இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் 10 ஆண்டுகளில் 10,635 பேர் உயிரிழந்திருப்பதாக மக்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து மக்களவை உறுப்பினர் சுக்தியோ பகத் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் பதிலளித்திருந்தார். அதில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழான தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் தரவுகளின்படி 2013 முதல் 2022 வரையிலான காலத்தில் மட்டும் இந்தியாவில் 10,635 பேர் வெப்ப அலைகளால் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஆண்டு | உயிரிழந்தோர் எண்ணிக்கை |
2013 | 1216 |
2014 | 1248 |
2015 | 1908 |
2016 | 1338 |
2017 | 1127 |
2018 | 890 |
2019 | 1274 |
2020 | 530 |
2021 | 374 |
2022 | 730 |
மொத்தம் | 10,635 |
அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் ஆந்திராவில் 2,197 பேரும், உத்தர பிரதேசத்தில் 1,485 பேரும், தெலங்கானாவில் 1,172 பேரும், பஞ்சாபில் 1,030 பேரும், மத்திய பிரதேசத்தில் 751 பெரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதே காலத்தில் 5 பேர் மட்டுமே வெப்ப அலை தாக்கத்தில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை குறைவாகத் தெரிவதற்குக் காரணம் பல மாநிலங்கள் இன்னமும் வெப்பத்தால் நீரிழப்பு, வாதம் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தவர்களின் மரணம் வெப்ப அலை மரணங்களாக பதிவு செய்யத் தவறுவதே ஆகும்.
மேலும் வெப்ப அலைகள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வுத்துறை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும், மாநில அரசுகளுடன் இணைந்து வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள 23 மாநிலங்களில் வெப்ப அலை செயல்திட்டங்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருவதாகவும் இணை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் தற்போது புயல், வறட்சி, நிலநடுக்கம், தீ, சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பனிப்புயல், நீரிடி(Cloud Burst), பூச்சித் தாக்குதல், குளிரலை ஆகிய 12 பேரிடர்கள் மட்டுமே தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியைப் பெறத் தகுதியானவை. இப்பட்டியலில் வெப்ப அலை பாதிப்பு இல்லை என்பதால் வெப்ப அலையால் இறப்பவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது. இப்பேரிடர் பட்டியலை மறு ஆய்வு செய்வது குறித்து பரிசீலித்த 15வது நிதிக்குழு இப்பட்டியலை விரிவுபடுத்துவதற்கான அவசியம் இல்லை எனத் தெரிவித்து விட்டது. இருப்பினும் மாநிலங்கள் தங்களது மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10% நிதியைத் தான் இயற்கைப் பேரிடராகக் கருதும் நிகழ்வுகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடியும்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மீதான் புதிய அறிப்புகளை வெளியிட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர். ராமச்சந்திரன் மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி, வெப்ப அலை பாதிப்பிற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் வெப்ப அலை வீச்சினை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
– சதீஷ் லெட்சுமணன்
heat wave death