திடக்கழிவு மேலாண்மையில் அரசின் பங்கு

plastic bag, trash drowning in blue water
Image: World Bank

பல சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் நாட்டிலேயே முன்வரிசையில் இருக்கும் தமிழகம் திடக்கழிவு மேலாண்மையில் மிக மோசமான நிலையில்தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பான நிதி ஆயோக்கின் தரவரிசையில் பின்தங்கிய வடகிழக்கு மாநிலங்களுக்கும் கீழாகத் தமிழகத்தின் நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. முறையாக கழிவுகள் சேகரிக்கப்படாதது, சேகரிக்கப்பட்டக் கழிவுகள் முறையாகக் கையாளப்படாதது, அரசே குப்பைகளை எரித்தல் மற்றும் நீர்நிலைகளில் கொட்டுதல் போன்றவற்றைச் செய்வது என திடக்கழிவு மேலாண்மையில் இருக்கும் பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனினும் தற்போதைய அரசு கழிவு மேலாண்மைக்கான கொள்கை வகுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவது சற்று நம்பிக்கை தருகிறது.

கழிவுகளை எப்படியெல்லாம் கையாளக்கூடாது என்பதைக் குறிப்பிட்டுப் பூவுலகு இதழில் முன்பு பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். குறிப்பாகத் திடக்கழிவுகளைச் சிறப்பாகக் கையாள வேண்டுமென்று திட்டமிட்டால் ‘கழிவில்லா நிலை’யை  (zero waste) அடைய அரசு என்னென்ன செய்ய வேண்டுமென்று இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்ப்போம்.

  1. குப்பைகளை அவற்றின் தோற்றுவாயிலேயே கட்டுப்படுத்துதல்:
    1. ஒற்றைப் பயன்பாட்டு ஆயுள் (Single use) மட்டுமே கொண்ட / அத்தியாவசியத் தேவையற்ற / நச்சு வேதிப் பொருட்கள் கொண்ட / முழுமையாக மறுசுழற்சிக்கோ மறுபயன்பாட்டுக்கோ உட்படுத்த முடியாத / பாதுகாப்பான கழிவு நீக்கத்துக்கு உட்படுத்த முடியாத அதே நேரத்தில் பாதுகாப்பான மாற்றுகள் உள்ள பொருட்களின் (எ-கா: ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்கள், டிஷ்யூ பேப்பர்கள், பேனர்கள் போன்றவை) உற்பத்தியையும் பயன்பாட்டையும் முழுமையாகத் தடை செய்யவேண்டும்.
    2. சேஷேக்களில் அடைக்கப்பட்ட பொருட்கள் பெருநிறுவனங்களின் (பெரும்பாலும் சிறுவணிகர்கள் இவற்றை உற்பத்தி செய்வதில்லை) பல்லடுக்கு நெகிழிப் பொட்டலங்களை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்.
    3. நீண்ட ஆயுளும் பயன்பாடும் உடைய பொருட்களேயானாலும் அவை கழிவு நீக்கத்திலும் பயன்பாட்டிலும் சூழலுக்கு இசைவான பொருட்களாக இல்லாதபட்சத்தில் அவற்றின் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும். (எ-கா: நச்சுப் பகுதிப்பொருட்கள் கொண்ட விளையாட்டு சாதனங்கள், நறுமணமூட்டிகள், அழகு சாதனப் பொருட்கள் போன்றவை)
    4. இவ்விதத்தில் முழுமையாகத் தடை செய்ய இயலாத பொருட்களின் மிகை உற்பத்தியையும் நுகர்வையும் கட்டுப்படுத்தும் வண்ணம் அவற்றின் கழிவுநீக்கத்துக்கான செலவையும் ஈடுகட்டும்வண்ணம் கூடுதல் வரிவிதிப்புகளைச் செய்து அந்தத் தொகையை அவற்றின் கழிவு மேலாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும்.
    5. உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில் மிகை நுகர்வின் தீங்குகள் குறித்த புரிதலை உருவாக்க விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்துவதோடு மிகை நுகர்வைக் கட்டுப்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும். உதாரணமாக குழந்தைகள் பார்க்கும்படியான விளம்பரங்களைக் கட்டுப்படுத்துதல் போன்றவை.
  2. அண்டை மாநிலக் கழிவுகள் (மின் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்றவை) தமிழகத்தில் கொட்டப்படுவதை கடுமையாகக் கண்காணித்துத் தடுக்க வேண்டும்.
  3. “Polluter pays” என்ற அடிப்படையில் குப்பையை உருவாக்குபவரையே குப்பைக்குப் பொறுப்பாக்குதல்:
    1. குப்பையைக் கையாளும் உள்ளாட்சி அமைப்புகளின் செலவினங்கள், வீடுகள், குடியிருப்புகள், வணிக மையங்கள், நிறுவனங்கள் மற்றும் குப்பையை உருவாக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஈட்டப்பட வேண்டும்.
    2. ‘Extended Producers responsibility’ எனப்படும் ஒன்றிய அரசின் சட்ட வரைவை முழுமையாக அமல்படுத்தி, கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைளையே கழிவு நீக்கத்துக்குப் பொறுப்பாக்க வேண்டும். இந்த சட்டமே பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
    3. கடும் சூழல் சீர்கேட்டை உருவாக்கும் குப்பைகளைத் திறந்த வெளியில் எரித்தலைக் குற்றச் செயலாக அறிவிக்க வேண்டும். மேலும் அனைத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் கடுமையாக்கப்பட்டு / முறைப்படுத்தப்பட்டு அந்தத் தொகை கழிவு மேலாண்மைக்கும் அதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.
    4. குப்பை மேலாண்மை விதிகளை, குப்பையைக் கையாளும் நபரின் இடவசதியைக் கருத்தில்கொண்டு பஞ்சாயத்து / ஊராட்சிகள் / நகராட்சிகள் / மாநகராட்சிகள் என்று பிரித்து வகைப்படுத்த வேண்டும். உதாரணமாக அடுக்ககங்களில் வசிக்காத பஞ்சாயத்து மற்றும் ஊராட்சியைச் சேர்ந்தவர்களால் பெரும்பாலும் தங்களுடைய மட்கும் குப்பைகளைத் தாங்களே மட்கச் செய்ய முடியும். இந்நிலையில் இவர்களின் சுமை உள்ளாட்சி அமைப்புக்கு கையாள எளிதாக இருப்பதைக் கருத்தில்கொண்டு குப்பை மேலாண்மைக்கான வரி / கட்டணத்தில் விலக்கு / சலுகை அளிக்க வேண்டும்.
    5. குப்பைக்கான வரி, கட்டணம் போன்றவற்றை குப்பைகளின் அளவின் அடிப்படையிலோ அல்லது பொருளாதார அடிப்படையிலோ அல்லது இரண்டையும் கருத்தில்கொண்டோ நிர்ணயிக்க வேண்டும். ஏனெனில் குப்பையின் அளவில் அதை உருவாக்குபவரின் பொருளாதாரப் படிநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது.
  4. குப்பை மேலாண்மையில் நேர்மறையான பங்களிப்போரை ஊக்குவித்தல்:
    1. நெகிழிப் பொருட்களுக்கு மாற்றுகளை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோரை (எ-கா: துணிப் பைகள், பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரிப்பவர்கள், குப்பைகளை ‘உயர்சுழற்சி’ (upcycling) செய்வோர் போன்றோர்) ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
    2. மேலும் தம் குப்பைகளைத் தாமே முறையாகக் கையாளும் சமூகங்கள் / குடியிருப்புகள் / நிறுவனங்களுக்கு சலுகைகள் தரவேண்டும்.
    3. காகிதங்களை மறுசுழற்சி செய்தல் போன்ற பூஜ்ஜியக் கழிவை இலக்காகக் கொண்டு சிறப்பாகச் செயல்படும் கல்வி நிறுவனங்களை கவுரவித்து ஊக்கப்படுத்த வேண்டும். அதே போன்று சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சிகளுக்கும் உரிய அடையாளமும் கவுரவுமும் வழங்கப்பட வேண்டும்.
    4. மறுசுழற்சிக்கு ஏற்கெனவே குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலிலிருக்கும் முறைசாரா தொழிலாளர்களைப் பயன்படுத்த வேண்டும். Garbage worriors என்று அழைக்கப்படும் அவர்கள் மறைமுகமாக குப்பை மேலாண்மையில் அரசின் எந்த உதவியுமின்றியே மிகப்பெரும் பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரமளித்து, பாதுகாப்பு உபகரணங்கள், மிதிவண்டிகள் போன்றவற்றை வழங்கி ஊக்கப்படுத்துவது சமூக நீதிப் பார்வையிலும் சூழல் பார்வையிலும் இன்றியமையாதது.
  5. குப்பைகளைக் குறைக்க வீடுகள் முதல் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு தனிப்பட்ட நெறிமுறைகளை வகுக்க வேண்டும். (எ-கா: ஸ்டீரோபோம் (தெர்மாகோல்) பயன்பாட்டை கல்வி நிறுவனங்களில் முழுமையாகத் தவிர்த்தல், பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதன் மூலம் நெகிழிப் புட்டிகளைத் தவிர்த்தல், அத்தியாவசியமற்ற தபால்களைத் தவிர்த்தல் போன்றவை) வணிக / கல்வி நிறுவனங்கள், பெரிய குடியிருப்புகள் போன்றவை தமது மட்கும் கழிவுகளை தமது வளாகத்திலேயே (எருவாக்குதல் அல்லது எரிவாயு உற்பத்தி செய்தல் போன்றவை) கையாள அறிவுறுத்தப்பட / கட்டாயமாக்கப்பட வேண்டும். இயலாத பட்சத்தில் அதற்கேற்ற கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்க வேண்டும்.
  6. கழிவுகளை நீண்ட தொலைவு எடுத்துச் செல்வதைத் தவிர்த்து, வட்டார அளவிலேயே கையாளும் கட்டமைப்புகளை (Decentralized systems) உருவாக்க வேண்டும்.
  7. சேகரிக்கப்படும் மட்கும் கழிவுகள் முழுமையாக உரமாக்கப்படவோ அல்லது எரிவாயு உற்பத்திக்கோ பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு பெறப்படும் தரமான இயற்கை உரத்தை சந்தைப்படுத்தி குறைந்த விலையில் பொதுமக்களுக்கே வழங்க வேண்டும். மட்கும் குப்பைகளை முழுமையாகக் கையாண்டுவிட்டாலேயே 40-50% குப்பை மேலாண்மை இலக்கை எட்டிவிட முடியும்.
  8. கழிவுகள் தரம் பிரித்துப் பெறப்படுவதை உறுதி செய்து மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை 100  விழுக்காடு மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகளைப் பிரித்தெடுத்த பின் உருவாகும் rejects நீர்நிலைகள் போன்ற இடங்களில் கொட்டப்படுவதைத் தவிர்த்து, முறையாகச் சேகரிக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
  9. ஏற்கெனவே காலாவதியான குப்பை கொட்டுமிடங்களை (Dumping yards) அடையாளம் கண்டு அவற்றை Bio Capping / Bio mining போன்ற தொழில் நுட்பங்களின் மூலம் மீட்டெடுப்பதோடு புதியதாக உருவாகும் குப்பைகளை புதைக்க அறிவியல்பூர்வமான, சூழலுக்குப் பாதுகாப்பான நிலத்தடி குப்பைக்குழிகளை (landfills) உருவாக்க வேண்டும். இவ்வாறான நிலத்தடி குப்பைக் குழிகளில் மட்காத, மறுபயன்பாடோ அல்லது மறுசுழற்சியோ செய்ய இயலாத, வேதிவினைத் திறனற்ற பொருட்கள் மட்டுமே கொட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  10. மின் கழிவுகள் போன்ற அபாயகரமான கழிவுகள் மற்ற திடக்கழிவுகளுடன் கலவாதிருப்பதை உறுதி செய்து அவற்றை உருவாக்கிய நிறுவனங்களே (அல்லது அவற்றிடம் கட்டணம் பெற்று உள்ளாட்சி அமைப்புகளோ) திரும்பப் பெறச் செய்யவேண்டும். இவற்றை மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவைக்கேற்பவோ வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகச் சேகரிக்க ஜிபிஎஸ் வசதியுடன்கூடிய செயலிகளைப் பயன்படுத்தலாம். இவற்றை உள்ளாட்சி அமைப்புகளே செயல்படுத்தினால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிவதோடு இக்கழிவுகளின் மூலப்பொருட்களிலிருந்து வருவாயும் ஈட்ட முடியும்.
  11. மகளிர் சுய உதவிக்குழுக்கள் போன்றவற்றை குறிப்பிட்ட சில மூலப்பொருட்களை செயலிகள் வழியே தடமறிந்து சேகரித்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க முடியும். (எ-கா: பயோ என்சைம்கள் தயாரித்தல், இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரித்தல் போன்றவை)
  12. மறுசுழற்சி மற்றும் ஆபத்தான கழிவுகளைக் கையாளும் மையங்களுக்கான சூழல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு அவை செயல்படுவதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
  13. திடக்கழிவு கையாளப்படும் இடங்களில் அண்டை பகுதிகளில் ஏற்படும் சூழல் பாதிப்புகளை முறையாகக் கண்காணித்து அவற்றைக் கட்டுப்படுத்துவதோடு அப்பகுதிவாழ் மக்களின் குறைகளைத் திறந்த மனதோடு அரசு கேட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  14. சூழல் விரோத தொழில்நுட்பங்களைத் தவிர்த்தல்:
    1. குப்பைகளை எரிப்பதால் கிடைக்கும் மின்சாரம் நிலக்கரி மின்சாரத்தைவிட அதிக கரிமவளித்தடம் கொண்டது. சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை சாம்பலாக்கிகள் / எரிஉலைகள் (incinerator) போன்ற தொழில்நுட்பங்களை முழுமையாகக் கைவிட வேண்டும்.
    2. நெகிழியைப் போன்றே சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் Bio plastics போன்ற சூழலுக்குப் பாதகமான பொருட்களை நெகிழிக்கு மாற்றாக அனுமதிக்கக்கூடாது.
    3. கரிமவளித்தடம் / நீர்வளித்தடமற்ற பொருள் என்று இங்கு எதுவுமே இல்லை. எனவே சூழலுக்கு இசைவான பொருளாகவே கருதப்படும் மாற்றுகளின் உற்பத்தியும் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  15. தனியாரிடம் போடப்படும் குப்பைக் கையாளுதல் ஒப்பந்தங்கள் அவர்கள் சேகரிக்கும் குப்பையின் அளவைப் பொறுத்தே அமைகின்றன. அதாவது எவ்வளவு அதிகமான குப்பை சேகரிக்கப்பட்டு அது குப்பை கொட்டுமிடத்தை அடைகிறதோ அவ்வளவு அதிக பணம் அவர்களுக்குக் கிடைக்கும். எனவே அவர்கள் குப்பையைத் தரம் பிரித்துப் பெறுவதிலோ அல்லது மறுசுழற்சி செய்வதிலேயே சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை. இதற்கு நேர் மாறாக மேலை நாடுகளைப் போல landfillக்கு வரும் குப்பைக்கு அரசு landfill tax எனப்படும் கட்டணத்தை ஒப்பந்ததாரரிடம் வசூலித்தால் அவர்கள் (குப்பை உருவாக்குவோரிடமிருந்து கட்டணம் பெற்று) குப்பைகளை முழுமையாகப் பயன்படுத்த / மறுசுழற்சி செய்ய / மேலாண்மை செய்யத் தூண்டப்படுவர்.
  16. கழிவில்லா நிலையை அடைய உற்பத்தித் துறையிலும் சுழற்சிப் பொருளாதாரத்தை (Circular economy) முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கழிவு மேலாண்மை என்பது சுகாதாரத்தோடும், சூழல் நலனோடும், கார்பன் உமிழ்வோடும்கூடத் தொடர்புடையது. ஒருவர் தன் வீட்டையோ தான் புழங்கும் இடத்தையோ எப்படி சுத்தமாகப் பராமரிக்கிறார் என்பதை வைத்து சிலர் அவர்களது பண்புகளையும் திறனையும் எடைபோடுவதுண்டு. இது முற்றிலும் புறந்தள்ளக்கூடிய அளவீடு அன்று. ஒரு அரசு விவேகமானதாகவும் பொதுமக்கள் மற்றும் சூழல் நலன் சார்ந்து செயல்படுகிறதா என்பதை நிச்சசயம் அந்த அரசு கழிவு மேலாண்மையில் காட்டும் அக்கறையிலிருந்தே யூகிக்க முடியுமென்று தோன்றுகிறது.

தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • ஜீயோ டாமின்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments