பூச்சிகளுக்குமான பூவுலகு – 1

மழை வரப்போகிறது; கார்மேகங்கள் சூழ்ந்த வானம்; குளிர் காற்று, கொஞ்சம் மண் வாசம். தும்பிகள் எல்லாம் தாழப் பறக்கின்றன. அவசரமாக தங்கள் வாழிடத்தை காலி செய்து, அணிவகுப்பாய் மறைவிடம் தேடிப் பயணப்படுகிறது கட்டெறும்புப் படை! இருட்டிய கொஞ்ச நேரத்தில் விளக்கை நோக்கி ஈசல்களும், சிறு அந்துபூச்சிகளும் வர வாய்ப்புண்டு. அப்பப்பா எத்தனை பூச்சிகள் நம்மைச் சுற்றி! உலகிலேயே அதிக நிறை (biomass) கொண்ட உயிரின வகுப்பு பூச்சிகள் என்பதால், நாம் அவற்றை அதிகம் காண்பதில் பெரும் வியப்பில்லை தானே!

உலகில் ஒரு குயின்டில்லியன் பூச்சிகள் இருக்கின்றன என்று ஒரு மதிப்பீடு சொல்கிறது. குயின்டில்லியன் என்பது 19 பூஜ்ஜியங்கள் கொண்ட எண்ணிக்கை! ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பில்லியன் பூச்சிகள் இந்நிலத்தில் வாழ்கின்றனவாம்! இயற்கையின் சமநிலையில் பூச்சிகளின் பங்கு இன்றியமையாதது. அதனால் தான் பல மில்லியன் ஆண்டுகள், பல்வேறு பேரழிவு நிகழ்வுகளைத் (extinction events) தாண்டியும், அவை இன்னும் பல்கிப் பெருகி வாழ்கின்றன.

இப்படி அதிமுக்கியமான, பரிணாம வளர்ச்சியில் வெற்றிகரமான இடம் கொண்டிருக்கும் ஒரு உயிரின வகையை நாம் எப்படிப் பார்க்கிறோம்?  பயம், அருவருப்பு, அவைகளைக் கண்டாலே கொன்றுவிடுவது, இப்படியாகத் தான் நமது பெரும்பாலான எதிர்வினைகள் இருக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் என்ன தெரியுமா?

நம் அறியாமை!

உணவுச் சங்கிலியில் கீழே இருக்கும் பூச்சியினம் சூழலுக்கு மிகவும் முக்கியமானது. துப்புரவு செய்வதில் இருந்து, மற்ற உயிரனங்களுடன் கூடிய சகவாழ்வு, பிற உயிர்களை வேட்டையாடுதல் வரை, பூச்சிகள் செய்யாத சூழல் பங்களிப்பே இல்லை எனலாம். புலிகள், யானைகள் போன்ற பெரு உயிரினங்களுக்கு மத்தியில் பூச்சிகளின் சுற்றுச்சூழல் சிறப்பு சற்று மறைந்து தான் போய் விடுகிறது!

வாருங்கள் இத்தொடரில் பூச்சிகள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்!

நானூறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மண்ணில் தோன்றியவை பூச்சிகள்! நம் வீட்டு அடுக்களையின் கரப்பானில் இருந்து, உப்புத்தன்மை மிகுந்த கடலோரங்களில் வாழும் Shore flies வரைக்கும், பனி முகடுகளில், நெருப்பை கக்கும் எரிமலை சிகரங்களில் என்று எங்கெங்கும் வாழத் தகவமைத்துக் கொண்டவை பூச்சியினங்கள். இன்னும் மனிதன் கால்பதிக்காத நிலப்பகுதிக்கு சென்றால், அங்கும் பூச்சிகள் பல்கிப் பெருகி வாழ்ந்து கொண்டிருக்கும்.

எது பூச்சி?

தமிழில் எறும்பு, வண்ணத்துப்பூச்சி, தட்டான், வண்டு, வெட்டுக்கிளி ஆகியவற்றை பூச்சி எனச் சொல்கிறோம். கூடவே, சிலந்தியையும் சிலந்திப் பூச்சி என்றோ, எட்டுக்கால் பூச்சி என்றோ தான் கூறுகிறோம். ஆனால் அவை பூச்சிகளில் சேர்பவை அல்ல! இவைகளை பூச்சிகள் இல்லை என்று யார் சொல்வது என்று கேட்கிறீர்களா?

பூச்சிகள் குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் Entomology என்றும், பூச்சியியலாளர்கள், entomologists என்றும் அழைக்கப்படுகின்றனர். இவ்வறிஞர்கள் பூச்சிகளின் பன்மயத்தை ஆராய்வதிலும், புதிய பூச்சியினங்களை கண்டறிவதிலும், அவைகளின் சூழல் இருப்பையும், இயற்கை சமநிலையில் அவற்றின் பங்கையும் அறிவதிலும் நாட்டம் உடைய அறிவியலாளர்கள்.

எவ்வாறு ஒரு உயிரினத்தை பூச்சி (Class: Insecta) எனப் பகுத்தறிவது என்று பூச்சியியலாளர்கள் சொல்லும் வரையறை இதோ:

  1.  ஆறு கால்கள்
  2. இரண்டு ஜோடி இறக்கைகள்
  3. இரண்டு உணர்கொம்புகள் (antenna)

இவைகளே பூச்சி (insect) என்னும் உயிரினத் தொகுப்பை, மற்ற உயிர்களில் இருந்து வேறுபடுத்துபவை. சில பூச்சிகளில் இறக்கைகள் ஒன்றுகூடி மேல்தோலாகவும், பின்னிரு கால்கள் உடலோடு ஒட்டி கண்ணுக்கே தெரியாமலும் பரிணமித்து இருக்கலாம். இவைகள் மேற்சொன்னவைகளின் விதிவிலக்குகள்.

மேற்கண்ட பொது விதிகளின் படி பார்த்தால், சிலந்திக்கு எட்டு கால்கள்; உணர்கொம்பு இல்லை; இறக்கைகளும் இல்லை! எனவே அவை பூச்சி இல்லை. அது எட்டுக்காலி (arachnids) என்னும் உயிரினத் தொகுதிக்குள் அடங்கும். சிலந்திகள் போலவே மண்புழு, ட்ரெயின் பூச்சி போன்றவையும் பூச்சியினத்தில் சேராது!

அடுத்ததாக பூச்சிகளின் பிரத்யேகமான உருமாற்ற நிகழ்வைப் பார்ப்போம்.  Metamorphosis என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்நிகழ்வு முட்டையில் இருந்து பாலின சேர்க்கைக்குத் தயாரான முதிர்ந்த பூச்சியாக வளர்ச்சி பெறும் செயல்முறை ஆகும். இதன் அடிப்படையில் தான் பூச்சி என்னும் மாபெரும் வகுப்பை (class) அறிவியலாளர்கள் இரண்டாகப் பிரிக்கிறார்கள்.

  1. முழுமையான உருமாற்றம் (Holometabolism)
  2. முழுமையற்ற உருமாற்றம் (Hemimetabolism)

முழுமையான உருமாற்றம் என்பது முட்டையில் தொடங்கி, புழு (larva) கூட்டுப்புழு(pupa), முதிர்நிலை என அறியப்படும் தெளிவான உருவவியல் வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு வளர்நிலைகள் கொண்டது. ஒரு பட்டாம்பூச்சி முட்டை இட்டபின் புழுவாக மாறுகிறது; தான் இருக்கும் தாவரத்தின் இலை தழைகளைக் கொறித்து உருவத்தில் பெரிதாகி, கூட்டுப்புழுவாகிறது. பின்னர், சூழல் சரியாக அமைந்ததும், தன் கூட்டை உடைத்து வளர்ந்த பூச்சியாக சிறகடித்து பறக்கிறது!

பட்டாம்பூச்சி, தேனீ, எறும்பு, வண்டு போன்ற உயிரினங்களில் இத்தகைய உருமாற்றம் நிகழ்கின்றது. பட்டு நூல் எடுக்கும் பட்டுப்புழுக்கள் அந்துப்பூச்சி ஒன்றின் கூட்டுப் புழு நிலையேயாகும்! முழுமையற்ற உருமாற்றத்தில் (hemimetabolism) ஒரு உயிரியின் இளம் வளர்நிலைப் பருவமானது, அதன் முதிர்நிலையின் வெளியான உடல் உருவத்தை ஒத்திருப்பினும், உருவத்தில் சிறியதாகவும், முதிர்நிலை உயிரியில் காணப்படும் சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்கள் போன்ற சில உடல் உறுப்புக்கள் விருத்தியடையாத நிலையிலும் காணப்படும். இளம்பருவத்தில் இருந்து முதிர்நிலையை அடைய முன்னர் பல தடவைகள் தோல்கழற்றல் (Ecdysis or moulting) செயல்முறை மூலம் வெவ்வேறு வளர்நிலைகளைக் (instars) கடந்து செல்லும். இந்த வளர்நிலைகள் அணங்கு அல்லது இளரி (Nymph) என அழைக்கப்படும். வெட்டுகிளிகள், தட்டான்கள், கரையான் ஆகியன இவ்வகையில் உருமாற்றம் அடையக்கூடியவையே.

ஒரு பூச்சியின் உருமாற்ற செயல்முறை என்பது அதன் இரைக்குத் தகுந்தாற்போலும், அதனை வேட்டையாடும் உயிரினத்திடமிருந்து தப்பிக்க ஏதுவாயும் இருக்கும். அதுவே பரிணாம வழியில் அப்பூச்சி தப்பி பிழைத்து வாழ்வதற்கான உத்தி. அதே போல ஒரே பூச்சியின் வெவ்வேறு உருவநிலைகள் ஒரே இரையைக் கொண்டிருக்காது. இதுவும் உணவுக்கான போட்டியைக் குறைக்கத்தான்!

இதோ மழை  நின்று விட்டது; நம்மைப் போலவே மெல்லப் பூச்சிகளும் தம் இயல்புக்கு திரும்புகிறது. இலைகளின் நடுவில் இருந்து தலைநீட்டும் கும்பிடுப் பூச்சிக்கு சிறு வண்ணத்துப்பூச்சி சிக்கியது! மலரோடு மலராக ஒரே வெண்ணிறத்தில் இருக்கும் சிலந்தி, வேட்டையாடிய ஈயை மெல்லத் தின்கிறது. இன்னும் வீட்டைச் சுற்றி எத்தனையோ பூச்சிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக அடுத்தக் கட்டுரையில் காண்போம்!

  • அமர பாரதி

பகுதி 2

 

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Deepak
Deepak
2 years ago

Nice article

RAMJI P
RAMJI P
2 years ago

Useful article