பூச்சிகளுக்குமான பூவுலகு – 3

அந்தி சாயும் வேளைகளில், எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள நாட்டுக் கருவேலம் புதரில், எப்போதாவது கீச்சான் குருவி (Shrike) ஒன்று அமர்ந்திருக்கக் காணலாம். இதோ இன்று இருகண் நோக்கி (binoculars) வழியே காணும்போது, அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும் அவதானிக்க முடிந்தது. வெட்டுக்கிளி அளவுள்ள பூச்சிகளைக், கருவேல முள்ளில் குத்தி வைத்துக் கொண்டிருந்தது; கிட்டத்தட்ட ஐந்தாறு பூச்சிகளாவது அம்முட்களில் செருகப்பட்டு இருக்கும்

இது கீச்சான் இனத்தைச் சேர்ந்த பறவைகளின் இயல்பு . இதனாலேயே அவைகளை butcher bird என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றார்கள். பூச்சிகள் குறித்த தொடரில் பறவைகள் குறித்து என்னவென்று பார்க்காதீர்கள்! உணவுச் சங்கிலி என்னும் அடுக்கில், பூச்சிகளுக்கு நேர் மேலாக அமைந்திருக்கும் முக்கிய இரைக்கொல்லிப் பறவைகள் தான்! பூச்சிகளை உண்ணும் பறவைகளான (insectivorous) தகைவிலான் குருவிகளின் குஞ்சுகள், வளர்ந்த நிலையை அடைவதற்கு மட்டும் 2 லட்சம் பூச்சிகள் உணவாகத் தேவைப்படுகிறது!

மாலை ஒளி மொத்தமும் மங்கி, இருள் கவியும் நேரம். செயற்கை ஒளி விளக்குகள் பகல் பொழுதை இன்னும் கொஞ்ச நேரத்திற்கு நீட்டிக்க முயல்கின்றன. மழை ஓய்ந்த நாளின் இரவு, பல்வேறு இனப் பூச்சிகளுக்கு இணைசேரும் காலம்! இணை சேர இரவில் பறக்கும் பூச்சிகள் பெரும்பாலும் செயற்கை ஒளிக்கு ஈர்க்கப்படுகின்றன.

குறிப்பு 1: ஒளிக்கு ஈர்க்கப்படும் இப்பண்பு positive phototaxis எனப்படுகிறது. அதாவது ஒளியின் மூலத்தை நோக்கி நகரும் தன்மை. அந்துப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், ஈக்கள் ஆகியனவும் இன்னும் பிற பூச்சி இனங்களும் ஒளியால் ஈர்க்கப்பட்டு விளக்கு நோக்கி வரும். காணக்கூடிய ஒளி மட்டுமல்லாது, மனிதர்களால் காண இயலாத புற ஊதா விளக்குகளுக்கும் பூச்சிகள் வெகுவாக ஈர்க்கப்பட்டு வருகின்றன! அதே நேரத்தில் விளக்கின் சூட்டுக்காக பூச்சிகள் ஈர்க்கப்படுவதாகவும் ஒரு கூற்று உண்டு. பூச்சியினங்களில் சில ஒளியில் இருந்து விலகி இருப்பதும் உண்டு (negative phototaxis). வெள்ளைச் சுண்ணாம்பு அடித்த சுற்றுப்புறச் சுவரில், செயற்கை ஒளி உமிழும் ட்யூப்லைட்டுக்குக் கீழே பூச்சிகள் கூடி இருந்தது. சின்னஞ்சிறு பூச்சிகள் பலவற்றிற்கு நடுவே, பெரிதாக இருந்தது அப்பூச்சி: கீழ்நோக்கிய இரு பெரிய இறக்கைகள், பக்கவாட்டில் இரு கண்கள், சுருட்டி வைக்கப்பட்ட சுருள் அலகு (proboscis) – அது தான் hawkmoth!

அதிவேகமாக இறக்கைகளை அசைத்து, ஒரே இடத்தில் அசையாது பறத்தல் (hovering) இதன் சிறப்பு. பூச்சி வகைகளிலேயே Hawkmoth குடும்பம் மற்றும் ஈக்கள் இனத்தில் உள்ள Hoverfly பூச்சிகளில் மட்டுமே இத்தகவமைப்பு உண்டு. மேல்நாடுகளில் காணப்படும் hummingbird என்னும் பறவையும் இது போன்று ஒரே இடத்தில் அசையாது சிறகடித்து தேன் அருந்தும் என்பதால், இப்பூச்சி வகைக்கு hummingbird hawkmoth என்றும் ஒரு பெயர் உண்டு.

குறிப்பு 2: மேற்சொன்ன Hummingbird பறவை, Hawkmoth, Hoverfly ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத உயிரினங்கள். Hawkmoth பட்டாம்பூச்சியின் நெருங்கிய உறவினரான அந்துப்பூச்சி இனம்; hoverfly ஈக்கள் இனம்; Hummingbird பூச்சிகளுக்குச் சம்பந்தமே இல்லாத பறவையினம். அவைகளின் பொது மூதாதையர் (common ancestor) பரிணாம அடுக்கில் நெருங்கியவர்கள் அல்ல. ஆனாலும் இவைகளின் பொதுவான   சிறப்பாக இருப்பது வேகமாக இறக்கைகளை அடித்துக் காற்றில் மிதக்கும் இயல்பு! இவ்வாறு நெருங்கிய தொடர்பில்லாத உயிரினங்களிலும் காணப்படும் இத்தகைய தகவமைப்புகளை convergent evolution என்று பரிணாமவியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர். அதாவது, மேற்சொன்ன உயிரினங்கள் ஒவ்வொன்றும்  தம் ‘வேகமாக இறக்கைகளை அடித்துப் பறத்தல்’  என்னும் பண்பால் ஒன்றிணைவதால் (converge) அந்தப் பெயர்.

Hawkmoth இனத்தைச் சேர்ந்த அந்துப்பூச்சிகள் மிக நீளமான சுருள் அலகுகள் (Proboscis) கொண்டு பூந்தேன் உண்பவை; மகரந்தச் சேர்க்கையிலும் இவைகளின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இவை இருள் வானில் இயற்கை ஒளி தரும் நிலவையும் விண்மீன்களையும் வைத்தே   தாம் செல்லும் வழியைக் கணிக்கின்றன. அந்துப்பூச்சிகள் குறித்து இனி வரும் கட்டுரையில் இந்தப் பண்பினைப் பற்றி விரிவாகக் காண்போம்.

இருசிறகிகளின் வினோத வாழ்வியல்:

விளக்கைச் சுற்றி இன்னும் இருந்த நிறைய சிறு பூச்சிகளை நெருங்கிப் பார்த்ததில், அவை இருசிறகிகள் இனத்தைச் சேர்ந்த பூச்சிகள் என்று தெரிந்தது. 1 cm அளவே உள்ள இவைகளின் உடல் மேல்நோக்கி வளைந்திருக்கும்; இரண்டு அல்லது மூன்று வால் போன்ற மயிர், உடலின் பின்புறத்தில் இருந்து நீளும்; இரண்டு சிறகுகளைத் தெளிவாகத் தெரியும்படி நீட்டி வைத்திருக்கும். மழைக்குப் பின் வரும் நாட்களில், அதிக அளவில் இளம் நிலைகளில் இருந்து வளர்ந்து வெளி வரும் பூச்சிகளில் இவைகளும், caddisfly என்னும் வலைப்பூச்சியும், கொசுவின் நெருங்கிய (அதே நேரம் மனிதரைக் கடிக்காத) உறவினரான சிறுகொசுக்களும் (midges) தலையாயவை.

அதிலும் இருசிறகிகள் நீர்நிலைகளில் தன் ஆயுளின் பெரும்பாகத்தை இளரியாக (பூச்சியின் இளநிலை – nymph)  கழிக்கும். ஓடும் நீரில் நீர்ப்போக்கில் அடித்துச் செல்லாமல் இருக்கப் பாறை இடுக்குகளில் மறைந்து வாழும். இளரிகளுக்கு நீருக்கடியில் சுவாசிக்க மீன்களுக்கு இருப்பது போன்ற செவுள்கள் (gills) உண்டு. இவை, நீர்ப்படுகையில் மக்கும் குப்பைகளை உண்டு, சூழல் சுத்திகரிப்பான் ஆகின்றன; சில இனங்களின் இளரிகள் கொசுக்களின் முட்டை/ இளரிகளை உண்டு, அதன் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. இவையனைத்தையும் தாண்டி, இருசிறகிகள் மீன்களுக்கு இரையாகி நீர்வாழ் உணவுச் சங்கிலியின் முதல் கண்ணியாகின்றன!

இருசிறகி (Mayfly)

இளரியாக சில வருடக்கணக்கில் வாழும் இப்பூச்சிகள், சிறகுகள் கொண்டு முழு வளர்ச்சியடைந்த பின் இணைகூடி முட்டையிட்டு சில நாட்களில் இறந்துவிடும். இணை சேர்வது மட்டுமே ஒரே செயல் என்பதால் சில இனங்களுக்கு வாயே இருப்பது இல்லை! இதோ இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் பூச்சிகளும் இணை சேர்ந்து முட்டையிட்டு இங்கு வந்திருக்கலாம்; புவியில் தன் இனத்தின் இருப்புக்காகத் தன்னாலான அனைத்தையும் செய்துவிட்டு இறக்கக் காத்திருக்கிருக்கிறது போலும்!

குறிப்பு 3: நீர்நிலைகளில் இளரிகளாக வாழ்ந்து முழு வளர்ச்சி அடையும் இருசிறகிகள் அனைத்தும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் வெளி வந்து பறக்கும் (synchronous emergence). வட அமெரிக்க நகரங்களில் சில சமயம் சாலையை மறைக்கும் அளவுக்கு கிளம்புகின்றன இப்பூச்சிகள். இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்த ஆய்வாளர்கள், ‘மென்மையான உடல்களைக் கொண்ட இரு சிறகிகளுக்கு இரைக்கொல்லிகளிடமிருந்து தப்ப உடலளவில் போதிய தகவமைப்புகள் இல்லை. அதனால் அவை ஒரே நேரத்தில் வளர்ந்த பூச்சியாகி, பெரும் எண்ணிக்கையில் கிளம்பி வருகின்றன; இரைக்கொல்லிகளால் இப்பூச்சிகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் தின்றுவிட முடிவதில்லை. ஒரு இனமாக அவை தப்பிப் பிழைத்திருக்க இது ஒரு பரிணாம உத்தி’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உலகம் சுற்றும் தட்டான்!

 இருசிறகிகளை அடுத்து விளக்குக்கு மிக அருகே இருந்தது தேசாந்திரித் தட்டான். ஊர் சுற்றி வந்து களைப்பாக அமர்ந்திருக்கும் இப்பூச்சி தான் உலகின் மிக அதிக தூரம் வலசை செல்லும் பூச்சி என்றால் நம்புவீர்களா! பெருங்கடல்கள், இமயமலைத் தொடர்களில் 20,000 அடி உயரத்திலும் கூடப் பறக்கும் இச்சிறு பூச்சி, உயிரி உலகின் விந்தை!

தேசாந்திரித் தட்டான்

 

தட்டான் பூச்சிகள் பொதுவாக நன்னீர் தேக்கங்களான குளம், ஏரியில் முட்டையிட்டு, அதிலேயே இளரிகள் வளரும். ஆனால் தேசாந்திரித் தட்டான் (Globe Skimmer) பெருமழைக்கு பின்னால் உருவாகும் தற்காலிகக் குட்டைகளில் தேங்கும் நீரில் மட்டுமே முட்டையிடுகிறது. அதில் மீன் போன்ற இரைக்கொல்லிகள் இல்லாததும், மற்ற தட்டான்களால் உண்டாகும் போட்டி இல்லாததும், தேசாந்திரித் தட்டான்கள் செழித்து வாழ நல்வாய்ப்பாக அமைகிறது.

கிட்டத்தட்ட உலகம் முழுவதும் காணப்படும் இந்தத் தட்டான்கள், மழையில் உருவாகும் சிறிய அளவிலான நீர்தேக்கங்களைத் தேடியே, பருவமழைக் காலத்தின்  காற்றோட்டத்தில் (monsoon air current) வலசை செல்பவை. தென்மேற்குப் பருவமழையில், அரபிக் கடலில் இருந்து வடக்கு நோக்கி வீசும் காற்றோட்டத்தின் உதவியோடு,  இந்தியாவின் வடக்குப் பகுதிகளுக்குப் போகும் தட்டான்கள், வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் தெற்கு நோக்கி வீசும் பருவமழைக் காற்றோடு தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளுக்கு வருகின்றன. தன் ஒரே வாழ்நாளில் உலகம் முழுதும் சுற்றிவிடுவதில்லை இவை; அடுத்தடுத்த தலைமுறைகள், தம் முன்னோர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி 18,000 கிமீகள் தொலைவுள்ள வலசையை நிறைவு செய்கின்றன. இதனை generational migration என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இரவின் ஒலி:

தட்டானைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மெல்லச் சில்வண்டின் ஒலி தொடங்கியது. முதலில் இலேசாக ஆரம்பித்து, பின்னர் சத்தமாகவும் தொடர்ச்சியாகவும் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது சில்வண்டு. விளக்கின் அருகில் எங்கு தேடினாலும் அப்பூச்சியைக் காணவில்லை. ஒலி வந்த திசையில் சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு, சுவரும் தரையும் சேரும் சந்தில் அமர்ந்திருந்த சில்வண்டைக் கண்டேன்.

சில்வண்டுகள் வெட்டுக்கிளி இனத்தைச் சேர்ந்த பூச்சிகள். ஒரே சீரான இடைவெளியில் ஒலி எழுப்பும் சில்வண்டுகள் உலகம் முழுக்க உண்டு. தடித்த உடலும், நீண்ட உணர்கொம்புகளும்,  கொண்ட சில்வண்டுகளுக்கு முன்னிரு இறக்கைகள் கடினமானது; இவையே சில்வண்டின் ஒலியெழுப்பும் உறுப்பு!

முன் இறக்கைகளில் ஒன்று நன்கு முட்கள் வேய்ந்ததாகவும், மற்றது கரடு முரடாகவும் அமைந்திருக்க, அவைகளை ஒன்றோடொன்று அதிவேகத்தில் தேய்க்கும் போது உண்டாகும் சத்தம் தான் நாம் கேட்பது! இது வெட்டுக்கிளி இனங்களில் ஆண் பூச்சிகளுக்கு மட்டுமே இருக்கும் அமைப்பு. இவ்வொலி பெண்ணுக்கு ஆண் பூச்சி அனுப்பும் சமிக்ஞை. பொதுவாக ஆண் பூச்சிகள் ஒலி எழுப்ப, அவ்வொலி எதிரொலிக்கும் வகையில் இருக்கும் சிறு பொந்துகளைச், சுவர்களின் முனைகளைத் தேர்வு செய்யும்; இதனால் இப்பூச்சி சுவர்க்கோழி என்றும் அழைக்கப்படுகிறது.

பூச்சிகளை இனங்காணல்:

இது தவிரவும் விளக்கின் ஒளிக்குச் சிறு வெட்டுக்கிளிகள், வண்டுகள் முதலிய  வகைகளும் ஈர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. வெவ்வேறு வகையான பூச்சிகளை வீட்டிலிருந்தே அவதானிக்கும் போது அவை என்ன இனத்தைச் சேர்ந்தது என்று அறிந்துகொள்ளுதல் அவசியம். Inaturalist என்னும் செயலி இதற்கு உதவுகிறது. சமூக வலைதளம் போன்ற அமைப்புடைய இந்தச் செயலியில் நீங்கள் கண்ட பூச்சியைப் படம்பிடித்துப் பதிவேற்றினால், அத்தளத்தில் உள்ள வல்லுநர்கள் பூச்சியின் இனம் கண்டு சொல்வர். விலங்கு, பூச்சி, பறவைகள் என்று உயிரினங்கள் குறித்தத் தரவுகளை மக்களிடம் இருந்து நேரடியாக சேகரிக்க உதவும் இத்தளம் (citizen science project), அவ்வுயிரினங்களை இனங்காணவும், மேலும் சூழல் சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

இனிவரும் கட்டுரைகள் விரிவாகக் குறிப்பிட்ட சில பூச்சியினங்களை, அவற்றின் சூழல் பங்கோடு சேர்த்துப் பேசும்.

– அமர பாரதி

பகுதி 1

பகுதி 2

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments