2023ஆம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழை காலத்தின் இரண்டாம் பாதியில் எல் நினோவின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கு நீண்டகால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை(ஜூன் – செப்டம்பர்) இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும் பருவமழை காலத்தின்போது எல் நினோ உருவாகக்கூடும் என்பதால் ஆகஸ்ட் – செப்டம்பர் காலத்தில் இது பருவமழையைப்(இயல்பை விட மழைப்பொழிவு குறையும்) பாதிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தீபகற்ப இந்தியா, மத்திய கிழக்கு இந்தியா, கிழக்கு இந்தியா, வடகிழக்கு இந்தியா முழுவதும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் எனவும் வடமேற்கு இந்தியாவின் சில இடங்கள் மத்திய மேற்கு இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் பருவமழை இயல்பிற்கும் – இயல்பிற்கு குறைவாகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எல் நினோ ஆண்டுகள் அனைத்தும் பருவமழையைப் பாதிப்பதில்லை எனவும் கடந்த 1951 – 2022 வரையிலான காலத்தில் வந்த 15 எல் நினோ ஆண்டுகளில் 6 ஆண்டுகள் மழைப்பொழிவு இயல்பிற்கும் – இயல்வைவிட அதிகமாகவும் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் ஆகஸ்ட்-செப்டம்பர் காலங்களில் பருவமழை இயல்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட இடங்களில் மழைப்பொழிவு இயல்பைவிடக் குறைவாக இருக்கும் என ஒன்றிய புவி அறிவியல் துறையின் செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.