சிறப்புரை ஆற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் உலக வானிலை அமைப்பின் அறிக்கையினையும் சுட்டிக்காட்டிப் பேசினார். நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நம்மிடமே உள்ளது. நமது காடுகள், நமது ஈரநிலங்கள் மற்றும் நமது பெருங்கடல்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பனை உறிஞ்சுகின்றன. 1.5 °C என்கிற இலக்கை உயிருடன் வைத்திருக்க அவை இன்றியமையாதவை, அல்லது அந்த வரம்பை மீறினால் நம்மை அது மீண்டும் பின்னோக்கிக் கொண்டு செல்லும். அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்” எனக் கூறினார்.
உலக வானிலை அமைப்பின் அறிக்கையானது அடுத்த 5 ஆண்டுகளின் சராசரி ஆண்டு வெப்பநிலையானது 1850 – 1900 இடைப்பட்ட காலத்தில் நிலவிய சராசரி ஆண்டு வெப்பநிலையவிட 1.1 °C முதல் 1.9 °C அளவுக்கு உயர்ந்து காணப்படும் என எச்சரித்துள்ளது. இந்த வெப்ப அளவை நாம் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் நிலவிய 15க்கும் மேற்பட்ட நாட்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 °C முதல் 5 °C வரை அதிகமாக இருந்து நாம் நினைவுகூர வேண்டும்.
கடந்த 12 மாதங்கள் (ஜூன் 2023 – மே 2024) பதிவான உலகளாவிய சராசரி வெப்பநிலையும் மிக உயர்ந்தே இருந்து. இது 1850-1900 காலத்திற்கு முந்தைய சராசரியைவிட 1.63 °C அதிகமாக இருந்ததாக கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றம் ERA5 தரவுத்தொகுப்பு தெரிவிக்கிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் நீண்டகால உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலையை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளைவிட 2 °Cக்கு குறைவாக வைத்திருக்கவும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அதை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரவும் ஒப்புக்கொண்டன. 1.5 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பமயமாதல் மிகவும் கடுமையான காலநிலை மாற்ற தாக்கங்கள் மற்றும் தீவிர வானிலை மற்றும் வெப்பமயமாதல் நிகழ்வுகளைக் கட்டவிழ்த்து விடும் அபாயம் உள்ளது என்று அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பமடைதலின் தற்போதைய மட்டங்களில் கூட, ஏற்கனவே பேரழிவு தரும் காலநிலை தாக்கங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் தீவிர வெப்ப அலைகள், தீவிர மழை நிகழ்வுகள் மற்றும் வறட்சி ஆகியவை அடங்கும்; பனிக்கட்டிகள், கடல் பனி மற்றும் பனிப்பாறைகள் குறைவு; கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் வெப்பமடைதல் ஆகியவற்றை நாம் இப்போதே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புவியின் சராசரி வெப்பநிலையானது 1.5 °C – 2 °C வரை உயர்வது சில தீவு நாடுகளுக்கு பிழைத்திருத்தலுக்கும் முற்றழிந்து போவதற்குமான இடைவெளியாகும் எனக் குறிப்பிட்ட குட்டரெஸ்,” மானியங்கள் மற்றும் முதலீடுகளை நிறுத்துவதன் மூலமும், விளம்பரங்களைக் குறைப்பதன் மூலமும், தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமும் புதைபடிவ எரிபொருள்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும். புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் ஆற்றல் மாற்றத்தை வழிநடத்த தங்களது இலாபங்களைப் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
– சதீஷ் லெட்சுமணன்
Decada GADCU 2024 - 2028