கானமயில் பாதுகாப்பு vs புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி

அருகி வரும் பறவையான கானமயிலின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவற்றின் வசிப்பிடங்களில் தலைக்கு மேல் செல்லும் உயரழுத்த மின்தடங்களுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

ஆங்கிலத்தில் The Great Indian Bustard என்றழைக்கப்படும் கானமயில் ( Ardeotis nigriceps) என்கிற பறவை ஒரு காலத்தில் இந்தியாவின் தேசியப் பறவை இடத்துக்கானப் போட்டியில் இருந்தது. அதன் உச்சரிப்பு தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பிருந்ததால் அந்த இடம் மயிலுக்குக் கிடைத்தது. சுதந்திரத்துக்கு முன்பாக தமிழ்நாட்டின் சில இடங்களில் காணப்பட்ட இப்பறவை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் மாநிலத்தில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. தற்போது ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே இவைக் காணப்படுகிறது.

கானமயிலானது காட்டுயிர் (பாதுகாப்பு) சட்டம், 1972இன் அட்டவணை -1 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்டையாடுவதில் இருந்து மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பைக் இப்பறவை கொண்டுள்ளது. தற்போது குஜராஜ், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே காணப்படும் இப்பறவைகளின் எண்ணிக்கை 150க்கும் குறைவாகவே இருக்கும் என Wildlife Instittute India கூறுகிறது. ஒரு மீட்டர் அளவு உயரம் இருக்கும் இப்பறவை குஜராத்தின் மாநிலப் பறவையும்கூட. வேட்டை, வாழிடங்களின் நிலப்பயன்பாடு மாற்றம், குறிப்பாக புல்வெளிகள் அழிக்கப்பட்டு விவசாயம் செய்தது மேலும் அவற்றின் வாழ்விடத்தில் உள்ள மின் கம்பிகளில் மோதுதல் / மின்சாரம் தாக்குவதால் இறப்பு மற்றும் அதன் இனப்பெருக்க தளங்களில் நாய்கள் மற்றும் பிற கொன்றுண்ணிகளால் கூடுகள் வேட்டையாடப்படுதல் போன்ற காரணங்களால் கானமயில் அழிந்து வரும் உயிரினமாக மாறியுள்ளது.

எந்த அளவுக்கு ராஜஸ்தானும் குஜராத்தும் கானமயில்களின் முக்கிய வாழிடமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ராஜஸ்தானும் குஜராத்தும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான மையமாக மாறி வருகின்றன. சூரிய மற்றும் காற்றாலைகளால் உருவாக்கப்படும் ஆற்றல் தேசிய சேமிப்பு பின்னலுக்கு (National Grid), தலைக்கு மேல் செல்லும் உயரழுத்த மின் தடங்களின் உதவியோடுதான் அனுப்பப்படுகிறது. கானமயில், கழுகுகள், பருந்துகள் மற்றும் பிற பறவைகளின் பறக்கும் வழியில் அந்தத் தடங்கள்  தடைகளாக இருக்கின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கான பகுதி, கானமயில்களின் வசிப்பிடங்கள் இருக்கின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி எனும் இலக்கை இந்தியா அடைவதற்கு இம்மாநிலங்களில் நிறுவப்படும் திட்டங்கள் உதவிகரமாக அமைகிறது. இதன் காரணமாக உயரழுத்த மின்கம்பிகளில் அவை மோதி உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

கானமயில்களையும் அவற்றின் வாழிடத்தையும் பாதுகாக்கக்கோரி 2019ல் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் ஏப்ரல் 19, 2021ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கானமயில் வாழிடங்களில் உயர் மின் தொடரமைப்புக் கம்பிகளை அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் அப்பகுதிகளில் செல்லும் தலைக்கு மேல் செல்லும் மின்கம்பிகளை புதைவடக் கம்பிகளாக மாற்றுவதன் சாத்தியக் கூறுகளை ஆராயக் குழு ஒன்றை அமைத்த நீதிமன்றம், “கானமயில்கள் அதிகம் இருக்கக் கூடிய பகுதியில், தலைக்கு மேலே செல்லும் மின் தடங்கள் தரைக்குள் கொண்டு செல்லப்படுவதற்கான பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதுவரை திசைதிருப்பான்கள் (வெளிச்சத்தை பிரதிபலித்து பறவைகளை எச்சரிக்கும் பிளாஸ்டிக் தட்டுகள்) மின் தடங்களில் தொங்கப்பட வேண்டும்,” எனவும் உத்தரவிட்டது.

 

இந்த வழக்கில், கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த ஒன்றிய அரசு, தலைக்கு மேல் செல்லும் மின்கம்பிகளை புதைவடக் கம்பிகளாக மாற்றுவது நடைமுறையில் செயல்படுத்தச் சாத்தியமற்றது எனக் கூறியது.  “இந்தியாவின் கார்பன் வளித்தடத்தைக் குறைப்பதில் பன்னாட்டு அளவில் ஒன்றிய அரசுக்கு உறுதிப்பாடு உள்ளது. சூரிய மின்னுற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாடுவது இந்த உறுதிப்பாடுகளை செயல்படுத்துவதற்கான திறவுகோலை வழங்குகிறது” எனக் கூறிய ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முட்டுக்கட்டையாக இருக்கும் எனக் கூறியது.

புதைவடக் கம்பிகளை 80,688 sq km பரப்பளவிலான பகுதியில் பதிப்பது எந்த நாட்டிலும் நடந்ததில்லை, பதிக்கப்படும் கம்பிகள் எங்குள்ளன என்பதைப் பாலை நிலத்தில் அடையாளம் காண்பது கடினம், மின்கம்பிகளை புதைக்கும் குழாய்களை இணைக்க 1 கி.மீட்டருக்கு 4 முதல் 5 இணைப்புகள் போட வேண்டியிருக்கும் என்பதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் அதிகம். மேலும் புதைவடக் கம்பிகளின் மின்கடத்தும் திறன் குறைவு உள்ளிட்ட காரணங்களைக் கூறிய ஒன்றிய அரசு 2021ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் சில மாறுதல்களைக் கோரியது.

இம்மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திராசூட், பர்திவாலா, மனோஜ் மிஷ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு மார்ச் 21, 2024ல் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில் கானமயில்களுக்காக புதைவடக் கம்பிகளை மாற்றினால் இந்தியாவின் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தடைபடும், எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் விட்டால் கானமயில் போன்ற அழியும் தருவாயில் இருக்கும் உயிரினங்களை இழக்க நேரிடும் என்கிற இரண்டையும் சமநிலையில் நிறுத்திப் பார்த்தது உச்ச நீதிமன்றம்.

அதன்படி, 2021ல் கானமயில்கள் வசிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மின்கம்பிகளை ஓராண்டுக்குள் புதைவடக் கம்பிகளாக மாற்ற வேண்டும் என்கிற உத்தரவைத் திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம். அதேவேளையில் பல்வேறு துறைகள், அமைப்புகளைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.

இக்குழுவானது, கானமயில்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றின் முக்கியமான வாழிடப் பகுதிகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் காண கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றொரு பணியானது, கானமயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக இந்தியா ஒப்புக்கொண்ட பன்னாட்டு உறுதிமொழிகளை நிறைவேற்ற உதவும் வகையில் மின்கம்பிகளை அமைப்பது குறித்த வழிமுறைகளை ஆராயவும் உச்ச நீதிமன்றத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 31ஆம் தேதிக்குள் நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

இத்தீர்ப்பின் மற்றொரு அம்சம் என்னவென்றால் காலநிலை மாற்றம் மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாக அலசப்பட்டிருப்பதுதான். குறிப்பாக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 21 ஆகிய இரண்டின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளில் இருந்து விடுபட அனைவருக்கும் உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

dailyweekly

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தேவைப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான நடவடிக்கைகள் உயிர்ப்பன்மையத்தையும், விளிம்பு நிலை சமூகங்களையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் அனைவருக்கும் நியாயமான ஒரு மாற்றத்தை (just transition) தன்னோட இலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். கானமயில்களின் வசிப்பிடத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு நிச்சயமாக ஒரு விலை இருக்கிறது. ஆனால், அந்த மின்சாரத்தால் அழிக்கப்படும் / கொல்லப்படும் கானமயில் உள்ளிட்ட பறவைகள் சூழல் அமைவுகளில் உருவாக்கும் நேர்மறையான பலன்களுக்கு விலையே நிர்ணயிக்க முடியாது. இதனைக் கவனத்தில் கொண்டு நிபுணர் குழு தனது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 – ஜென்னி மரியதாஸ்

புகைப்படங்கள்: PARI, eBird.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments