கடலூர் மாவட்டத்துக்கு அருகே கடலுக்குள் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேசன் (Hindustan Oil Exploration Company Ltd) எனும் தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகோரி அந்நிறுவனம் தமிழ் நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் ஜூன் 1ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தின் பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவு கடலுக்குள் 75 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான அனுயமதியை இந்துஸ்தான் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு பெற்றது. இப்பகுதியில் ஐந்து எண்ணெய்க் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெற்று நான்கு கிணறுகளை அமைத்தது. இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஹைட்ரோகார்பன் எடுத்த காரணத்தினால் அக்கிணறுகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு குறைந்துவிட்டது.

இந்நான்கு கிணறுகளின் அமைவிடமும் கடலில் CRZ-IVA எல்லைக்குள் வருவதால் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் ஜூன் 1ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது. 425 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது.
525ec8ad-64ee-4ad0-a457-caf5e55e4bbd_260611_181731தமிழ் நாடு ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதிகளில் 30ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் ஆழமான கடற்பகுதியில் 95 ஆயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பிலும் ஹைட்ரோகார்பன் இருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதனை ரிலையன்ஸ், வேதாந்தா, ஒ.என்.ஜி.சி. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை(OALP) அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இக்கடற்பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவங்களுக்கு வழங்கி வருகிறது. இது கடல்வாழ் உயிரினங்களையும் மீன்பிடிப் பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு:
குறிப்பாக தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதிகளில் அரியவகை பாதுகாக்கப்பட்ட ஆவுளியா உள்ளிட்ட 25 பாலூட்டிகள், ஆமைகள், உயிர்வாழ்கின்றன. டால்பின்கள், திமிங்கலங்கள் போன்ற உயிரினங்கள் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலியை எழுப்புவதன் மூலமே தங்களுக்குள் தகவல்களை பறிமாறிக் கொண்டு தங்களது பயண வழிகளையும் தீர்மானிக்கின்றன. கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் நில அதிர்வுச் சோதனையின்போது எழுப்பப்படும் வெடிச்சத்தம் கடல்வாழ் உயிரினங்களை மிகவும் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி எண்ணெய், எரிவாயு எடுக்கும்போது வெளியிடப்படும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறையுமென்றும் ஆவுளியா, ஆமைகள் போன்ற முக்கியமான பல கடல்வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்துபோகும் என்கின்றனர் கடல்சார் ஆய்வாளர்கள்.
அரசியல் கட்சிகள் எதிர்ப்பு:
இந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் இவ்விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டின் எதிர்கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு ” தி.மு.க. ஆட்சியின்போது, தமிழ் நாட்டு வேளாண் பெருங்குடி மக்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த வகையிலான ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டோம். கடற்பகுதியில் இயற்கை வளங்களையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் இத்திட்டத்திற்கு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ( Tamil Nadu State Coastal Zone Manangement Authority ) எத்தகு அனுமதியும் வழங்கக்கூடாது என தமிழ் நாடு அரசு உரிய வகையில் அறிவுறுத்தி தடுத்து நிறுத்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் “ஹைட்ரோ கார்பனை எடுப்பதற்கு மிகப் பெரிய துளைகள் போட்டுத் தான் எடுக்க முடியும். அவ்வாறு எடுக்கும் போது ஆபத்தான நச்சுத் தன்மையுள்ள ரசாயனப் பொருட்களை உள்ளே செலுத்தித் தான் அந்தப் பணிகள் நடக்கும். அத்துடன் பேரிரைச்சலோடு செயல்படுத்தப்படும் இந்த செயல்பாடுகளால் நில அதிர்வு ஏற்படும். இது அங்கே இருக்கக்கூடிய உயிரினங்களின் உயிர்களை காவு கேட்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது ஆரம்ப நிலையிலேயே ஆமைகள் அதிகமாக இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற் பகுதியில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் எந்த கடற் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்துகிறேன்” எனக் கோரியுள்ளார்
அதேபோல மறுமலர்ச்சி தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, SDPI, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.
