புவி வெப்பமாதலின் தாக்கத்தால் இதுவரை வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தென்தீபகற்ப இந்தியப் பகுதிகளும் எதிர்காலத்தில் வெப்ப அலைகளால் பாதிப்படையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஆய்வுநூல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வெப்பம் மற்றும் குளிர் அலைகளை அளவிடுதலுக்கான ஆராய்ச்சி நெறிமுறை, அவற்றின் நீண்ட காலப் போக்கு, இயற்பியல் பொறிமுறைகள், முன்கணிப்பு, தகவமைத்தல், தணிப்பு போன்றவை குறித்த ஒரு ஆய்வுநூலை இந்திய வானிலை ஆய்வு மையம் 25.04.2023 அன்று வெளியிட்டுள்ளது.
Met_Monograph_Cold_Heat_Waves”Heat and Cold Waves in India: Processes and Predictability” எனத் தலைப்பிடப்பட்ட அந்நூல் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்களை வழங்குகிறது. இந்தியாவில் வெப்ப அலைகள் பொதுவாக பருவமழை மாதங்களுக்கு முந்தைய காலத்தில் (மார்ச் – ஜூன்) ஏற்படுகிறது. இந்தியாவில் அடிக்கடி வெப்ப அலைகள் பாதிக்கும் இடங்களாக மத்திய, வடமேற்கு இந்தியாவும், கிழக்கிந்திய கடற்கரைப் பகுதியும் அமைந்துள்ளன
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி இயல்பு வெப்பநிலையைவிட கூடுதலாக 3°C உயர்வு தொடர்ச்சியாக 3 நாட்கள் அல்லது அதற்குமேல் பதிவானால் அது வெப்ப அலை நிகழ்வாகக் கருதப்படும். வெப்ப அலை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் அதன் தாக்கத்தால் உயிரிழப்புகள் நேராத வண்ணம் தடுக்கும் பொருட்டு உரிய காலத்திற்குள் முன்னறிவிப்பு / எச்சரிக்கை செய்ய வெப்ப அலை முன்னறிவிப்புக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சமவெளிகளில் 40°C அளவிற்கும் மலைப்பகுதிகளில் 30°C அளவிற்கும் வெப்பநிலை பதிவாகும்போதும் வெப்ப அலை தாக்க எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 5 நாட்களுக்கு ஒரு முறை வெப்ப அலை தாக்கம் குறித்த முன்கணிப்புத் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வுநூல் இதுவரை வெப்ப அலைகளின் பாதிப்பு இல்லாத தென் தீபகற்ப இந்தியா என்றழைக்கப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கடலோர கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் எதிர்காலத்தில் வெப்ப அலைகளின் பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கிறது.
கடந்த 50 முதல் 60 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை, அவை நீடிக்கும் கால அளவு, தீவிரத்தன்மை அதிகரித்து வருவதாகவும் இந்தப் போக்கிற்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் புதைபடிம எரிசக்திப் பயன்பாடுமே காரணம் என இந்த ஆய்வுநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சராசரியாக, வெப்ப அலை பாதிப்பு ஏற்படும் பகுதிகள் பருவத்தில் இரண்டு வெப்ப அலைகளைச் சந்திக்கின்றன. ஒரு வெப்ப அலை நிகழ்வானது ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். தற்போது, புவி வெப்பமாதலின் காரணமாக வெப்ப அலைகளின் எண்ணிக்கை, அவற்றின் கால அளவு மற்றும் அவற்றின் அதிகபட்ச கால அளவு அதிகரித்து வருவதாக இந்த ஆய்வுநூல் குறிப்பிடுகிறது.
இந்தியாவின் வெப்ப அலை ஏற்படும் பகுதிகளில், வெப்ப அலைகளின் மொத்த கால அளவு கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 2.5 நாட்கள் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவின் (IPCC) 2060ஆம் ஆண்டில் வெப்ப அலை நிகழ்வுகளின் கால அளவு 12 – 18 நாட்களாக அதிகரிக்கும் எனக் குறிப்பிடுகிறது. இந்த வெப்ப அலைகள் இதுவரை வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தென்னிந்தியாவிலும் பரவக்கூடும் என ஆய்வுநூல் எச்சரிக்கிறது.
அனைத்து CMIP5 காலநிலை மாதிரிகளும் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப அலைகளின் எண்ணிக்கையும் கால அளவும் அதிகரிக்கும் என்பதையே குறிக்கின்றன. multi-model ensemble மாதிரியின்படி ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் வடமேற்கு இந்தியா 4 வெப்ப அலைகளைச் சந்திக்கும் எனவும் ஒரு வெப்ப அலையின் கால அளவு 2060ஆம் ஆண்டில் 30 நாட்களாக இருக்கும் எனவும் இந்த ஆய்வு நூல் எச்சரிக்கிறது.
2022ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வட இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு ஐ.பி.சி.சியின் கணிப்பின்படியே அமைந்திருந்ததாகக் கூறும் இந்நூல் ஒரே நேரத்தில் வறட்சியும் வெப்ப அலை பாதிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கிறது. மேலும், இந்தியாவில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றிய முறையான ஆய்வுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் செய்ய வேண்டிய நேரம் இது எனவும் தெரிவித்துள்ளது.
- சதீஷ் லெட்சுமணன்